(பிப்.6, 2023 அன்று மயிலைப் பகுதியில் கழகம் நடத்திய காந்தி படுகொலைக் கண்டன நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்த்திய உரை.)

இப்போது எதற்காக திராவிடர் விடுதலைக் கழகம், காந்தியார் படுகொலை நாள் கூட்டத்தை நடத்துகிறது என்று சொன்னால், இப்போது ஆண்டு கொண்டிருக்கிற ஒன்றிய அரசாங்கம், பல்வேறு வரலாற்றுத் திரிபுவாதங்களை செய்து கொண்டிருக்கிறது. குஜராத்தினுடைய பாடப் புத்தகங்களிலே மத்திய அரசினுடைய பாடப் புத்தகங்களிலே 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி காந்தியடிகள் இறந்து போனார் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஏதோ நோய் வாய்ப்பட்டு இறந்தது மாதிரியோ அவர் ஆஸ்பத்திரியில் இருந்து பிழைக்க மாட்டார் என்று சொல்லி அவர் செத்துப் போனது மாதிரியும் பாடப் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இன்னும் நான்கைந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் காந்தி, 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இறந்து போனார் என்று முடித்து விடுவார்கள். ஆனால் அவர் இறந்து போனதன் சூட்சுமம் என்ன என்பதை மக்கள் மத்தியிலே எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமும் கடமையும் பொறுப்பும் பெரியாரியவாதி களுக்கு இருக்கிறது என்கிற அடிப்படையிலே தான் இந்த பொதுக் கூட்டத்தை நாம் நடத்துகிறோம்.

இங்கு இருக்கின்ற பழங்குடியின மக்களை, ஆதிவாசிகள் என்று நாம் அழைக்கிறோமே, அந்த ஆதிவாசிகளை, பழங்குடியினரை இதற்கு முன்னால் வாஜ்பாய் அரசாங்கத்தில் முரளி மனோகர் ஜோஷி என்கிற ஒருவர் அமைச்சராக இருந்தார்; அவர் பழங்குடிகள் என்கிற இடத்தில் எல்லாம் பழங்குடிகள் என்பதைத் தூக்கிவிட்டு, மலைவாழ் மக்கள் என்று எழுதினார். அவர்கள் மலையில் வாழ்கிறார்கள். ஆகவே, அவர்கள் மலைவாழ் மக்கள் என்று சொன்னார். அப்போதுதான் பெரியாரிய வாதிகள் நாங்கள் கேட்டோம். ஏன்டா, பழங்குடிகள் என்று சொன்னால் என்ன கேடு உனக்கு? பழங்குடிகள் என்று சொன்னால் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் அவர்கள் தான், இந்த மண்ணிற்குரியவர் என்று பொருள்படும். ஆனால் இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்திய தேசியத்தை இந்த நாட்டை பார்ப்பனர்களுடைய நாடாக மாற்று வதற்காக முயற்சி செய்கிறார்கள். உலகத்திலே இரண்டு இனங்களுக்கு நாடு கிடையாது. ஒன்று யூதர் இனத்திற்கு நாடு கிடையாது, ஆனால் அங்கு இருக்கக்கூடிய மதத்தின் அடிப்படையில், யூதர்களும், அமெரிக்கா எல்லாம் சேர்ந்து, இஸ்ரேல் என்கிற, ஒரு நாட்டை, உருவாக்கிக் கொண்டனர். யூதர்களுக்கு ஒரு நாடு கிடைத்து விட்டது. ஆனால், உலகத்திலே, நாடு கிடைக்காத ஒரே இனமாக பார்ப்பனர் இனம் இருக்கிறது. அந்த பார்ப்பனர்கள் இந்தியாவை தங்களுடைய நாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, வரலாற்றை ஆரம்பத்திலிருந்தே மாற்றி எழுதுகிறார்கள்.

காந்தியாரிடம் நமக்கு முரண் உண்டு. இந்த ஒரே ஒரு எடுத்துக்காட்டை, நான் சொல்ல விரும்புகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்த நாட்டில் பெரும் பான்மையான உழைக்கும் மக்களாக இருக்கக் கூடிய பட்டியலின சமூக மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வேண்டும் என்கிற ஒரு மகத்தான ஒரு உரிமையை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்டு வருகிறார். அதை பெற்றுக் கொண்டு வருகிற போது இரட்டை வாக்குரிமை நமக்குக் கிடைத்தால், இந்துக் களுடைய ஒற்றுமை உடைந்து விடும் என்று காந்தி கூறினார்.

இரட்டை வாக்குரிமை என்றால் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். இரட்டை வாக்குரிமை என்று சொன்னால், இந்த மயிலாப்பூர் பகுதியிலே, ஒரு பொது வேட்பாளர் நிற்பார். அந்த பொது வேட் பாளருக்கு அனைவரும் வாக்களிப்பார்கள். தாழ்த்தப்பட்டவர்களும் வாக்களிப்பார்கள். பிற்படுத்தப்பட்ட, உயர் சாதியினர் அனைவரும் வாக்களிப்பார்கள் ஆனால், தாழ்த்தப்பட்ட வர்கள் மட்டும் போட்டியிட்டு, தாழ்த்தப்பட்ட வர்கள் மட்டுமே வாக்களித்து, ஒருவர் தேர்ந் தெடுக்கப்படுவார். அதுதான், இரட்டை வாக்குரிமை என்கிற பொருள். ஆக, இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களுக்கான ஒரு பிரதிநிதியை, இந்த சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று விரும்பியதை அவர் எதிர்த்தார்.

பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்கள் இப்போது எம்பிக்களாக இருக்கிறார்கள், எம்எல்ஏ-க்களாக இருக்கிறார்கள். இப்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள் ஆனால், அந்த அமைச்சர்கள், யாராவது பட்டியல் சமூக மக்களுடைய நலனுக்காக, ஏதாவது ஒரு செயலை செய்திருக்கிறார்களா என்று சொன்னால், ஒன்றும் செய்ய முடியாது. அனைத்து சமூகத்தினரின் ஆதரவு அவர்களுக்கு கட்டாயமாகிறது. ஆகவே தான் அம்பேத்கர் ஒரு தீர்த்த தரிசனமாக இரட்டை வாக்குரிமை வேண்டும் என்று கேட்டார். ஆங்கில அரசாங்கம் அதை ஏற்றுக் கொண்டது. ஆனால், காந்தியடிகள் சொன்னார், இந்துக்களுடைய ஒற்றுமை சீரழிந்துவிடும் என்று சொல்லி, எரவாடா சிறையிலே அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். காந்தியடிகளுடைய சிறப்பே என்னவென்று கேட்டால், அவர் எத்தனையோ முறை சாகும் வரை உண்ணா விரதம் இருப்பார். ஒருமுறைகூட, சாக மாட்டார்.

சாகும் வரை பட்டினிப் போராட்டம் இருக்கிறவருக்கு சரியான சான்று எம் இனத்திலே, அந்த ஈழத்திலே வாழ்ந்த திலீபன் தான் சாகும் வரை உண்ணா விரதம் இருப்பதற்கு இலக்கணம் வகுத்தவன். ஒரு சொட்டு தண்ணீர் கூட விழுங்காமல், 13 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்ட இலக்கணம் தமிழனுக்குத் தான் உண்டு.

ஆனால், காந்தியடிகள் ஆட்டுப் பாலும், வேர்க்கடலையும் சாப்பிட்டு விட்டு உண்ணாவிரதம் இருப்பார். மற்றதை சாப்பிட மாட்டார். ஆட்டுப்பாலும், வேர்க்கடலையும் சாப்பிட்டுவிட்டு ஒரு வருடம் உண்ணாவிரதம் இருக்கலாம்.

இதே பகுதியைச் சேர்ந்த மயிலை சின்னத் தம்பி பிள்ளை எம்.சி.ராஜா என்று அழைக்கப்படுகிற, ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தினுடைய, மிகப் பெரிய தலைவர். அவர் காந்தியை ஆதரித்தார். அம்பேத்கரை இந்தப் பிரச்சினையில் எதிர்த்தார். அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் வெளிநாட்டிலே சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டிலே சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிற போது, தன்னுடைய உதவியாளரை அழைத்து, அம்பேத்கருக்கு ஒரு தந்தி அனுப்புகிறார், அந்த தந்தியிலே சொல்கிறார், மரியாதைக்குரிய அம்பேத்கர் அவர்களே, நீங்கள் ஒரு காந்தியினுடைய உயிரைப் பார்க்காதீர்கள். இந்த கோடிக் கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமையைப் பாருங்கள், ஒரு காந்தி போனால் இன்னொரு காந்தி வந்து விடுவார், ஆனால் கோடிக்கணக்கான மக்களின் உரிமை, நன்மை நமக்கு முக்கியமானது, அதனால் விட்டுக் கொடுத்து விடாதீர்கள் என்று தந்தி அனுப்பிய இந்தியாவிலேயே ஒரே தலைவர் பெரியார் தான்.

காந்தி மனைவி கஸ்தூரிபாய், அம்பேத்கரிடம் நேரில் வந்து சொன்னார், மரியாதைக் குரிய அம்பேத்கர் அவர்களே என்னுடைய கணவர் அங்கே உயிருக்கு போராடிக் கொண் டிருக்கிறார். நீங்கள் தான் அவருடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும். எனக்கு உயிர்ப்பிச்சை தாருங்கள். தாலி பிச்சை தாருங்கள் என்று கேட்கிறபோது தாழ்த்தப்பட்ட மக்களுடைய பாதுகாப்புக்காக புரட்சியாளர் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமையை அங்கே விட்டுக் கொடுக்க முன்வந்தார். அதைத் தொடர்ந்து தான் பூனா ஒப்பந்தம் உருவானது. இப்போதுள்ள இடஒதுக்கீடு முறை வந்தது.

இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த உரிமையைப் பறித்தவர் காந்தி, ஆனால், அந்த காந்தியை, இங்கு இருக்கக்கூடிய இந்துத்துவா வாதி கொலை செய்கிறார். எனக்கு முன்னாலே பேசிய தோழர் அன்பு தனசேகரன் சொன்னதைப் போன்று 1948 இல் அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபையிலே, உறுப்பினராக மாறுகிறார். தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சியிலே இருக்கிறபோது இட ஒதுக்கீட்டு முறை வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் நடைமுறையிலே இருக்கிறது.

நீதிக்கட்சி ஆட்சி செய்த சென்னை மாகாணத்தில் 1927 முதல் வேலை வாய்ப்பில் ஆதி திராவிடர்களுக்கு (தலித் மக்களுக்கு) 8 சதவீத வேலை வாய்ப்பு இருந்தது. இதை இந்தியா முழுதும் விரிவாக்கி மத்திய அரசுப் பணிகளில் ஆதி திராவிடர்களுக்கு 8.3 சதவீத ஒதுக்கீடு கிடைக்க 1943இல் அன்றைய கவர்னர் ஜெனரலிடம் ஆணை பெற்றவர் அம்பேத்கர்.

அந்த சட்டத்தை கொண்டு வருகிற போது பார்ப்பனர்களெல்லாம் காந்தியைப் பார்த்து சொல்கிறார்கள், காந்தி அவர்களே தேசப்பிதா அவர்களே இங்கே இருக்கக்கூடிய அரசு வேலைகள் எல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம், இப்போது அம்பேத்கர் வந்து 8.3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி விட்டார். சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளி எல்லாம் அரசியலுக்கு வந்து விடுவான்; சாக்கடை அள்ளும் தொழிலாளி எல்லாம் அரசியலுக்கு வந்து விடுவான், நாங்கள் வேலை இழக்க வேண்டிய அபாயம் வந்து விடுமே என்று சொல்கிற போது காந்திக்கு புத்தி வந்துவிட்டது, காந்தி சொன்னார் பார்ப்பனருடைய வேலை என்ன வேதம் ஓதுவதும் பயிற்றுவிப்பதும் தானே ஏன் பதவிக்கு ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.

காந்தி அவர்களே நீங்கள் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருக்கும் வரை பார்ப்பனர்கள் உங்களை மகாத்மா என்று அழைப்பார்கள். உங்களுக்கு சக்தி இருக்கிறது என்று சொல்லுவான் ஆனால் அவர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினால் உங்களை தீர்த்துக் கட்டி விடுவான் என்று பெரியார் எச்சரித்தார். பெரியார் சொன்னதைப் போன்றே காந்தியை கோட்சே என்ற பார்ப்பான் சுட்டுக் கொன்றான். சனாதன தர்மத்தை காப்பாற்றுவதற்காக காந்தியைக் கொன்றான் என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சனாதன தர்மத்தை யார் யார் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த நாட்டில் துப்பாக்கிக் குண்டுகள் பரிசளிக்கப்படும் என்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது,

இது காந்திக்கு மட்டும் தானா? கோவிந்த் பன்சாரே என்ன செய்தார்? கல்புர்க்கி என்ன செய்தார்? அவர்களுக்கெல்லாம் துப்பாக்கி குண்டுகள் பரிசாக வழங்கப்பட்டதே! அவர்கள் செய்த குற்றம் என்ன? அவர்கள் செய்த குற்றம், இந்து சனாதன கருத்துக்களை எதிர்த்தனர்.

(தொடரும்)

- பால். பிரபாகரன்

Pin It