கதிரியக்கமானது மின்காந்த ஆற்றல் (உ.ம்: காமா மற்றும் எக்ஸ் - கதிர்கள்) மற்றும் துகள் கதிர்களால் (உ.ம்: நியூட்ரான் மற்றும் ஆல்பா துகள்கள்) ஆனது. கதிரியக்கம் அது செல்லும் பாதையில் உள்ள பொருட்களின் மீது ஆற்றலைக் குவித்து அயனியாக்கம்  செய்கிறது.

கதிரியக்கம் உயிரினங்களில் பல்வேறு  விளைவுகளை ஏற்படுத்துகிறது. கதிரியக்கம் உயிரியல் மூலக்கூறுகளை தாக்கி சேதப்படுத்துகிறது. மிக முக்கியமாக மரபணு மூலக்கூறுகளான நியூக்ளிக் அமிலங்களை (DNA) நேரடியாகவோ (கதிரியக்க ஆற்றலை நியூக்ளிக் அமிலங்களின் மீது குவித்து சேதப்படுத்துதல்) மறைமுகமாக செல்களில் உள்ள நீரினை நீராற்பகுத்து தனிநிலை மூலக்கூறுகளை (DNA) உருவாக்குவதன் மூலமாகவோ சேதமடையச் செய்கிறது.

கதிரியக்கம் உண்டாக்கிய நியூக்ளிக் அமில சேதமானது செல்களில் தன்னிச்சையாக இயற்கையான முறையில் சரிசெய்யப்படுகிறது. கதிரியக்கம் உருவாக்கிய DNA சேதம் செல்களின் சரிசெய்யக்கூடிய அளவினைத் தாண்டும்பொது மரபணுவில் நிரந்தரமான முடக்கம் (mutation) ஏற்பட்டு புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு வகை செய்கிறது. இது பெரும்பாலும் கதிரியக்கம் தொடர்ச்சியாக உயிரினங்ககளின் மீது பாய்ச்சப்படும்போது நிகழ்கிறது. 

கதரியக்கம் புற்றுநோயை உருவாக்குகிறது என்ற போதிலும் அதே கதிரியக்கமானது (உ.ம்: X -கதிர்கள்ஃ கொபால்ட் கதிர்கள்) பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. சுமார் 80 சதவிகித புற்றுநோயாளிகள் அறுவைசிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் (chemotherapy) மட்டுமல்லாது கதிரியக்க சிகிச்சையும் மேற்கொள்கின்றனர். புற்றுநோய்க்காக கொடுக்கப்படும் கதிரியக்கத்தின் பக்கவிளைவாக  இரண்டாம்வகை புற்றுநோயினை உருவாக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது. முக்கியமாக கதிரியக்கமானது இரத்தப் புற்றுநோயை உருவாக்குகிறது.

எல்லா செல்களிலும் கதிரியக்கம் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. கதிரியக்கமானது உடலின் வெவ்வேறு உறுப்புகளில் வெவ்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. முக்கியமாக மிக விரைவான வளர்ச்சித்திறன் கொண்ட செல்களான இரத்த செல்கள் (குறிப்பாக வெள்ளையணுக்கள்) மற்றும் எலும்பு மஜ்ஜை செல்களில் மிக அதிக விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனைத் தொடர்ந்து விந்தணு செல்கள் மற்றும் குடல் எபீதிலிய செல்கள் கதிரியக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன‌. விந்தணுக்களின் எண்ணிக்கையை கதிரியக்கம் வெகுவாக குறைக்கிறது. இது மலட்டுத் தன்மைக்குக் காரணமாகிறது. குடல் எபிதிலிய செல்கள் கதரியக்கத்தால் வெகுவாக பாதிக்கப்ப‌டுவதால் இந்த செல்களில் உணவு மற்றும் ஊட்டங்களை உறிஞ்சும் ஆற்றல் குறைகிறது. இதனால் கதிரியக்கம் தாக்கப்பட்ட மனிதனின் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு வகையான தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தோல் மற்றும் நரம்பு செல்கள் மிக அதிக அளவில் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுகிறது.

ஒருமுறை கதிரியக்கம் உடலில் செலுத்தப்பட்டாலும் அது அதனுடைய விளைவுகளை உடலில் உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ உயிர்வாழ்வினங்களில் ஏற்படுத்துகிறது. சில உடனடி விளைவுகளான வாந்தி, மயக்கம், காய்ச்சல் மற்றும் இரத்த செல்களில் மாறுபாடு, சிறுகுடல் புண், எலும்பு மஜ்ஜை சேதம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

இதைத்தவிர கதிரியக்கமானது நீண்ட கால விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. கதிரியக்கத்தின் தாக்குதலுக்கு தொடர்ச்சியாக உட்படும்பொது இரத்தப் புற்றுநோய் (leukemia), எலும்பு புற்றுநோய், தைராய்டு சுரப்பி புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உருவாகின்றது. மேலும் கதிரியக்கத்தால் மரபணு செல்களில் ஏற்படும் மாற்றமானது குறைபாடுகளுடன் உடைய குழந்தைகள் பிறக்கக் காரணமாகின்றது. விரைவாக வளரும் கருவின் செல்கள் கதிரியக்கத்தின் தாக்குதலுக்கு வெகுவாக உட்படுகிறது. கர்ப்பிணிகள் கதிரியக்கத்தின் தாக்குதலக்கு உள்ளாகும்போது உடல் வளர்ச்சிக் குறைபாடு மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்கின்றன‌. மேலும் இந்தக் குழந்தைகள் எதிர்காலத்தில் எளிதாக புற்றுநோயின் தாக்குதலுக்கு உட்படுகின்றன.

நியூக்ளியர் அணு உலைகளுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் கதிரியக்கத்தின் தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். அணு உலைகளிலிருந்து வெளியேறும் கதிரியக்க சீசியம் மற்றும் கதிரியக்க அயோடின் போன்றவை அணு உலைகளுக்கு அருகாமையில் வசிக்கும் உயிரினங்களில் மிக அதிக அளவில் பாதிப்புகளை நிச்சயமாக உருவாக்கும்.

Pin It