காலநிலை மாற்றத்தால் பூச்சிகளின் இறக்கைகள் நிறம் மாறுகிறது. இதனால் அவை இணையை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. இது அவற்றின் இனப்பெருக்க வாழ்க்கையைப் பாதிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குளிர்ச்சியான காலநிலையில் பிரகாசமான நிறமுள்ளவற்றை விட இருண்ட நிறமுள்ள பதுங்கு பூச்சிகள் (ambush bug) தன் இணையைக் கண்டுபிடிப்பதில் உண்டாகும் தடங்கல்களை வெற்றி கொள்கின்றன.
மற்ற இனங்கள் அப்போதும் தங்களை தயார் செய்து கொண்டிருக்கும்போது இருண்ட நிறமுடைய ஆண் பதுங்கு பூச்சிகள் தங்கள் உடலை சுலபமாக வெதுவெதுப்பாக்கி சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குகின்றன. ஆனால் வெப்பநிலை உயரும்போது இது பாதிக்கப்படுகிறது. இதனால் அவற்றின் இணை சேரும் திறன் பாதிப்படைகிறது என்று சூழலியல் மற்றும் பரிணாமம் (Ecology and Evolution) என்ற ஆய்விதழில் இது பற்றி சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.
மனிதத் தூண்டுதலால் நிகழ்ந்துவரும் காலநிலை மாற்றத்தால் பூச்சிகளின் இனப்பெருக்க வாழ்க்கை வருங்காலத்தில் எவ்வாறு பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் தீவிரமாக ஆராய்கின்றனர்.
“ஒரு பக்கம் பூச்சிகள் எவ்வாறு காலநிலை மாற்றத்திற்கு பதில் வினை புரிகின்றன என்றும் இதை பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியடையலாம் என்றும் நினைக்கிறோம். ஆனால் மறுநாள் காலையில் விழித்தெழும்போது இன்னொரு பக்கம் ஓர் இணையைக் கண்டறிய உதவும் முக்கிய நிறங்களை அடையாளம் காணும் திறனை இழந்ததால் இந்த உயிரினங்களால் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுவதை எண்ணி பெரும் கவலை நமக்குள் எழுகிறது!” என்று ஆஸ்திரேலியா சிட்னி மாக்வெரி (Macquarie) பல்கலைக்கழக சூழலியளாலரும் ஆய்வுக் கட்டுரை ஆசிரியர்களில் ஒருவருமான மாரியல்லா ஹெர்பெஸ்ட்டைன் (Mariella Herberstein) கூறுகிறார்.
காலநிலை மாற்றத்தால் தட்டான் பூச்சிகள் இறக்கைகளின் அலங்காரங்களை இழக்கின்றன என்று முந்தைய ஆய்வு கூறியது.
“முன்பு வெப்பநிலை உயரும்போது பூச்சிகள் மெலனின் (Melanin) நிறமிகளை குறைவாக உற்பத்தி செய்யும் பாரம்பரியப் பண்பை பெற்றிருந்தன. இந்நிறமிகள் அவற்றின் இறக்கை நிறத்தை ஒழுங்குபடுத்துகின்றன. இதனால் இறக்கைகள் பிரகாசமான மற்றும் பிரகாசமற்ற நிறங்களைப் பெறுகின்றன. பொதுவாக அடர்ந்த இருண்ட நிறம் உள்ள பொருட்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சுகின்றன.
வெளிர் நிறமுடைய பொருட்கள் அவற்றின் மீது விழும் நிறக்கதிர்களை அதிகமாகப் பிரதிபலித்து வெளிவிடுகின்றன. இதனால் அப்பொருட்கள் நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கின்றன. 2016ல் நடந்த ஒரு ஆய்வின்படி வட அமெரிக்க மலைப்பகுதிகளில் வாழும் மீட்ஸ் சல்ஃபர் வண்ணத்துப் பூச்சிகளின் (Mead’s sulphur butterflies) இறக்கை நிறங்கள் வெப்பநிலை அதிகரிக்கும்போது காலப்போக்கில் வெளிறி மங்கலாக மாறுகின்றன.
அப்போது அவற்றின் சல்ஃபர் மஞ்சள் நிற இறக்கைகள் வெளிர் நிறமாக மாறின. 1980-2000 காலகட்டத்தில் சிவப்பு நிறத்தில் இரண்டு புள்ளிகள் உள்ள லேடி ஃபக் பூச்சிகள் (Lady bugs) கறுப்பு நிற புள்ளிகளாக மாறுவது குறைந்தது. லேடி ஃபக் என்பவை இங்கிலாந்தில் லேடி பேர்டு (Lady bird) என்றும் அமெரிக்காவில் லேடி பஃப் அல்லது லேடி சீ கவ் (Lady Sea cow) என்றும் அழைக்கப்படும் ஒரு வகை பூச்சியினம்.
இதே பாணியில் அமைந்துள்ள ஆர்க்டிக் துணைக் கண்ட இலை வண்டுகளின் (Leaf beetle) பின்புறப்பகுதியில் காணப்படும் அடர் நிறமுள்ள புள்ளிகளின் நிறத்தின் அடர்த்தி சூடாகும் வசந்த காலத்தில் குறைகிறது. இம்மாறுதல்கள் எப்போதும் ஒரே மாதிரி அமைவதில்லை என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர். 1953 முதல் 2013 வரை அருங்காட்சியகங்களுக்காக 800 மீட்ஸ் சல்ஃபர் வண்ணத்துப்பூச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
சில பகுதி மாதிரிகளில் வெளிர் மஞ்சள் நிற இறக்கைகள் காலப்போக்கில் அடர் நிறமாக மாறின. வாக்கிங் ஸ்டிக் (walking stick) பூச்சி குடும்பத்தில் ஒரு இனம் வெப்பநிலை அதிகமானபோது காலப்போக்கில் பசுமையாகவும் அடர் நிறமாகவும் மாறின. 2018ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வெப்பநிலை அதிகமானபோது கொம்புப்பூச்சிகள் (planthopper) உயரமான மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது தெரிந்தது.
“வரையறுக்கப்பட்ட தரவு தொகுப்புகளை மட்டுமே பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாலும் இந்த சிறிய தரவு விவரங்கள் ஒரே மாதிரியான இடங்களில் வாழும் ஒரே வகை பூச்சிகள் பற்றிய ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதாலும் பூச்சிகளின் இறக்கை நிறம் மாறக் காரணமாக உள்ள செயல்முறை பற்றிய இந்த ஆய்வு முடிவுகள் தெளிவற்றதாக உள்ளது; குழப்பத்தை ஏற்படுத்துகிறது” என்று மாக்வரி பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வாளர் டான் மாய் ஹாக் (Tonmoy Haque ) கூறுகிறார்.
“மெலனின் நிறமி வெப்பத்தோடு மட்டும் தொடர்புடைய செயல் இல்லை. இந்த நிறமி நோய் எதிர்ப்பு செயல்கள் மற்றும் சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிரியக்கத்தை தடுக்க பூச்சிகளுக்கு உதவுகிறது. இணையைக் கவர்வதில், இரை பிடி அல்லது இரையாகும் உயிரினங்களிடம் இருந்து ஏமாற்று வித்தை காட்டி தப்பிப்பதில், ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் ஓர் உறுப்பினர் மற்ற இனங்களை அடையாளம் காண்பதில் பூச்சிகளின் இறக்கை நிறங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இந்த பண்பு வெப்பநிலை உயர்வினால் மாற்றமடையலாம். இது அவற்றின் இனப்பெருக்க ஆற்றலைப் பாதிக்கிறது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைகிறது. நம்பகத் தன்மை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறது” என்று ஹெர்பெஸ்ட்டைன் கூறுகிறார்.
வெப்பம் மிகுந்த இடங்களில் ஆண் தட்டான்பூச்சிகளின் இறக்கைகள் நிறமில்லாமல் போனதைப் பற்றி 2021ல் ஆராய்ந்த கொலராடோ டென்வர் பல்கலைக்கழக ஒருங்கிணைந்த உயிரியலாளர் மைக்கேல் மூர் (Michael Moore) “பூச்சிகளின் இறக்கை நிறமாற்றம், அவற்றின் இனப்பெருக்க ஆற்றல் பாதிப்பு பற்றிய இந்த புதிருக்கு விடை காணப்பட்டால் பூச்சிகள் எவ்வாறு காலநிலை மாற்றத்தை சமாளித்து வாழ்கின்றன என்று நம்மால் அறிய முடியும்” என்று கூறுகிறார்.
இயற்கையின் தாளம் தப்பாமல் பாதுகாக்கும் உயிரினங்கள் அழிந்துவிட்டால் மனிதனின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்தி இயற்கையுடன் இணைந்து வாழ முயல்வோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/environment/article/2024/jul/13/climate-insect-colours-sex-lives-study?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்