அணுகுண்டு தயாரிப்பும், அணுமின் உற்பத்திக்காக வெப்பத்தை உற்பத்தி செய்யும் அணு உலையும் அடிப்படையில் ஒரே தத்துவத்தைக் கொண்டது என்றும், அணுகுண்டு என்பது கட்டுப்பாடற்ற ஒரு முழு வீச்சான செயல்முறை என்றும், ஆனால் அணு உலையில் இந்தக் கட்டுப்பாடற்ற இயக்கத்தைக் கட்டுப்படுத்தவே தணிப்பான்கள் (Moderators) பயன்படுத்தப்படுகின்றன என்றும் ஏற்கெனவே பார்த்தோம். இந்த தணிப்பான்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒவ்வோர் அணு உலையும், ஒவ்வோர் அணு குண்டுக்கு ஒப்பானதுதான் என்று சொல்லலாம்.

இன்று உலகில் அணுசக்தித் தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்திருப்பதாகவும், மேலும் மேலும் பாதுகாப்பான, பல புதிய வடிவமைப்பில் அணு உலைகள் தயார் செய்யப்படுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது என்றாலும், அதன் அடிப்படை எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பொருளின் அணுக் கருவை நியூட்ரான் துகள்களைக் கொண்டு தாக்கி, தொடர் நிகழ்வினை உண்டுபண்ணி, அதன் மூலம் அளவு கடந்த வெப்பத்தை உருவாக்குவதே; அந்த வெப்பத்தைக் கொண்டு வெளிக் குழாயில் உள்ள நீரை ஆவியாக்கி, அதன் மூலம் டர்பைனை இயக்கி ஜெனரேட்டரைக் கொண்டு மின் சக்தியைப் பெறுவதே.

இதில் எவ்வெவ்வகையான வடிவமைப்புகள் கொண்ட அணு உலைகள், எவ்வெவ் வகையில் செயல்படுகின்றன என்கிற உள்ளார்ந்த தொழில் நுட்பங்கள் பற்றிய விவரங்களைப் போதுமான அளவு நாம் அறிய வாய்ப்பில்லை என்றாலும் இன்று பத்திரிகை, மற்றும் இதழ்களில் வெளி வந்திருக்கும் விவரங்களைப் பார்க்க, அணுசக்தித் தயாரிப்பு என்பது மூன்று வகை உலைகளில் நடைபெறுவதாகப் புலனாகிறது.

1. யுரேனியம் 235ஐ எரிபொருளாகக் கொண்டு செயல்படும் அணு உலை இது. இது 440 மெகாவாட் திறன் கொண்டதும், 1000 மெகாவாட் திறன் கொண்டதுமான இரண்டு வகைப்பட்டதாக வடிவமைக்கப்படுகிறது. இதில் கன நீரை தணிப்பானாகப் பயன்படுத்துவது Water  Electricity Reactor - WER எனப்படுகிறது. இத்துடன் நீரைக் குளிர்விப்பியாகவும் தணிப்பானாகவும் கொண்ட Water Cooled  Water Moderated Energy Reactor என்னும்ஒரு வகையும் செயல்படுத்தப் படுகிறது. இதுவே, WWER எனவும், VVER எனவும் அழைக்கப் படுகிறது. மற்றொன்று, கிராஃபைட்-ஐத் தணிப்பானாகப் பயன்படுத்துவது. இது RBMK என அழைக்கப் படுகிறது. இந்த அணு உலை ருஷ்யத் தொழில் நுட்ப அடிப்படையில் செயல்படுவதாகும்.எனவே ஆங்கிலத்தில் High Power Channel Type Reactor என அழைக்கப்படும் இது ருஷ்ய மொழியில் Reaktor Bolshoy Moschnosti Knalniy-RBMK என அழைக்கப்படுகிறது. செர்னோபில் விபத்துக்குள்ளானது இவ்வகை அணு உலையே என்றும் அதனால் அதனின்றும் பாதுகாப்பாக வடிவமைக்கப் பட்டதே (VVER) அணு உலை எனவும் சொல்லப்படுகிறது.

2. யுரேனியம் 235ஐ எரிபொருளாகப் பயன்படுத்தும், முதல்வகை அணு உலைகளில் ஏற்படும் கழிவான புளூடோனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துவது இரண்டாவது வகைப்பட்ட உலையாகும். இது முதல் வகைப்பட்ட அணு உலையை விடவும் அதிக அளவு ஆற்றலையும் வெப்பத்தையும் தர வல்லது. இதை அதிவேக ஈனுலைகள் (Fast Breeder Reactor -சுருக்கமாக FBR) என்கிறார்கள். இந்தத் தொழில் நுட்பம் இதுவரை எந்த நாட்டிலும் வெற்றிகரமாக, அதாவது இடையூறின்றியும், விபத்தின்றியும், பாதுகாப்பாகவும் நிறைவேறியதாகத் தெரியவில்லை. அடிக்கடி பணி முடக்கம், சிறு சிறு விபத்துகள், கசிவுகள் என்பன சாதாரண நிகழ்ச்சிகளாகிப் போய், இப்படிப்பட்ட இடையூறுகளுடனேயே இவை இயங்கி வருகின்றன.

3. இரண்டாவது வகை அணு உலைகளில் அதாவது FBR உலைகளில் வெளிப்படும் கழிவுகளான, எரிபொருளாகப் பயன்படாது போன, ப்ளூட்டோனியம் மற்றும் தோரியத்திலிருந்து பெறப்படும் யுரேனியம் - 233. இவற்றில் தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் அணு உலை இந்த மூன்றாவது வகைப்பட்டதாகும். இது இன்னும் எந்த அளவுக்கு நடைமுறையாக்கப்பட்டுள்ளது என்றும், இப்படிப்பட்ட உலைகளுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

ஆனால், எந்த ஓர்அணு உலை வடிவமைப்பிலும், அந்த அணு உலையில் பயன்படுத்தும் தணிப்பான் அணு உலை வெப்பத்தைத் தாங்கி வெளிவந்து சாதாரண நீருக்கு தந்து, செல்லும் குழாயில் பயன்படுத்தப்படும் நீர், அணு உலையில் பயன்படுத்தப்படும் எரிபொருள், இவற்றின் தன்மை அல்லது பயன்பாட்டு முறைக்கேற்ப இவற்றிற்கான பெயர்கள் வைக்கப்படுகின்றன. இது பற்றிய உள் விவரங்களைத் தெரிந்து கொண்டு அணு உலைகளை, அவற்றின் இயக்க முறைகளுக்கு ஏற்ப வகைப்பிரிவு செய்யப் போதுமான விவங்களை ஆராய வேண்டியுள்ளது. ஆராய்வோம்.

ஆனால், எல்லா உலைகளுக்கும் பொதுவானது என்று இதுவரை வளர்ந்து வந்துள்ள விஞ்ஞானத் தொழில்நுட்பம் என்பது பொதுவாக ஒன்று உண்டு. அந்தத் தொழில்நுட்பம், அணுசக்தி உற்பத்தியில் இதுவரை தொட்டுள்ள எல்லைகள், தொடாத எல்லைகள் எது என்பதே இத்தொழில் நுட்ப விஷயத்தில் பிரதானமாய் நமக்கு முன் உள்ள கேள்வி.

முதலாவதாக, அணுக் கருப் பிளவு என்பது அளவு கடந்த, அபரிதமான வெப்ப ஆற்றலை மட்டும் தரவில்லை. மாறாக, அது அபாயகரமான அழிக்க முடியாத கதிரியக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. எனவே, இன்றுள்ள அணுசக்தித் தொழில்நுட்பம் என்பது கதிரியக்கமற்ற அணுக் கருப் பிளவு பற்றியோ, அணுசக்தியைப் பற்றியோ பேசவில்லை. மாறாக, கதிரியக்கத்தோடு கூடிய வெப்ப ஆற்றலைப் பற்றி மட்டுமே பேசுகிறது.  எனவே, எப்படிப்பட்ட வடிவமைப்பு கொண்ட உலை யானாலும், அது எவ்வளவு நவீனத் தன்மை கொண்ட தானாலும், அது பேசுவதெல்லாம் இந்தக் கதிரியக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது பற்றி மட்டும்தானே தவிர, கதிரியக்கமே இல்லாத அல்லது தோன்ற முடியாத ஒரு தொழில் நுட்பத்தைப் பற்றி அது பேசவில்லை.

காரணம், இக் கதிரியக்கம் என்பது அத்தனிமத்தின் இயற்கைப் பண்பு. அதாவது, பழுத்த பழம் மணம் வீசுவதைப் போல, ஒரு குறிப்பிட்ட அணுப் பொருண்மை கொண்ட தனிமங்களெல்லாம் இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இயற்கையில் மிக மெதுவான, சீரான, பரவலான அளவில் உள்ள இக்கதிரியக்கம் அணுக்கருப் பிளவின் போது அபரிமிதமாகவும், ஒருங்கு குவிக்கப்பட்டதுமாகவும்,ஒரே நேரத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. எனவே இது கட்டுப்பாடற்றதாக, தடுத்து நிறுத்த முடியாததாக இருக்கிறது என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

இரண்டாவதாக, இக்கதிரியக்கத்தை அழிக்க முடியாது என்று சொல்வதன் காரணம், அது ஆற்றலின் அழியாமை விதி போல, ஓர் ஆற்றல் இன்னோர் ஆற்றலாக உடனடியாக மாற்றப்படுவது போல, இக்கதிரியக்க ஆற்றலை உடனடியாக வேறு ஓர் ஆற்றலாக மாற்றிவிட முடியாது என்பதுதான்.

உதாரணமாக, கதிரியக்கம் பரவிய சுற்றுச் சூழலில் இக்கதிரியக்கம் சுற்றிலுமுள்ள உயிரினங்களை, மனிதர்களை, விலங்குகளை, தாவரங்களைப் பாதிக்கும்; காற்றைப் பாதிக்கும். இதிலிருந்து மறைந்து கொள்வது அல்லது ஒளிந்து கொள்வது, தப்பித்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. காரணம், இது கனமான கான்க்ரீட் கட்டடங்களையும் தாண்டி ஊடுருவ வல்லது. அதுவும் சாதாரண வேகத்தில் அல்ல, ஒளியின் வேகத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல்.

இப்படிப் பரவிய கதிரியக்கமானது ஏதோ சில மணிநேரம் அல்லது ஒரு நாள் இரண்டு நாள் கிடந்து பிறகு மறைந்துபோய் விடுமா? விடாது. மண்ணில் பரவிய கதிரியக்கம் அது முளைக்கும் புல்லில், அந்தப் புல்லைத் தின்னும் மாட்டில், அது கறக்கும் பாலில், அதன் இறைச்சியில், இப்படித் தாவித் தாவி மாறிக்கொண்டே உயிருடன் இருக்கும். சரி. இப்படி உயிராயிருக்கிறதே என்று எரித்துத் தொலைக்க முயன்றாலும் அது காற்றில் கலந்து நம் சுவாசத்தில் கலந்து உள்ளே புகுந்துவிடும். அந்த அளவுக்கு அபாயகரமானது இந்தக் கதிரியக்கம். கதிரியக்கத்தின் இப்படிப்பட்ட அபாயம் பற்றி இன்றுள்ள எந்த விஞ்ஞானமும் மறுக்கவில்லை.

அடுத்து, இப்படியெல்லாம் அபாயம் நிறைந்த ஒரு அணுசக்தி நிலையத்தைக் கட்டி முடிக்க 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள். அதாவது இது அடிக்கல் நாட்டியதிலிருந்து, அணு உலையைக் கட்டி முடித்து அது செயல்படத் துவங்கும் தன்மையை எட்டுவது வரை உள்ள காலப்பகுதியாகும். இப்படி ஓர் அணு உலை செயல்பாட்டு நிலையை அடைவதை Critical Stage என்கிறார்கள். இந்த நிலையை அடைந்தபிறகே ஒரு அணு உலை செயல்படத் துவங்கும். அதாவது எரிபொருளைப் பிளந்து வெப்பத்தை வெளிப்படுத்தும் பணியைத் துவங்கும்.

இப்படிப்பட்ட பணி துவங்கியபின் அது எத்தனை ஆண்டுகள் செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? 25 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டுமே. அதற்கு மேல் இவ்வுலை இயங்க முடியாதாம். வேறு உலைதான் கட்ட வேண்டுமாம்.

சரி. இந்த உலை பயன்படாது என்றால் அதை அப்படியே விட்டுவிட்டு வேறு உலை கட்ட முடியுமா என்றால் அதுவும் முடியாது. பயன்படுத்திய உலை அபரிதமான கதிரியக்கத் திரட்சிக்கு உள்ளானதாயுள்ளதால், அதன் மீது மிக மிக கனமான கான்கீரிட் சமாதி கட்டி அதைப் பாதுகாப்பாக மூடித்தான் அதன் அபாயத்தைத் தணிக்க முடியுமாம். இப்படித் தணிக்காவிட்டால் அது ஏற்படுத்தும் விளைவுகள் அபாயகரமானதாய் இருக்குமாம்.

சரி. இப்படி 15 - 20 ஆண்டு கால சிரமத்தில் உருவாக்கி 25 - 30 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தி மீண்டும் சமாதியாக்கிக் கல்லறை கட்டப்பட வேண்டிய நிலையில் உள்ள இந்த அணு உலை, அது செயல்படும் நாளிலாவது அபாயமின்றி இருக்குமா என்றால் அதுவும் இருக்காது. காரணம், அணு உலை செயல்படும்போது, முறைப்படுத்தி சரியாய் இயங்காவிட்டால் அணு உலை அணுகுண்டாய் மாறும் அபாயம் இருக்கிறது.

அணு உலையிலிருந்து வெப்பத்தைத் தாங்கி வெளிவரும் குழாய் வெப்ப வரம்பைத் தாண்டும் நிலை ஏற் பட்டால் வெடிப்போ கசிவோ ஏற்படும் அபாயம் இருக்கிறது. இக் குழாயைக் குளிரூட்டும் எந்திரம் பழுதடைந்தாலோ, வேறு காரணங்களால் செயல்படாமல் போனாலோ, வெப்பம் மிகையாகி அது ஏற்படுத்தும் அபாயம், ஆக இப்படிப்பட்ட அபாயங்களோடு கூடியதுதான் இந்த அணுசக்தித் தொழில் நுட்பம்.

எல்லாத் தொழில் நுட்பமுமே அபாயமுள்ளதுதான் என்று சிலர் கருதலாம். ஆனால் மற்றத் தொழில்நுட்ப அபாயங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் வேறு. அணுசக்தித் தொழில் நுட்பம் ஏற்படுத்தும் அபாயம் வேறு. மற்ற தொழில் நுட்ப அபாயம் சில மணிநேரம் அல்லது சில நாள் மட்டுமே இருந்து மறைந்து போவது. ஆனால் அணுசக்தித் தொழில்நுட்ப அபாயம் ஆண்டுக் கணக்கில் பல்லாண்டு காலம் நீடிப்பது. மனித குலத்தையே தலைமுறை தலைமுறைக்கும் நசிப்பது, முடமாக்குவது, முற்றாக அழிப்பது, ஊனப்படுத்துவது.

இதில், இப்படிப்பட்ட விபத்துகள் நேர வாய்ப்பில்லை என்றுதான் அணுசக்தித் தொழில்நுட்பம் கூறுகிறதே தவிர அணுசக்தி வல்லுநர்கள் கூறுகிறார்களே தவிர, இப்படிப்பட்ட அபாயங்கள் எதுவுமே கிடையாது என்று எவரும் கூறவில்லை.

இப்படிப்பட்ட அபாயங்களோடு செயல்படும் அணு உலை, அது செயல்படுவதால் வெளிப்படுத்தும் கழிவுப் பொருள்கள் பற்றிய அபாயம் ஒருபுறம். உதாரணமாக, யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் அணு உலை புளூட்டோனியத்தைக் கழிவாகத் தருகிறது. இதுவும் கடுமையான கதிரியக்கத் தன்மை உடையது. எனவே கதிரியக்கத்தால் ஏற்படும் எல்லாவித ஆபத்துகளையும் இதுவும் தோற்றுவிக்கிறது. எனவே இந்தக் கழிவை என்ன செய்வது என்று தெரியாமல் பல நாடுகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன.

இதை உலோகப் பெட்டிகளிலும், பீப்பாய்களிலும் அடைத்து பூமிக்கு அடியில் ஆழக் குழி தோண்டிப் புதைக்கின்றனர். அல்லது இதை ஆழ் கடலுக்குள் தள்ளுகின்றனர். இப்படி இந்தக் கழிவை அப்புறப்படுத்துவதை அல்லது பாதிப்பற்றதாக அதாவது வீரியத்தைச் செயலிழக்கச் செய்வதான முயற்சியை Decommissioning என்கிறார்கள். எனவே அணு உலை என்பது அதன் உருவாக்கத்தோடு கூடவே அதைச் ‘செயலிழக்கச் செய்தல்’ என்பதும் ஒரு பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

ஆக, இதுவரை வளர்ந்துள்ள அணுசக்தித் தொழில் நுட்பம் என்பது,

1. அணு உலைகளில் நிகழும் அணுப் பிளவு காரணமாக ஏற்படும் அபாயகரமான கதிரியக்கத்தை மறுக்கவில்லை.

2. அணு உலை செயல்படும் காலங்களில் அணு உலை உருகுதலோ அல்லது வெப்ப வெளியேற்றக் குழாய்களில் வெடிப்போ கசிவோ ஏற்படும் ஆபத்தை மறுக்கவில்லை.

3. அணு உலைகள் அபாயகரமான கதிரியக்கத் தன்மையுள்ள கழிவுகளை வெளிப்படுத்துகின்றன என்பதையும், இக் கழிவுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மனித குலத்துக்குப் பிரச்சினையாய் இருந்து வரும் என்பதையும் மறுக்கவில்லை.

எனவே, இதரத் தொழில்நுட்பங்களை நோக்க அணுசக்தித் தொழில்நுட்பம் என்பது 1. அதன் கட்டுமானத்தில், 2. அதன் செயல்பாட்டில், 3. அது உண்டாக்கும் அபாயத்தில், இது எல்லாவற்றிலுமே முழுக்க முழுக்க வேறானது, வித்தியாசமானது, அது நம் கட்டுப்பாட்டுக்குள் அடங்காதது. நம்மால் கட்டுப்படுத்த இயலாதது என்பதை நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலேயே நாம் அணுஆற்றலின் அதாவது அணுக்கரு ஆற்றலின் சாதக பாதகங்கள் பற்றி ஆராயவும் வேண்டும்.

- இராசேந்திர சோழன்

Pin It