அடுத்து, அணுசக்தி பற்றிப் பேசுபவர்கள் முன்வைக்கும் ஒரு முக்கிய வாதம் அணுசக்தித் தொழில் நுட்பம் தூய்மையானது என்பது. கதிரியக்கம் ஆபத்தானது என்ற ஆய்விலேயே ஏறக்குறைய கதிரியக்கம் தூய்மைக் கேடு விளைவிக்கக்கூடியது என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.  இதில் மற்ற தூய்மைக் கேட்டிற்கும், அணுமின் நிலையத்தால் ஏற்படும் தூய்மைக் கேட்டிற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம், மற்ற தொழிற்சாலையில் ஏற்படும் தூய்மைக் கேடுகள் வேதியியல் வினையால், பண்பு மாற்றம் அடைந்த வாயுக்கள், அமிலங்களால் ஏற்படுவது.

இந்தத் தூய்மைக் கேடுகளின் அபாய அறிகுறிகள் நம்மைத் தீண்டு முன்பே, அது ஏதாவது ஒரு வகையில் உடல்பில் எரிச்சலூட்டுவதாக அல்லது துர்நாற்றம் அல்லது நெடியூட்டுவதாக இருப்பதால் உடனடியாக நாம் அந்த அபாயத்தையுணர்ந்து இந்த அபாயத்திலிருந்து விலகி நிற்கவேண்டும் என்கிற முன்னெச்சரிக்கையாவது பெறலாம். பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த போபால் விஷவாயு விபத்தில் பலர் இறந்து, பலர் பல்வேறு விதமான நோய்களுக்கும் உடல் ஊனங்களுக்கும் ஆளானாலும், அந்த ஆபத்து என்பது ஆபத்துக் காலத்திலேயே எல்லோராலும் உணரப்பட்டது. என்றாலும் அந்த ஆபத்தின் எல்லையிலிருந்து தப்பிக்க வழி ஏதும் இல்லாத காரணத்தால் அந்த விபத்தின் கொடுமையும் வீச்சும் எதிர்பாராத விதமாகப் பன்மடங்காகியது.

ஆனால் அதைக் காட்டிலும் கொடுமையானது கதிர்வீச்சு அபாயம். காரணம் அணுக்கருப் பிளப்பின் மூலம் வெளிப்படும் ஆற்றல் மிக்கக் கதிர்வீச்சு என்பது நிறமற்றது, நம் கண்ணால் காணக்கூடிய ஒளியற்றது, மணமற்றது. நெடியோ எரிச்சலோ அற்றது. ருசியற்றது. கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு உருவமற்றது. எனவே, ஆபத்து எங்கேயிருக்கிறது, எப்படி எந்த வடிவில் வருகிறது என்பதே நம்மால் அறிய முடியாதது. ஆபத்து நம்மைத் தாக்குகிறது என்று நாம் அறியாமலேயே அது மனித உடலில் ஊடுருவி, மனித உயிரையும் உயிர்ச் செல்களையும் தாக்கி அழித்து அணு அணுவாக நம்மைச் சாக அடிப்பது. அல்லது நம்மை மரணத்தை நோக்கி இட்டுச் செல்வது.

உதாரணத்துக்கு, யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் அணு உலைகளிலிருந்து வெளிப்படும் புளுட்டோனியத்தின், ஒரு கிராம் எடையில் இலட்சத்தில் ஒரு பங்கை சுவாசித்தாலே போதும். இரத்தம், மூளை, சிறுநீரக, புற்று நோய்கள் உண்டாகலாம். அரைக் கிலோ எடையுள்ள புளுட்டோனியத்தின் மூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் புற்று நோயை உருவாக்கலாம் என்கிறார்கள்அறிவியலாளர்கள்.

இப்படிப்பட்ட அபாயகரமான புளுட்டோனியம், இதுவரை யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கி வந்த அணு உலைகளிலிருந்து எவ்வளவு வெளிப்பட்டிருக்கும். அதாவது புளுட்டோனியக்கழிவு எவ்வளவு குவிந்திருக்கும் என்று நினைத்தாலே அச்சம் வருகிறது.

வருடத்துக்கு 25டன் அளவில், உலகில் ஆண்டுதோறும் புளுட்டோனியக் கழிவுகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். இதே கணக்கில் போனதில் கி.பி. 2000 ஆம் ஆண்டு வரை உலகில் 300டன் புளோட்டோனியக்கழிவு குவிந்துவிட்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதே விகிதத்தில் இது ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போனால் இது எப்படிப்பட்ட விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.

இவ்வாறு ஆபத்து மிக்க கழிவுகளை உண்டு பண்ணும் அணுசக்தித் தொழில், அதன் தொடக்க நிலையிலிருந்து, தொழில் முடிவுற்ற நிலை வரைக்கும், அதற்குப் பிறகும் ஒவ்வொரு கட்டத்திலும் தூய்மைக் கேட்டை உருவாக்குவதாகவே உள்ளது.

உதாரணத்துக்கு யுரேனியம் தோண்டியெடுக்கப்படும் சுரங்கங்களை எடுத்துக் கொள்வோம். இச்சுரங்கங்களில் படிந்துள்ள யுரேனியப் -படிமங்களிலிருந்து கதிரியக்க அபாயமுள்ள வாயு வெளிப்படுகிறது. இது நுரையீரல் புற்றுநோயை உருவாக்க வல்லது.

1978ஆம் ஆண்டு அமெரிக்கப் பொது சுகாதார அமைப்பு எடுத்த ஒரு புள்ளி விவரத்தின்படி யுரேனியச் சுரங்கங்களில் பணி புரியும் 6000 சுரங்கத்தொழிலாளர்களில் 600 முதல் 1,100 தொழிலாளர்கள் வரை புற்று நோயால் இறக்கிறார்கள் என அறிவித்துள்ளது.

அடுத்தது, இயற்கையில் கிடைக்கும் யுரேனியம்- 238ஐ யுரேனியம் -235ஆக மாற்றும் செறிவூட்டும் பணி. இந்தப்பணி தான், அணுஉலை நிறுவுவதிலேயே அதிகமான செலவினத்தை விழுங்கும் மிகச் சிக்கலான பணி என்கிறார்கள்.  இப்படிச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணு உலையில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும்போது அணு உலையில் அது வெளியிடும் வெப்பத்தோடு கதிரியக்கமும், அழுத்த நீர்க்குழாய் வழியாக வெளிவருகையில் குழாயில் கசிவோ, வெடிப்போ ஏற்பட்டு கதிரியக்கம் வெளிப்படும் அபாயம்.

பிறகு, சாதாரண நீரின் வழியாக டர்பைனுக்கும், ஜெனரேட்டருக்கும், அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தாக்குதலுண்டாக்கும் அபாயம்.

எதுவுமே இல்லாவிட்டாலும் கழிவுகளாக வெளிவந்து காலகாலத்துக்கும் அச்சமூட்டிக் கொண்டிருக்கும் கதிரியக்க அபாயம்.

இவ்வளவு அபாயங்களும், சுற்றுச் சூழலில் தூய்மைக்கேட்டை உருவாக்கும் அபாயங்களாக இருந்து வருகின்றன.

இந்தக் கதிர்வீச்சுக்கு அதிகமாகத் தாக்குண்டால் அப்போதே உடனடி மரணம். குறைவாகத் தாக்குண்டால் சிறுகச் சிறுக மரணம்.

சாதாரணமாக இக் கதிர் வீச்சின் தாக்குதல் அளவு, பொதுமக்களுக்கு 0.5 ரெம் அல்லது 5MSY, பணியாளர்களுக்கு 5 ரெம் அல்லது 50MSY வரையும் இருக்கலாம் என்று சர்வதேச கதிர்வீச்சுப் பாதுகாப்பு ஆணைக்குழு (International Commission on Radiation Protection - ICRP) அளவீடுகள் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால் இந்த அளவீட்டு வரையறைகள் உடனடியாக பாதிப்பு விளைவிக்காத அளவீடுகள் தானே தவிர, மற்றபடி காலப்பபோக்கில் சிறுகச் சிறுகப் பாய்ந்து கொல்லும் அளவீட்டு வரையறைகளே இவை. ஆகவே, இந்த வரையறைக்குள்ளேயே சிறுகச் சிறுகக் கதிரியக்கம் பாய்ந்து ஆளைக் கொல்லும் அபாயம் உண்டு என்றும், இப்படிப்பட்ட அபாயம் தொழிலாளர்கனை அதிகம் பாதிப்பதனாலேயே அணுமின் நிலையத்தில் பணிபுரியும் தொழி லாளர்கள் அடிக்கடி புதிது புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

உதாரணமாக தாராபூர் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 200 முதல் 250 வரை மட்டுமே. ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் அங்கு 2000க்கும் மேற்பட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 250 பேர் வேலை செய்யும் இடத்தில் இவ்வளவு நியமனம் ஏன்?

பணியாளர்கள் அடிக்கடி பணி நீக்கம், பதவி விலக்கம் செய்யப்படுவதால் ஏற்படும் காலியிடத்தை நிரப்பவே, அடிக்கடி புதிய நியமனம் செய்யப்படுகிறது. அதாவது, தொழிலாளர்கள் அடிக்கடி கதிரியக்கத் தாக்குதலுக்குள்ளாகி, உடல் தகுதியை இழப்பதால் அவர்களைச் சந்தடி பண்ணாமல் நீக்கி ஓய்வு கொடுத்துவிட்டு தகுதியுள்ள வேறு ஆளைத் தேடிப்பிடித்துக் கொள்கின்றனர். இது வெளியே தெரியவிடாமல் கமுக்கமாக நடத்தப்படுகிறது.

ஆக, அணுசக்தியோடு சேர்ந்து கதிரியக்கமும் வெளிப்படும் நிலையில், அக் கதிரியக்கத்தைத் தூய்மையானது என்று ஒப்புக் கொண்டாலொழிய, அக்கதிரியக்கத்தைத் தன் பிறப்பிடமாகக் கொண்ட அணு உலை, அணுசக்தித் தொழில் தூய்மையானது என்று ஒப்புக் கொள்ள முடியாது.

சாதாரண தொழிற்சாலைகள் போல அணுமின் நிலையங்கள் புகையைக் கக்குவதில்லை, துர்நாற்றம் வீசுவதில்லை என்பது வாஸ்தவம்தான். ஆனால் அதனால் மட்டுமே இதைத் தூய்மையானது என்று ஒப்புக்கொள்ள முடியுமா? இது அதை விடவும் அபாயகரமான கதிரியக்கத்தை அல்லவா வெளிப்படுத்துகிறது? ஓசையின்றி, எரிச்சலின்றி, துர்நாற்றமின்றி... மனிதனைச் சிறுகச் சிறுக அல்லவா கொல்கிறது?

சாதாரண மண்ணெண்ணெய் விளக்கை விட மின் விளக்கு தூய்மையானது என்ற கோட்பாட்டைச் சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாதத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. அதாவது மண்ணெண்ணெய் விளக்கு போல மின் விளக்கு புகை பரப்பாது, சிட்டம் கட்டாது, காற்றில் அணையாது. ஆனால் அதே சமயம் அந்த மின்சாரம் பாதுகாக்கப்பட்ட மின் கம்பிகள் மூலம் வருகிறது என்பதுதானே முக்கியம். அதாவது மின் விளக்கை எரிய வைக்கும் மின்சாரம் பாதுகாக்கப் பட்ட வயர்கள் மூலம் வருகிறது என்பது தான் மின் விளக்கை, மின் சாதனப் பொருள்களைத் தூய்மையானது என்று ஒப்புக் கொள்ள வைக்கிறது. வைக்க முடியும்.

ஆனால் இதே இந்த மின்சாதனப் பொருட்களை இயங்க வைக்கும் மின்சாரம் பாதுகாக்கப்பட முடியாத கம்பிகளில் திறந்த மேனியில் நிர்வாணமாக வருகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகும்? அப்படிப்பட்ட மின்சாரம் ஒன்றையே நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது இல்லையா.? அப்படி நினைத்துப் பார்த்தால் என்ன ஆகும்? மின்சாரமே வேண்டாம் என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கும், இல்லையா...?

ஆனால் அந்த மின்சாரத்தைப் பாதுகாக்கப்பட்ட வழிகளில் பயன்படுத்த அதனதன் சக்தியைத் தாங்கும் கவசம் நம்மிடம் இருப்பதால்தான் மின்சாரத்தை நாம் நம் விருப்பத்திற்கு உரிய வகையில் பயன் படுத்துகிறோம். ஆனால் அணு சக்தித் தொழில் நுட்பம் இந்தக் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறதா...? வயர்கள் மூலம் பாதுகாக்க முடியும், அபாயமின்றி அப்புறப்படுத்தமுடியும் என்கிறதா? இல்லையே... எதையும் தாண்டி ஊடுருவும் சக்திபடைத்த, சர்வ வல்லமையும் படைத்த ஓர் இயக்கமாக அல்லவா இருக்கிறது இந்தக் கதிரியக்கம்? அதோடு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்துச் செயல்படும் ஓர் இயக்கமாக அல்லவா இருக்கிறது இந்த கதிரியக்கம்? இதை எப்படி மூடி மறைப்பது? எதைக்கொண்டு மறைப்பது? எப்படிக் கட்டுப்படுத்துவது? எதைக் கொண்டு கட்டுப்படுத்துவது?

கதை ஒன்று சொல்லுவார்கள். விஞ்ஞானி ஒருவன் எதையும் கரைக்கும் சக்தி படைத்த திரவம் ஒன்றைக் கண்டு பிடிக்கப்போகிறேன் என்று பலத்த ஆராய்ச்சியில் இறங்கினானாம். இதைக் கேள்விப்பட்ட ஒரு சாதாரண கிராமத்தான் அந்த விஞ்ஞானியைப்பார்த்து ‘எதையும் கரைக்கும் சக்தி படைத்த திரவத்தைக் கண்டுபிடிக்கப் போகிறேன் என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறீர்கள். நல்லது. ஆராயுங்கள். கண்டு பிடியுங்கள். ஆனால், கண்டுபிடித்து அதை எதில் வைத்துக் கொள்வீர்கள்? என்று கேட்டானாம்.

அது போன்ற ஒரு விஷயமாக அல்லவா இருக்கிறது இந்த கதிரியக்கம்? எதைக் கொண்டு அதைக்கட்டுப்படுத்துவது? எவ்வளவு காலம் அதைக் கட்டுப்படுத்துவது?

ஆகவே, தூய்மை என்பது ஒரு சார்பிலாக் கருத்தல்ல. அது சார்புடையது. தூய்மை என்பது பாதுகாப்பு என்பதோடு சம்பந்தப்பட்டது. பாதுகாப்புள்ள தூய்மைதான் தூய்மை.

அமோனியா தூய்மையாக இருக்கிறது என்பதற்காக அதை அப்படியே அள்ளித் தின்று சக்தி பெறமுடியுமா? பயிர் விளையும் மண் அசுத்தமாக இருக்கிறது என்று அதை முற்றாகப் புறக்கணிக்கத்தான் முடியுமா...?

எனவே, தூய்மை என்பதைத் தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது. தூய்மை என்பதை மனித வாழ்வின் ஆரோக்கியத்தோடும், பாதுகாப்போடும் தொடர்புபடுத்தியே பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படித் தொடர்புபடுத்திப் பார்க்கும்போதுதான் கதிரியக்கமும் அதற்குக் காரணமான அணுசக்தியும் எந்த அளவுக்குத் தூய்மையானது என்பது நமக்குப் புரியும். அதோடு இப்போதிருந்தே நாம் இனி புதிய அணுசக்தி நிலையங்களைக் கட்டுவதில்லை, உள்ள நிலையங்களையும் மூடிவிடுவது என்று முடிவு செய்தால் கூட, இதுவரை செயல்பட்ட அணுசக்தி நிலையங்கள், அது உண்டாக்கிய கழிவுகள், சுற்றுச் சூழலில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், இன்னும் 6000 முதல் 10,000 ஆண்டு காலம் வரை நீடிக்கும் என்கிறார்கள்.

இது என்ன குறைவான காலமா? கிறிஸ்து தோன்றி 2000 ஆண்டுகளே ஆகின்றன. இந்த 2000 ஆண்டுகளில் உலகம் எப்படிப்பட்ட மாற்றங்களுக்கெல்லாம் உள்ளாகி வந்திருக்கிறது? இதைப்போல 10 மடங்கு முதல் 20 மடங்குகள் வரையான ஆண்டுகள். அவ்வளவு காலமும் நாம் கதிரியக்கத்தோடேயே வாழவேண்டியிருக்கும்.

இதுவும் இப்போதே எல்லாவற்றையும் நிறுத்தினால் அல்லாமல் தொடர்ந்து கொண்டே போனால், கதிரியக்கமும் இன்னும் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கொண்டே வரும். பிறகு கதிரியக்கத்தாலேயே உலகிலுள்ள உயிர்கள் எல்லாம் அழிந்து போகும். அப்படிப்பட்ட அபாயமுள்ளது இந்தக் கதிரியக்கம். அதை வெளிப்படுத்தும் அணு உலைகள். இதைப் போய் எந்த அடிப் படையில் தூய்மையானது என்கிறார்கள் என்பது நமக்குப் புரியவில்லை.

ஒருவேளை கண்ணுக்குத் தெரிந்த அசுத்தம் எதுவும் நிலையத்திலோ, அல்லது நிலையத்தைச் சுற்றியோ எதுவும் இல்லை. வேதியல் வாயுக்கள் அமிலங்கள் இல்லை. துர்நாற்றம் இல்லை. எல்லாம் அதி நவீன எந்திரங்களைக் கொண்ட பளிங்கு போன்ற தூய்மையான அமைப்பைக் கொண்டது. ஏசி அறைகளில் இயங்குவது என்பதனால் அப்படிச் சொல்கிறார்களா என்பது புரியவில்லை.

அப்படிச் சொல்வார்களேயானால் இது வெறும் புறத் தோற்றத்தில் மட்டுமே மயங்கி, உள்ளடக்க உண்மைகளைக் காணமறுப்பதாகும். காட்டாக அபாயகரமான நோய்க்கூறுகள் கொண்ட ஒருவர் புறத்தோற்றத்துக்கு ஆரோக்கியமானவர் போல் தெரியலாம். புறத்தோற்றத்துக்கு நலிவுற்றவர் போல் தெரியும் ஒரு நபர் உடல் ரீதியில் நல்ல ஆரோக்கியம் மிக்கவராகவும் இருக்கலாம். இவ்வாறே பலவும். எனவே இதை மட்டுமே அதாவது புறத் தோற்றத்தை மட்டுமே வைத்து எதையும் முடிவு செய்வது அறிவியல் நோக்காகாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அணுசக்தி நம்பகமானதா?

அணு சக்தியின் ஆதரவாளர்கள் அடுத்து முன் வைக்கும் ஒரு வாதம் அணுசக்தி நம்பகமானது என்பது. அதாவது, எதன் மீதும் சார்பற்று எப்போதும் பயன் தருமளவுக்கு நம்பகமானது என்பது. இந்த நோக்கில் அவர்கள் கூறுவதாவது, நீர்மின் நிலையம் என்பது நீர் சார்ந்ததாக, அனல் மின் நிலையம் என்பது நிலக்கரி சார்ந்ததாக இருக்கிறது.

நம் வாழ்வில் மின் சக்தி என்பது அளப்பரிய தேவைகளை நிறைவு செய்கிறது. மேலும் மேலும் மின்சாரத்தின் தேவை நமக்கு அதிகமாகுமே தவிர குறையாது. ஆகவே நமக்குத் தேவைப்படும் மின்சாரத்தை நாம் எங்கிருந்து எப்படிப் பெறப்போகிறோம்? நீர்மின் நிலையங்கள் பருவ மழையையும், நீர் நிலைகளின் பெருக்கத்தையும் சார்ந்தது. பருவ மழை பொய்த்தாலோ, நீர் மின் நிலைய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டடாலோ மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மின் வெட்டு அமலுக்கு வருகிறது. அதேபோல், நிலக்கரி என்பது பூமியில் வளமுள்ள வரைக்கும் தான் சுரண்ட முடியும். உலகில் பூமிக்கடியிலுள்ள நிலக்கரி இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குத்தான் வரும் என்கிறார்கள். அதேபோல எரி பொருள்களான பெட்ரோல், டீசல் போன்ற பூமிக்கடியிலிருந்து பெறும் பொருள்களும் இன்னும் சில ஆண்டுகளுக்குத்தான் வரும் என்கிறார்கள்.

ஆகவே, இப்படி எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் போது, தற்போது மின்சார மோட்டார் ஓடுவது போல, ஈருருளிகள், மகிழுந்து, பேருந்து, சிற்றுந்து, சரக்குந்து என அனைத்து வண்டிகளையும் மின்மயமாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். இப்படி எதிர்காலத்தில் அனைத்தும் மின் மயமாக்கப்படும்போது தேவைப்படும் மின்சாரத்துக்கு எங்கே போவது? ஆகவே, இப்படிப்பட்ட இயற்கை வளங்கள் சாராத ஒரு தொழில் நுட்பமாக அணுசக்தியே இருக்கப்போகிறது. இதுவே எதிர்காலத்தில் நம்பகமான எரிசக்தியாகவும் இருக்கப் போகிறது என்கிறார்கள்.

காரணம், 2,000 டன் நிலக்கரி எவ்வளவு வெப்பத்தை உற்பத்தி செய்யுமோ அந்த அளவு வெப்பத்தை 1கி.கி யுரேனியம் தந்துவிடும் என்கிறார்கள். ஒரு லாரிக்கு 10 டன் நிலக்கரி என்று பார்த்தால் கூட 200 லாரியில் எவ்வளவு நிலக்கரி ஏற்ற முடியுமோ, அவ்வளவு நிலக்கரியின் வெப்பத்தை 1கி.கி. யுரேனியம் தந்துவிடும்.

ஜூல் கணக்கில் சொன்னால் 1கிராம் யுரேனியம்-235ஐ பிளந்தால் 1011 ஜூல் வெப்பம் அதாவது 10,000,00,00,000 ஜூல் வெப்பம் கிடைக்குமாம். ஆகவே, அணுசக்தி பலவகையிலும் நம்பகமானது, நீர் நிலக்கரி சார்ந்து அது கிடக்க வேண்டியதில்லை என்கிறார்கள். இந்த வாதமெல்லாம் சரிதான். அணுமின் சக்தி, நீர் மின், அனல் மின் நிலையங்கள் போல பற்றாக்குறையான இயற்கை வளங்களைப் பெருமளவு சார்ந்திருக்கவில்லை என்பதும் ஓரளவு உண்மைதான்.

ஆனால், அணுமின் நிலையம் எதையும் சாராதது. நம்பகமானது என்பது எந்த அளவில் உண்மை என்பதை நாம் சிந்திக்க வேண்டும். காரணம், நாம் ஏற்கெனவே பார்த்தபடி யுரேனியம் அப்படியே கட்டிகட்டியாகப் பூமியிலிருந்து கிடைக்கவில்லை. அது பிட்ச் பிளௌண்ட் என்னும் தாதுவிலிருந்து கிடைக்கிறது. எனவே, அணுமின் சக்தியும் இயற்கை வளங்கள் சார்ந்ததுதான்.

ஆனால், இதில் யுரேனியம் பூமியில் ஏராளமாகக் கிடைக்கிறதே என்று ஒரு வாதம் (இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு இடங்களில் மட்டும் 70 ஆயிரம் டன் யுரேனியம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது) வைக்கப்படலாமே தவிர, இதை வைத்து அணு மின் சக்தி எந்த இயற்கை வளத்தையுமே சாராத ஒரு சக்தி என்று சொல்ல முடியாது. இதிலும் யுரேனியம் 238 ஐ அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது என்றும் இதை செறிவூட்டி யுரேனியம் 235 ஆக மாற்றியேதான் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்றும் அணு மின் உற்பத்தியில் ஆகும் செலவிலேயே இதன் செலவுதான் மிக அதிகம் என்றும் ஏற்கெனவே பார்த்தோம்

அடுத்து, அணுமின் நிலையங்கள் ஆபத்தின்றி இயங்க எப்படிப்பட்ட மின் ஏற்பாடுகள்தேவை என்பதையும் பார்த்தோம். இப்படிப்பட்ட மின் ஏற்பாடுகளுக்கும் நீர், அனல் மின் உற்பத்தியோ அல்லது டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் செய்யப்படும் மின் உற்பத்தியோ தேவைப்படுகிறது. இந்த மின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அணுமின் நிலையங்கள் இயங்க முடியாது. எனவே அணுசக்தி சார்பற்றது, எதையும் சாராதது என்கிற வாதம் சரியாயிருக்க முடியுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அணு சக்தியும் சார்புடையதுதான். அது மட்டும் ஆகாயத்திலிருந்து குதிப்பதல்ல. ஆற்றலை அழிக்கவும் முடியாது, ஆக்கவும் முடியாது என்று நாம் ஏற்கனவே பார்த்த விதிப்படி எந்த ஆற்றலும். ஏதாவதொரு ஆற்றலிலிருந்துதான் பெறமுடியும், பெறப்படுகிறதே தவிர, எதையுமே சாராத, எதிலிருந்துமே பெறப்படாத ஆற்றல் என்று எதுவும் இல்லை. வேண்டுமானால், அணுவிலிருந்து கிடைக்கும் ஆற்றல் இதர இயற்கை வளங்கள் மூலம் கிடைக்கும் ஆற்றலைவிட அபரிதமானதாக இருக்கலாம். பருவ மழை பொய்த்தாலும், பூமியில் உள்ள கனி வளங்கள் வற்றினாலும் எப்போதும் ஆற்றலைத் தரத்தக்கதாகவும் இருக்கலாம். ஆனால் அது ஆபத்தானது. சுற்றுச் சூழலையும் மனிதகுலத்தையும் பாதிப்பது, அழிப்பது.

எனவே, அணுவின் ஆற்றலைக் கோட்பாட்டு ரீதியில் கணக்கிடும்போது வேண்டுமானால் அது நம்பமானதாக, சார்பற்றதாக தோன்றலாமே தவிர, நடைமுறையில், அணு ஆற்றலை, அதாவது அதன் வெப்பத்தையும், கதிரியக் கத்தையும் முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் என அது பிற ஆற்றல்களைச் சார்ந்தே நிற்கவேண்டியிருக்கிறது. பிற அனல், நீர்மின் நிலையங்கள் மூலம் பெறப்படும் மின் சக்தி இல்லாமல் அணு சக்தியைக் கட்டுப்படுத்தவோ, பிற பயன்பாடுகளுக்கு ஏற்ப வெளிப்படுத்துவதோ இயலாது. இந்தக் கட்டுப் படுத்தலும் நூற்றுக்கு நூறு உத்தரவாதமானதல்ல. எப்போதும் விபத்து நேரும் அபாயமுடையது. நேர்ந்தாலும் மற்ற விபத்துகள் போல அல்லாமல் தலைமுறை தலை முறைக்கும் பாதிக்க வைப்பது.

எனவே, நம்பகமானது, சார்பற்றது என்ற வாதமும், பாதுகாப்பு நோக்கில் அடிப்பட்டுப் போகிறது.

காரணம், எந்தக் கண்டுபிடிப்பும் மனித வாழ்க்கைப் பயனுக்குத்தான். அவனது வளமான வாழ்வின் மேம்பாட்டுக்குத்தான். அதைவிட்டு மனித வாழ்வைப் பணயம் வைத்து அவனை நோயாளியாய் ஊனமுற்றவனாய், சந்ததி சந்ததியாகப் பாதிக்க வைக்கும் ஒரு கண்டுபிடிப்பை அது எவ்வளவுதான் நம்பகமானதாக இருந்தாலும், சார்பற்றதாயிருந்தாலும், அந்தக் கண்டுபிடிப்பை வெறும் கண்டுபிடிப்பு நோக்கத்திற்காக மட்டுமே பாராட்டிக் கொண்டிருக்க முடியாது. பயன்படுத்திக்கொண்டிருக்கவும் முடியாது. ஆகவே எந்தப் பாராட்டும், பாதுகாப்போடு அது தரும் பயனைப் பொறுத்தே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் பாதுகாப்பான பயனைத் தராத எதையும் பாதுகாப்புள்ளதாக மாற்றியமைக்க முயலவேண்டும். முடியாவிட்டால் அந்த முயற்சியைக் கைவிடவேண்டுமே தவிர அதற்காக மனித குலத்தைப் பலியிட வைக்க முடியாது. பலிகடா ஆக்கக் கூடாது.

ஒரு நாய் இருக்கிறது. அது வீட்டைக்காக்க நம்பகமானது அதுயார் வந்தாலும் மிகச் சிறப்பாகக் குரைத்து, யாரையும் வீட்டை நெருங்க விடாமல் பாதுகாக்கிறது. ஆனால் அதே நாய் வெறிபிடித்து, யார் வந்தாலும் குரைப்பதோடு அல்லாமல் கண்ணில் படுகிறவர்களையெல்லாம் பாய்ந்து பாய்ந்து துரத்தி வந்து கடித்துத் தொலைக்கிறது. இப்படிக் கடிப்பதிலும் அது மனிதர்களுக்குள் யார் எவர் என்று வித்தியாசம் இல்லாமல் எல்லாரையும் கடிக்கிறது. வீட்டுக்காரனையும் கடிக்கிறது. அந்த நாய் நம்பகமானது என்று அதை விட்டு வைத்திருப்போமா? தினமும் அதற்குச் சோறு போட்டு அதை வளர்த்துக் கொண்டிருப்போமா? மாட்டோம். அடித்து அல்லது சுட்டுக் கொன்று விடுவோம்.

காரணம், அது நம் விருப்பத்துக்கு மாறாக, நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது. ஆகவே அது எவ்வளவு நம்பகமானதானாலும் ஆபத்தானது. என்பது தானே...?

அதேபோல மின்சாரம் இருக்கிறது. அது ஒழுங்காக வினியோகம் ஆகும் வரை விளக்கு எரிக்க, மாவு அரைக்க, மின் விசிறியைச் சுழலவைக்க, ரேடியோ, டி.வி. முதலானவற்றை இயக்க மிகவும் நம்பகமானது. ஆனால் அது சுவிட்ச் கன்ட்ரோலே இல்லாமல் இருக்கிறது. அல்லது அது டிரான்ஸ்ஃபார்மர் ப்யூஸ் வயரே இல்லாமல் எல்லா நேரத்துக்கும் ஒரே விகிதத்தில் வரைமுறையற்று வந்து கொண்டிருக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்.

அப்படியானால் அதை நம்மால், நம் வசதிக்கேற்ப பயன்படுத்த முடியுமா... நிச்சயம் முடியாது. பயன்படுத்த முயற்சித்தால் என்ன ஆகும் பல்புகள் வெடிக்கும், மின்விசிறி, வானொலிப் பெட்டி, தொலைக் காட்சிப்பெட்டி எல்லாம் தீய்ந்து போகும். ஆனால், அந்த மின்சாரத்தை நம்மால் பயன்படுத்த முடிகிறது என்றால் என்ன அர்த்தம்? அதை நம் கட்டுப் பாட்டுக்கு உட்படுத்தி நம் விருப்பத்குக்குப் பயன்படுத்த முடிகிறது என்று அர்த்தம். இப்படி முடிகிறதால்தான் மின்சாரம் நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. நாமும் அதைப் பயன் படுத்துகிறோம்

இதேபோல சமையல் எரிவாயு, கட்டுப்பாடில்லாமல் அது பாட்டுக்கு வந்து கொண்டேயிருக்கிறது. எரிந்து கொண்டே யிருக்கிறது. பற்றவைத்து விட்டால் நிறுத்தவே முடியாது. பூரா வாயுவும் தீர்ந்து தானாக அணைந்தால்தான் உண்டு என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் யாரும் சமையல் வாயு பக்கம் போவோமா?

அதுகூட வேண்டாம். சாதாரண விறகு இருக்கிறது. பற்ற வைத்ததும், அதுபாட்டுக்கு எரிகிறது. அணைக்கவே முடியாது பூராவிறகும் எரிந்து தீர்ந்தால்தான் உண்டு. இந்த விறகும், பிளக்க, துண்டு போட முடியாதபடி, இயற்கையில் எப்படி கிடைக்கிறதோ அப்படி அப்படியேதான் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்... என்ன ஆகும்?

இதெல்லாம் மிகச் சாதாரண விஷயங்கள்... நமக்கு மிக இயல்பாய்ப் பழக்கப்பட்டுப் போனதால் நாம் வேறு விதமாகச் சிந்திக்க முடியாத விஷயங்கள்... இந்த விஷயங்களில் ஏற்படும் சிக்கலையாவது ஓரளவு நிவர்த்திக்கலாம். அல்லது மாற்றுமுறைகளில் தீர்க்க முனையலாம். ஆனால், அணுசக்தி விஷயம் அப்படியல்ல. அது மிக மிக அபாயகரமானது. மேற்கண்ட பிரச்சனைகளிலாவது எதுவும் மாற்று ஏற்பாடு மூலம் ஒரு விடிவைக் காணலாம் என்று யோசிக்கவாவது வழியுண்டு.

ஆனால், இதில் எந்த மாற்று வழியும் கிடையாது. இதனால் தான் போலும், மின்சாரத்துக்காக அணு சக்தியைப் பயன் படுத்துவது என்பது முட்டையைப் பொரிக்க (குஞ்சு பொரிக்க அல்ல, பொரியல் செய்ய - கசல) காட்டுத்தீயை வளர்ப்பது போலாகும் என்றார் அமெரிக்க அறிஞர் அமரிலோவின்ஸ்.  ஆகவே, எதையும் நம்பகமானது என்று சொல்வது அது இடைவிடாது வற்றாத வளத்தோடும், மிகுதியான ஆற்றலோடும் வெளிப்படுகிறது என்பதை மட்டும் வைத்து முடிவு செய்யக் கூடியது அல்ல. அது நம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதா இல்லையா என்பதை வைத்தும், நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப அதைப் பயன்படுத்த முடியுமா, முடியாதா என்பதை வைத்துமே முடிவு செய்யக் கூடியது.

அப்படி நோக்க அணுசக்தியும் கதிர்வீச்சும் நம் கட்டுப் பாட்டுக்கு உட்படாதது. நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. அதேபோல, அது நம் விருப்பத்துக்கேற்ப பயன்படுத்த முடியாததும், தடுத்து நிறுத்த முடியாததும் ஆகும். எனவே, இப்படிப்பட்ட அணுசக்தியை, அது இடைவிடாதும் வற்றாதும் கிடைக்க வல்லது என்பதை மட்டும் வைத்து அதை நம்பகமானது என்பது நியாயமற்றது.

ஏனெனில், நம்பகமானது என்பதும் ஒரு சார்பிலாக் கருத்தல்ல. அது விருப்பத்தையும், கட்டுப்பாட்டையும் சார்ந்தது. இந்த விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்பட்ட சக்தி எதுவோ அதுவே நம்பகமானது. ஆனால் அணுசக்தி அப்படிப் பட்ட நம்பகமான ஒரு சக்தி அல்ல என்பதே பொதுவான கருத்து.

Pin It