மழைக் காடுகள் மண்டிக் கிடக்கும் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனீரோ நகரத்தில் முதலைகளையும் பாம்புகளையும் குரங்குகளையும் தெருக்களில் பார்ப்பது சாதாரண காட்சியாகி வருகிறது. நம் ஊர்த்தெருக்களில் நாய்களும், மாடுகளும் அலைந்து திரிவது போல இங்கு வனவிலங்குகள் தெருவில் அலைந்து திரியும் பரிதாபக் காட்சியை சாதாரணமாகக் காணலாம்.

தெருவிலங்குகளாகும் வனவிலங்குகள்

வனங்களில் வாழும் விலங்குகள் இங்கு தெருவிலங்குகளாக்கப்படும் அவலம் நடந்து வருகிறது. ஆண்டிற்கு ஆண்டு இவ்வாறு தெருக்களில் அலையும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நகரத்திற்கு அருகில் இருக்கும் நீர் இடுக்குகள், நதிகளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் வாழ்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.monkey 624வாழ இடமில்லை உண்ண உணவில்லை

நகரமயமாக்குதலும், வனப்பிரதேசங்களின் ஆக்கிரமிப்புமே தெருக்களில் இவை அதிகமாக நடமாடக் காரணம் என்று கருதப்படுகிறது. இதனால் மனித வனவிலங்கு மோதல் சம்பவங்கள் ரியோ டி ஜெனீரோவில் அதிகரித்து வருகிறது. இதற்கு சூழல் சீரழிவும், மாசுபடுதலும் ஒரு காரணம். மாசுபட்ட சூழ்நிலையில் வனவிலங்குகளின் இயல்பான உணவு ஆதாரங்கள் மறைந்து விட்டன.

அழியும் பன்மயத்தன்மை

மாசுபடுதல் மூலம் பிரதேசத்தில் காலம் காலமாக இருந்து வந்த உயிர்ப்பன்மயத்தன்மை நாசமாகி வருகிறது.

2020ல் தீயணைப்புப் படையினர் 2,419 வனவிலங்குகளை மனிதர்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இருந்து பிடித்தனர். 2021ல் இந்த எண்ணிக்கை 3,534 ஆக அதிகரித்தது. முதலைகள் தவிர குரங்குகள், பாம்புகள், பறவைகள் போன்றவையும் பிடிக்கப்பட்டன. 2022ல் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1,203 வனவிலங்குகள் நகரத் தெருக்களில் இருந்து பிடிக்கப்பட்டன.

பூமியில் மனிதகுலம் நலமுடன் வாழ பாக்டீரியா முதல் காண்டாமிருகம் வரை அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ வேண்டும். இதை உணராமல் அழிவு வேலையைத் தொடரும் மனிதன் தன் சவப்பெட்டிக்கு தானே ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It