உலகில் மிக விலையுயர்ந்த, தேவை அதிகம் உள்ள, உணவுடன் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றே வெள்ளை டிரஃபிள் (White truffle) எனப்படும் இந்தப் பூஞ்சை. இந்த அதிசயப் பூஞ்சை தெற்கு ஐரோப்பாவில் காணப்படுகிறது. இது மிக அதிக நறுமணம் மற்றும் தீவிர ருசிக்குப் புகழ் பெற்றது. டுயூபரேசி என்ற பூஞ்சைக் குடும்பத்தில் டியூபர் மக்னாட்டம் (Tuber magnatum) என்ற அறிவியல் பெயருடைய இது வெள்ளை டிரஃபிள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

ஐந்து அங்குலம் வரை வளரும் இவை அரை கிலோ வரை எடை உடையவை. 2009ல் ஒரு கிலோ பூஞ்சை பத்து இலட்சத்திற்கும் மேல் விலை விற்றது. 1.9 கிலோ வரை எடையுள்ள பூஞ்சை 2021ல் நியூயார்க்கில் 50.68 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. மண்ணில் ஒருசில அங்குலம் முதல் அரை மீட்டர் வரை ஆழத்தில் வளரும் இதை கண்டுபிடிப்பது மிகக் கடினம்.

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மட்டுமே இவற்றை காடுகளில் இருந்து சேகரிக்க முடியும். ஓக், அசல் நட், ஓக்லர் போன்ற மரங்களின் அடியில் வேர்களில் இருந்து சத்துகளை எடுத்துக் கொண்டு பூமிக்கடியில் வளரும். இவை வளரும் மரத்தைப் பொறுத்து இவற்றின் வாசனை வேறுபடும். சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்ட நாய்களைக் கொண்டே இப்பூஞ்சை கண்டுபிடிக்கப்படுகிறது.

நாய்களுக்கு சிறு வயது முதலே பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதற்காக நாய்க்குட்டி பால் குடிக்க ஆரம்பிக்கும்போது தாய் நாயின் முளைக்காம்பில் டிரஃபிள் தடவி குட்டிக்கு அதன் வாசனை கற்றுத் தரப்படுகிறது. முன்பு பூஞ்சையைத் தேட பன்றிகளும் பயன்படுத்தப்பட்டன. பூஞ்சை கிடைத்தால் பன்றி அதைத் தின்னாமல் இருக்க அதன் மூக்கைச் சுற்றி ஒரு வளையம் பொருத்தப்படும். பூஞ்சை கிடைக்குமிடத்தை ஒவ்வொருவரும் பரம இரகசியமாகப் பாதுகாக்கின்றனர்.White truffleஏன் விலைமதிப்புமிக்கது?

இது அபூர்வமானது, கிடைப்பதற்கரியது. சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும். தேவை மிக அதிகம். இதனால் இது விலை மதிப்புமிக்கது. இத்தாலியில் அவாலக்ன என்ற இடத்தில் ஆண்டுதோறும் மூன்று முறை இதற்காக திருவிழாக்கள் நடக்கின்றன. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பூஞ்சையில் மூன்றில் இரண்டு பங்கு இங்கு கிடைக்கிறது. இங்கிருந்து ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸ், அமெரிக்கா, கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் நடக்கும் இதற்கான தேசீய கண்காட்சியில் (National truffle fair) இதைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஏராளமான பொருட்கள் கிடைக்கும். இத்தாலியின் பிரபல சமையல் நிபுணர்கள் இங்கு வந்து நேரடியாக சமையல் காட்சிகளை (cooking shows) நடத்துகின்றனர். இது இத்தாலியில் நடைபெறும் ஒரு முக்கிய விவசாயத் திருவிழா.

வரலாற்றுச் சிறப்புகள்

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இத்தாலி, பிரான்சில் சமையலிற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் இப்பூஞ்சை ரோமாபுரி காலத்திலேயே பிரமுகர்களுக்கு மிகப் பிடித்த ஒன்று என்று நேச்சராலிஸ் ஹிஸ்ட்டாரிகா என்ற நூல் கூறுகிறது. இது விருதாகவும் வழங்கப்பட்டது. மத்திய காலகட்டத்தில் போப் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருந்து சலுகைகளைப் பெற முனிசிபாலிட்டிகள் அவர்களுக்கு இதைப் பரிசாகக் கொடுத்தனர்.

சமையல் சிறப்புகளும் மருத்துவ குணங்களும்

பாஸ்தா, ரிஸோட்டோ, முட்டை, இறைச்சி போன்ற உணவு வகைகளில் சுவையூட்ட இது சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது. சமையல் பயன் தவிர, மருத்துவ குணங்களிலும் இது சிறந்து விளங்குகிறது. வீக்கத்திற்கு நிவாரணியாக, செரிமானத்தை மேம்படுத்த, நோய் எதிர்ப்பாற்றல் பெற உதவுகிறது. இதில் அதிக அளவு நீர்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து உள்ளது. ஆண்டி ஆக்சிடெண்ட் குணமுடையது. சமைத்து முடித்த பிறகு சுரண்டி எடுக்கப்படும் இதை மறுபடியும் வேக வைக்க வேண்டியதில்லை.

அதிக காலத்துக்கு இதைப் பாதுகாத்து வைக்க முடியாது. சேகரித்தவுடன் விற்பனை செய்ய வேண்டும். முன்பு இது எவ்வாறு உருவாகிறது என்பது பற்றி உறுதியான கருத்துகள் இல்லை. புராதன கிரேக்கர்கள், கிரேக்கக் கடவுள் சியூஸ் தேவன் மிக சக்தி வாய்ந்த மின்னல்களை பூமிக்கடியில் அனுப்பும்போதே இது உருவானது என்று நம்பினர். சமீபத்தில் போஸ்னியா ஹெக்ஸோகொவினா பிரதேசத்தில் இது பெருமளவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கான தேடல் ஜனரஞ்சகமான ஒரு நிகழ்வாக மாறியது.

பயிர் செய்ய முடியுமா?

இதற்கிடையில் பிரான்ஸில் 2022ல் இதை பயிர் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற்றன என்று செய்திகள் கூறின. தங்கத்தின் பாதி விலையுள்ள, நாய்களால் மட்டுமே கண்டு பிடிக்கப்படக் கூடிய இந்த அதிஅற்புதமான பூஞ்சை பலவகையான அக்கிரமங்களுக்கும் கொள்ளைகளுக்கும் காரணமாவதுண்டு.

பயிற்சி பெற்ற நாய்களை கடத்திக் கொண்டு போய் அவற்றை நஞ்சு வைத்துக் கொல்ல வாய்ப்பு உள்ளதால், அவற்றிற்கு அதி உயர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதைத் தேடிக் கண்டுபிடிக்க அதிக பயிற்சி தேவை. இதனால் இதற்குரிய திறமைகள் தலைமுறைகள் கடந்து இரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. சிறிய வயது முதலே குழந்தைகளுக்கு இதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இந்த பூஞ்சையைக் கண்டுபிடிப்பதற்குள்ள சாத்தியக்கூறில் மூன்றில் ஒரு பகுதி நாயுடையது. மற்றொரு பகுதி தேடும் மனிதருடையது. இன்னுமொரு பகுதி அந்தப் பிரதேசத்தின் இயல்பைப் பொறுத்தது.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/eco-story-column-on-the-fungus-white-truffles-1.8329688

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It