தொடர்புடைய படைப்புகள்

பல கோயில் நுழைவாயில்களில் தும்பிக்கையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டியபடி அசைந்தாடும் யானையப் பார்த்திருப்போம். அவற்றின் நிலை பற்றி நாம் என்றேனும் சிந்தித்திருக்கிறோமா? அவர்களின் தலைவிதி என்று மாறும்? ஆண்டுதோறும் மனிதன் தீர்மானித்துக் கொண்டாடும் பல தினங்களில் யானைக்கும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர இவற்றின் மீது நாம் உண்மையான அக்கறை காட்டுகிறோமா?elephants 700யானைகளின் இடம் நாடு அல்ல; கோயில் வாசல் அல்ல; காடுதான். மனிதர்கள் போல அவைகளும் சமூக விலங்குகளே, கூட்டமாக வாழ்பவை. ஒன்றுக்கொன்று உதவி செய்து வாழ்க்கை நடத்துபவை. ஊரில் உற்றவர்கள், உடையவர்கள், பங்காளிகள், நண்பர்கள், குழந்தைகளுடன் வாழும் மனிதன் ஒரே ஒரு நாள் காட்டில் தன்னந்தனியாக வாழ வேண்டி வந்தால் அப்போது ஏற்படும் மனநிலையை அவனால் ஊகிக்க முடியும்.

காட்டில் கூட்டமாக வாழும் யானையை மனிதன் தன் வாழிடத்திற்கு அழைத்து வந்தபோது அதனால் அதற்கு தாங்க முடியாத தனிமையையும் மனப் போராட்டங்களையும் சந்திக்க வேண்டி நேரிட்டது. அவை தினமும் இருபது மணி நேரத்திற்கும் மேல் செலவழித்து காடு முழுவதும் அலைந்து திரிந்து பத்துக்கும் மேற்பட்ட மரங்களின் இலைகளை உண்டு வாழ்ந்தன. இவற்றின் முக்கிய உணவு இலைகள், பழங்கள், புற்கள், வேர்கள். காட்டில் வாழும் யானை இருபது மணி நேரம் எடுத்து உண்கின்றன.

ஆனால் இது போல நாட்டிற்கு வரும் யானைக்கு உணவு கொடுக்கப்படுவதில்லை. தென்னை ஓலை, பனை மட்டைகள் மட்டுமே அவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகிறது. உணவின் அளவைக் குறைப்பது, நீண்ட நேரம் ஆகாரம் கொடுக்காமல் இருப்பது அவற்றுக்கு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உரிய அளவில் நீர் கொடுக்க வேண்டும். ஒரு வளர்ந்த யானைக்கு தினமும் சுமார் 2050 லிட்டர் நீர் தேவை. குடிக்க கொடுக்கப்படும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.

யானைகள் கிலோமீட்டர் தூரம் நடக்கும் ஒரு உயிரினம். அதனால் அவற்றை ஒரு இடத்தில் கட்டி வைப்பது பல ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அவற்றை திருவிழாக் காலங்களில் நீண்ட நேரம் ஒரு இடத்தில் நிறுத்தி வைப்பதை விரும்புவதில்லை.

காட்டில் வாழ்பவை போல் இல்லாமல் நாட்டில் அவை மனிதனின் கட்டுப்பாட்டில் வாழ்கின்றன. காட்டு யானைகள் கிலோமீட்டர் தூரம் ஒவ்வொரு நாளும் நடந்து உணவைத் தேடி சாப்பிடுகின்றன. ஆனால் நாட்டில் உள்ளவை அளவு குறைந்த இடத்தில் வாழ வேண்டி நேரிடுகிறது. அவற்றுக்கு மனிதர்கள் கொடுக்கும் உணவு மட்டுமே கிடைக்கிறது. விழாக் கொண்டாட்டங்களில் யானைகளைப் பயன்படுத்தும்போது அவற்றுக்கு அது மிகக் கொடிய அனுபவத்தையே தருகிறது. பெரிய சத்தங்களை அவை சகித்துக் கொள்வதில்லை. வியர்வை சுரப்பிகள் குறைவாக உள்ளதால் அதிக வெப்பத்தை அவை தாங்குவதில்லை.

சாலையில்... சுட்டுப் பொசுக்கும் வெய்யிலில்... பயமுறுத்தும் தீப்பந்தங்களுக்கு அருகில்... பேரிரைச்சலை எழுப்பும் வாத்திய மேளங்களுக்கு நடுவில்... நிற்க வேண்டி ஏற்படும் யானைகளின் தலைவிதியை நாம் என்று உணரப் போகிறோம்? பழைய கணக்குகளின்படி யானைகள் இயல்பாக 60 - 62 வயதில் மரணமடைந்தன. ஆனால் இப்போது 33-34 வயதில் இறந்து விடுகின்றன.

பொருந்தாத உணவுகளை அவற்றுக்கு கொடுப்பதால் பல ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கு அளிக்கப்படும் தவறான சிகிச்சையாலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனுடன் ஒற்றைப்படல், பயம், மன அழுத்தம் ஆகியவை சேர்ந்து பாதிப்பதால் அவை இளம் வயதிலேயே உயிரிழக்கும் அவல நிலை ஏற்படுகிறது. அவை கூட்டமாக நடக்க விரும்பும் வன உயிரினங்கள். அதனால் அவற்றை தனியாக நீண்ட நாட்கள் கட்டி வைத்திருப்பது விவேகமில்லாதது.

யானை ஒரு வன உயிரினம் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் பல மோதல்களையும் தவிர்க்கலாம். படுத்திருக்கும் நிலையில் யானையின் இதயத்துடிப்பு அதிகமாக உள்ளது. அதனால் அவை அதிக நேரம் நிற்பதை விரும்புகின்றன. ஆரோக்கியமான ஒரு யானை இரண்டு மணி நேரம் சுகமாகத் தூங்கும் இயல்புடையது. நீண்ட தூரம் செல்லும் யானைகள் நின்று கொண்டும் தூங்குவதுண்டு. படுத்து எழுந்து நிற்க கஷ்டப்பட்டால் அது யானையின் மோசமான ஆரோக்கியத்தைக் குறிக்கிறது.

மனிதனால் கேட்க முடியாத அகச்சிவப்பு அலைகளைப் பயன்படுத்தி அவை தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. யானைகளால் மிதமிஞ்சிய சத்தம், சகிக்க முடியாத பிரகாசத்தைத் தாங்க முடிவதில்லை. 

பொதுவாக யானைகளுக்கு பார்வைத் திறன் குறைவு. அருகில் இருப்பதை மட்டும் ஒரு கண்ணால் இவை காண்கின்றன. என்றாலும் சரியான தொலைவை அவற்றால் மதிப்பிட முடிவதில்லை. இதனால் யானைக்கு அருகில் இருப்பவரால் எளிதில் தப்பிக்க முடியும். இரவில் குறைந்த வெளிச்சத்தில் அவற்றின் பார்வைத் திறன் மேலும் குறைகிறது. இதைப் புரிந்துகொண்டு அதற்கு அவசியமான வெளிச்சத்தை மட்டுமே கொடுத்து அதைக் கட்டுப்படுத்தினால் அவற்றின் சங்கடம் குறையும்.

யானைக்கு நல்ல மோப்ப சக்தி உள்ளது. அதனால் வாசனையை நுகர்ந்து அருகில் இருப்பவரை அடையாளம் காணமுடியும். இதற்காக தும்பிக்கையையும் நாக்கின் சிறப்புப் பகுதியையும் அவை பயன்படுத்துகின்றன. யானைகளின் உடல் வெப்பநிலை மனிதர்களை விட இரண்டு மடங்கு குறைவு. வியர்வை சுரப்பிகளும் குறைவு. காதை ஆட்டுவது, சிறுநீர், மலம் கழிப்பது, சேற்றையும் மண்ணையும் உடலில் வாரி எடுத்து பூசிக் கொள்வதன் மூலம் அவை உடல் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்கின்றன.

இதனால் நாட்டு யானைகளுக்கு குளியல் இன்றியமையாதது. கட்டி வைக்கும்போது, நடத்திச் செல்லும்போது நிழல் உள்ள வழிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். கால்களில் உள்ள தனிச்சிறப்பு எலும்புகளால் அவற்றால் ஓடமுடியாது; தாவ முடியாது.

மேல் உதடும் மூக்கும் சேர்ந்த நீளமான தும்பிக்கையில் 40,000 திசுக்கள் உள்ளன. இதனால் தொலைவில் இருக்கும் பொருட்களை எடுக்க இவற்றால் முடியும். இவை நீரில் நீந்த நன்கு பயிற்சி பெற்றவை.

வயதுக்கு வந்த ஆண் யானைகளுக்கு இணையை கண்டுபிடிக்கும் காலம் வரும்போது அவற்றுக்கு மதம் பிடிக்கிறது. ஆண் உடலில் இருந்து வரும் ஒரு மணத்தை வைத்தே யானைகள் இணையைக் கண்டுபிடிக்கின்றன. வாசனையால் கவரப்பட்ட பெண் யானை ஆண் யானைக்கு அருகில் செல்லும். அப்படிப்பட்ட சமயங்களில் காடுகளில் ஆண் யானைகள் தனியாக நடக்கும். கூட்டத்தில் உள்ள மற்றவை ஒற்றைப்பட்ட யானையிடம் இருந்து விலகி வாழ்கின்றன.

இயற்கை வழங்கும் இணையுடன் சேர்ந்து வாழ வேண்டிய காலம் முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வாழும் நாட்டு ஆண் யானைகள் அந்த நேரத்தில் அதிக கோபமடைகின்றன. குறிப்பாக யானைப் பாகன்கள் மீதே அதிகமாக கோபம் ஏற்படுகிறது. அதனால் ஆண் யானையிடம் இருந்து விலகியிருப்பதே நல்லது. மனிதர்களுக்கு ஏற்படும் விரக துக்கத்தை நன்கு அறிந்து வர்ணிக்கும் மனிதர்கள் யானைகளுக்கு ஏற்படும் துக்கத்தைப் பற்றி பேசுவதில்லை. ஒவ்வொரு நாட்டு யானைக்கும் ஆயிரம் கண்ணீர்க் கதைகள் சொல்வதற்கு இருக்கிறது!

பசி எடுத்தால் உணவிற்காக வன்முறையில் ஈடுபடும் யானைகளின் விலங்கு நீதி, இரசிப்பதற்காக மட்டுமே கொடுமைப்படுத்தும் மனிதன் செய்யும் அநீதி, துரோகத்தைவிடவா பெரியது?! இயற்கை படைத்த எந்த ஒரு உயிரினமும் வெறும் காட்சிப் பொருள் மட்டும் இல்லை. பெருமிதத்தின்... கௌரவத்தின் அடையாளமும் இல்லை! ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதற்கென்று ஒரு விலை மதிப்பு உள்ளது.

யானை ஊருக்குள் புகுந்து நாசம் ஏற்படுத்தும்போது அதை மயக்க வெடி வைத்து காட்டிற்கு விரட்ட...போலீஸும் ராணுவமும் ஊடகங்களும் ஒன்று சேர்ந்து நடத்தும் சம்பவங்கள் அரங்கேறும்போது அந்த உயிரினத்தின் மனநிலை பற்றி யார் சிந்திப்பது? காட்டில் தன் போக்கில் சுதந்திரமாக வாழும் யானைகளை ஊருக்கு கொண்டு வந்து சொல்லமுடியாத கொடுமைகளுக்கு உட்படுத்தி பக்குவப்படுத்தி அடிமைப்படுத்தும்போது அதை எதிர்க்கவும் போராடவும் மனிதனுக்கு எதிராக ஒரு வெடி வைக்கவும் முடியாமல் பரிதாபமான நிலையில் அவை வாழ்கின்றன!

இனிமேலும் இந்த அற்புத உயிரினங்களை சுரண்டாமல் இருப்போம்... வாழ்வோம், வாழவிடுவோம்.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/wild-life/world-elephant-day-1.980806

சிதம்பரம் இரவிச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.