வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பூவுலகின் நண்பர்கள்

நேர்காணல் - மா.உதயகுமார்

அண்மையில் கூடங்குளம் அணுஉலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் முதலில் மறுக்கப்பட்டு பின்னர் வேறு வழியின்றி நடந்ததாக ஒப்புக்கொண்ட செய்தியின் பின்னணி என்ன?

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த முன்னாள் அலுவலர் இதுபற்றி  தன் டைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதை சசிதரூர் தன் டைய பக்கத்தில் பதிவு செய்தார், பின்னர் அது பரவலாக வெளியானது. இந்த தாக்குதல் நடந்தது செப்டம்பர் 4. இதுகுறித்து தன் மேலதிகாரியிடம் சொல்லி விட்டதாகவும் அந்த முன்னாள் அலுவலர் சொன்னார். பின்னர் இந்திய அணுசக்திக் கழகம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று சொன்னது.

ஆனால் கணினியில் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்ட ஆதாரங்கள் அதன்பின் கண்டறியப்பட்டது. வேறு வழியின்றி அடுத்த நாள் இந்திய அணுசக்திக் கழகம் அதை ஒப்புக் கொண்டது.

koodangulam 600எந்த மாதிரியான சைபர் தாக்குதல்  நடத்தப்பட்டிருக்கிறது?

இந்த தாக்குதல் நிர்வாகப் பணிசெய்யும் கணினியில் மட்டுமே நடந்தது என்றும் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுப்பாட்டுக் கணினியில் எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தனர். அதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தனர். நிர்வாகப் பணிசெய்யும் கணினிக்கும் கட்டுப்பாட்டுக் கணினிக்கும் தொடர்பு இருக்காது என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படியே வைத்துக் கொண்டாலும் இன்று நிர்வாகப் பணிசெய்யும் கணினியில் தாக்குதல் செய்வதுபோல நாளை கட்டுப்பாட்டு கணினியிலும் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அது நிர்வாகப் பணி செய்யும் கணினியாக இருந்தாலும் கூட அதிலும் அணுஉலை தொடர்பான தகவல்கள், மேலாண்மைத் திட்டங்கள், அணுக்கழிவு பற்றிய தகவல்கள் போன்றவை சேமிக்கப்பட்டிருக்கும். அந்த தகவல்கள் திருடப்பட்டாலும் அழிக்கப்பட்டாலும் கூடப் பேரிழப்புதான்.

இதேபோல் ஈரானில் 2010இல் ஒரு விஞ்ஞானியின் பென் ட்ரைவில் வைரஸ் ஏற்றப்பட்டு அந்த அணுஉலை செயலிழக்கச் செய்யப்பட்டது. அதனால் இங்கும் இது போன்ற தாக்குதல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

இந்திய அணுசக்திக் கழகத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

AERB என்னும் ஒழுங்காற்று வாரியம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற சைபர் தாக்குதல் நடத்தப்பட்டால் முதலில் அதற்கு ஒரு கண்காணிப்புக் குழு அமைத்துத்  தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பிறகு தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். ஆனால் இவர்கள் செய்தது என்ன? ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எந்த ஆய்வும் செய்யாமல் உடனே அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று  மறுக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு எதிரானது.

இந்திய அணுசக்திக் கழகம் என்பது இந்திய விடுதலைக்கு முன்பாகவே உருவாக்கப்பட்டுவிட்டது. நேரடியாகப் பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அதனால் இவர்களிடம் எந்த ஒரு பொறுப்புணர்ச்சியும் கிடையாது. இங்கு ஒரு விஷயம் என்னவென்றால் இந்திய அணுசக்திக் கழகத்தில் பணியாற்றுபவர்கள் எல்லாம் மேல் சாதியைச் சார்ந்த மேல்தட்டு வர்க்கத்தினர். அவர்கள் எப்போதும் ஆதிக்க உணர்வோடு தாங்கள் சொல்வது தான் சட்டம் என்று செயல்படுகிறார்கள். தங்களுக்கு மட்டும் தான் அறிவு இருக்கிறது, எளிய மக்களுக்கு அறிவு கிடையாது என்கிற மனநிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள். ஜனநாயகத்திற்கு எதிரான போக்குதான் இந்திய அணுசக்தி  கழகத்திடம் இருக்கிறது.

அணு உலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவிற்கு இருக்கின்றன?

இப்போது இருக்கும் அணு உலைகள்தான் உலகிலேயே பாதுகாப்பானது என்று கூடங்குளம் போராட்டம் நடந்தபோது சொன்னார்கள். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகவே அணு உலையைத் தொடர்ந்து இயக்க முடியவில்லை. இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறால் அவர்கள் இதைத் தொடர்ந்து இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கிறார்கள். அணுக்கழிவுகளைப் பற்றி உச்ச நீதிமன்றம் பதிலளிக்கச் சொல்லியிருந்தது. அணுக் கழிவுகளை மேலாண்மை செய்யக்கூடிய தொழில் நுட்பக் கருவிகள் இல்லை என்பதால் தங்களுக்கு நேரம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார்கள். இந்தக் குறைபாடுகளை ஒப்புக்கொள்கிறார்கள். இப்போது நடந்திருக்கும்  சைபர் தாக்குதல் கூடுதலான ஆபத்துதான்.

அணு உலையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டால் ஏற்படும் பாதிப்பு என்ன?

சைபர் செக்யூரிட்டி என்பது 100% பாதுகாப்பானது அல்ல. யாராலும் தாக்குதல் நடத்த முடியாது என்று உறுதியாய்ச் சொல்ல முடியாது. கண்டிப்பாக சைபர் தாக்குதல் நடக்கத் தான் செய்யும். வங்கியிலோ மற்றும் அலுவலகங்களிலோ சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் அதிகபட்சம் பணம் சில தகவல்கள் திருடப்படலாம் அல்லது அழிக்கப்படலாம் ஆனால் ஒரு அணு உலையில் சைபர் அட்டாக் நடத்தப்பட்டால் அங்கே இருக்கும் இயந்திரங்களைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும். அதன் மூலம் அவற்றைச் செயலிழக்கச் செய்யவும் முடியும் விபத்துகள் ஏற்படச் செய்யவும் முடியும் இதனால் மக்கள் உயிருக்குத்தான் பேராபத்து ஏற்படும்.

அய்ந்து ஆண்டுகளுக்குத் தேவையான யுரேனியம் அங்கு சேமித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இது ஹிரோஷிமா நாகசாகியில் வெடித்த அணுகுண்டை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தது. இதில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் உண்டாகும் பாதிப்புகளைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.

Pin It