ஒரே ஒரு பூச்சிக்கொல்லியால் ஏற்படும் ஆபத்தை விட பல பூச்சிக்கொல்லிகளின் கலவையால் பிரசவம் தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன என்று இத்துறை நிபுணர்களால் மேற்பார்வை செய்து வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு கூறுகிறது. விவசாயம், உணவுத் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளால் உருவாகும் உடல்நலப் பிரச்சினைகள் பற்றிய இந்தக்கண்டுபிடிப்பு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
அர்ஜெண்டினாவில் வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்ட ஒரு மாகாணத்தில் உயிரி முறையில் கருவுற்ற பெண்களை ஆய்வாளர்கள் கண்காணித்தபோது பூச்சிக்கொல்லிகளின் கலவையால் குறிப்பிட்ட அளவிற்கு அதிக ஆபத்து ஏற்படுவது தெரியவந்தது. பெரும்பாலான ஆய்வுகளும் ஒற்றைப் பூச்சிக்கொல்லியால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றியே அதிகம் ஆராய்கின்றன. அதனால் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒரே ஒரு பூச்சிக்கொல்லியில் அடங்கியுள்ள பொருட்களால் ஏற்படும் நச்சுத்தன்மையின் அடிப்படையிலேயே அதன் பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் உலகம் முழுவதும் அசைவ உணவுகளை உண்போர், பெருமளவில் வேளாண்மை நடைபெறும் பிரதேசங்களில் வாழ்வோர் இப்பொருட்களை அதிகமாக எதிர்கொள்கின்றனர். இவற்றை மக்கள் எதிர்கொள்ளும் தன்மை பற்றி ஆராய்வது மற்றும் பிற சூழல் அம்சங்களை ஆராய்வதால் மக்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்று அர்ஜெண்டினா லிட்டரல் (Littoral) தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒரே ஒரு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தும்போது உருவாகும் ஆபத்தை விட கலவைப் பூச்சிக்கொல்லிகள் ஏற்படுத்தும் வாழ்நாள் சூழல் பாதிப்புகளை (Exposome) பற்றி ஆராய்வது முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நெப்ராஸ்கா (Nebraska) பல்கலைக்கழக ஆய்வு ஒன்று சமீபத்தில் மாநில ஆவணங்கள், உயிரி முறை கண்காணிக்கப்பட்ட பதிவேடுகளை ஆராய்ந்தபோது பூச்சிக்கொல்லிகளின் கலவையால் குழந்தைகளிடத்தில் மூளைப் புற்றுநோய் 36% அதிகம் ஏற்படுகிறது என்று கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அர்ஜெண்டினாவில் வேளாண்மை முக்கியத் தொழிலாக நடைபெறும் சாண்டா பீ (Santa Fe) பிரதேசத்தில் கருவுற்ற 90 பெண்களின் சிறுநீரில் கலந்துள்ள பூச்சிக்கொல்லிகளின் கலவையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அவர்களின் கரு வளர்ச்சி மற்றும் குழந்தை பிறப்பு கண்காணிக்கப்பட்டது. பல்வேறு வகையான நாற்பது பூச்சிக்கொல்லிகள் அவர்கள் உடலில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 81% பெண்களிடம் குறைந்தபட்சம் ஒரு பூச்சிக்கொல்லி இருந்தது. 64% பெண்களிடம் பல்வேறு வகைப் பூச்சிக்கொல்லிகள் காணப்பட்டன.
இதில் 34% பெண்கள் பிரசவம் தொடர்பான சிக்கல்களைச் சந்தித்தனர். கிராமப்புற மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வாழும் பெண்களின் உடலில் ஒரே ஒரு பூச்சிக்கொல்லி மட்டும் காணப்பட்டது. ஆனால் கிராமப்புறப் பெண்களின் எண்ணிக்கையை விட பூச்சிக்கொல்லி உடலில் இருந்த நகர்ப்புறப் பெண்களின் எண்ணிக்கை சிறிதளவே குறைவாக இருந்தது. உணவும் இதற்கு ஒரு மூலமாக உள்ளது என்று இதன் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால் 70% கிராமப்புறப் பெண்களின் உடலில் பல்வேறு வகையான பூச்சிக்கொல்லிகளின் அம்சங்கள் இருந்தன. நகரப் பெண்களில் இது 55 சதவிகிதமாக இருந்தது. நகரப் பெண்களை விட கிராமப் பெண்கள் இதனால் அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். பூச்சிக்கொல்லிகள் கலந்துள்ள சூழ்நிலை கிராமப் பகுதிகளில் அதிகமாக இருப்பதால் அங்கு வாழும் பெண்கள் நகரப் பெண்களை விட இப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை இரு மடங்கு கூடுதலாகச் சந்திக்கின்றனர்.
சாண்டா பீ பிரதேசத்தில் பச்சைக்கீரைகள் அல்லது சுருள்கோஸ், முட்டைக்கோஸ், சிக்கரி, உருளைக்கிழங்கு, வோக்கோசு அல்லது கொத்தமல்லி (சிலாண்ட்ரோ), குடைமிளகாய், கேரட், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பல வகைப் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. இவ்வகை பலதரப்பட்ட பயிர் வளர்ப்பு பூச்சிக்கொல்லிகள் அதிகமாகப் பயன்படுத்தப்படக் காரணமாகிறது. இவற்றின் பயன்பாடு, கலந்துள்ள சூழல், ஆரோக்கியக் கோளாறுகள், கட்டுப்பாடு பற்றிய விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையில் இவற்றின் பயன்பாட்டை மதிப்பிட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால் கருவுறுதலின்போது இரத்த அழுத்தம் அதிகரிப்பது, கரு வளர்ச்சியின் போது சிசு இயல்பான எடையைப் பெறுவதைத் தடுக்கும் கருப்பையக வளர்ச்சி (intrauterine growth) போன்ற உடல்நலப் பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன.
பெண்கள் எந்த வகையான பூச்சிக்கொல்லிகளுக்கு அதிகம் ஆளாகின்றனர் என்பதையும் இந்த ஆய்வு கூறுகிறது. அதிக பாதிப்பை வெளிப்படுத்தியவர்களின் உடலில் டிரையசோல் (triazole) வகையைச் சேர்ந்த பூஞ்சைக்கொல்லிகளின் அம்சம் அதிகமாக இருந்தது. இந்த வகைப் பூஞ்சைக்கொல்லி சோளம், சோயாபீன்ஸ் மற்றும் கோதுமை வளர்ப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இனப்பெருக்கத்துடன் தொடர்புடைய நச்சுப்பொருள் என்று முந்தைய ஆய்வுகள் கூறின.
அர்ஜெண்டினாவில் பயன்படுத்தப்படும் அதே வகைப் பூச்சிக்கொல்லிகள் யு.எஸ் மற்றும் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், டிரையசோல் பயன்பாடு தென்கிழக்கு, மத்திய மேற்குப் பகுதிகள் உள்ளிட்ட யு.எஸ்ஸில் 2006 முதல் 2016 வரை உள்ள ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. என்றாலும் இதன் கட்டுப்பாடு குறித்து குறைந்த கவனமே செலுத்தப்படுகிறது.
“பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டில் விதிவிலக்குகள் எதுவுமில்லை. வேறுபட்ட இப்பொருட்களின் கலவை கருப்பையக வளர்ச்சி, குழந்தை அல்லது வளர்ந்தோரை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சில கலவைகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் வேறு சில கலவைகள் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியத்தின் மீது இவை ஏற்படுத்தும் தாக்கத்தைக் கணக்கிடுவது கடினம். அதனால் இவை பற்றி மிகக் குறைந்த ஆய்வுகளே இதுவரை நடந்துள்ளன.
இவற்றின் பயன்பாட்டால் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கும் பாதிப்புகள் உள்ளன என்பதால் அதிக அளவு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று உயிரியல் பன்மயத்தன்மை மையத்தின் (Center for Biological Diversity) பூச்சிக்கொல்லி நிபுணர் நேத்தன் டான்லி (Nathan Donley) கூறுகிறார்.
இப்பொருட்கள் உள்ள சூழ்நிலையால் உருவாகும் பாதிப்புகளை இன்னும் ஆழமாக, விரிவாக ஆராய வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்