கரடிகள் இன்று எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல் மனிதர்கள் மூலம் நடைபெறும் வேட்டையாடலே. பெரும்பாலான கரடி வகைகளும் இன்று சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) பட்டியலின்படி இன அழிவைச் சந்திக்கின்றன. மார்ச் 23 சர்வதேச கரடிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றிலும் கரடிகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும் இன்றும் அது தொடர்கிறது.

செல்லப்பிராணிகள் வணிகத்திலும் கரடிகள் பெருமளவில் விற்பனைப் பொருளாக்கப்படுகின்றன. துருவப்பகுதிகளில் பனி உருகுவதால் இவை வேட்டையாட முடியாமல் பட்டினி கிடக்க நேரிடுகின்றன. அமெரிக்காவில் வாழிட இழப்பினால் இவை பாதிக்கப்பட்டுள்ளன. சிறிய வாலுள்ள ஊண் உண்ணிகளான இவை அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் காணப்படுகின்றன.

இவற்றில் மிகச்சிறிய இனம் சன் கரடிகள் (Sun bear). இவற்றின் எடை ஐம்பது கிலோவிற்கும் குறைவானது. மிகப்பெரியவை துருவக்கரடிகள் (Polar bear) மற்றும் கோடியாக் கரடிகள் (Kodiak bear). இவற்றின் உடல் எடை 720 கிலோ வரை. கரடிகள் எட்டு இனங்களில் காணப்படுகின்றன. இதில் கருங்கரடிகள் அமெரிக்கா, கனடாவில் அதிகமாக வாழ்கின்றன.white bearபாண்டாவும் கரடியும்

பொதுவாக தாவர உண்ணிகள் என்றாலும் துருவக்கரடிகள் போன்றவை சீல்-ஐ உணவாக உட்கொள்கின்றன. ராட்சச பாண்டாக்களுக்கும் (giant panda) கரடிகளுக்கும் இடையில் பரிணாமரீதியில் சொந்தம் உண்டு என்று கருதப்படுகிறது. சீனாவில் மட்டுமே வாழும் இந்த வகை பாண்டாக்கள் மூங்கிலையே உணவாக உண்கின்றன. பார்ப்பதற்கு பருமனான உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் இவற்றால் வேகமாக இடம் பெயர முடியும்.

மோப்பம் பிடித்தே கரடிகள் இரை தேடுகின்றன. இரையைத் தாக்குவதில் கருங்கரடிகள் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றன. கரடிகள் சிறந்த நீச்சல்காரர்கள். எடுத்துக்காட்டு துருவக்கரடிகள். ஆபத்து வந்தால் முனகுவது போன்ற ஒலி எழுப்பும் என்றாலும், ஓசைகள் வழியே தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது இவற்றிடம் குறைவாகவே காணப்படுகிறது. இரை தேடும்போதும் இது போல ஓசைகளை எழுப்புவதுண்டு. மீன்கள், சீல்கள், பன்றிகள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு.

குகை உறக்கம்

சன் கரடிகள் தேனை விரும்பிக் குடிக்கும் இயல்புடையவை என்பதால் இவை தேன் கரடிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அமெரிக்கன், ஏசியாட்டிக் (Asiotic bear) குளிர்காலத்தில் வயிறு நிறைய உணவு உண்ட பிறகு குகைகளில் நீண்ட உறக்கத்தில் ஆழ்கின்றன. ஆண் கரடிகள் இணை சேர்ந்த பின் பெண் கரடிகளை விட்டுவிட்டு சென்று விடுகின்றன.

பிறகு குட்டிகளை வளர்க்கும் வேலையை பெண் கரடியே செய்கிறது. ஆண்டிற்கு ஒரு முறை பிரசவம் நடக்கிறது. ஆனால் பெரும்பாலான கரடி இனங்களிலும் மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பிரசவம் நடக்கிறது. பிறக்கும் கரடிக் குட்டிகளின் உடல் எடை அரை கிலோகிராம் மட்டுமே. பெரும்பாலும் இரட்டைகளாகவே பிறக்கின்றன. என்றாலும் ஒரு பிரசவத்தில் ஐந்து குட்டிகள் வரை பிறக்கின்றன.

குட்டிக்கரடிகள் அடுத்த பிரசவம் நடக்கும்வரை தாய்க்கரடியுடன் வாழ்கின்றன. குட்டிகள் மூன்று முதல் ஆறு ஆண்டுகளில் வயதுக்கு வருகின்றன. ஆறு மாத வயதில் தனியாக நிற்கப் பழகிக் கொள்கின்றன. இயற்கையான வாழிடங்களில் 15 முதல் 30 ஆண்டுகள் வரை வாழும் இவை பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் அதிக காலம் உயிர் வாழ்கின்றன.

அதிக உணவு உண்ணும் இயல்புடைய பெரிய உடலமைப்பு கொண்ட கரடிகளுக்கு இயற்கை எதிரிகள் இல்லை. குட்டிக்கரடிகள், குள்ளநரிகள் போன்ற விலங்குகளுக்கு இரையாவதுண்டு. உணவு கிடைப்பதைப் பொறுத்தே இவற்றின் வாழிட எல்லை அமைகிறது. உணவு கிடைக்கும் இடத்தின் பரப்பு குறைவாக இருந்தால் இவற்றின் வாழிட எல்லையின் பரப்பும் அதிகரிக்கும். சிறிய வயதில் பிடித்து வரப்படும் கரடிகளை பழக்கப்படுத்துவது எளிது. ஒரு காலத்தில் இவற்றை சர்க்கஸ்களில் தாராளமாகக் காண முடிந்தது.

ஐரோப்பிய பழுப்பு கரடிகள் (Eurasian brown bear) மற்றும் அமெரிக்கன் கருங்கரடிகள் போன்றவை மனிதர்களைத் தாக்கியுள்ளன. ஏசியாட்டிக் கரடிகள், அமெரிக்கன் கருங்கரடிகள் போன்றவை வயல்களை நாசப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. துணிவகைகளைத் தயாரிக்க இவற்றின் தோல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

பெண் கரடிகளை விட ஆண் கரடிகள் அளவில் பெரியவை. பனிப்பாறைகளில் காலூன்றி நடக்க வசதியாக துருவக்கரடிகளின் பாதத்தின் அடிப்பகுதியில் உரோமங்கள் உள்ளன. இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் பட்டியல்படி அமெரிக்கன் கருங்கரடிகள் மற்றும் பழுப்பு கரடிகள் அழியும் ஆபத்தைக் குறைவாக எதிர்கொள்கின்றன.

இந்தியாவில் கரடிகளின் நிலை

இந்தியாவில் ஏசியாட்டிக் கருங்கரடிகள் (Asiotic Black), சோம்பல் கரடிகள் (Sloth bear), சன் கரடிகள் மற்றும் இமாலயப் பழுப்பு கரடிகள் என்று நான்கு வகைகள் காணப்படுகின்றன. இவை 1972 வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பித்தநீர் (bear bile) மருந்து போன்றவற்றின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் உள்ள நான்கு கரடி வகைகளும் இன அழிவை எதிர்கொள்கின்றன. 2011 முதல் சர்வதேச துருவக்கரடிகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. வன உயிரி பாதுகாப்பு அமைப்பு (wild life S O S) இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து 2022ல் இந்தியாவில் சோம்பல் கரடிகள் பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடியது. அக்டோபர் 12 சர்வதேச சோம்பல் கரடிகள் பாதுகாப்பு தினம். சோம்பல் கரடிகள் இந்தியக் கரடிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இயற்கையின் அதிசய படைப்புகளில் ஒன்றான கரடிகளை அழியாமல் பாதுகாப்போம்.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/about-all-you-need-to-know-about-bears-world-bear-day-1.8416513

Pin It