ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் பிணங்களை எரிக்க விடாத வெட்கக் கேட்டைக் கடுமையாகக் கண்டித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனிதன் பிணமான பிறகும்கூட ஜாதி விடுவதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி வட்டம் ஏரிப்பட்டி கிராமத்தில் தலித் மக்கள் இறந்தவர்களை மயானத்தில் எரிக்க அனுமதிக்கப்படாததால் சாலை ஓரங்களில் உடலை எரித்து வருகிறார்கள். கிராம மக்களுக்கு அரசு பொதுவான ‘மாயனத்துக்கு’ இடம் ஒதுக்குகிறது. ஆனால், உள்ளூர் ஜாதி வெறியர்கள் ‘தலித்’ மக்கள் சடலங்களை எரிக்க அனுமதிப்பதில்லை. இது தொடர்பான வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வேதனைகளைப் பதிவு செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கியுள்ள பிச்சுவிளை கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவி தலித் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அய்ந்து தலித் அல்லாத தொகுதி உறுப்பினர்கள், தலித் பெண் தலைவரின் கீழ் உறுப்பினராக இருக்க முடியாது என்று கூறி வெற்றி பெற்ற இரண்டாவது நாளிலேயே தங்கள் பதவியிலிருந்து விலகி விட்டனர். 2019இல் இதே கிராமத்தில் தேர்தல் நடந்தபோது மொத்தமுள்ள 827 வாக்காளர்களில் இந்த கிராமத்தினர் தலித் பெண் தலைவரை ஏற்க முடியாது என்று தேர்தலை புறக்கணித்தனர். 13 வாக்குகள் மட்டுமே பதிவாயின. இதில் 10 வாக்குகளைப் பெற்று இராஜேஸ்வரி என்றதலித் பெண் பஞ்சாயத்து தலைவரானார். இப்போது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள உள்ளூர் தலித் அல்லாத ‘கவுன்சிலர்கள்’ பதவியிலிருந்து விலகி எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

‘குறவர்’ பழங்குடி சமூகத்தைச் சார்ந்த பெண் ஒருவர் பேசிய வீடியோ பதிவு முகநூலில் ‘வைரலாக’ பரவிக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு அரசு இலவசப் பயணத்தை அறிவித்தாலும் நிறுத்தங்களில் இந்த சமூகப் பெண்கள் பேருந்தில் ஏற்ற ஓட்டுநரும் நடத்துநரும் மறுத்து பேருந்தை நிறுத்துவதே இல்லை. கோயில்களில் அரசு நடத்தும் ‘அன்னதான’த்தில் சாப்பிட உட்கார்ந்தவர்களை ஜாதி வெறியர்கள், சாப்பாடு பந்தியிலிருந்து வெளியேற்றி, ‘எச்சில் இலை’யைத்தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்று அவமதித்ததாக அப்பெண் புயலாக சீறியிருக்கிறார். கடந்த காலங்களில் நாங்கள் சுகாதாரமற்ற வாழ்க்கை முறையில் இருந்தோம் என்றாலும் இப்போது நவீன வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகும் இந்த ஜாதிய கொடுமை நடக்கிறது என்று கூறிய அவர், பிணங்களை சுடுகாட்டுக்குக் கொண்டு போய் சுத்தம் செய்ய மட்டும் நாங்கள் தேவைப்படுகிறோம்; அப்போது எந்தப் பிணமாவது எழுந்து என்னைத் தொடாதே என்று கூறியதா என்ற அறிவுபூர்வமான கேள்வியை எழுப்புகிறார். “எங்கள் பிள்ளைகளை நாங்கள் படிக்க வைப்போம்; இனி வரும் காலத்தில் அவர்கள் இதைத் தட்டிக் கேட்பார்கள்” என்று நம்பிக்கையோடும் உறுதியோடும் அந்தப் பெண் பேசுகிறார்.

வன்னியர் ஜாதிப் பெண் இளமதியும் தலித் சமூகத்தைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் செல்வனும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்ய முன் வந்தபோது, காவலாண்டியூர் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அவர்களுக்கு மண நிகழ்வை நடத்தி அடைக்கலம் தந்தார்கள். ஜாதிவெறிக் கூட்டம் நள்ளிரவில் கழகத் தோழர் காவலாண்டியூர் ஈசுவரனை அடைக்கலம் தந்தார் என்பதற்காகக் கடத்தி கொடூரமாகத் தாக்கியதோடு, இளம் காதலர்களையும் கட்டாயமாகப் பிரித்தது. ஒன்றரை ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு திராவிடர் விடுதலைக் கழகத்தின் இடைவிடாத முயற்சியால் இணையர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். கழகத் தோழர்கள் மேட்டூரில் குடும்பம் குடும்பமாய் திரண்டு மணமக்களை மேட்டூர் வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பாராட்டு விழா பொதுக் கூட்டத்தையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வு, ஒரு வரலாற்று சம்பவத்தை நினைவுகூர்வதாக இருக்கிறது. 1930ஆம் ஆண்டு வைதீகக் குடும்பத்தில் பிறந்து இளம் வயதில் கணவனை இழந்த சிவகாமிக்கும் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த தமிழறிஞர் சாமி. சிதம்பரனாருக்கும் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணத்தை நாகம்மையார் தலைமையில் பெரியார் நடத்தினார். அன்று மாலையே இத்தகைய திருமணங்கள் மக்களிடம் பரப்பிட வேண்டும் என்ற நோக்கத்தோடு மணமக்களை ஈரோடு வீதிகளில் ஊர்வலமாக சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் அழைத்துச் சென்றனர். மக்கள் இருபுறமும் கூடி வியந்து இந்தக் காட்சியைப் பார்த்தனர். சுமார் 91 வருடங்களுக்குப் பிறகும் ஜாதி இறுக்கம் தளர்ந்திருக்கிறதே தவிர, அதன் அடிப்படையான கட்டமைப்பு வலிமையுடனேயே இருக்கிறது.

‘பிராமணர்கள்’ ஜாதிக்குள்ளேயே திருமணம் நடத்த வேண்டும் என்றும், ‘பிராமணர்கள்’ பேசும் ‘ஆத்து மொழி’, ‘தூர்த்தம்’ அடையாளத்தை விட்டுவிடக் கூடாது என்றும், ‘தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர்’ நாராயணன் ‘காணொலி’களில் இப்போதும் பேசி வருகிறார். புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘இளைஞர்கள் ஜாதி கடந்து காதலிப்பதை நிறுத்துங்கள்’ என்று வெளிப்படையாகவே கூறுகிறார். பா.ம.க.வின் சார்பில் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஒரு வழக்கறிஞர், ஜாதியை எதற்காக ஒழிக்க வேண்டும் என்று கேட்கிறார். ஆர்.எஸ்.எஸ்.களாக ‘அவதாரம்’ எடுத்துள்ள ஒரு சில தமிழ்த் தேசிய அமைப்புகள், தமிழர்களை அடையாளப்படுத்த ஜாதியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணத்தையே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனுமான கதிர் ஆனந்த் முகநூலில் பதிவிடுகிறார். ஆக ஜாதி வெறி இன்று பல்வேறு வடிவங்களில் புதிய புதிய வாதங்களோடு புறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜாதி எதிர்ப்புக்கான இயக்கங்கள் மேலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையையே இவை உணர்த்தி நிற்கின்றன.

- விடுதலை இராசேந்திரன்

Pin It