இதுவரை அணுசக்தி மலிவானது, பாதுகாப்பானது, தூய்மையானது, நம்பகமானது என்று முன்வைக்கப்பட்ட வாதங்களைப் பார்த்தோம். இந்த எல்லா வாதங்களையுமே நோக்க இவை எல்லாவற்றிலும் அடிநாதமாய் இயங்கும் பிரச்சனை ‘கதிரியக்கப் பிரச்சனையே’ என்பது ஒரளவுக்குப் புரிந்திருக்கும். இந்தக் கதிரியக்கப் பிரச்சனையே மேற்கண்ட எல்லா வாதங்களையும் முறியடிக்கும் பிரச்சனையாகவும் இருந்து வருகிறது.

இப்படிக் கதிரியக்கப் பிரச்சனைக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து அது பற்றியே அதிகம் பேசுவதால்தான், சிலர் நாம் இந்தப் பிரச்சனையை அதிகம் மிகைப்படுத்துவதாகவோ அல்லது அது பற்றித் தேவையற்ற அச்சத்தை மூட்டுவதாகவோ குற்றம் சாட்டுகிறார்கள்.

இதற்கு இவர்கள் சொல்லும் காரணம், 1. மற்ற தொழில் நுட்ப விபத்துகளை நோக்க, அணுசக்தி நிலையங்களின் விபத்து விகிதாசாரம் மிகவும் குறைவு. 2. அணுசக்தி நிலையங்களால் ஏற்படும் கதிரியக்கம், இயற்கையாகவே பிரபஞ்சத்தில் நிகழ்ந்து வரும் கதிரியக்கத்தைக் காட்டிலும் ஒன்றும் அதிகமானதோ ஆபத்தானதோ அல்ல. ஆகவே அதுபற்றி அஞ்சுவதும் சரியல்ல என்கிறார்கள். ஆகவே, இதுபற்றியும் நாம் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது.

அவர்கள் சொல்கிற காரணங்கள்: உதாரணமாக கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் மிகப் பெரிய மூன்று நீர் மின் நிலைய விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரியது, 1979இல் மோர்லியில் ஏற்பட்ட அணை உடைப்பு. இதில் மட்டும் 1,335 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல அனல் மின் நிலையங்களிலும் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் தந்து, இது போன்ற அபாயங்கள் அணுமின் நிலையத்தில் குறைவு என்கிறார்கள். நியாயம். நீர் மின் நிலையங்களில் அணை உடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதாகவே வைத்துக் கொள்வோம். இதில் ஒரு கேள்வி. ஆண்டுதோறும் கடுமையான வறட்சி ஏற்பட்டு, நிலங்களெல்லாம் பாளம் பாளமாக வெடித்துக் கிடப்பதையும் அல்லது கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, எங்குப் பார்த்தாலும் வெள்ளக் காடாக இருப்பதையும் பார்த்திருக்கிறோம், இதில் இயற்கையான பருவமழை வலுக்கும் போது அபரிதமான வெள்ளம் வந்து அணைகளே கட்டப்படாத நதியில் கூட வெள்ளம் பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடுவதும், கரையோரப் பகுதி வாழ்மக்களையும் குடிசை களையும் அடித்துச் செல்வதையும் பார்த்தோ, படித்தோ அல்லது கேள்விப்பட்டோ இருக்கிறோம்.

ஆகவே, இப்படிப்பட்ட விபத்துகள் அணைக்கட்டுகள் கட்டப்படுவதால் மட்டும் நேருவதில்லை. அணைக்கட்டுகளே எதுவும் கட்டப்படாத நதிகளிலும் கூட இப்படிப்பட்ட இயற்கைச் சேதங்கள் நிகழும். ஆனால், இச்சேதங்கள் இயற்கையான மழைப் பெருக்கம் காரணமாக ஏற்படுபவை என்பது கண் கூடு. எனவே இதை அணுசக்தி விபத்துகளோடு ஒப்பு நோக்குவது என்பது முறையாகாது.

காரணம், வெள்ளப் பெருக்கு விபத்து என்பது இயற்கைக் காரணங்களால் நிகழ்வது. ஆனால் அணுசக்தி விபத்து என்பது, கதிரியக்கம் குறிப்பிட்ட அந்தத் தனிமத்தின் இயற்கைப் பண்பு என்றாலும் கூட, மனித முயற்சியால் விளைவது. அதாவது செயற்கையான திரட்டப்பட்ட கட்டுமானங்களின் மூலம் நிகழ்வது.

ஆகவே, நீர்மின் நிலையங்களில் ஏற்படும் விபத்தை அணுமின் நிலைய விபத்துகளோடு ஒப்பு நோக்காமல், அனல்மின் நிலையங்களில் ஏற்படும் விபத்தை மட்டும் அதோடு ஒப்பு நோக்குவதே சரியாயிருக்கும்.

இந்த ஒப்பு நோக்கிலும் ஒரு சிக்கல். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களையும், அனல் மின் நிலைய விபத்தால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களையும், இந்த காரணங்களால்தான் இறந்தார்கள் என்று சொல்லிவிடலாம்.

ஆனால், அணுமின் நிலைய விபத்து அப்படியில்லை. அணு மின் நிலையத்தில் ஏதாவது விபத்து நேர்ந்து உடனடியாக அதனால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் மட்டுமே இந்தக் கணக்கில் வருவார்கள். அப்படி இறக்காமல் பாதியும், கால் வாசியுமாக இறப்பு நிலைக்குத் தள்ளப்படுபவர்கள் இந்தக் கணக்கில் வர மாட்டார்கள். அதோடு இப்படி பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை ஏதாவது விபத்தின் காரணமாகத்தான் நேர வேண்டும் என்று இல்லை. சாதாரண தினப்படி பணிகளிலேயே அவர்கள் அதிகமான கதிரியக்கத்துக்கு ஆளாகி இன்னும் 6 மாதம், 1 வருடம், 2 வருடங்களில் இறக்கும் நிலையை அடையலாம்.

ஆனால் அவர்கள் அந்த நிலையை அடைந்து இறக்கும் வரை பணியில் வைத்திருக்கப்படுவதில்லை. அதற்குள்ளாகவே அவர்கள் மருத்துவக் காரணங்களால் வேலை நீக்கம் செய்யப்பட்டு அல்லது கட்டாய ஓய்வு தரப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள். பணியிலிருந்து நீங்கிய பிறகு அவர்களுக்கு ஏற்படும் ‘இறப்பு’ அணுசக்தியால் ஏற்பட்ட ‘இறப்பின்’ கணக்கு விகிதத்தில் வராது. இதுதான் மற்ற விபத்து இறப்புக் கணக்குக்கும் அணுசக்தி விபத்து இறப்புக் கணக்குக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு. எனவே மற்ற விபத்துகளால் ஏற்படும் இழப்பையும் அணுத் தொழில் நுட்பத்தால் ஏற்படும் இழப்பையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது.ஒப்பிடுவதும் நியாயமாகாது.

அடுத்து முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அணுமின் நிலையங்களால் ஏற்படும் கதிரியக்கம், இயற்கையான சுற்றுச் சுழலில், சூரியன் மூலமும் இதர கதிரியக்கத் தனிமங்கள் மூலமும் ஏற்படும் கதிரியக்கத்தைவிட ஒன்றும் அதிகமில்லை. ஆகவே இது பற்றி அஞ்சுவது அறியாமை என்று ஒரு புள்ளி விவரம் தருகிறார்கள்.

இந்தியாவில் உள்ள மூன்று அணுமின் நிலையங்களைச் சுற்றி ஏற்படும் கதிரியக்கம் ஆண்டுக்கு 4.6 மில்லி ரெம் தானாம். ஆனால் இயற்கையான, சாதாரண சூழ்நிலையில் சூரியனிடமிருந்தும், இதர பூமியின் மேற்பரப்பு மூலமும் பெறப்படும் கதிரியக்கம் ஆண்டுக்கு 100 முதல் 200 மில்லி ‘ரெம்’ மாம். இன்னும் கதிரியக்கத் தாதுக்கள் மிகுந்த சில பகுதிகளில் 1000 முதல் அதற்கு மேற்பட்ட மில்லி ‘ரெம்’கள் கூட இருக்குமாம். ஆகவே, அணுமின் நிலையத்தால் ஏற்படும் 4.6 மில்லி ‘ரெம்’ பற்றி அஞ்சத் தேவையில்லை என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.

அடுத்து, மனிதன் எப்போதும் கதிரியக்கச் சூழலிலேயே வாழ வேண்டியுள்ளது. எனவே, மனிதன்மேல் கதிரியக்கம் ஏற்படுத்தும் பாதிப்பில் 75 சதவீதம் இயற்கைச் சூழலிலேயே ஏற்படுகிறது. 10 முதல் 20 சதவீதம் வரையிலான கதிரியக்கம் மனிதன் மருத்துவ சிகிச்சை பெறும் காரணங்களால் - அதாவது நோய் பற்றி அறியும் எக்ஸ்ரே, மற்றும் கதிரியக்க சிகிச்சை முறை ஆகியவற்றால் - ஏற்படுகிறது. எனவே இப்படி 85 முதல் 95 சதவீதம் வரை கதிரியக்கம் பெற்ற மனிதன் 2 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே அணுமின் சக்தி காரணமான கதிரியக்கத்துக்கு ஆளாகிறான் என்று சொல்கிறார்கள்.

இன்னொன்று, கடந்த 19 ஆண்டுகளில் அணுசக்தி நிலையங்கள் உள்ள இடங்களில் நடத்திய சோதனைகளில், இயற்கையாகச் சுற்றுச்சூழல் காரணமாக ஏற்படும் கதிரியக்கத்தைவிட அணுசக்தி நிலையங்கள் மூலமாக ஒன்றும் அதிகமான கதிரியக்கம் ஏற்பட்டு விடவில்லை என்ற ஒரு புள்ளி விவரம் காட்டுகிறார்கள்.

ஆக, இப்புள்ளி விவரங்கள் மூலம் இவர்கள் பொதுவாகச் சொல்ல முன்வருவது என்ன? கதிரியக்கம் என்பது அஞ்சத்தக்க அளவுக்கு அபாயகரமானது அல்ல. ஏனெனில் இயற்கையான சுற்றுச்சூழலே கதிரியக்கமுள்ளதாகத்தான் இருக்கிறது என்பதுதான்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். கதிரியக்கத்தால் ஆபத்தே இல்லை. காரணம் அது மருத்துவத்துக்கெல்லாம் பயன்படுகிறது. இப்படி மருத்துவத்துக்காகப் பயன்படும் கதிரியக்கத்தையெல்லாம் பார்த்து அஞ்சுவதாவது... ‘அபசாரம் அபசாரம்’ என்பதாகக் கூப்பாடு போடுகிறார்கள்.

இவர்கள் எல்லோரது வாதத்தையும் கேட்டு நாம் சில விஷயங்களைச் சிந்திப்போம்.

1. ICRP கதிரியக்கத் தாக்கத்தின் அளவைச் சாதாரண மக்களுக்கு 0.5 ரெம் (அல்லது 5 அளல) அளவு வரையறையும், அணுமின் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 5 ரெம் (அல்லது 50 அளல) அளவு வரையறையும் வைத்துள்ளதே, அது ஏன்? மனித உடம்பு என்பது எல்லோருக்கும் பொது தானே...? அப்படியிருக்க, சாதாரண மக்களைவிட 10 மடங்கு அதிகமுள்ள கதிரியக்கம் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவது ஏன்? கொஞ்ச நாள் பொறுத்து வீட்டுக்கு அனுப்பி வேறு ஆள் வைக்கவா...?

2. இயற்கைச் சூழலில் நிலவும் கதிரியக்கம் இம்மாபெரும் பிரபஞ்ச வெளியில், அல்லது நாம் வாழும் புவிக்கோளைச் சுற்றியுள்ள பிரும்மாண்டமான வளி மண்டலத்தில் பரவலாகக் கிடப்பது. ஆனால் அணுசக்தி நிலையங்களால் ஏற்படும் கதிர் இயக்கம், ஓரிடத்தில் ஒருங்கு குவிக்கப்பட்டது. இந்த மொத்த புவிக்கோளிலும் அவ்வப்பகுதியிலும் நிலவும் கதிரியக்கத்தை விட அணுசக்தி நிலையங்களால் ஏற்படும் கதிரியக்கம் குறைவாகவே இருக்கலாம். குறைவாகத்தான் இருக்கும். ஆனால் முன்னது பரவலானது. பின்னது ஓர் இடத்தில் திரட்டப்பட்டது. எனவே இரண்டாவது குறிப்பிட்டது ஆபத்தானது. இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். எங்கோ, பூமிக்கடியில் பிட்ச் பிளௌன்ட் தாதுவில் மிக மிகச் சொற்பமான அளவில் கலந்துள்ள யுரேனியம் பரவலாக அது ஏற்படுத்தும் கதிரியக்கமும், இந்த யுரேனியத்தை யெல்லாம் ஒருங்குதிரட்டிச் செறிவூட்டி யுரேனியத் தண்டுகளாக்கி, ஓர் இடத்தில் வைத்து, அதன் அணுக்கருக்களைப் பிளப்பதன்மூலம் அது ஏற்படுத்தும் கதிரியக்கமும் இரண்டும் ஒன்றாக முடியுமா?

முன்னதன் வீச்சும் சக்தியும் என்ன? இரண்டாவதன் வீச்சும் சக்தியும் என்ன..? இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இதே மாதிரி மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படும் கதிரியக்கத்தின் மொத்தஅளவைச் சொல்லி, அந்த அளவால் ஒன்றும் பாதிப்பில்லை என்றும் சொல்லக் கூடாது. காரணம், இந்த அளவு, சிகிச்சை பெறும் எத்தனையோ நூறு, ஆயிரம் மக்களுக்கு விநியோகிக்கப்படுவது. ஆனால் இதுவே நாலு பேர் ஐந்து பேருக்கு மட்டும் இந்த அளவு செல்லுமானால் என்ன ஆகும் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அடுத்து, கதிரியக்க மருத்துவப் பயன்பற்றி....

நாம் ஏற்கெனவே பார்த்த ஐசோடோப்புகள் சிலவற்றைக் கதிரியக்கமுள்ளவைகளாக மாற்றி மருத்துவ சிகிச்சைக்கும், நோய் அறியும் ஆய்வுக்கும் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இதை வைத்து, அணு உலையால் ஏற்படும் கதிரியக்கத்தால் ஆபத்து எதுவும் இல்லை என்பது சுத்த அபத்தம்.

காரணம், மருத்துவத்துக்குப் பயன்படும் ஐசோடோப்புகளால் ஏற்படும் கதிரியக்கம் மிகவும் அற்பத்திலும் அற்பமானது. என்றாலும் இதுவே சிறிது அளவு கூடினாலும் ஆபத்து விளைவிக்கக் கூடியது. ஆனால், அணு உலையால் ஏற்படும் கதிரியக்கம் என்பது சாதாரண கதிரியக்க ஐசோடோப்புகளால் ஏற்படும் கதிரியக்கத்தை விட நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு அதிகம் ஆற்றல் உள்ளது. அபாயம் மிக்கது.

எனவே, இரண்டையும் ஒன்றாக்கிச் சரிசமமாகப் பாவிப்பது என்பது சரியாயிருக்க முடியுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாய், நல்ல பாம்பின் விஷத்திலுள்ள ஒரு வகைப் புரோட்டீனைத் தனிப் பிரித்து எடுத்து கான்சரைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். இதற்காக நல்ல பாம்பின் விஷமே ஆபத்தற்றது. காரணம் அது மருத்துவப் பயன் விளைவிப்பது என்று பாம்புக் கடியைக் கண்டுகொள்ளாமல் சும்மா விட்டு விட முடியுமா?

உடலுக்கு ஓய்வு வேண்டும் என்று தூக்கத்துக்காகச் சிறுஅளவிலான தூக்க மாத்திரை தருகிறார்கள். அதற்காகத் தூக்க மாத்திரை மருத்துவப் பயனுள்ளது என்று 10, 15 சேர்த்து விழுங்கினால் என்ன ஆகும்? இதே மாதிரி தலைவலி மாத்திரை, வயிற்றுவலி மாத்திரை, சளி மாத்திரை என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு பாம்பின் விஷத்தை 20, 30 பேருக்குப் பகிர்ந்து கொடுத்தால் யாருக்கும் மரணம் சம்பவிக்காது. சாதாரணமாய்ப் பாம்பு ஒருவரைக் கடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே வேறு யாரையாவது கடித்தால் முதலில் கடிபட்டவரைவிட இரண்டாவது கடிபட்டவருக்கு விஷத்தின் வீரியம் கம்மி என்கிறார்கள். அப்படியிருக்க இப்படி, பகிர்ந்தளிக்கப்படாமல் விஷம் ஒருவருக்கே தரப்பட்டால்....

20 தூக்க மாத்திரைகளை 20 பேருக்கும் பகிர்ந்தளித்தால் எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. ஆனால் அந்த 20 மாத்திரைகளையும் ஒருவருக்கே தந்து விட்டால்... சும்மாவா சொன்னார்கள்... ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்’ என்று.

நோய் தீர்க்கும் ஒளஷதமாகக் கருதப்படும் அமிர்தத்துக்கே இந்தக் கதி என்றால், பல வகையிலும் அபாயத்தை விளைவிக்கும் கதிரியக்கத்தின் கதி என்ன...?

இயற்கை, இப் புவிப் பரப்பு முழுதும், வளி மண்டலம் முழுதும் பகிர்ந்தளித்து செலுத்தி வரும் கதிரியக்கத்தை மெனக்கெட்டு ஒன்று திரட்டி, அதை ஒட்டு மொத்தமாக ஓர் அணு உலை மூலம் வெளிப்படுத்தினால் எப்படியாகும்?அதனால்தான் இதை அணுகுண்டுக்கு ஒப்பானதாகும் என்கிறோம்.

இதெல்லாம் அணுசக்தி மீது நாம் காழ்ப்பு கொண்டோ அல்லது அணு சக்தியின் ஆதரவாளர்களுக்கு எதிராக நாம் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகவோ சொல்ல வில்லை.

இதுபற்றிய உண்மைகளை நாம் உணரவேண்டும், உணர்ந்து பார்த்து சிந்தித்து மனித குலத்தை அச்சுறுத்தி வரும் இக்கதிரியக்க அபாயம் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காகவே சொல்கிறோம்.

Pin It