காவல் நிலையங்களில் ஆயுதபூசை நடத்துவதை எதிர்த்து திருச்சியில் கூடிய கழக மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு செயல் வடிவம் தந்து, கழகத் தோழர்கள் சென்னை, மேட்டூரில் களப்பணியில் இறங்கினர். கோவையில் ஆயுத பூசை நடத்துவதை எதிர்த்து, கழக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆயுத பூசை வந்து விட்டால் அரசு அலுவலகங்கள், குறிப்பாக காவல் நிலையங்கள், இந்து மடங்களாக மாறி விடுவது வழக்கமாகி விடுகிறது. காவல் நிலையங்களில் மதச்சார்புள்ள வழிபாடுகள் மற்றும் ஆயுத பூசைகளைக் கொண்டாடக் கூடாது என அரசு ஆணை இருந்தும், காவல்துறை அதை மதிப்பது இல்லை. இதைத் திருச்சி தீர்மானப்படி தடுத்து நிறுத்திட சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் களமிறங்கினர். சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரின் கவனத்துக்கு இப் பிரச்சினையை சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கொண்டு சென்றனர்.
கழகத்தின் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், கழகத் தோழர்களுடன் ஆணையாளரை சந்திக்க நேரம் கேட்டபோது, ‘இது குறித்து அனைத்து காவல் நிலையங் களுக்கும், ஆயுத பூசை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தி, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு விட்டது’ என்று ஆணையாளர் சார்பாக தெரிவிக்கப்பட்டது. சென்னை மாவட்ட கழக சார்பில், நகரிலுள்ள சுமார் 70 காவல் நிலையங்களுக்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் தபசி. குமரன், கையெழுத்திட்டு, ஆயுதப் பூசைகளை நிறுத்துமாறும், மீறி கொண்டாடினால், மக்களை திரட்டி, ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்து, கடிதங்கள் அனுப்பப் பட்டன. ஒரு சில காவல் நிலையத்தில் மட்டும் கடிதத்தை வாங்க மறுத்து, திருப்பி அனுப்பினர். ஆயுத பூசை போடும் நாளில், ஒவ்வொரு பகுதியிலும், கழகத் தோழர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று, அரசு ஆணைக்கு எதிராக ஆயுத பூசைகள் கொண்டாட வேண்டாம் என்று நேரிலும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதன் காரணமாக வெளிப்படையாக வாழைமரம், தோரணம் கட்டி, ஆயுதப் பூசை கொண்டாடுவது பல காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை (அக்.16) பேசின் பிரிட்ஜ் காவல்நிலையத்தில் வாழை மரம் கட்டி, தடபுடலாக, பூசைகள் நடத்த ஏற்பாடு நடக்கும் செய்தி, கழகத் தோழர்களுக்கு எட்டியது. தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி. குமரன், செயலாளர் உமாபதி, வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் கேசவன், செயலாளர்அன்பு ஆகியோருடன் 50 தோழர்கள், பேசின் பிரிட்ஜ் காவல் நிலையம் அருகே கூடி, ஆர்ப்பாட்ட முழக்கங்களுடன் ஊர்வலமாகச் சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர்.
வெளியில் கட்டப்பட்டிருந்த வாழை மரம், தோரணங்களை அகற்றினர். தங்களுக்கு தகவல் ஏதும் கிடைக்காத காரணத்தால், வழக்கம் போல் பூசை போடுவதாகவும், இனி தவிர்த்து விடுவதாகவும் ஆய்வாளர் கூறினார். தோழர்கள் ஊர்வலமாகச் சென்று, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த காட்சியை, சன்தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி, ராஜ் டி.வி. ஆகியவை ஒளிபரப்பின.
“சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம் அதனால் விபத்துகள் நேரிடுகின்றன என்று காவல்துறை எச்சரிக்கை செய்கிறது. ஆனால், காவல்துறையினரே காவல்நிலைய வாயிலில் பூசணிக்காயை உடைக்கிறார்கள். மதச் சார்பற்ற நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்தின் நிறுவனங்களாக, காவல் நிலையமும், அரசு அலுவலகமும் செயல் படுவதும், அரசு ஆணைகளை மீறுவதும் அனுமதிக்க முடியாது. இந்த ஆண்டு, இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறோம். எதிர்வரும் ஆண்டுகளில் இது தொடர்ந்தால், பெரியார் திராவிடர் கழகம் நேரடியாக போராடும்” என்று மாவட்ட செயலாளர் உமாபதி அளித்த பேட்டியை ஊடகங்கள் ஒளிபரப்பின.
சுட்டுவிடுவோம்; துப்பாக்கியை நீட்டி கழகத் தலைவரை மிரட்டிய மேட்டூர் காவல்துறை
ஆயுத பூசையைக் கொண்டாடுவதை தடை செய்து, அரசு பிறப்பித்த ஆணையையும், வேண்டுகோள் கடிதத்தையும் மேட்டூர் கழகத் தோழர்கள் காவல்நிலையத்துக்கு பதிவு தபாலில்அனுப்பினர். பிறகு, 16 ஆம் தேதி நேரிலும் சென்று கேட்டுக் கொண்டனர். எல்லாவற்றையும் மீறி, காவல்துறை ஆயுத பூசை நடத்த ஏற்பாடுகள் செய்ததை அறிந்து, கழக மாவட்டத் தலைவர் மார்ட்டின், பொருளாளர் கோவிந்தராசு, கழகத்தோழர்கள் முத்துராசு, பாலு ஆகியோர் காவல் நிலையம் சென்று பூசை கொண்டாட்டங்களை அலைபேசியில் படம் எடுத்தபோது, காவல்துறையினர் அலைபேசிகளை பிடுங்கி, கீழே போட்டு உடைத்தனர். அதைத் தொடர்ந்து பதட்டமான சூழல் உருவானது. கழகத் தோழர்களையும் தாக்கியுள்ளனர்.
சேதி அறிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தோழர்களுடன் காவல்நிலையம் சென்றபோது காவலர்கள் சிலர் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு, ‘சுட்டு விடுவோம்’ என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணியை மிரட்டினர். ‘லஞ்சம் வாங்குகிறவர்களுக்கு, இவ்வளவு துணிவு வந்துவிட்டதா?’ என்று கழகத் தலைவர் கேட்டபோது, ‘காலம்காலமாக பூசை நடத்துவதை தடுக்கலாமா?’ என்று கேட்டனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் வந்தால் காலம்காலமாக லஞ்சம் வாங்குவதை தடுப்பதா என்று கேட்பீர்களா, என்று கழகத் தலைவர் திருப்பிக் கேட்டார். நிலைமை பதட்டமானது.
காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். ‘அலைபேசி’யில் படம் பிடித்த கழகத் தோழர்கள் நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 452, 353, 332, 50 பகுதி 2 (2) மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கும் பிரிவு 3(1) கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர். காவல்துறை அலுவலகத்தில் உள்ள மேசை, நாற்காலி, சாமி படம் ஆகிய பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், பொறி, பழங்களுடன் சாமி படத்துக்கு சிறிய பூசை போடும்போது அவற்றை சேதப்படுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை.