பண்டைய இந்திய சமூகக் கட்டமைப்பில் பெண்களின் வாழக்கைத் தரம் என்பது மிகவும் கீழான அளவிலேயே வரையறை செய்யப்பட்டிருந்தது. அவ்வாறான ஒரு வரையறையை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது மனுஸ்மிருதியும் அதற்கு அடிப்படையாக அமைந்த வர்ணாசிரம முறையும் ஆகும். பெண்கள் அனுபவித்த இந்தச் சமூக அவலத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் 19-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் வலுப்பெறத் தொடங்கியது.

தமிழக அரசியல் பரப்பில் முதன்முதலில் பெண்ணடிமைத்தனம் அதற்கு காரணமான மூடநம்பிக்கை, மனுதர்மம், சாதி, பார்ப்பனிய ஆதிக்கம் மற்றும் மதத்திற்கு எதிராக காத்திரமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து கொள்கை தீபம் ஏந்தி போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியார் அவர்கள் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான தன் கருத்துக்களை வெறும் சொல்லோடு நிறுத்திவிடாமல், தன் மனைவி, தங்கை மற்றும் பிற பெண்களையும் போராட்டத்தில் பங்கேற்க செய்ததன் மூலம் போராட்டத்தின் செயல் வடிவமாகவும் நின்றார். அவ்வாறு போராட்டக் களத்தில் பெரியாரோடு தோளோடு தோள் நின்றவர்களில் குறிப்பிடத் தகுந்தவர், அவருடைய வாழ்வின் சக பயணியும், தோழியும், வாழ்க்கைத் துணைநலனுமான அன்னை நாகம்மையார். சமூக அவலத்துக்கு எதிரான பல போராட்டங்களில் பெரியாரோடு களம் கண்ட அன்னை அவர்கள் 11.5.1933 அன்று தன்னுடைய 48-ஆம் வயதில் மறைந்தார். அன்னை அவர்களின் 91-ஆம்

ஆண்டு நினைவு நாளில் அவரின் கொள்கைப் பற்றுள்ள சமூக பணியினை நினைவு கூர்வது என்பது அவரின் சேவையை இளைய தலைமுறையினர் மீள் நினைவு கொள்ள வாய்ப்பாக அமையும்.

வாழ்க்கைக் குறிப்பு:

அன்னை நாகம்மையார் அவர்கள் பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை தலைவிரித்தாடிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியான 1885-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி என்ற ஊரைச் சார்ந்த அரங்கசாமி மற்றும் பொன்னுத்தாய் தம்பதியர்களுக்கு மகளாய்ப் பிறந்தார். அன்னை அவர்கள் முறையான கல்வியைப் பெறவில்லை. பெரியாருடைய தாயாரின் ஒன்று விட்ட தம்பி மகளான இவர், அக்கால வழமையின் படி 1898-ம் ஆண்டு தனது 13-வது வயதில் தன் சுயவிருப்பத்தின்படி பெரியாரை மணம் புரிந்தார்.

சுதந்திர போராட்டச் செயற்பாடுகள்:

1919ஆம் ஆண்டு பெரியார், இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து, காந்தியார் அறிவித்த 'ஒத்துழையாமை இயக்கத்தில்' தீவிரமாக ஈடுபட்டபோது, நாகம்மையாரும் அவரோடு இணைந்து போராட்டங்களில் கலந்து கொண்டார்.

சமூக செயற்பாடுகள்:

ஈரோட்டில் நடந்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பெரியாருடன் இணைந்து நாகம்மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் கலந்து கொண்டனர். பிரிட்டிஷ் அரசு விதித்திருந்த 144 தடை உத்தரவினை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரியார் கைது செய்யப்பட்டார். அதுசமயம் நாகம்மையாரும் பெரியாரின் தங்கையும் பல பெண்களுடன் சேர்ந்து மறியலை முன்னின்று நடத்தினர். பெண்கள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டது இந்திய வரலாற்றிலேயே அதுதான் முதல்முறை என்பதால் காந்தியாரின் பாராட்டுதலைப் பெற்றனர்.

அனைத்திந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகத் திருச்சியில் 4.12.1923 அன்று நடைபெற்ற மாகாண காங்கிரஸ் முதலாவது கமிட்டி கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த முதல் பெண்மணி நாகம்மையார் ஆவார்.

1924ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள், வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டத்தில் பெரியாருடன் பங்கேற்ற நாகம்மையார் அதற்காக மே 1924 இல் கைது செய்யப்பட்டார். பெரியாரின் கைது குறித்தும் வைக்கம் போராட்டத்தைத் தொடர வேண்டியதன் அவசியத்தைக் குறித்தும் 12, செப்டம்பர் 1924-இல் வெளிவந்த காங்கிரஸ் ஏடான நவசக்தியில் நாகம்மையார் பதிவு செய்திருக்கிறார்.

குடி அரசு ஏட்டின் பதிப்பாளராக 1924ஆம் ஆண்டில் தன்னைப் பதிவு செய்தவர் நாகம்மையார். 1928ஆம் ஆண்டில் ரிவோல்ட் என்ற ஆங்கில இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார்.

1929-ம் ஆண்டுகளில் சாதி மறுப்பு மற்றும் விதவைத் திருமணங்கள் பலவற்றை நாகம்மையார் தலைமையேற்று நடத்தினார்.

திராவிட அன்னை

பெரியார் - நாகம்மையார் தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்து ஐந்து மாத காலத்தில் இறந்து விட்டது. அதன்பிறகு சுயமரியாதை இயக்க தோழர்கள் அனைவரையும் தன் குழந்தையாக பாவித்த அன்னையாகவே விளங்கினார். நாகம்மையாரின் விருந்தோம்பல் பண்பினை திரு.வி.க, ராஜாஜி மற்றும் திருமதி சாமி சிதம்பரனார் போன்றோர் பதிவு செய்துள்ளனர்.

அன்னையின் மறைவு:

சுதந்திர மற்றும் சமூகப் போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அன்னை அவர்கள் 1933ஆம் ஆண்டு மே 11ஆம் நாள் ஈரோட்டில் மறைந்தார். அவர் மறைவிற்கு பெரியார் எழுதிய இரங்கற் கட்டுரை பிரசித்தி பெற்றது.

பெண்ணுரிமை சார்ந்த கருத்துக்களில் பெரியாரின் பேச்சுக்கும், எழுத்துக்கும் செயலுக்கும் முரண் என்பதே வந்தது இல்லை எனலாம். இத்தகைய ஒருமித்த தன்மையினை எட்ட ஆரம்பகாலத்தில் உறுதுணையாக இருந்தவர் அன்னை நாகம்மையார். இவ்வாறாக கொள்கை உரம், அன்பு, முற்போக்கு சிந்தனை, கணவரோடு இயைந்த வாழ்வு போன்ற உயர் குணங்களைக் கொண்ட அன்னை நாகம்மையார் அவர்களை பெரியாரின் மனைமாட்சி (இல்வாழ்க்கையின் பெருமை) என்றால் அது மிகையில்லை.

முனைவர் ரமேஷ் தங்கமணி

Pin It