அறிவியல் என்பது ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்வது. அறிவியல் இல்லையென்றால் ஓர் இடத்தில் நாம் தேங்கி நின்றிடுவோம். ஆக அறிவியல் சமூக முன்நகர்தலை ஏற்படுத்தும். ஆனால் எந்த நகர்த்தலை நோக்கி நாம் முன் நகர்த்தப்படுகிறோம் என்பதே இங்கு முக்கியம். இந்த அறிவியல் ஆக்கவும் அழிக்கவும் வல்லது.
நெருப்பின் பயன்பாடு அறிவியலின் மகத்தான கண்டுபிடிப்பு என்றால் அது இறைச்சியை வாட்டவா அல்லது சகமனிதனை வட்டவா என்பதில்தான் அதன் அறிவியல் ஆக்கம் இருக்கிறது. இது நெருப்போடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அன்றைய நெருப்பிலிருந்து இன்றைய E=MC வரை பரவி நிற்கிறது.மேற்சொன்னதன் அடிப்படையில் மனிதகுல அறிவியல் என்பதனை, மற்ற உயிரினத்திடமிருந்து மேம்பட்டு தன் சிந்தனை மாற்றத்தால் மனிதன் அடைந்த பரிணாம வளர்ச்சி எனலாம்.
மனிதனை விடுத்து மற்ற உலக உயிர்கள் அனைத்தும் தன் பரிணாம மாற்றத்தை உடல் உறுப்புகளின் வழியே அடைகிறது என்றால் மனிதன் மட்டுமே அவன் சிந்தனை மூலம் அடைகிறான். சிறு பூச்சி நிலத்தைத் தோண்ட வேண்டுமென்றால் அது தன் கை கால்களை அதற்கேற்ப சில தலைமுறைகளிலேயே தகவமைத்துக்கொள்கிறது. அப்படிபட்ட பூச்சி இனத்தை ஒத்திருந்த மனிதன் இன்று நிலத்தைத் தோண்டத் தான்பெற்ற சிந்தனையின் மூலம் இயந்திரங்களை உருவாக்கிக்கொண்டான். இந்த சிந்தனா சக்திதான் மற்ற உயிரினங்களிடமிருந்து மனிதனை மேம்படுத்துகிறது. அந்த ஆக்கப்பூர்வ சிந்தனையை அவன் வெளிப்படுத்திய விதம் ஆச்சரியமானதும் கூட.
-
குளிக்கும்போது யுரேகா என கத்தியதும், ஆடையைவிட அறிவியல் விதி முக்கியமானது என கருதியதும்.
-
பசிக்கு ஆப்பிளை எடுத்தவன் புவியீர்ப்பை அறிந்ததும்.
-
மகளின் உன்னதமான அன்பில் காதலை உணர்த்தியதும்.
-
பட்டம்விடப்போய் இடிதாங்கியை உருவாக்கியதும்
-
ஆய்வின் முடிவில் கைகழுவாமல் விட்டதால் கண்டறியப்பட்ட சாக்கரினும்
-
செயற்கை பிசினை கண்டறிய முற்பட்டு இன்று உலகை ஆட்டிப்படைக்கும் பிளாஸ்டிக் உருவானதும்
என ஆச்சரியங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும், இப்படி மனித மூளையில் ஏற்பட்ட ஆச்சரியங்களில் ஒன்றுதான் இலக்கியங்களில் படைக்கப்பட்ட அறிவியல். கவிஞன் தான் எழுத நினைத்த பாடலுக்கு உவமையைத் தேடப்போய் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தினானா? அல்லது கண்டறிந்த உண்மைகளை தன் குறிப்பாக ஏற்றினானா? என்பது இன்றளவும் ஆச்சரியத்திற்குரியதே. அவ்வகையில் ஆச்சரியத்திற்குள்ளான தமிழனின் அறிவியல் சிந்தனையில் ஒருசிலவற்றைக் காண்போம். அது மட்டுமின்றி அச்சிந்தனைக்கு முட்டுக்கட்டையும் இங்கேயே தோன்றியது என்பதையும் இணைத்தே இனி காண்போம்.
உலகம் தோன்றிய வரலாறு என்பது அறிவியலின் மிகப்பெரிய சாதனை. அதனை பரிபாடலில் கவிஞன் அன்றே எவ்வளவு எளிதாக கூறியுள்ளான் என்பதை கீழ்க்காணும் பாடல் வரிமூலம் அறியலாம்.
“ கருவளர் வான்த்திசையில் தோன்றி
உருவறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்துவளி கிளர்ந்த உளமுழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பணியொரு
தன்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள முழ்கியார் தருபு
உள்ளிகிய இருநிலத் தூழியும் “
( பரி 5-12 )
இப்பாடலில் புலவர், வான் வழி காற்றும், காற்று வழி தீயும், தீ வழி நீரும், நீர் வழி நிலமும் தோன்றியது என்கிறார். அதோடுமட்டுமின்றி சூரியனிலிருந்து பூமி பிரிந்து நீண்ட காலத்திற்கு நெருப்புக்கோளமாக இருந்தது என்றும், பின் காலச்சூழலில் குளிர்ந்து பனிப்படலமாக மாறி நிலம் தோன்றியது என்றும் உலகத்தோற்றம் பற்றி விளக்கிக் கூறுகிறார். இந்தப் பாடலுக்கு முட்டுக்கட்டையாக ஒரு பாடல்,
“ உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடை யார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே “
-கம்பராமாயணம்
இதில் உலகத்தையும் உலக உயிர்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் அளவற்ற திருவிளையாடல்களை இடைவிடாது நடத்துபவர் இறைவர் எங்கிறார். இங்கே அறிவியலும் அபத்தமும் கலப்பதை காண்பீர்.
அடுத்ததாக மழை பொழியும் அறிவியலைக் கூறும்போது,
“ நிறைகடல் முகந்தூராய் நிறைந்து நீர்களும் தன்
பொறை தவிர்பு அசைவிட”
( பரி – 6 : 1-2 )
முகில்கள் கடலிலிருந்து நீரை முகர்ந்து கொண்டுவந்து ஊழியின் முடிவில் மழையாகப் பொழிந்தது என்கிறார். இந்த உண்மையை தற்கால அறிவியல் முற்றுமாக ஏற்றுக்கொண்டதே என்றாலும் இதற்கு நேர் எதிராக ஒருபாடலும் நம்மில் உள்ளதே. தமிழன் மிகப்பெரிய சிந்தனையை பலகாலம் முன்பே பெற்றிருந்தும் அவன் சிந்தனை செயல்முறை படுத்தமுடியாமல் போனதற்கு காரணத்தை பின் வரும் பாடல் உணர்த்தும்.
“ ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்ந்து ஏறி
ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோழுடையப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்பொரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் “
இப்பாடல் மழை பொழியும் அறிவியலை சற்று விளக்கமாக, கடலில் புகுந்து, நீரை எடுத்து, கருமெகம் உருவாகி, மின்னல் மின்னி, இடி இடித்து, இராமனின் அம்பு மழைபோல் வானிலிருந்து உலக உயிர்கள் வாழ மழை பொழிய வேண்டும் என்கிறது. எல்லாம் சரிதான் ஆனால் முதல் வரி இப்படி கூறுகிறது, ‘ஆழிமழைக்கண்ணா நீ ஒன்று கைகரவேல்‘. இங்கே தான் முட்டுகட்டையே இருக்கிறது. மேற்சொன்ன அறிவியல் உண்மைகள் அனைத்தையும் கண்ணா நீதான் செய்ய வேண்டும் என்கிறார் ஆண்டாள்.
இறுதியாக மாற்றுருப்பு பொருத்தும் அடையாளமாக ஒரு பாடல்
‘ நாடுவிளங்கு ஒண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
ஆடுமழைத் தடக்கை அறுத்து முறைசெய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் “
இப்பாடலில் தனக்குத் தண்டனையாக தன்கையைத் தானே வெட்டிக்கொண்ட பாண்டிய மன்னன் பின் பொன்னாலான செயற்கைக் கையைப் பொருத்திக்கொண்டு பொற்கைப்பாண்டியன் என்று பெயரெடுத்து வாழ்ந்ததைக் கூறுகிறது. இதற்கு நேர்மாறாக பிள்ளையார்க்கு ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்த அபத்தத்தை அறிவியல் மாநாட்டில் கூறியதை கேள்விபட்டிருப்போம். புராணகதைகள் அதற்கு கட்டியம் கட்டுவதை காணமுடியும்.
ஆக இலக்கியம் முழுவதும் அறிவியலும் அபத்தபமும் பாலில் கலந்த நீர்போல விரவிக்கிடக்கிறது என்பதை உணரமுடிகிறது. ஆனால் நாம் நீர் விடுத்து பால் பருகும் அன்னம்போல் அபத்தம் விடுத்து அறிவியலை இலக்கியங்களில் உணர்வோம். இலக்கியம் ஊட்டும் அறிவியல் உண்போம்.
- இ.கலைக்கோவன்