காச நோய்க்கு  எதிரான போரில் ஆப்பிரிக்காவின் ராட்சத எலிகள் (African giant pouched rat) உதவுகின்றன. போர்க் காலங்களில் நிலத்திற்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கப் பயன்பட்ட இவற்றின் அபார மோப்ப சக்தியின் உதவியுடன் ஆப்பிரிக்கவில் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

rat 500டான்ஜானியாவில் இதன் வெற்றிக்குப் பிறகு மற்ற ஆப்பிரிக்க நாடுகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது. எம்வஜுமா அஃப்துல்லா என்ஜமா (Mwajuma Abdalla Ngema) என்ற பெண்மணி டாரீஸ் சலாம் (Dar es Salaam) நகரில் உள்ள க்ளினிக்கிற்கு தொடர்ச்சியான இருமல் மற்றும் விலா எலும்புகளைச் சுற்றியிருந்த பகுதிகளில் தீவிர வலியுடன் சென்றார். இரண்டு குழந்தைகளின் தாயான அவர் காச நோய்க்காகப் பரிசோதிக்கப்பட்டார். ஆனால் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக இருந்தது.

அவருக்கு இருமலை சமாளிக்க சில மருந்துகள் தரப்பட்டன. ஆனால் வலி சகிக்க முடியாத அளவிற்குத் தொடர்ந்தது. தன் ஆரோக்கியத்தைப் பற்றி தெளிவில்லாத நிலையில் அவர் விரக்தியுடன் வீடு திரும்பினார். சில நாட்களுக்குப் பிறகு அவர் எம்பகாலா கிசூயெனி (Mbagala Kizuiani) என்ற இடத்தில் இருந்த க்ளினிக்கிற்கு அழைக்கப்பட்டு உடனடியாக பரிசோதிக்கப்பட்டார். முடிவு நேர்மறையாக இருந்தது. கடைசியில் நோய் சரியாக கண்டுபிடிக்கப்பட்டது அவருக்கு நிம்மதியை ஏற்படுத்தியது. இப்போது மருந்துகள் எடுத்துக் கொள்ளும் அவர், நோயில் இருந்து குணமடைந்து வருகிறார்.

55 வயதான ராபர்ட் எண்டோட்டோ (Robert Ndoto) என்பவரின் கதையும் இது போன்றதே. ஹெச் ஐ வியுடன் வாழும் அவர் காச நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டார். ஆரம்பப் பரிசோதனை முடிவு அவருக்கும் எதிர்மறை என்றே வந்தது. சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு காச நோய் இருப்பதாகக் கூறப்பட்டது. பாக்டீரியல் தொற்றான காச நோயை குணப்படுத்த மருந்துகள் எடுக்கத் தொடங்கினார்.

இதற்கான சிகிச்சை காசநோய் மற்றும் ஹெச் ஐ வி-ஐ கட்டுப்படுத்த உள்ளூரில் செயல்படும் எம்க்யூட்டா (Mkuta] என்ற சுகாதார நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. “சால்மா மாட்டமிக்கா (Salma Matamika) என்ற தன்னார்வலரை சந்தித்தபோது நான் மிக மோசமான நிலையில் இருந்தேன். சிகிச்சை செய்யப்படாமல் போனால் ஹெச் ஐ வியுடன் காச நோயும் வாழும் நான் உயிரிழப்பது உறுதி. எனக்கும் சிகிச்சைக்கும் இடையில் அவர் ஒரு தொடர்பாக செயல்பட்டார்” என்று ராபர்ட் எண்டோட்டோ கூறுகிறார்.

சிறப்பு பயிற்சி பெற்ற ராட்சத எலிகள் நோயாளியின் நுரையீரல் அல்லது சுவாசப் பாதையில் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகளைப் பயன்படுத்தி இந்த இருவரின் நோயையும் கண்டுபிடித்தன. இப்பரிசோதனை முறை அப்போப்போ (Apopo) என்ற அறக்கட்டளையால் டன்ஜானியா மற்றும் எத்தியோப்பியாவில் இப்போது நடைமுறையில் உள்ளது. உலகில் அதிக காச நோய் பாதிக்கப்பட்ட 30 நாடுகளின் பட்டியலில் இந்த இரு நாடுகளும் உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஆரம்ப கட்டத்தில் 52% நோய் இல்லை என்று கூறப்பட்ட முடிவுகள் எலிகளின் ஆய்வில் நேர்மறை என்று தெரியவந்தது. மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் குறித்த தீர்ப்பு எப்போதும் எலிகளால் உறுதி செய்யப்பட்டது. நிலைப்படுத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளுடன் ஒப்பிடும்போது எலிகள் சொல்லும் முடிவுகள் 82% சரியானதாக இருந்தன. சிகிச்சை செய்ய்யப்படாத ஒரு மனிதன் 10 முதல் 15 பேருக்கு தொற்றை ஏற்படுத்துகிறான். இது தவிர்க்கப்பட்டால் 24,000 பேருக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கப்படும். ஒழுங்காக பரிசோதிக்கப்படாமல் போவதால் தொற்று அதிக அளவில் பரவுகிறது.

நிலத்தில் மறைத்து வைக்கப்படும் கண்ணி வெடிகளை அபார மோப்ப சக்தியின் உதவியுடன் எலிகள் கண்டுபிடிக்கும் திறனைப் பயன்படுத்துவதற்காக அப்போப்போ என்ற அறக்கட்டளை 1995ல் பெல்ஜியத்தை தலைமையகமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. 2007ல் டன்ஜானியாவில் காச நோயைக் கட்டுப்படுத்துவதில் எலிகளின் மோப்ப சக்தியை உலகில் முதல்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. இந்நிறுவனம் இப்போது டன்ஜானியாவில் 82 க்ளினிக்குகளை நடத்தி வருகிறது.

டாரீஸ் சலாமில் உள்ள கால்நடை ஆய்வக முகமையில் ஒரு டஜன் எலிகள் வாரத்திற்கு சுமார் 400 மாதிரிகளை பரிசோதிக்கின்றன. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இந்த அமைப்பு 900,000 மாதிரிகளை பரிசோதித்துள்ளது. காச நோய் பாதிக்கப்பட்ட 30,000க்கும் கூடுதலான நோயாளிகளைக் கண்டுபிடித்துள்ளது. இதனால் 300,000 தொற்றுகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

மோரொகோரோ (Morogoro) என்ற இடத்தில் சளி மாதிரிகளை மோப்பம் பிடித்து நோயைக் கண்டறிய எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வழக்கமான சிகிச்சைகளால் ஒவ்வொருவரும் 24,000 பேருக்கு புதிதாக நோய்த் தொற்றை ஏற்படுத்துகிறார். ஆனால் ஒழுங்கான சிகிச்சை வழங்கப்பட்டால் இலட்சக்கணக்கான தொற்றுகள் தவிர்க்கப்படும். “இந்த மாதிரிகள் வெறும் மாதிரிகள் இல்லை. உயிர்காக்கும் திறன் பெற்றவை” என்று அப்போப்போ ஆய்வுக்கூட மேலாளர் டாக்டர் ஜோசப் சோக்கா (Dr Joseph Soka) கூறுகிறார்.

நோயை ஏற்படுத்தும் மைக்கோ பாக்டீரியம் டியூபர் க்ளோசிஸ் (Mycobacterium tuberculosis (MTB)) என்ற கிருமியை கண்டுபிடிக்க எலிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. எலிகளில் உள்ள நன்கு வளர்ச்சியடைந்த வாசனை ஏற்பிகள் என்றும் அழைக்கப்படும் ஆல்பேக்டரி செல்கள் (olfactory receptor cells) நியூரான்களின் செல் சவ்வுகளில் வெளிப்படும் வாசனை உணர்வைத் தூண்டும் நாற்றங்களை அறியும் திறன் பெற்றவை.

இவற்றின் உதவியுடன் எலிகள் நோய்க் கிருமிக்கு காரணமான, எளிதில் ஆவியாகும் அங்ககக் கூட்டுப்பொருட்களை, அவை குறைந்த அளவில் இருந்தாலும் கண்டுபிடிக்கின்றன. ஆய்வுக்கூடத்தில் ஒரு எலி ஒவ்வொன்றும் ஒரு மாதிரியுடன் உள்ள பத்து துளைகளுடன் கூடிய ஒரு கண்ணாடித் தொட்டியில் விடப்படுகிறது. காச நோய் இருக்கும் மாதிரியைக் கண்டுபிடித்தால் எலிக்கு உணவு பரிசாக கொடுக்கப்படுகிறது.

நோய்த் தொற்று இல்லாத மாதிரியிடம் இருந்து எலிகள் வட்டமடித்து நோய் இருக்கும் பகுதிக்குச் செல்கின்றன. ஒரு எலிக்கு நோய் இருக்கும் மாதிரியைக் கண்டுபிடிக்க 3 விநாடிகளும், இல்லாத மாதிரியைக் கண்டுபிடிக்க 2 விநாடிகளும் ஆகிறது. ஆய்வுக் கூட தொழில்நுட்பக் கலைஞர் ஒரு நேர்மறை முடிவை உறுதி செய்வதற்கு முன்பு ஐந்து எலிகளிடம் இந்த பரிசோதனை மீண்டும் நடத்தப்படுகிறது. எலிகள் ஒரு நிமிடத்திற்குள் பல மாதிரிகளை ஆராய்கிறது.

இதனால் நோய்த் தொற்றைக் கண்டுபிடிக்கும் செயல்முறையில் எலிகளால் நேரம் மிச்சமாகிறது. ஒரு க்ளினிக்கல் சோதனைக்கு ஆகும் செலவை விட இம்முறையில் செலவு மிகக் குறைவு. ஒரு பரிசோதனைக்கு ஒரு எலிக்கு ஆகும் செலவு 2,600 ஷெல்லிங்/90 பென்னிகள். ஆனால் வழக்கமான நுண்ணோக்கி முறைக்கு 4,700 ஷெல்லிங் மற்றும் மூலக்கூறு பரிசோதனைக்கு 42,000 ஷெல்லிங் செலவாகிறது.

அப்போப்போ அமைப்பு இந்த ஆய்வுகளுக்காக உலகின் மிகப் பெரிய கொறிக்கும் பிராணிகளில் ஒன்றான, பையுடன் உள்ள ஆப்பிரிக்க ராட்சத எலிகளை பயன்படுத்துகிறது. வாலுடன் சேர்த்து இதன் நீளம் 90 செண்டி மீட்டர். இவை மேற்கு டாரீஸ் சலாமில் இருந்து 120 மைல்/200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோரோகோரோ என்ற இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

“நான்கு வயது முதல் இங்கு எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு பாக்டீரியாத் தொற்றை கண்டறிய ஒரு எலிக்கு 9 முதல் 12 மாதம் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. அது நோய் கண்டறியும் குழுவில் இணையும் முன்பு காச நோய்க் கண்டறிதலுக்காக நடத்தப்படும் தேர்வில் நூறு மதிப்பெண் பெற வேண்டும். பயிற்சி தொடங்குவதற்கு முன்பு எலியை கையாளும் நபருடன் சுமூகமாகப் பழக பயிற்சி பெறுகிறது.

ஆரம்பத்தில் மக்களிடையில் எலிகளை பயன்படுத்துவதில் நம்பிக்கை தொடர்பான பிரச்சனைகள் இருந்தன. முதலில் நான் ஒரு அச்சுறுத்தல் இல்லை என்று எலி என்னை நம்ப வேண்டும். பிறகு அது என்னைக் கடிக்காது என்று நான் நம்ப வேண்டும். பாதுகாக்கப்பட்ட நிலையில் இந்த எலிகள் 8 ஆண்டுகள் உயிர் வாழும். சில எலிகள் அதையும் தாண்டி நீண்ட நாட்கள் வாழக் கூடியவை.

ஏழு வயதாகும்போது இவற்றுக்கு ஓய்வளிக்கப்படுகிறது. மோரொகோரோ மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு அவை உண்கின்றன, தூங்குகின்றன, மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன” என்று பயிற்சியாளர் பிடலிஸ் ஜான் (Fidelis John) கூறுகிறார்.

குழந்தைகளிடம் உள்ள காச நோய்க் கிருமியைக் கண்டறிய இந்த எலிகள் உயர்ந்த மோப்பத் திறனுடன் செயல்படுகின்றன என்று சமீபத்திய அப்போப்போ ஆய்வு கூறுகிறது. குறைந்த அளவு பாக்டீரியா தொற்று உள்ள குழந்தைகளிடம் ஏற்படும் காச நோயை அறிவது கடினம். எலிகளின் மோப்ப சக்தியை பயன்படுத்தி மட்டுமே இதை துல்லியமாகக் கண்டறிய முடிகிறது. அதனால் இந்த நோய் அதிகம் உள்ள டன்ஜானியா போன்ற நாடுகளில் குழந்தை மருத்துவத்தில் இத்தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தலாம்.

சில எலிகளின் பரிசோதனையில் நோயாளிகளுக்கு நோய் இருப்பதாக தெரியவந்தது. ஆனால் சில நாட்களில் க்ளினிக்கல் சோதனை முடிவுகள் அவர்களுக்குத் தொற்று இல்லை என்று கூறியது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு நோய் இருப்பது தெரிந்தது. இது எலிகள் குறைந்த அளவு கிருமிகள் இருந்தாலும் தொற்றைத் துல்லியமாகக் கண்டுபிடிப்பதை எடுத்துக் காட்டுகிறது. அதனால் க்ளினிக்கல் சோதனைக்கு முன்பு எலிகளைக் கொண்டு நோயைக் கண்டறிதல் பற்றி அப்போப்போ ஆராய்ந்து வருகிறது. வழக்கமான சோதனைக்குப் பிறகு எலிகளைப் பயன்படுத்தி மீண்டும் ஒரு முறை பரிசோதிக்கலாம் என்று அப்போப்போ கூறுகிறது.

“எலிகள் மோப்பம் பிடித்து நோயை அறிவதில் வியப்பு இல்லை” என்று மாவட்ட காச நோய் மற்றும் தொழுநோய் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சல்ட்டன் லூசம்பை (Dr Sultan Lusambi ) கூறுகிறார். “தன்னார்வலர்கள் மக்களிடையில் சிகிச்சை இல்லாமல் காச நோயுடன் வாழ்வதால் ஏற்படும் ஆபத்து பற்றி பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதே இத்திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். நான் வாழும் பகுதியில் ஒருவர் நோய்க்கான அறிகுறிகளுடன் இருந்தார். பரிசோதிக்க அழைத்துச் சென்றபோது அவருக்கு நோய் இருப்பது தெரிய வந்தது. தொடர் நடவடிக்கைகள் மூலம் அவருடைய குடும்பத்தில் மற்றவர்களுக்கும் காச நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த குடும்பம் நோயால் மரணம் அடைந்திருந்தால் மந்திரவாதம், தீய சக்திகள் மூலமே அவர்கள் உயிரிழந்தார்கள் என்று சமூகம் சொல்லியிருக்கும். சிகிச்சையின்போது அந்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. நோய் குணமானது” என்று தொடக்கத்தில் காச நோயால் பாதிக்கப்பட்டு பிறகு குணமடைந்து இப்போது எம்க்யூட்டா (Mkuta )மையத்தில் தன்னார்வலராக உள்ள அல்பேர்ட்டினா கிஸாஞ்சோ (Albertina Kisonjo) கூறுகிறார்.

அப்போப்போவின் முயற்சிகளால் அந்நாட்டில் நோய்த் தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு டாரீஸ் சலாமில் உள்ள ஆய்வகம் 2,000 நோயாளிகளைக் கண்டுபிடித்தது. இது நடக்காமல் போயிருந்தால் 24,000 புதிய நோயாளிகள் உருவாகியிருப்பர். “புதிய மாதிரியுடன் ஒரு இரு சக்கர வாகனம் வரும் ஓசையைக் கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏனென்றால் அது வெறும் மாதிரி மட்டும் இல்லை. அதில் ஒரு மனிதரின் விலை மதிக்க முடியாத உயிர் இருக்கிறது. வழக்கமான பரிசோதனை முறைகளின் பகுப்பாய்வு முழுமையாக இல்லாவிட்டால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும்” என்று டாக்டர் ஜோசப் சோக்கோ கூறுகிறார்.

இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஆழ்ந்த பொருளுடன் படைக்கப்பட்டுள்ளது. நாம் மட்டமாக நினைக்கும் எலிகள் ஆப்பிரிக்காவில் ஆயிரமாயிரம் காச நோயாளிகளின் மதிப்பு மிக்க உயிரைக் காப்பாற்ற உதவுகிறது!

சிதம்பரம் இரவிச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.