பரமக்குடி படுகொலையை முன்வைத்து சர்ச்சையொன்று கிளம்பியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் போதெல்லாம் – இந்த சர்ச்சை கை கால்கள் முளைத்துக் கொண்டு அலைவது வழக்கம். குறிப்பாக, பட்டியல் சாதியினரில் ஒரு பிரிவினரான பள்ளர்கள், தங்களை தலித் என்று விளிப்போரை கடுமையாக சாடுவதோடு, தாங்கள் தலித்துகளே அல்லர் என்பதை நிறுவும் பொருட்டு – புதிய புதிய விளக்கங்களையும் வரலாற்றுக் கதைகளையும் கூறுகின்றனர்.
பள்ளர்கள் தாங்கள் மட்டுமே மருத நிலத்தை ஆண்ட வேளாண் குடிமக்களான மள்ளர்கள் என்றும், மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மள்ளர்களே என்றும் கூறிக் கொள்கின்றனர். எந்த அடிப்படையும் ஆதாரமுமற்ற இத்தகு கட்டுக் கதைகள், இச்சாதிய சமூகத்தில் ஆற்றவிருக்கும் பங்கு, நிலைத்து நின்றுவிட்ட இந்துமத சூழ்ச்சிகளுக்கும் நீடித்து வரும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் துரும்பளவு கூட எதிர்வினையாற்றப் போவதில்லை. மாறாக, இச்சாதியக் கட்டமைப்பின் கெட்டித் தன்மைக்கு மேலும் வலுவேற்றும் வேலையையே அது ஆற்றும்.
உலகம் முழுவதிலும் குறிப்பாக இந்தியாவில் மொழி மற்றும் பண்பாட்டுப் பாகுபாடின்றி, இம்மண்ணின் தொல்குடிகள் அனைவருக்குமே செருக்கோடு பகிர்ந்து கொள்ளக் கூடிய வரலாறு நிச்சயம் உண்டு. அதைப் போலத்தான் வேளாண் தொழில் செய்து வந்த பள்ளர்கள் குறித்த குறிப்புகள், மள்ளர்கள் என்ற பெயரில் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. உணவு உற்பத்தி எக்காலத்திலும் முதன்மைத் தொழிலாக இருக்கும்போது, நதிக்கரையோர நிலங்களை வைத்துக் கொண்டு விவசாயம் செய்தவர்களே முதன்மை பெற்ற சமூகமாக இருந்ததில் வியப்பேதுமில்லை. இது, அவர்களின் புவியியல் சார்ந்த வாழ்வியல். இதே போன்ற புவியியல் சார்ந்த வாழ்வியல் ஒவ்வொரு நில மக்களுக்கும் இருந்தது.
இதில் எதுவொன்றையும் உயர்வானதாகவோ, மற்றொன்றை தாழ்வானதாகவோ கருத நியாயமில்லை. வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களைத் தவிர, பிற தொழில் செய்கிற மக்களும் அக்காலத்தில் வாழ்ந்தனர். அவர்களின் உழைப்பை அக்கால மள்ளர்கள் பெறவே செய்தனர். எத்தொழில் செய்த மக்களும் சுயமரியாதையோடும் சம தகுதியோடுமே வாழ்ந்திருக்கிறார்கள். இந்நிலையில், வேளாண் தொழில் மட்டுமே புனிதமானது என்ற கருத்தியலை பள்ளர்களும் முன் வைக்கக் காரணம், பிற தலித் பிரிவினரைப் போல மலமள்ளுவது, பறையடிப்பது போன்ற இழிதொழில்களைத் தாங்கள் செய்யவில்லை என நிறுவுவதற்காகவே!
இம்மண்ணில் ஜாதி வேரூன்றி, இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரம்மனின் உடலில் எங்கெங்கிருந்து யார் யார் தோன்றினார்கள் என்ற வர்ணாசிரம வரையறையும் அதற்கு முன்பே தோன்றிவிட்டது. இந்து மதக் கட்டமைப்பின் ஆதிக்க வரலாற்றைப் புறந்தள்ளாமல், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மள்ளர்களே எனக் குறிப்பிடுகின்றனர் பள்ளர்கள். வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்படாத விஷயங்களை, தங்களின் வசதிக்கேற்ப வளைத்துக் கொள்வது ஆதிக்கவாதிகளின் செயல். பள்ளர்களும் ஏன் அம்முயற்சியில் ஈடுபடுகிறார்களெனில், தங்களின் அடிமை அடையாளத்தை மட்டும் எப்படியேனும் அறுத்தெறிந்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள். அதனாலேயே ஆண்ட பரம்பரை என்றும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் குலம் என்றும், போர்வீரர்களாகவும், விவசாயிகளாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
ஜாதி உருவாகி இரண்டாயிரம் ஆண்டுகளாகிவிட்டன. ராஜராஜசோழனின் ஆயிரமாண்டு சதய விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இம்மன்னர்களும் அவர்கள் ஆட்சியின் கீழிருந்த மக்களும் மட்டும் எப்படி சாதி என்ற கட்டமைப்பிற்கு வெளியே இயங்கியிருக்க முடியும்? நாடுகளை வளைத்துப் பேரரசரான பின்னரும் கூட சிவாஜியால், தன் விருப்பப்படி சத்ரியனாக முடியவில்லை. ஒரு சூத்திரர் சத்திரியராக முடியாதபோது, பஞ்சமர்கள் மட்டும் சத்திரியர்களாகி ஆட்சி செய்வதற்கான சாத்தியங்கள் ஏது? இந்த நாகரிக காலத்திலும் நவீனங்களை உள்விழுங்கிக் கொண்டு, ஜாதி வளர்வதால்தான் – இன்று வரையிலும் கூட, எம்மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பிலும் தலித் மக்களால் அமர முடியவில்லை. சுதந்திர இந்தியாவில் வெகு சில விதிவிலக்குகள் உண்டு.
அரசமைப்புச் சட்டம் தீண்டத்தகாத மக்களுக்கு வைத்திருக்கும் வரையறைக்குள் தாங்கள் வரவில்லை என பள்ளர்களுக்கான சில தலைவர்களும் அமைப்புகளும் வாதிடுகின்றனர். தென்மாவட்டங்களில் உள்ள ஜாதிய பாகுபாடுகளும் தீண்டாமை வடிவங்களும் வெறும் பொய்களால் மறைக்கப்படக்கூடியவை அல்ல. அப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் தலித்துகளாக இருக்கும் பள்ளர்கள், தொடர்ச்சியான வன்கொடுமைகளுக்கும் தீண்டாமைக்கும் இழிவுகளுக்கும் ஆளாகியே வருகின்றனர் என்பது கண்கூடு.
இரட்டை டம்ளர் முறை, ஊர் தெருக்களுக்குள் அனுமதி மறுப்பு, கோயில்களுக்குள் செல்லத் தடை, அரச வன்முறை என தீண்டாமைக் கொடுமைகள் எப்போதும் உச்ச நிலையிலேயே இருக்கின்றன. பள்ளர்களையும் சாதி இந்துக்களையும் உள்ளடக்கிய எந்த ஊரையும் இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும். சேரியில் நாங்கள் வாழவில்லை என்றும், தீண்டாமை என்ற ஒன்றே தங்களுக்குக் கிடையாது என்றும் உண்மைகளை மறைத்துவிட்டுப் பேசுபவர்கள், உத்தப்புரத்தில் ஊரை இரண்டாகப் பிரித்து எழுப்பப்பட்ட சுவருக்கு அர்த்தமென்ன என்பதை விளக்க வேண்டும். அம்மக்கள் காலங்காலமாக அனுபவித்து வரும் கொடிய பாகுபாடுகள் அவர்களுடைய போர்க்குணத்தினால் உண்டான விளைவல்ல; அவர்கள் சார்ந்த சாதிக்காக விதைக்கப்பட்ட அநீதி.
அண்மையில், ஊர் கோயிலுக்குள் நுழைந்த பள்ளர்களுக்கு கிடைத்த சமநீதியை பொறுக்கமாட்டாமல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, கதறியழுத உத்தப்புர சாதி இந்துக்களிடம் நாம் கண்ட வெறுப்புணர்வு – வெறுமனே போட்டியாளர்கள் என்பதால் வந்ததல்ல. மள்ளர்களாக தங்களை முன்னிறுத்துகிறவர்கள் – முக்குலத்தோருக்கும் தங்களுக்குமான வெறுப்புணர்வை – சமமானவர்களுக்கிடையிலான சண்டை என்பதாகக் குறைத்துக் காட்ட முனைகிறார்கள். பொது மக்களை விடுங்கள், அண்மையில், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், பிற சமூக நீதிபதிகளால் தான் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாவதாகக் குறிப்பிட்டாரே அதையும் மறுதலிப்பார்களா? தங்கள் மீதான தீண்டாமையை மக்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, அதற்கெதிராகப் போராடவும் உயிரை விடவும் கூட தயாராக இருக்கும்போது, அதை மூடி மறைக்க இவர்கள் யார்?
'ஆண்ட பரம்பரை' என்ற சொற்களின் மூலம் கிளர்ச்சியூட்டுவது ஒன்றையே மள்ளர் அமைப்புகள் தங்களின் அரசியல் பாதையாக வைத்திருக்கின்றன. “அடிமையிடம் நீ அடிமை எனச் சொல், அவன் கிளர்ந்தெழுவான்'' என்றார் அம்பேத்கர். தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதை உணராமல், எல்லாம் விதி என வாழ்கிறவர்களிடம் ஆண்ட பரம்பரை என சொன்னால், எப்படியொரு கண்மூடித்தனமான கிளர்ச்சி உண்டாகுமோ, அதுதான் பள்ளர்களை எப்பொழுதும் ஆட்டுவிக்கிறது. தன் மீது சுமத்தப்பட்ட அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடாமல், சாதியக் கட்டமைப்பின் வன்முறைக்கு பதில் சொல்லாமல், தங்களது ஆதிக்கத்தை நிறுவுவதற்கான வாய்ப்புகளைத் தேடுகின்றனர். அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என சொல்லித் தரும் தலைவர்களின் வழி நடத்தலில், நாம் அடிமைகள் அல்லர், ஆதிக்கவாதிகள் என முறுக்கிக் கொண்டு எழுகிறார்கள். ஆண்ட பரம்பரை என்ற வாதத்திற்கு வலு சேர்க்கவே மள்ளரியத்தை துணைக்கழைக்கின்றனர்.
மன்னராட்சியின் சர்வாதிகாரங்கள் நிராகரிக்கப்படும் மக்களாட்சிக் காலத்தில், அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராட வேண்டிய மக்களுக்கு சர்வாதிகார உணர்வை ஊட்ட சில அமைப்புகள் தொடர்ந்து முயல்கின்றன. மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு அடிவருடிகளாக இருந்து, ஜாதியை காப்பாற்ற எடுத்த முயற்சிகளை சமூக வரலாறுகளும் ஆய்வுகளும் வலுவாக முன் வைக்கின்றன. பல தார மோகம், பெண்களை பாலியல் தொழிலில் தள்ளியது, சிரச் சேதம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை அரங்கேற்றியது என ராஜ ராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்களின் சர்வாதிகார அத்துமீறல்கள் நாமறிந்ததே! மன்னர்களின் உண்மை வரலாறு, மனித உரிமை மீறல்களின் ஒட்டுமொத்தப் பதிவாகவே இருக்கிறது எனும்போது, மள்ளர் அமைப்புகள் எப்படி அவர்களோடு தம்மை தொடர்புபடுத்தி பெருமை பாராட்டுகின்றன?!
மள்ளர் அமைப்புகள் சில, தங்களின் பண்டைய செல்வாக்கையும் பெயரளவிலான ராஜ குலப் பின்னணியையும் துருப்பாக வைத்துக் கொண்டு, இச்சாதிய சமூகத்திடம் முன் வைக்கும் கோரிக்கைகள் சுயநலமிக்கவை. "அரசமைப்புச் சட்டம் வரையறுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கான வரையறைக்குள் தாங்கள் இல்லை; அதனால் பட்டியல் சாதியிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்கிறார்கள். நல்லது. பட்டியல் சாதியிலிருந்து வெளியேற விழையும் பள்ளர்களின் இந்த விருப்பமானது, இந்து மதத்தின் சாதியக் கட்டமைப்பைத் தகர்க்கும் முயற்சியா என்றால், அதுதான் இல்லை. இந்து மதத்தை விட்டு வெளியேறும் முயற்சியா என்றால், அதுவும் இல்லை.
இந்தியாவில் சாதியை முற்றாக அழித்தொழிக்க விரும்புகிறவர்கள், அம்பேத்கர் முன்வைத்த மதமாற்றம் ஒன்றையே ஆயுதமாகக் கையிலெடுக்கின்றனர். இதற்கு மாறாக, இந்து மதத்தில் இருந்து வெளியேற விரும்பாத மள்ளர் அமைப்புகள், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். இந்து மதத்தைத் துறந்து கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்களைத் தழுவினால் – மிக எளிதாகவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைந்துவிடமுடியும். ஆனால், இதைச் செய்ய மறுத்து, 'இந்து பிற்படுத்தப்பட்டோர்' பட்டியலில் சூத்திரர்களாக இடம் பிடிக்கவே துடிக்கின்றனர்!
பட்டியல் சாதிப் பிரிவில் இருப்பதால், சாதி இழிவு யாரையும் ஆட்கொள்ளவில்லை. பிறப்பால் சாதி இழிவுக் கரையை சுமந்து கொண்டிருந்ததாலேயே எல்லோரைப் போலவே பட்டியல் சாதிப் பிரிவில் பள்ளர்கள் வர நேர்ந்தது. பட்டியலில் இருப்பதுதான் பிரச்சனை என்றால், 78 சாதிகளும் கூட வெளியேறி விடலாமே! தன் ஆயுட்காலத்தை முழுவதுமாக அர்ப்பணித்து அம்பேத்கர் அவர்கள் எழுதிய சமூக வரலாற்றையும், அரசமைப்புச் சட்டத்தையும் இடது கையால் நிராகரிக்கிறவர்களில் பெரும்பாலானோர், இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவித்து வளர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்! கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுவிட்ட பின்னர், இன்று சாதிச் சான்றிதழ்களில் எஸ்.சி.யை, பி.சி.யாக்கப் போராடுகின்றனர்.
இன்றளவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி, சமூக நீதி என்பது முற்றிலுமாக மறுக்கப்பட்டு அடிப்படைக் கல்வி கூட கிட்டாதவர்களைப் பற்றி இவர்களுக்கு துளியும் அக்கறையில்லை. ஆறு பேர் படுகொலை செய்யப்பட்ட பரமக்குடியில் கூட, பெரும்பான்மை பள்ளர்கள் விவசாயக் கூலிகளாகவே வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தைப் பிடுங்கியெறிய இவர்களுக்கென்ன உரிமை இருக்கிறது? சாதிச் சான்றிதழ் என ஒன்று (ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் எந்த சான்றிதழ் இருந்தது? எந்தப் பட்டியல் இருந்தது?) இருப்பதன் பயன் தெரியாமலேயே எத்தனை மக்கள் தங்கள் வாழ்நாட்களை கடந்து போகிறார்கள்? இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சாதியின் பெயரால் நிகழும் ஒடுக்குமுறைகளும் அத்துமீறல்களும் சுரண்டல்களும் மட்டுமே! எஸ்.சி. – பி.சி.யானால் என்ன நடந்துவிடும் என்பதைக் கூட அவர்கள் அறிந்திருக்கப் போவதில்லை.
பள்ளர்களை தலித் என்றோ, ஆதி திராவிடர் என்றோ அழைக்கக் கூடாதென தொடர்ச்சியாக மள்ளர் அமைப்புகள் மிரட்டல் விடுக்கின்றன. மண்ணின் மக்கள் என்ற அர்த்தத்தை உள்ளடக்கிய தலித் என்ற சொல்லின் மீது, இவர்களுக்கு அப்படியென்ன வெறுப்பு? ஊடகங்களிலும் உலகளவிலும் தலித் என்பது, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோர் தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதன் குறியீடாக மாறியிருக்கின்ற நிலையில், பள்ளர்கள் மட்டும் அதிலிருந்து தங்களை துண்டித்துக் கொள்ள நினைப்பதன் நோக்கம் என்ன? உண்மையில் இவர்கள் பிற பட்டியல் சாதியினரை விட தங்களை உயர்ந்தவர்களாகக் கருதுவதால், அவர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
தங்கள் மீது இழிவைத் திணிக்கும் சாதி இந்துக்களை எதிர்க்கும் அதே வேளையில், பறையரையும் சக்கிலியரையும் கீழானவர்களாகக் கருதும் மனநிலைதான் பள்ளர்களிடம் ஓங்கி நிற்கிறது. சாதி இந்துக்களைப் போலவே எல்லாவிதமான தீண்டாமையையும் பறையர் மற்றும் சக்கிலியர் மீது பள்ளர்கள் செலுத்துகின்றனர். பிற்படுத்தப்பட்டோராகிவிட்டால், சாதி இந்துக்களோடு சமத்துவம் கிடைப்பது ஒரு பலனெனில், தலித்துகளை இன்னும் வீரியத்தோடு ஒடுக்க முடியும் என்பது மற்றொரு பலன்.
மள்ளர் – மள்ளர் அல்லாதோர் என்று சமூகத்தை செங்குத்தாகப் பிரித்துப் பார்க்கவே மள்ளர் அமைப்புகள் தீவிரம் காட்டுகின்றன. நாம்தான் ஆண்ட பரம்பரை, நாம்தான் வேளாண் குடி, நாம்தான் மன்னர்கள், நாம்தான் தமிழர்கள் என்ற முழக்கத்தின் மூலம் – மற்றவர்களை வந்தேறிகளாகவும், அடிமைச் சமூகமாகவும் சித்தரிக்க முயல்கின்றன. பார்ப்பனியத்தைப் போலவே இது ஒட்டுமொத்தமான ஆதிக்க உளவியலன்றி வேறென்ன?
எதற்கும் கட்டுப்படாதவர்களாகவும், பெருந்துணிச்சல்காரர்களாகவும் சாதியக் கட்டமைப்பை மிஞ்சியவர்களாகவும் தங்களை முன்னிறுத்திக் கொள்கிறவர்களால், தம்மை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்திய இந்து மதத்தையும், அது உருவாக்கிய சாதியையும் ஒருபோதும் துறக்க முடிவதில்லை. பள்ளர்கள் சாதி வேண்டாமெனச் சொல்லவில்லை; அடிமைச் சாதி வேண்டாம் என்கிறார்கள். சிவன், இந்திரன், விஷ்ணு ஆகியோரை முன்னோர்களாக வணங்குகின்றனர். சிவனுக்கு கோயிலை கட்டியதாலேயே ராஜராஜ சோழனை மள்ளர் எனக் கொண்டாடுகின்றனர். வேந்தன் என்பது இந்திரனையும் மன்னனையும் குறிக்கிறது என்பதால், தேவேந்திர குலம் என தங்களை அடையாளப்படுத்தவும் துணிகின்றனர். ஆனால், இவையெல்லாம் ஒருபோதும் அவர்களின் பிறப்பின் அடிப்படையிலான சாதி இழிவைப் போக்கப் போவதில்லை.
தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சாதிய அத்துமீறல்களுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் கடந்த அய்ந்தாண்டுகளில் பள்ளர்கள் எதிர்கொண்ட உயிர், உடைமை, உரிமை இழப்புகளைத் தடுக்கவோ அதற்கு ஈடு செய்யவோ ஆளில்லை. ஆறு பேரை பலிகொண்ட அரச பயங்கரவாதத்திற்கு கூட, பாதிக்கப்பட்டவர்களுக்காக சட்ட ரீதியான, தார்மீக ரீதியான உதவிகளை செய்ய முன் வராமல், செய்கிறவர்களையும் விரட்டியடிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். 'பெயருக்கு' அரசியல் செய்வோர், சாதிவெறியின் அன்றாட அழுத்தங்களால் கொதி நிலையில் இருக்கும் மக்களின் உணர்வுகள் போர்க் குணமென்ற பெயரில் களத்தில் உயிர்பலி கொடுக்கவே பயன்படுகிறது. மாறாக, அவர்களை நெறிப்படுத்தவோ, வாழ்வியல் தரத்தை உயர்த்தவோ, பகுத்தறிவூட்டவோ, ஏன் அரசியல்படுத்தவோ கூட முன்வரவில்லை.
தலித் மக்கள் யாராக இருந்தனர் என்பது முக்கியமில்லை; யாராக இருக்கிறார்கள் என்பதும், யாராக இருக்கப் போகிறார்கள் என்பதுவுமே முக்கியம். பாட்டனுக்கு பாட்டன் மன்னனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், இடையில் பின்னப்பட்ட சூழ்ச்சியில் தலைமுறைகள் அடிமைகளாகிவிட்டன. அடிமைத்தனத்தின் வலி என்னவென இப்போது நன்றாகத் தெரியும். ஆதிக்கத்தை பிறப்புரிமையாகக் கருதி அதைக் கோருவதா? இல்லை, அடிமைத்தனத்தை பிறவி இழிவாகக் கருதி, அதை எதிர்த்து சமத்துவத்திற்காகப் போராடுவதா? புத்தரும் அம்பேத்கரும் பெரியாரும் இரண்டாம் கேள்வியோடு நின்றார்கள். இன்றைய தலித் அமைப்புகள் முதல் கேள்வியோடு நிற்கின்றன.
பிரித்தாளும் பார்ப்பனிய சூழ்ச்சி, மக்களை சாதிகளாகத் துண்டாடியது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு சாதிகளாக சமூகங்கள் சிதறுண்டு கிடக்கின்றன. எட்ட முடியாத உயரத்தில் அமர்ந்து கொண்ட பார்ப்பனர்கள், சாதிய அடுக்கை நுணுக்கமாகக் கட்டமைத்ததில் நமக்கு கீழ் நான்கு பேர் இருப்பதில் மகிழ்ச்சியடைந்து கொண்டோம். தலைக்கு மேலே எத்தனை பேர் இருந்தாலும் சரி, காலுக்குக் கீழே யாராவது இருந்தாக வேண்டும். சாதியச் சுழலுக்குள் சிக்கி உழலும் ஒவ்வொரு இந்தியனின் / இந்துவின் உளவியலும் இப்படித்தான் இருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர் தலித்துகளை ஒடுக்குவதும், தலித் மக்கள் அதற்கு எதிர்வினையாற்றுவதுமாக அல்லது தலித்துகளே தலித்துகளோடு மல்லுக்கட்டுவதுமாக – இந்த சண்டை கீழேயே நடந்து கொண்டிருக்க, இந்நாட்டின் வளங்கள், துறைகள், அதிகாரங்கள் என உயர்நிலையில் உள்ள எல்லாவற்றையும் ஒரு சிறு குழு அனுபவித்துக் கொண்டிருப்பது பற்றியோ, அதில் தங்களுக்கான நியாயமான பங்கை கோருகிறவர்களை திரண்டு வந்து, அக்குழு தாக்குவது குறித்தோ நமக்கு அக்கறையில்லை. உண்மையான வந்தேறிகளும் கொள்ளைக்காரர்களுமான அவர்களை சுதந்திரமாக உலவவிட்டு, நசுங்கி ஒடுங்கிக் கிடப்பவர்கள் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பிரித்தாள்வது பார்ப்பனியத்தின் சூத்திரமெனில், அதற்கெதிராக ஒன்றிணைவது ஒன்றே ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான திறவுகோலாக அமைய முடியும். அம்பேத்கரும் பெரியாரும் இதையே வலியுறுத்தினர். தலித் மக்களை திரட்டும் தலைமைகள் ஆதாரமற்ற வரலாற்றுக் கதைகளைச் சொல்லி, தன் மக்களை மேலும் தனிமைப்படுத்தும் செயலையே செய்கின்றனர். பள்ளர்களிடம் மட்டுமல்ல; பறையர், சக்கிலியர், புதிரை வண்ணார் என எல்லோரையுமே இந்நோய் பீடித்திருக்கிறது. இந்து மத சூழ்ச்சியை தகர்த்தெறியவும் சாதியக் கட்டமைப்பை உடைக்கவும் இவர்களிடம் எந்த செயல் திட்டங்களும் இல்லை. மாறாக, ஆளாளுக்கு ஒரு சாதிய அடையாளத்தை உருவாக்கி, அதை வைத்து அரசியல் செய்யவே முனைகின்றனர்.
இந்தியா முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் மொழியும் பண்பாடுகளும் வெவ்வேறானதாக இருந்தாலும், அவர்களின் வலியும் வேதனையும் கொண்டாட்டங்களும் இழப்புகளும் ஒன்றுதான். அதை உணரும் சுரணையற்றதாக ஒடுக்கப்பட்ட சமூகம் சுணங்கிக் கிடக்கிறது. வடகோடியில் வாழும் தலித்தும் தென் எல்லையில் வாழும் தலித்தும் சம அளவிலான சவால்களையே சாதி ரீதியாக எதிர்கொள்கின்றனர். எனும்போது, அவர்கள் கருத்தியல் ஓர்மையுடன் இணைவதைத் தவிர, சாதியொழிப்பு வேறெப்படி சாத்தியப்பட முடியும்?
ஆனால், சாதி ரீதியான அடக்குமுறையில் துவளும் தலித்துகளுக்கு ஆதிக்க வெறியை ஊட்டும் வேலைகள்தான் பெரும்பாலும் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. தன்னிலை உணர்ந்து சுய மரியாதையையும் உரிமைகளையும் பெறப் போராடுவது என்பது வேறு; ஆதிக்கசாதிகளுக்கு இணையாக தன்னையும் ஆதிக்கவாதியாக ஆக்கிக் கொள்வது என்பது வேறு! இந்த வேறுபாட்டை நிச்சயம் ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதல் உண்டாவதற்கு, ஒடுக்கப்பட்ட ஒருவர், தான் ஒடுக்கப்பட்டுதான் இருக்கிறோம் என்பதை முதலில் உணர வேண்டும்.
உட் சாதி என்பது, பார்ப்பனியத்தின் உயர் சதி. இந்த உண்மை புரியாமல், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இடையிலான மோதலானது, எதிரி யார் என்ற தெளிவில்லாமலேயே நடந்து கொண்டிருக்கிறது. எதிரியை இணங்காணாத இந்த சண்டை, காற்றுடன் மல்லுக்கட்டுவதற்கு சமம். சாதி ஆதிக்கத்தை தங்கள் செருக்கெனக் கொண்டாடும் முக்குலத்தோருக்கு இணையாக தேவேந்திரர் குலமென தங்களைச் சொல்கிறவர்கள், பறையர்களையும் சக்கிலியரையும் இணையற்றவர்களாகக் கருதுகின்றனர். ஒருவரோடு ஒருவர் கைகோக்க விரும்பாத இவர்கள், தாங்கள் ஒன்றிணைய வேண்டியதன் கட்டாயத்தை உணராமல் – பகைமையையும் வெறுப்புணர்வையும் ஆழப்படுத்தி, தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளத் துடிக்கின்றனர்.
தன்னை அடித்தவர்களை அடிக்க கரங்களை வலுவேற்றுவது, வெட்டியவர்களை வெட்ட ஆயுதங்களை கூர் தீட்டுவது என நபர்களுக்கும் நிகழ்வுகளுக்கும் மட்டுமே பதில் சொல்லத் துடிப்பவர்கள், படிநிலைப்படுத்தப்பட்ட இந்த சாதிய கட்டமைப்புதான் தங்களை இந்நிலைக்கு ஆளாக்கியது என்பதை புரிந்து கொள்ளவோ, ஏற்கவோ மறுப்பது வேதனைக்குரியது. அதனாலேயே இக்கட்டமைப்பைத் தகர்த்தெறிய முனையாமல், அதை திருத்தியமைக்க வேண்டுமென கோருகின்றனர். ஆனால், உண்மை என்னவெனில், சாதியப் படிநிலைகளை ஒரு போதும் மாற்றியமைக்க முடியாது. தன் மீது திணிக்கப்பட்ட இழிவை துடைத்தெறிய வேண்டுமெனில், சாதியை தகர்ப்பதைத் தவிர, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு வேறு மாற்றோ, தேர்வோ இல்லை. ஆகப் பெருஞ்செயலான அது, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஒன்றிணையும் போது மட்டுமே நடக்கும். அதனால், 'உங்களை எல்லாம் விட உயர்ந்தோர் நாங்கள்' என்ற முழக்கத்தை மாற்றி, நாமெல்லோரும் சமம் என சொல்லத் தொடங்குங்கள். சாதிக்கான சண்டையை சாதிக்கு எதிரான சண்டையாக மாற்றுங்கள். அப்போது உண்டாகும் திரட்சி, சாதியத்திற்கெதிரான பெரும் புரட்சியாக நிச்சயம் மாறும்.