இதுவரை, அணு ஆற்றல் என்பது அணுக் கரு ஆற்றலே என்றும், அணுவின் இதர இயக்கங்கள் எல்லாம், அணுவின் எலக்ட்ரான் மட்டங்களிலேயே நிகழ்ந்து வருகிறது என்றும், ஆனால் அணுக்கரு ஆற்றல் மட்டும்தான், அணுவைப் பிளந்து பெறப்படுகிறது என்றும், எனவே, இதர ஆற்றல்களிலிருந்து அணுக் கரு ஆற்றல் எவ்வாறு வேறுபடுகிறது என்றும், எனவே தொழில் நுட்ப வகையில் மட்டும் அல்ல, அது ஏற்படுத்தும் அபாயத்திலும் அணுக் கரு ஆற்றல் எவ்வாறு பிறவற்றிலிருந்து மாறுபட்டுள்ளது என்றும் ஓரளவு பார்த்தோம்.

இப்படிப்பட்ட தொழில் நுட்பம், நுட்பமான அணுக் கருவிலிருந்து அளவற்ற ஆற்றலைத் தருகிறது. அதேசமயம் இது அளவற்ற அபாயத்தையும் தருகிறது. எனவே, இதன் ஆற்றலை நோக்க இருக்கலாம் போலவும், இதன் ஆபத்தை நோக்க இது வேண்டாம் போலவும் தோன்றும். காரணம், இது வெறும் ஆற்றலை மட்டுமே தந்தால் யாரும் இதை எதிர்க்கப்போவதில்லை. அதேபோல இது வெறும் அபாயத்தை மட்டுமே தந்தால் யாரும் அதை வரவேற்கப் போவதுமில்லை. ஏன் அதுபற்றிய பேச்சே வரப்போவதில்லை.

அப்படியெல்லாம் அல்லாமல் இது இரண்டையுமே தருவதனால்தான் இது வேண்டுமா வேண்டாமா, வைத்துக் கொள்ளலாமா கூடாதா என்கிற சர்ச்சையெல்லாம் எழுகிறது. எனவே, இதை வேண்டும் என்பவர்களும், வேண்டாம் என்பவர்களும் இதுபற்றி என்ன சொல்கிறார்கள், இதுபற்றி எப்படிப்பட்ட கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிப் பார்த்துக்கொண்டு மேலே செல்வோம். பொதுவாக அணு சக்தியை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

kalpakkam_620

கல்பாக்கம் அணு உலை

நம் பூமியில் உள்ள பெட்ரோலும், டீசலும் இன்னும் கொஞ்ச வருஷத்தில் தீர்ந்துவிடும். பிறகு மனிதன் தனக்குத் தேவைப்படும் ஆற்றலுக்கு வேறு எங்கே போவது? எங்கேயும் போக முடியாது. அப்படிப்பட்ட நிலையில் இந்த அணு சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. ஆகவே அணுசக்திதான் மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு விடிவெள்ளி யாகத் திகழப்போகிறது. அதுதான் 21ஆம் நூற்றாண்டுக்கு நம்மை அழைத்துச் செல்லப் போகிறது என்கிறார்கள்.

இது அல்லாமல் பொருளாதாரம், சுற்றுச்சூழல், இவைகளை ஒட்டியும் இவர்கள் பல்வேறு கருத்துகளைச் சொல்கிறார்கள். இவர்கள் சொல்கிற கருத்துகள் பலவானாலும், முக்கியமாக அவர்கள் வலியுறுத்துவது நான்குதான்.

அவையாவன: 1. அணுசக்தி என்பது மலிவானது. அதாவது மற்ற அனல், நீர் மின்சக்தியை விட அணுசக்தி மலிவானது.

2. அணுசக்தி என்பது பாதுகாப்பானது. அதாவது இதர அனல், நீர், மின் உற்பத்தியைவிட இது பாதுகாப்பானது.

3. அணுசக்தி என்பது தூய்மையானது. அதாவது இதர அனல், நீர் மின் நிலையங்களைவிட மிகவும் தூய்மையானது.

4. அணுசக்தி என்பது நம்பகமானது. அதாவது இதர அனல், நீர் மின் நிலையங்களைப் போல் கரியையோ நீரையோ சார்ந்திருக்காமல், எப்போதும் கிடைக்கக்கூடிய, உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் நம்பகமானது என்று சொல்கிறார்கள். எனவே, இவர்கள் சொல்கிற காரணங்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்து, இவர்கள் சொல்வதில் உள்ள ‘உண்மையை’ உணர்ந்து கொண்டு நாம் மேலே யோசிப்போம்.

அணு மின்சாரம் சிக்கனமானதா?

சாதாரணமாக மின்சக்தி மூன்று வித தொழில் நுட்ப வழி முறைகளில் பெறப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்

1. நீர் அல்லது புனல் மின்சக்தி

2. அனல் மின்சக்தி

3. அணு மின்சக்தி

இதில் அணுசக்தியின் ஆதரவாளர்கள் வைக்கக்கூடிய முதல் வாதம், மேற்சொன்ன மூன்றுவித மின்சக்தி உற்பத்தியில் புனல், அனல் மின் உற்பத்தியைவிட அணு மின்சக்தி மிக மலிவானது, சிக்கனமானது என்பதுதான்.

தனிச்சுற்றுக்காக நடத்தப்படும் “புறப்பாடு” ஜூலை ஆகஸ்டு 88 இதழில் ‘The Economic Review’ என்கிற ஆங்கில இதழில் வெளிவந்ததாக ஒரு புள்ளி விவரம் தரப்பட்டுள்ளது.

இப்புள்ளி விவரத்தில், இதர மின் உற்பத்தி முறைகளோடு ஒப்பு நோக்க, அணுமின் உற்பத்தி, எவ்வளவு செலவு அதிகம் ஆகிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு கணக்கின்படி,

1.            நீர்மின் திட்டம்         1 கி.வா.            ரூ 1916

2.            நிலக்கரி         1 கி.வா.            ரூ 1995

அணுமின் தயாரிப்புக்கு,

1.            தாராபூர்           1 கி.வா.            ரூ 2250

2.            இராஜஸ்தான்           1 கி.வா.            ரூ 3650

3.            கல்பாக்கம்   1 கி.வா.            ரூ 4800

4.            நரோரா            1 கி.வா.            ரூ 7000

இப்புள்ளி விவரப்படி அணுமின் தயாரிப்புக்கு 1கி. வாட்டுக்கு ரூ. 2250 லிருந்து ரூ 7000 வரை செலவு ஆகிறது. சாதாரணமாக இந்தப் புள்ளி விவரமே இதர மின் உற்பத்திகளிலிருந்து அணுமின் உற்பத்தி அதிக செலவு மிக்கது என்று தெரிவிக்கிறது. என்றாலும், இந்தப் புள்ளி விவரத்திலும் ஒரு கேள்வி எழுகிறது. அதாவது, நீர்மின் நிலையத்தின் மூலம் ஒரு கி.வா. மின் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டுச் சொல்லி விடலாம். ஞாயம். அதேபோல அனல் மின் உற்பத்தி செய்யவும் ஒரு கி. வாட்டுக்கு எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று கணக்கிட்டு சொல்லி விடலாம். ஞாயம். ஆனால் அணுமின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவு ஆகும் என்பதை எந்தக் கணக்கை வைத்துச் சொல்வது என்பதுதான் அந்தக் கேள்வி.

ஏனெனில், நாம் ஏற்கனவே பார்த்தபடி அணுமின் நிலையத் தொழில் நுட்பம் அப்படி...

சாதாரணமாய் ஓர் அணுமின் நிலையத்தைக் கட்டிமுடித்து அது மின் உற்பத்தி செய்யும் நிலையை அடைய 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும் என்பதையும், இப்படி கட்டி முடிக்கப்பட்ட அணுமின் நிலையமும் அதிக பட்சம் 20 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டும் இயங்கமுடியும் என்றும், அதற்குப் பிறகு அதை ஊற்றி மூடி விடவேண்டியதுதான் என்றும் ஏற்கனவே பார்த்தோம் இல்லையா...

இத்தோடு போனாலும் கூடப் பரவாயில்லை. அணுமின் நிலையத்தை மூடிவிட்ட பிறகு, அணுமின் நிலையம். நிறுவப்பட்ட இடத்திலிருந்து வீசும் கதிரியக்கத்தைப் பல ஆயிரம் ஆண்டுகள் அதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாகப் பாதுகாத்தும் வைக்கவேண்டும். இதுவும் நாம் ஏற்கெனவே பார்த்தபடி இதன் அரை ஆயுள் காலம் 22,400 ஆண்டுகள். இதன்படி 100 சதவிகிதக் கதிரியக்கப்பொருள் 50% ஆக மாற 22,400 ஆண்டுகள். பின் அந்த 50%, 25% ஆக மாற 22,400 ஆண்டுகள் பின் அந்த 25% 12.5% ஆக மாற மேலும் ஒரு 22,400 ஆண்டுகள். இப்படி அந்த இடம் முற்றும் அபாயகரமற்றதாக மாற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்.

இது ஒருபக்கம் போக அணு உலை இயங்குவதால் ஏற்பட்ட கழிவுகள், இக்கழிவுகளைப் பாதுகாக்க, அதாவது இவற்றை உலோகப் பீப்பாய்களில் அடைத்துக் கடலில் தள்ளி அல்லது பூமியில் ஆழத்தில் புதைக்க இதற்கு ஆகும் செலவு.

ஆக, அணுமின் உற்பத்தியின்மூலம் மின் சக்தியை உருவாக்க 1கி. வாட்டுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதைக் கணக்கிட வேண்டுமானால், நமக்குத் தேவையானது,

1. அணுமின் நிலையம் அமைக்க ஆகும் செலவு.

2. அணுமின் நிலையம் இயங்கும் காலத்தில் ஏற்படும் செலவு. அதாவது இதில் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு விபத்துகள், கசிவுகள், வெடிப்புகள் இதைச் சரி செய்ய ஆகும் செலவு.

3. அணுமின் நிலையம் நிறுவிய இடத்தில் ஏற்பட்ட கதிரியக்கத்தை சுற்றுச் சூழலைப் பாதிக்காமல் பாதுகாக்கும் முயற்சியில் அதை அடைத்து வைக்க ஆகும் செலவு.

4. அணுமின் நிலையம் இயங்கியதில் ஏற்பட்ட கழிவுகளைப் பாதுகாக்க அல்லது புதைக்க ஆகும் செலவு.

5. மூன்று நான்கு இனங்களில் அவ்வப்போது ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அதனால் ஏற்படும் இழப்பு மற்றும் அதைப் பராமரிக்க ஆகும் செலவு.

ஆக, இவை எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால் தான் உண்மையில் 1கி. வாட் அணுமின் தயாரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்பதைக் கணக்கிட்டுச் சொல்லலாம். ஆனால், இதில் உள்ள மிகப் பெரிய சிக்கல் முதலிரண்டு வகையினங்களுக்கும் எவ்வளவு செலவு ஆகும் என்பதைச் சரியாகக் கணக்கிட்டு விடலாம். ஆனால் 3,4,5 வகையினங் களுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை எப்படிக் கணக்கிடுவது?

முதலிரண்டு வகையினங்கள் போல இதர வகையினங்களை அவ்வளவு சரியாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. காரணம். இது எதிர் காலத்தில் ஏற்பட இருக்கும் உத்தேச செலவு. ஆகவே இது எவ்வளவு ஆகும் என்று சொல்ல முடியாத செலவு. அதாவது இது ஒரு தொடர் செலவு. அதாவது 10ஐ 3ஆல் வகுத்தால் 3.333... ... என்று வருமே அது போன்ற செலவு. இந்தக் கணக்கீடாவது 3 3 3 ஆகத்தான் வரும். ஒரே எண்ணாக. ஆனால் அணுக்கழிவைப் பாதுகாக்க ஆகும் செலவு இப்படி ஒரே சீராக இருக்காது. தாறுமாறாக இருக்கும். எப்போது எங்கே எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்ல முடியாது.

அதோடு, இந்தப் பாதுகாப்புச் செலவோடு, இதில் ஏதாவது விபத்தோ கோளாறோ ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஆகிய எல்லாவற்றுக்குமான இழப்பையும் இத்துடன் சேர்த்தே இந்த அணுமின் தயாரிப்புச் செலவைக் கணக்கிட வேண்டும். காரணம், இந்த அணுமின் தயாரிப்பையொட்டி ஏற்படுவதுதானே இந்தச் செலவுகள் எல்லாம்?

ஆகவே, அணுமின் தயாரிப்புக்கு ஆகும் செலவு என்பது நாய் வாலை நிமிர்த்துவதற்கு ஆகும் செலவைக் கணக்கிடுவது மாதிரி. கட்டிவைத்திருக்கிற வரைக்கும் நேராக இருக்கும். கட்டுத்தளர்ந்ததும் மீண்டும் பழையபடியே வளைத்துக் கொள்ளும். அப்புறம் மறுபடியும் கட்டை இறுக்க வேண்டும். அல்லது புதுக்கட்டு போடவேண்டும்.அதாவது வாலும் நிமிராது செலவும் மாளாது அப்படி.

எனவே, அணுமின் உற்பத்தியைப் பொறுத்தமட்டில் 1 கி.வாட்டுக்கு உற்பத்திச் செலவு எவ்வளவு ஆகும் என்பதை உறுதியாக அறுதியிட்டுச் சொல்லமுடியாது. இதுவரை இப்படிச் சொல்வதாக வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் எல்லாம் கட்டுமானத்துக்கும், இயக்கத்துக்கும், இயக்க காலத்தில் அதன் பராமரிப்புக்கும் ஆன அல்லது ஆகிற செலவை அடிப்படையாகக் கொண்டு வந்தவைகளாகவே இருக்க முடியுமே தவிர, நாம் மேற்சொன்ன இந்த எதிர்காலச் செலவைக் கணக்கில் கொண்டதாக இருக்க முடியாது. அந்தச் செலவை இப்போதே கணக்கிடவும் முடியாது என்பதே உண்மை.

இப்படி எதிர்காலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பூதம் காப்பது போல் அணுமின் நிலையம் நிறுவிய இடத்தையும், அணுக்கழிவுகளையும் பாதுகாக்க ஏற்படும் வம்பான செலவை எல்லாம் வைத்துக் கொண்டு அவற்றைக் கணக்கில் கொண்டு வராமல் அணுமின் உற்பத்தி இதர மின் உற்பத்தியை விட சிக்கனமானது என்று எப்படித்தான் சொல்கிறார்களோ நமக்குப் புரியவில்லை.

அப்படியே நடப்புக் காலச் செலவை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டாலும் அந்தச் செலவும், இதர புனல்,அனல் மின் உற்பத்திச் செலவை விடவும் இரண்டு மடங்கு மூன்று மடங்கு கூடுதலாக இருக்கிறது என்பதைக் காட்டுவதே மேலே குறிப்பிட்டிருக்கும் புள்ளி விவரமும். இந்த நிலைமையில் அணுமின் உற்பத்தி மலிவானது, சிக்கனமானது என்பதற்கு எது அடிப்படை என்பது நமக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு சரியான அடிப்படையோடு இந்த வாதம் வைக்கப்படுமானால் நாம் இதைப் பரிசீலிக்கலாம். பரிசீலிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

அதோடு, இதில் இன்னொரு முக்கிய விஷயம். அணு உலைக்குத் தேவைப்படும் எரிபொருளான யுரேனியத்தை வெட்டியெடுப்பதற்கும், அதைச் செறிவூட்டுவதற்கும் ஆன செலவை இங்கே நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. நியாயப்படி அதையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காரணம், யுரேனியம் தாது பூமியிலிருந்து ஒன்றும் அப்படியே கட்டிக் கட்டியாகக் கிடைத்து விடுவதில்லை. பூமிக்கு அடியிலுள்ள பாறைகளிலிருந்து தங்கத்தை எப்படி வெட்டிப் பிரித்தெடுக்கிறார்களோ அதே போலத்தான் யுரேனியத்தையும் பிரித்தெடுக்க வேண்டும். சாதாரண தங்கம், ஒரு டன் அளவுள்ள பாறையை வெட்டி யெடுத்து சுத்திகரித்தால் 61 கிராம் தங்கமே கிடைக்கும் என்கிறார்கள். அதாவது .061 பங்கு. அப்படியிருக்க அதை விடவும் நிறை எண் மிகவும் கூடிய அரிதான இந்த யுரேனியம் ஒரு டன்னுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அதோடு, இப்படிக் கிடைக்கிற யுரேனியம் 238 ஐ அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது, இதைச் செறிவூட்டி 235 ஆக மாற்றிதான் எரி பொருளாகப் பயன்படுத்த முடியும் என்றும், இதிலும் இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் 238, 99.28 பங்கும் யுரேனியம் 235, 0.72 பங்கும்தான் கிடைக்கிறது எனவே, பெருமளவிலான யுரேனியத்தை இப்படி 235 ஆக மாற்றிச் செறிவூட்டி தண்டு வடிவில் ஆக்கி வைத்துக்கொண்டால் மட்டுமே அது எரி பொருளாகப் பயன்படமுடியும் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம்.

ஆகவே, இதற்காக ஆகும் செலவையும், அணுமின் தயாரிப்புக்கான செலவிலேயே கூட்டிச் சேர்த்துக் கணக்கிட வேண்டும். இப்படி எல்லாவற்றையும் சேர்த்து கூட்டிப் பார்த்தால் மட்டுமே அணுமின் சக்திக்கு ஒரு கி. வாட்டுக்கு எவ்வளவு செலவாகிறது, அது இதர அனல் புனல் மின் ஆற்றலைப் பெற ஆகும் செலவை விட எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பது நமக்குப் புரியவரும். ஆனால் கெடுவாய்ப்பாக இதுவரை யாரும் அந்த மாதிரி ஒரு கணக்கை வைக்கவில்லை. அப்படி ஒரு கணக்கு வரட்டும்.பிறகு இந்த வாதத்தைப் பார்ப்போம்.

அணுசக்தி பாதுகாப்பானதா?

அடுத்து அணுசக்தியின் ஆதரவாளர்கள் வைக்கும் வாதங்களில் ஒன்று அணுசக்தி பாதுகாப்பானது. அதாவது அனல்மின் நிலையங்களில் உள்ள ஆபத்தை விடவும், புனல் மின் நிலையங்களில் உள்ள ஆபத்தை விடவும் அணுமின் நிலையங்களில் ஆபத்து குறைவு, அல்லது எதுவுமே இல்லை என்பதாகும்.

அனல் மின் நிலையங்களிலோ, அல்லது புனல் மின் நிலையங்களிலோ, மிஞ்சி மிஞ்சி என்ன ஆபத்து வரும்? அனல் மின் நிலையத்தில் மிகவும் அதிகம் போனால் ஒரு பாய்லர் வெடித்துச் சிதறலாம். புனல் மின் நிலையத்தில் மொத்தக் கட்டுமானமே கூட வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போகப்படலாம். ஆனால் இந்த இரண்டு விபத்தில் எது நடந்தாலும், அது அப்போதைக்கு பல உயிர் மற்றும் பொருள்சேதங்களோடு முடிந்துவிடுமே தவிர அதற்கு ஒரு தொடர் பாதிப்பு இருக்காது.

ஆனால் அணுமின் நிலையம் அப்படியல்ல. இதில் ஏற்படும் எந்த விபத்தும் தொடர் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அப்படி ஏற்படும் விபத்துகளின் சாத்தியக் கூறுகளை வரிசையாகப் பார்ப்போம்.

1. அணு உலைகளில் பயன்படுத்தப்படும் தணிப்பான்கள் ஒழுங்காய் செயல்படாத நிலையில் ஒவ்வோர் அணு உலையும், ஓர் அணுகுண்டைப் போல வெடிக்கத் தயார் நிலையில் உள்ளன.

2. அணு உலையிலிருந்து வெளியேறும் அழுத்த நீர்க் குழாய், மிக உச்ச நிலை வெப்பத்தைத் தாங்கி வருவதால் அதில் கசிவோ, வெடிப்போ ஏற்பட வாய்ப்புண்டு.

3. இம்மாதிரி ஏற்படும் சிறு சிறு கோளாறுகளால் வெளிப்படும் கதிரியக்கம் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் சுற்றுப்பகுதியில் வாழும் மக்கள் அத்தனை பேரையும் தலை முறைக்கும் பாதிக்கும்.

இவற்றையெல்லாம் நாமே கற்பனையாக எதுவும் சொல்லவில்லை. இதுவரை நிறுவப்பட்டு இயங்கிவரும் அணுமின் நிலையங்களின் அனுபவத்திலிருந்தே இவை சொல்லப்படுகின்றன.

உதாரணத்துக்குக் கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அந்நிலையத்திலேயே பணிபுரியும் டாக்டர் டி.வி. கோபிநாத் 29.10.88 இந்து செய்தித்தாளில் எழுதியுள்ள கட்டுரையைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்

பொதுவான மின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி அவர் சொல்கிறார்:

சாதாரணமாய் 1000 மெ.வா. மின் உற்பத்தித் திறன் கொண்ட ஓர் அணுமின் உலை 10 இலட்சம் கியூரிகள் கதிரியக்கத் திறன் கொண்டது. இது தன் சுற்றுச் சூழலில் 108 ரெம் (rem) அளவு அதாவது10,00,00,000 ரெம் அளவு கதிர் வீச்சை வெளிப்படுத்தும். ஆனால் அங்கே பணி புரிபவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு அனுமதிக்கப் பட்ட கதிரியக்கம் 5 ரெம்தான். ஆகவே இக்கதிரியக்கம் பரவாமல் பாதுகாக்க கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சொல்கிற அவர், இந்தப் பாதுகாப்பு உதாரணத்துக்குத் தாம் பணிபுரியும் கல்பாக்கம் அணு மின் நிலையத்தையே எடுத்துக் கொள்கிறார்.

அணுமின் உலை, அபாயகரமானது, அதாவது அணு குண்டுக்கு ஒப்பானது இல்லையா..? அதனால் எந்தக் கருவியும் எந்தக் கணத்திலும் பழுதடையாத வகையில் அதற்குத் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் மின்சாரம் தடைப்பட்டு ஏதாவது ஒரு சிறு கருவி இயங்காமல் போனாலும் அணு உலையின் வெப்பம் ஏறியது தெரியாமல் கிடந்து உலை வெடித்து விடும் அபாயம் உண்டு. ஆகவே இந்த மின்சாரத்தைத் தங்கு தடையின்றி வழங்க கீழ்க்கண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1. ஆரணி, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களிலிருந்தும் தனித்தனியாக மின் விநியோக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒன்று கோளாறானாலும் ஒன்று செயல்பட்டு மின்சாரம் வழங்கும்.

2. அணுமின் நிலையம் முழுமைக்கும் தேவையான மின்சாரத்தைச் சப்ளை செய்யக்கூடிய 5 டீசல் ஜெனரேட்டர்கள் எந்த நேரத்திலும் உடனடியாக இயங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை மின் பழுது ஏற்பட்ட 10 விநாடிகளில் உடனே ஸ்டார்ட் ஆகி இயங்கக் கூடியவை.

3. இவையல்லாமல், சேமித்து வைக்கப்பட்ட மின்கலப் பெட்டிகள் மற்றும் மோட்டார் ஜெனரேட்டர்கள் வேறு தயார் நிலையில் உள்ளன.

இவையெல்லாம் மின் பழுதைச் சமாளிக்க... அடுத்து, அணு உலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால், அதாவது அணு உலையில் வெப்ப அளவு மீறி வெடிக்கும் அபாயம் ஏற்படுமானால் உலையின் இயக்கத்தில் தற்காலிகச் செயல் முடக்கம் (shut down) செய்வதற்காக - இந்தச் செயல் முடக்கம் என்பது கன நீரை உலைக்குள்ளிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது - இந்த வெளியேற்றத்துக்கு 100 சதவீதம் உத்தரவாதமான 6 அனுப்பு வால்வுகள் (dump valves), 3 மிகை வெப்ப வெளியேற்று வளைகள் (redunt loops) தயார் நிலையில் உள்ளன. இவையாவும் அசாதாரண நிலை ஏற்பட்டால் 7 விநாடிகளில் செயல்படத் தொடங்குவதோடு இவை தானியங்கும் தன்மை கொண்டதாகவும் நிறுவப்பட்டு உள்ளன.

அடுத்து, குளிரூட்டும் ஏற்பாடு. அணு உலையில் பயன் படுத்தப்படும் எரி பொருள் வெப்பமடையாமல் குளிரூட்டப் பட்டிருக்க வேண்டுமல்லவா? அதற்காகக் கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதற்காக, 8 அடிப்படை வெப்ப மாற்று பம்புகள் (Primary Heat Transpose Pumps) நிறுவப்பட்டுள்ளன. இதில் 4 பம்புகள் எப்போதும் இயங்கும் நிலையில் உள்ளன. இதில் ஏதாவதொன்று பழுதானாலும் எஞ்சிய 4 பம்புகளில் ஏதாவதொன்றை பயன் படுத்திக் கொள்ளலாம். இது தவிர அவசரநிலையில் இயங்குவதற்காக டீசலில் இயங்கும் இரண்டு துணை பம்புகளும் நிறுவப்பட்டுள்ளன.

மேற்கண்ட எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செயல்பட முடியாத மிகவும் இக்கட்டான நிலை எதுவும் ஏற்பட்டால் 7.5 மில்லியன் காலன் கொள்ளவு கொண்ட தீக்குளிர் நீர்(Fire-water) மூலம் குளிரூட்டுத் தன்மையை பெற முடியும். மொத்த நிலையத்தையும் குளிரூட்ட 4.5 மில்லியன் காலனே போதும் என்றாலும் எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் கூடுதலாகவே இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

சரி. இது அனைத்துமே செயல்படாத மிக அசாதாரண, மிக ஆபத்தான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்...என்று ஒரு கேள்வி எழுப்பி அதற்கும் கட்டுரையாசிரியரே பதிலும் சொல்கிறார். எந்தத் தொழில் நுட்பமும் முழுமையாக நூற்றுக்கு நூறு பாதுகாப்பானதல்ல என்று சொல்லி மேலும் அவர் சொல்கிறார். அப்படி ஏதாவது ஆபத்து நேரும் பட்சத்தில், அணு உலையில் ஏற்படும் வெப்பமோ, கதிர்வீச்சோ பணியாளர்களையோ பொதுமக்களையோ பாதிக்காமல் பாதுகாக்கும் வகையில் அடுக்கடுக்கான மூன்று தடைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மூன்று தடைகளைத் தாண்டியும் கதிரியக்கம் வெளிப்படுமானால், அக்கதிரியக்கம் வெளிவராத வகையில், மிகவும் பாதுகாப்பான, இறுக்கமான, உலோகத்தால் ஆன அணுஉலை காப்புக் கருவி, எப்படிப்பட்ட அழுத்தமான வெப்ப நிலையிலும், அபாயகரமான விபத்து ஏற்பட்ட நிலையிலும் மொத்த அழுத்தத்தில் மணிக்கு 0.1 சதவீதத்துக்கு மேல் கசிவை வெளிப்படுத்தாத வகையில் நிறுவப்பட்டுள்ளது.

இதைச் சுற்றிலும், குறிப்பிட்ட இடைவெளி விட்டு இரண்டாவது பாதுகாப்பு உலோகக் கவசம் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் ஏதாவது கதிரியக்கம் ஏற்படுகிறதா என்பதை இடைவிடாது கண்காணிப் பதற்கான கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதையும் தாண்டி ஏதாவது ஆபத்து ஏற்படுமாயின், இந்தியாவில் நிறுவப்படும் எந்த அணு உலையின் 1.6 கி.மீ. சுற்று வட்டாரத்திலும் மக்கள் வசிப்பைத் தடுக்கும் விசேஷப் பகுதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்துக்குச் சொந்தமான இடத்தில் பொதுமக்களது நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த 1.6 கி.மீ.க்கு அப்பால் 5 கி.மீ. சுற்று வட்டாரத்தில், மக்கள் நெருக்கத்தை மிகுதியாக்கும் தொழில்கள் தொடங்கு வதோ மிகையான மக்கள் குடியேற்றமோ தடைசெய்யப் பட்டுள்ளது.

இந்தப் பாதுகாப்பு அடுக்குகள் அனைத்தையும் கூறி, அணு உலை நிறுவப்படுவதற்கான இடம் தேர்வு, அணுஉலையில் நிறுவப்படும் கருவிகளின் தரம் தேர்வு, பணிபுரியும் பணியாளர்களின் திறமை தேர்வு முறை, அது அதற்கான கமிஷன்கள், அதற்கான அங்கீகாரங்கள் பற்றி யெல்லாம் சொல்லி, இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் இருக்க, அணுமின் நிலையங்கள் பற்றி அனாவசியமாய் அஞ்சத் தேலையில்லை என்கிறார் கட்டுரையாளர். சரி இருக்கட்டும்.

ஒப்பு நோக்கில் இதை மேட்டூர் புனல், நெய்வேலி அனல் மின் நிலையங்களின் உதாரணம் மூலமாகவே, அணுசக்தி எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம். மேட்டூர் நீர்மின் நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் மக்கள் வசிக்கத் தடை இல்லை. விசேஷப் பாதுகாப்புப் பகுதிகள் இல்லை. அங்கே சிறுசிறு தொழிற்சாலைகளும் மக்கள் நெருக்கமும் மிகுதியாகவே உள்ளன. அதே போலத்தான் நெய்வேலியும். அங்கே சுரங்கத்தின் பக்கத்திலேயே அனல் மின் நிலையம். அதற்குச் சுற்று வட்டாரத்தில் 100 மீட்டருக்குள்ளேயே பேருந்துஸ் நிலையம், கடை, கடைத் தெருக்கள், குடியிருப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இதே போலவே பேசின் பிரிட்ஜ் பகுதியும்.

ஆனால், அணு மின் நிலையம் நிறுவப்பட்டுள்ள கல்பாக்கத்தில் அப்படியில்லை என்று கட்டுரை ஆசிரியரே குறிப்பிடுகிறார். ஆக, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு அடுக்குகளின் வரிசையைக் கொண்டே அணுமின்சக்தி எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அடுத்து, இடத்தேர்வு, கருவித்தேர்வு, பணியாளர் தேர்வுக்கான கமிஷன்கள் அல்லது நியமனக் குழுக்கள்.... ஊழலும், தனி நபர் செல்வாக்கும் மலிந்த இந்த சமூக அமைப்பில் இப்படிப்பட்ட கமிஷன்களும் நியமனக் குழுக்களும் எவ்வளவு பொறுப்புணர்ச்சியோடும் அக்கறையோடும் செயல்படும், படுகின்றன என்று சொல்லத் தேவையில்லை. இராணுவ பீரங்கி, நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு என்ன முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதைக் காட்டிலும் எந்த வகையிலும் அதிக முக்கியத்துவம் அணுமின் நிலையங்களுக்கு தரப்பட்டுவிடாது என்று மட்டும் நாம் நிச்சயமாக நம்பலாம்.

அடுத்து, எல்லாமே உருப்படியாய் நடப்பதாகக் கொண்டாலும் கூட, கண நேரத்தில் ஏற்படும் ஓர் அசாதாரண விபத்து, அதாவது ஒரு நில நடுக்கம் அல்லது ஆழிப் பேரலை ஆகியன இந்த ஏற்பாடுகள் எல்லாவற்றையுமே ஒரு நொடியில் தகர்த்துத் தரைமட்டமாக்கிவிடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இங்கே சிலர் ஒரு கேள்வி கேட்கலாம். ஆபத்து எதில்தான் இல்லை? சாலையில் நடந்து போனால் கூடத்தான் விபத்து ஏற்படுகிறது. அதற்காகச் சாலையில் நடக்காமலே இருக்க முடியுமா..? இரயிலில் விமானத்தில் கூடத்தான் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதற்காக இவற்றில் பயணமே செய்யாமலே இருக்க முடியுமா என்று... நியாயம். விபத்து எங்கும்தான் நடைபெறுகிறது. ஆனால் மற்ற விபத்துகளின் தன்மை வேறு. அணுச்சக்தியின் கதிரியக்கத் தன்மை காரணமாக ஏற்படும் விபத்தின் தன்மை வேறு.

மற்ற விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்பு விபத்துக் காலத்தோடு விபத்து நடந்த இடத்தோடு முடிவடைந்து விடுகிறது. ஆனால் அணு சக்தியினால் ஏற்படும் விபத்து பல நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் சுற்று வட்டாரத்துக்கு, பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடித்து நின்று மனித குலத்தைத் தலைமுறை தலைமுறைக்கும் தாக்கி அல்லது அச்சுறுத்தி வருவது.

தவிர, மற்ற விபத்துகள் கண்ணுக்குத் தெரிந்த அபாய அறிகுறிகளோடு வருகிறது. ஆனால் அணு சக்தியினால் ஏற்படும் கதிரியக்க அபாயம் கண்ணுக்குத் தெரியாத மாயா சக்தி போல வருவது. மனிதனைச் சிறுகச் சிறுக அரித்துத் தின்று சாக அடிப்பது.

அதோடு விபத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று மனிதக் கோளாறு காரணமாக நிகழ்வது. மற்றொன்று எந்திரக் கோளாறு காரணமாக நிகழ்வது

ஓர் இரயில் விபத்தில் ஒரு பாயின்ட்ஸ்மேன் பாயின்டை மாற்றி அடித்ததால் அவ்விபத்து நேர்ந்திருந்தால் அது மனிதக் கோளாறால் ஏற்பட்ட விபத்து. இதுவே அவன் பாயின்டைச் சரியாக அடித்தும் பாயின்ட் விழாமல், இரயில் செல்ல வேண்டிய தண்டவாளத்தில் செல்லாமல் வேறு தண்டவாளத்தில் சென்று விபத்து நேர்ந்து விட்டால் அது எந்திரக் கோளாறு.

பல சந்தர்ப்பங்களில் எந்திர விபத்து ஏற்பட்டால் கூட மனிதனின் சாதுர்யமான சமயோசித புத்தி காரணமாகப் பல விபத்துக்களைத் தவிர்க்க முடியும்; தவிர்க்கப்பட்டிருக்கின்றன. முற்றாகத் தவிர்க்க முடியாவிட்டால் கூட குறைந்தபட்சம் சேதாரங்களையாவது குறைக்க முடியும்; குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அணுஉலை விபத்து என்பது மனித விபத்தும் அல்ல. எந்திர விபத்தும் அல்ல. இது தொழில் நுட்பக் கோளாறுகளால் நேரும் விபத்து.

காரணம், அணு உலையில் பணிபுரியும் மனிதன் 100% சரியாகப் பணியாற்றினாலும், அணுஉலையில் நிறுவப்பட்ட எந்திரங்கள் 100% சரியாகவே இயங்கினாலும், அணுஉலை, உருகவோ, வெடிக்கவோ, அல்லது வெப்ப வெளியேற்றுக் குழாய்களில் வெடிப்போ கசிவோ ஏற்பட வாய்ப்புண்டு. இந்தக் கோளாறுக்குக் காரணமாக யார் மீதும் பழியைப் போட முடியாது. ஏனெனில் அது இயற்கை. அணுஉலையில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் தனிமத்தின், அத் தனிமத்தின் அணுக்கருவைப் பிளப்பதால் ஏற்படுவதன் இயற்கையான விளைவு.

இந்த இயற்கை யாருக்கும் கட்டுப்பட்டதல்ல. அணு உலையிலிருந்து வெளிவரும் வெப்பமும் கதிர்வீச்சம் தவிர்க்கப் பட முடியாதவை. கட்டுப்படுத்தப்பட முடியாதவை. எனவே இந்த இயற்கைக்காக யார் மேலும் பழி போடமுடியாது. யாரையும் குறை சொல்லவும் முடியாது. ஏனெனில், அணுக்கருப்பிளப்பின்போது வெளிப்படும் வெப்ப ஆற்றல் கதிர்வீச்சுடனே பிறக்கிறது. இந்தக் கதிர்வீச்சு இல்லாமல் வெளிப்படும் வெப்ப ஆற்றலை, அல்லது அப்படிப்பட்ட வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும் அணுக்கருப் பிளவை இதுவரை விஞ்ஞானம் காணவில்லை. எதிர்காலத்திலும் காண சாத்தியமா என்பதும் சந்தேகமே.

காரணம், பூமிக்கு ஈர்ப்புவிசை உண்டு என்பது எப்படி உண்மையோ, சூரியன் வெப்ப ஆற்றல்களை வெளியிடுகிறது என்பது எப்படி உண்மையோ, கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன என்பது எப்படி உண்மையோ, அப்படியே அணுக்கருப் பிளவின்போது வெப்பமும் கதிர்வீச்சும் வெளிப்படுகின்றன என்பதும் உண்மை. காரணம் அது இயற்கை.

பூமியின் ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடிந்தால், சூரியனின் வெப்ப ஆற்றலைக் கட்டுப்படுத்த முடிந்தால், கோள்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடிந்தால்... அப்போது மட்டுமே அணுவின் கதிரியக்கத்தையும் கட்டுப் படுத்த முடியும். ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவற்றையெல்லாம் அவநம்பிக்கையின் காரணமாகப் பேசுவதாக யாரும் கருதக் கூடாது.

நம்முடைய கவலையெல்லாம் விஞ்ஞானம் இதற்கு விடை காணாமல், அணுமின் தயாரிப்பில் இறங்குவது ஆபத்தானது, மனிதகுலத்தின் எதிர் காலத்தையே பணயம் வைப்பது, என்கிற நிலையில் இத்தொழில் நுட்பத்தைச் செயலாக்க முனைவது முறையானதுதானா என்பதுதான் கேள்வியே தவிர, அணுச்சக்திப் பணியாளர்களையோ, அணுமின் நிலைய எந்திரங்களையோ இவற்றின் திறமைகளையோ குறை கூறுவதாக அர்த்தம் கிடையாது. நமது நோக்கமும் அதுவல்ல.

 இது ஒரு அபாயகரமான தொழில் நுட்பம் என்பதே நம் வாதம். எனவே, அந்தத் தொழில் நுட்பத்தையே நாம் குறை கூறுகிறோமே தவிர வேறு யாரையும் அல்ல.

இதற்கு ஒரு சரியான தீர்வு காணாத வரை ‘அணுசக்தி’ பாதுகாப்பானது என்கிற வாதம் அர்த்தமற்றது. அபாயகரமானது என்பதே நம் கருத்து.

அணு சக்தியின் தூய்மை, நம்பகத்தன்மை குறித்து அடுத்து பார்ப்போம்.

- இராசேந்திர சோழன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It