மனிதகுலத்தைத் தாக்கப்போகும் அடுத்த கொள்ளைநோய் வௌவால்கள் அல்லது பறவைகளிடம் இருந்து பரவாது. மாறாக உருகும் பனிப்பாறைகளில் இருந்தே ஏற்படும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. ஆர்க்டிக் ஏரிகளில் உள்ள பனிப்பாறைகளில் ஒளிந்திருக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் விழித்துக் கொண்டு மனிதன் மற்றும் வன உயிரினங்களைத் தாக்கும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். ஆர்க்டிக்கில் உள்ள உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான ஹேசனில் (Hazen) இருந்து இதற்காக மண் மற்றும் படிவுகள் எடுக்கப்பட்டு மரபணுரீதியில் பகுக்கப்பட்டு ஆராயப்பட்டது.scientists in articஉறக்கம் கலைந்தால் ஆபத்து

பனிப்பாறைகளில் உறங்கும் இந்நுண்ணுயிரிகள் விழித்துக்கொண்டு உருகும் பாறைகளில் இருந்து கசிந்து புதிய விருந்தோம்பிகளின் உடலில் புகுந்து கொள்ளைநோய்களைப் பரப்பலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். புவி வெப்ப உயர்வால் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரிப்பதால் இதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எடுத்துக்காட்டாக, 2016ல் வட சைபீரியாவில் ஆந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டு ஒரு குழந்தை இறந்தது; ஏழு பேர் பாதிக்கப்பட்டனர்.

அப்போது நிலவிய அதி உயர் வெப்பத்தால் உறைநிலையில் இருந்த பனிப்பாறைகள் உருகி, மில்லியன்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த ஒரு துருவக்கரடியின் உடலில் இருந்து விழித்துக்கொண்ட நுண்ணுயிரியால் இத்தொற்று ஏற்பட்டது. இதே பகுதியில் இதற்கு முன் 1941ல் தோன்றிய கொள்ளைநோய்ப் பரவலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய ஆய்வுகளை ஒட்டாவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்டெபைன் ஆரிஸ் ப்ராசூ (Stephane Aris-Brosou) அவரது ஆய்வுக்குழுவினருடன் மேற்கொண்டார்.

உருகிய பனிப்பாறைகளில் இருந்து வந்த நீர் இப்பகுதியில் அதிகம் காணப்பட்டதால் ஆய்வுகள் இங்கு நடந்தன. சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஆர்.என்.ஏ (RNA) மற்றும் டி.என்.ஏ (DNA) மரபணு வரிசை ஆராயப்பட்டது. இது இப்பகுதியில் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட, தெரிந்த வைரஸ்களின் மரபணு வரிசையுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. இந்த நுண்ணுயிரிகளை விருந்தோம்பிகளாக ஏற்று வாழ்ந்த பூஞ்சை, தாவர விலங்குயிரினங்களின் மரபணுக்களும் ஆராயப்பட்டன.

பனி நீரில் தொற்றுநோய்க் கிருமிகள்

ராயல் சங்கத்தின் (Proceedings of the Royal Society B) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை, புவி வெப்பம் உயர்வதால் பனிப்பாறைகள் உருகியதால் உண்டான நீர் அதிகம் இருக்கும் இடங்களில் இருந்து நோய் பரவும் நுண்ணுயிரிகள் வாழும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று கூறுகிறது. பனிப்பாறைகளில் உறங்கும் வைரஸ்களை அடையாளம் காண ஆய்வுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ராட்சச வைரஸ்

2022ல் ஒஹாயோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் திபெத் பீடபூமி உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பாறைகளில் உறங்கும் 33 வைரஸ்களின் மரபணு வரிசையைக் கண்டுபிடித்தனர். இவற்றில் 28 வைரஸ்கள் 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. 2014ல் பிரான்சின் எய்க்ஸ்-மாஸெ (Aix-Marseille) பல்கலைக்கழக தேசிய ஆய்வக விஞ்ஞானிகள் சைபீரியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட உறை பனிப்பாறையில் இருந்து 30,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நோய் பரப்பும் ஆற்றல் உள்ள ராட்சச வைரஸ் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

இது விழிப்புநிலைக்கு வந்தால் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று ஆய்வுக்குழு தலைவர் ஜீன் மிச்செல் க்ளாவரி (Jean-Michel Claverie) கூறுகிறார். உறங்கும் வைரஸ்கள் எப்போது விழித்துக் கொள்ளும் என்பதைப் பற்றித் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்தால் வாழ்வியல் செயல்முறைகளில் மாற்றமடையும் இன்றுள்ள உயிரினங்கள், புராதன வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு முன் எப்போதையும் விட இப்போது அதிகமுள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆர்க்டிக்கைக் காப்பாற்றவில்லை என்றால்?

நாம் வாழும் பகுதியில் இருக்கும் ஏரி குளங்களின் மண்ணில் காணப்படும் விருந்தோம்பிகள் ஆர்க்டிக்கில் வாழலாம் என்றாலும், அங்கு பனிப்பாறைகளில் உறங்கும் புராதன வைரஸ்கள் ஆபத்தானவை என்று அபரிஸ்ட்வித் (Aberystwyth) பல்கலைக்கழகத்தின் சூழல் நுண் உயிரியல் பிரிவின் இயக்குனர் ஆர்வின் எட்வர்ட்ஸ் (Arwyn Edwards) கூறுகிறார். புவி முழுவதும் வாழும் நுண்ணுயிரிகளின் உலகம் பற்றிய உடனடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஆர்க்டிக் வேகமாகச் சூடாகிக்கொண்டிருக்கிறது. புவியின் காலநிலையில் அது பெரும் தாக்கத்தைச் செலுத்துகிறது. இதனால் அங்கு ஏற்படும் மாற்றங்கள் மனிதகுலத்தைப் பாதிக்கக்கூடியவை. இதனால் இங்குள்ள உறைபனியில் உறங்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மனிதகுலத்தை அழிக்கும் நோய்களைப் பரப்பும் ஆபத்து அதிகமாகி வருகிறது என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.