காஷ்மீர் மாநிலத்தின் சுதந்திர நாள் விழாவில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா கொடியேற்ற வந்தபோது, (இது தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வாங்கித் தந்த உரிமையாக்கும்!) அவர் மீது பார்வையாளர் வரிசையில் அமர்ந்த ஒருவர் ‘செருப்பை’ எடுத்து வீசி விட்டார்!
 
“எங்களுக்கு எங்கே சுதந்திரம்?” என்று செருப்பை வீசியவர் கேட்டுள்ளார். முதல்வர் உமர் அப்துல்லாவோ, ‘கல்லால் அடிப்பதைவிட செருப்பால் அடிப்பது எவ்வளவோ சிறந்தது” என்று பதில் கூறியிருக்கிறார். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, மக்களை வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து “சுதந்திர நாளை” “சுதந்திரமாக” அரசு கொண்டாடியிருக்கிறது.
 
செருப்பு வீச்சோடு தேசியக் கொடி ஏற்றம் காஷ்மீரில் நடந்தது என்றால், தமிழ்நாட்டில் காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசவே தடை! காஷ்மீர் மக்கள் மீது ராணுவத் தாக்குதலை நிறுத்து என்று ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடை!
 
உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு, காஷ்மீர் மக்கள் மீதான ராணுவத் தாக்குதலை நிறுத்தக் கோரி ஆகஸ்ட் 13 ஆம் தேதி சென்னையில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை தடை போட்டது.
 
வழக்கமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்ற காரணத்தைக் கூறும் காவல்துறை, இப்போது, நாட்டின் அரசியல் பிரச்சினைகளையெல்லாம் காட்டி தடை போடத் தொடங்கியிருக்கிறது. “காஷ்மீர் பிரச்னை தீர்வுக்கு வந்து கொண்டிருக்கிறது; எனவே, சென்னை சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினால், காஷ்மீர் பிரச்னை சிக்கலாக்கி விடும்” என்று கூறி அனுமதி மறுத்துள்ளது, “தேசபக்தி” மிக்க காவல்துறை.
 
இனிமேல் காவல்துறையிடம் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்கும் அமைப்புகள், அதற்கு முன் காவல்துறையிடம் அரசியல் கருத்துகளைக் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வது நல்லது என்றே நினைக்கிறோம்.
 
மணிப்பூர் பிரச்னை பற்றி மயிலாப்பூர் ஆய்வாளரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அய்.எம்.எப். மேலாதிக்கம் பற்றி ஏதேனும் போராட்டம் நடத்தினால், அயனாவரம் காவல்துறை ஆய்வாளர், அது நடத்தப்பட வேண்டுமா? இல்லையா? என்பதற்கான காரணங்களை புட்டுபுட்டு வைத்து விடுவார். பெட்ரோல் விலை உயர்வுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தும் முன்பு, பெரம்பூர் காவல்துறையிடம் ஆலோசனை கேட்டு தெளிவு பெறலாம். அவ்வளவு அரசியல் தெளிவு காவல்துறையிடம் மண்டி கிடக்கிறது.
 
காவல்துறையை இப்படி அரசியல் மயமாக்கி வைத்திருப்பதுகூட தமிழ் நாட்டில் நடக்கும் தி.மு.க. ஆட்சியின் மற்றொரு ‘இலவச’ சாதனைதான்!
 
இப்போதெல்லாம் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டால்கூட, “எந்தப் பிரச்சினைப் பற்றி பேசப் போகிறீர்கள்?” என்று காவல்துறையினர் கேட்கத் தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு அரசியல் தெளிவு பெற்றவர்களைக் கொண்டு தமிழக காவல்துறை செம்மையாக செயல்பட்டு வருவதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் “குடும்ப விவகாரங்களை” முன் வைத்து, சவால், எதிர் சவால் விட்டுக் கொண்டு, “அரசியல் சிந்தனைகளை” வளர்த்து வரும்போது, “காஷ்மீர் பிரச்னை” போன்றவற்றை எல்லாம் மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வந்து, தமிழகத்தின் அரசியல் தரத்தை சீர்குலைக்கலாமா? என்று தி.மு.க. ஆட்சியும், அவர்களின் காவல்துறையும் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் போலும்!
 
கலைஞர் கருணாநிதி ‘உடன்பிறப்புக்கு’ இப்படிகூட எழுதலாம்: “காஷ்மீர் மக்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலுக்காக வருந்துகிறேன் என்றும்; மாநில சுயாட்சி வழங்குவது பற்றி விவாதிக்கலாம் என்றும், பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியிலிருந்து பேசலாம்; அவர் பேசினால் சோனி யோவோ, தங்கபாலுவோ கோபிக்க மாட்டார்கள். அதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், இங்கிருந்து கொண்டு காஷ்மீர் பிரச்னையை பேசினால், ஆர்ப்பாட்டம் நடத்தினால், நாங்கள் அனுமதிக்க முடியுமா? அப்புறம் ஜன நாயகத்தை யார் காப்பாற்றுவது? எல்லாவற்றையும் நாங்கள் தானே காப் பாற்ற வேண்டும்? எமது தேசபக்தியில் ஒரு எள் மூக்கு அளவுகூட சோனி யாவுக்கோ, காங்கிரஸ் தேசபக்தர்களுக்கோ சந்தேகம் வந்து விட்டால், எங்கள் கதி என்னாகும்? அதனால் கூட்டணி பாதிக்கப்பட்டு விட்டால், நாடே நாசமாகிவிடாதா? அதனால், எங்கள் காவல்துறையையும் அரசியல் மயமாக்கியுள்ளோம் உடன்பிறப்பே” என்று கலைஞர் பூரித்து எழுதலாம்.
 
பஞ்சாபில் சீக்கியர்கள் போராட்டம் நசுக்கப்பட்டதைக் கண்டித்தும், காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை நியாயப்படுத்தியும், முரசொலி மாறன் நூல்களை எழுதினாரே! மாறனின் மாநில சுயாட்சி நூலை பக்கம் பக்கமாக ‘முரசொலி’யில் கருணாநிதி அண்மையில் வெளியிட்டாரே, என்று தி.மு.க. வில் மிச்சம் மீதி இருக்கும் கொள்கைவாதிகள் எவராவது கேட்டுவிட வேண்டாம். “கேட்டால், பெரியாரோடு நான் பழகியவன்; அண்ணாவோடு ஒன்றாக சாப்பிட்டவன்; தெரியுமா?” என்றுதான் பதில் வரும்.
 
“கோட்டையில் சுதந்திர நாள் கொடி ஏற்றும் உரிமையை நீங்கள் வாங்கிக் கொண்டு, சுதந்திரமாக கருத்துக் கூறும் உரிமையை பறிக்கலாமா?” என்று கேட்டால், அதற்கும் காவல்துறை வழக்குப்போட்டு, பாளையங் கோட்டை சிறைக்கு அனுப்பிவிடுவார்கள்!
 
இங்கே இலவசங்கள் தான் உண்டு; ஆனால் ஜனநாயக உரிமைகளைக் கேட்டால் விலை தரவேண்டும் - அதுதான் சிறை!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It