திமிங்கலங்களை வணிக நோக்கங்களுக்காக வேட்டையாடும் ஒரு சில நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று. இந்நாடு இப்போது 2024ம் ஆண்டுடன் இதை முழுவதும் கைவிடத் தீர்மானித்துள்ளது. திமிங்கல இறைச்சியின் மீதுள்ள மக்களின் ஆர்வம் குறைந்ததே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். நார்வே மற்றும் ஜப்பான் ஆகியவை இதுபோல திமிங்கலங்களை வேட்டையாடும் மற்ற உலக நாடுகள்.

2019-2023 காலகட்டத்தில் நீலத் திமிங்கலங்கள் தவிர அளவில் பெரிய 209 பின் இனத்தைச் சேர்ந்த திமிங்கலங்களையும், அளவில் மிகச் சிறிய இனமான 217 மிங்க் வகை திமிங்கலங்களையும் வேட்டையாட அரசு ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தது. இது இக்காலகட்டத்திற்குரிய வருடாந்திர ஒதுக்கீடு. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக வேட்டைக்காக உரிமம் பெற்றிருந்த இரண்டு கம்பெனிகள் வேட்டையாடுவதை நிறுத்திக் கொண்டன.whaleஇந்த காலகட்டத்தில் 2021ல் ஒரே ஒரு மிங்க் திமிங்கலம் மட்டுமே வேட்டையாடப்பட்டது. இந்த வேட்டையாடல் காரணமாக கடல்வாழ் உயிரினங்களில் மிகப் பெரிய பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த திமிங்கலங்களின் பாதுகாப்பிற்காக இங்கிலாந்து நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச திமிங்கல பாதுகாப்பு சங்கத்தின் (International Whaling Commision IWC) உறுப்பினர் பதவியையும் ஐஸ்லாந்து ராஜினாமா செய்தது.

வணிக நோக்கங்களுக்காக இந்த உயிரினங்களை வேட்டையாட அனுமதி கிடைத்ததுடன் மக்களிடையில் இவற்றின் இறைச்சிக்கான தேவையும் குறைந்தது. 2006ல் அரசு முதல் முதலில் திமிங்கலங்களை வேட்டையாட அனுமதி அளித்தது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்படும் எண்ணிக்கையில் இவை வேட்டையாடப்பட்டன.

சூழலியலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மீன் பிடி தடை உள்ள கடலோரப் பிரதேசங்களின் (no fishing coastal zones) பரப்பு அதிகமானது. இதனால் திமிங்கலங்களைப் பிடிக்க வெகுதூரம் செல்ல வேண்டியதாயிற்று. இது வேட்டைக்கான செலவை அதிகரித்தது.

ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தர மதிப்பீடு உயர்த்தப்பட்டதுடன் இந்த உயிரினங்களின் இறைச்சி ஏற்றுமதியும் குறைந்தது.

இதனால் இப்போது அங்கு இந்த அற்புத உயிரினங்களின் வேட்டை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

தப்பிப் பிழைத்தன திமிங்கலங்கள்!

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It