உடலிற்குள் செல்லும் நுழைவாயில் வாய். உடலின் பல உறுப்புகளின் ஆரோக்கியம் வாய் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது. வாயின் நோய்க்கிருமிகள் பலதும் இரத்தத்தின் வழியாக இதயத்திற்குச் செல்லும் தமனிகளில் நுழைந்து ஒன்றுசேர்ந்து அவற்றின் செயல்திறனைக் குறைக்கிறது. இது இதய நோய்க்குரிய முக்கிய காரணம். பல் சொத்தையை ஸ்ட்ரெப்டோ காக்கஸ் மியூட்டன்ஸ் பாக்டீரியா உண்டாக்குகிறது. இதனால் இதய இரத்தக் குழாய்களில் தீங்கு செய்யும் கிருமிகள் ஒன்றுதிரண்டு அங்குத் தடுப்பை ஏற்படுத்துகின்றன. இது சிறிதுசிறிதாக இதயநோய்களை ஏற்படுத்துகிறது. பற்களைக் கெடுத்து அதன் தூய்மையை நாசப்படுத்தும் பாக்டீரியாக்களும் இந்த விதத்தில் இரத்தத்தின் வழியாக மற்ற உடற்பகுதிகளுக்குச் செல்கின்றன. சர்க்கரைநோயுள்ளவர்களுக்கு வாய் நாற்றம் சாதாரணமானது. இரத்தத்தில் உள்ள உயர்ந்த சர்க்கரையின் அளவு பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் பற்களில் சொத்தை ஏற்படுத்துகிறது. வாய் ஆரோக்கியம் சர்க்கரைநோயைத் தடுக்க உதவும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது.
தினம் இரண்டுவேளை சரியானமுறையில் பல் தேய்ப்பது, பல்நுண் தூரிகையை (dental floss) பயன்படுத்துவது வாய், பற்களில் ஏற்படும் நோய்களைத் தடுக்க உதவும். பற்கள் மற்றும் ஈற்றிற்கு இடையிலிருக்கும் இடத்தில் அழுகக்கூடிய பொருட்கள் இருந்தால் சாதாரண தூரிகையால் அதை அகற்ற முடியாது. கெட்டியான அழுக்குகள், மாசுப்பொருட்கள் கால்குலஸ் அல்லது டார்டார் எனப்படுகிறது. பல் வரிசையில் இருந்து ஈறுகள் கீழிறங்கிச் செல்ல வழிவகுக்கிறது. இது நாளடைவில் பற்களின் உறுதித்தன்மையைப் பாதிக்கிறது. கடைசியில் பற்கள் ஆடும். எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதுவே வயதானவர்களில் பற்கள் எடுக்க முக்கியக் காரணம். பலவித நுண்ணுயிர்க்கொல்லிகளும், வாய் துலக்கிகளும் (mouth washes) இத்தகைய நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
ஆண்டிற்கு ஒரு முறை ஒரு பல் மருத்துவரிடம் சென்று சுத்தம் செய்ய வேண்டும். அல்ட்ராசானிக் கருவிகளைப் பயன்படுத்தி கெட்டியாக ஆன அழுக்குகளை இளகச்செய்து பல் சுத்தப்படுத்தப்படும்போது அகற்றப்படுகிறது. ஸ்கேலிங் செய்யும்போது சிறிது புளிப்பும், சற்று வலி தருவதாகவும் இருக்கும். என்றாலும் இந்தப் பிரச்சனைகள் தற்காலிகமானவையே. சுத்தம் செய்வதால் பற்களின் எனாமலுக்குப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. பல தரங்களில் வாய் துலக்கும் கருவிகள் இன்று உள்ளன. எதைப் பயன்படுத்துவது என்பதை ஒரு தகுந்த பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பயன்படுத்த வேண்டும். பற்களின் எண்ணிக்கை குறைவது இதயநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. வாய்க்குள் இருக்கும் பற்களின் எண்ணிக்கை குறையும்போது எளிதாக நாக்கை மட்டுமே பயன்படுத்தி சாப்பிடக்கூடிய கேக், பிஸ்கட் போன்ற வகை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறோம். நார்ச்சத்து அதிகமுள்ள பச்சைக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதைக் குறைக்கிறோம். இது இதயநோய் அதிகரிக்கக் காரணம். இந்த உணவு மாற்றத்தினால் உடலிற்குள் செல்கிற கொழுப்பு மற்றும் கார்போஹைடிரேட்டுகளின் அளவு அதிகமாகிறது. இது இதயநோய்களை ஏற்படுத்துகிறது.
உடல் நலத்தைக் பாதுகாக்கப் பயன்படும் நார்ச்சத்துகள் அடங்கிய உணவுவகைகளை நன்றாக மென்று கடித்துத் தின்பதற்குப் பற்கள் அவசியம். அவற்றின் எண்ணிக்கை குறைவதற்கேற்ப உணவைச் சரியானவிதத்தில் மென்று தின்பதற்குரிய திறனும் குறைந்துவிடுகிறது. சரியான பல் பாதுகாப்புமுறைகள் பற்களை நீண்டநாள் நமக்குப் பயன்படுமாறு செய்கிறது. கர்ப்பிணிகள் பல் ஆரோக்கியத்தைக் கட்டாயமாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். கர்ப்பமுற்றிருக்கும்போது பெண்களிடம் ஏற்படும் ஈறு மற்றும் பற்கோளாறுகள் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கிறது. இது எடை குறைவான குழந்தை பிறக்கக் காரணமாகிறது. கருவுற்றிருக்கும் தொடக்கத்தில் ஒரு பல் மருத்துவரைப் பார்த்துப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். வாயைச் சுத்தம் செய்வதும் அவசியம். கர்ப்பிணிகளில் ஹார்மோன் சுரப்பு மாற்றங்கள் அவர்களின் வாய் நலத்தையும் பாதிக்கிறது. வாயில் உண்டாகும் பிரக்னென்சி எப்பிலிஸ் என்ற நோயே இதில் முக்கியமானது. இது பல சமயங்களிலும் ஈறில் வலியை ஏற்படுத்துவதுடன் அங்கிருந்து இரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. பிரசவத்துக்குப் பிறகு இந்தக் குறைபாடு தானாகவே சரியாகி விடுகிறது. சரியானநேரத்தில் ஒரு பல் மருத்துவரைப் பார்த்துப் பற்களைச் சுத்தம் செய்வதன் மூலம் இந்த நோய் வராமல் தடுக்க முடியும். கர்ப்பமுற்றிருக்கும்போது எக்ஸரே எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். சில மருந்துகளையும் இவர்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
நுண் துலக்கிகளைப் பயன்படுத்துவது வாய் நலம் காக்க உதவும். இரண்டு பற்களுக்கு இடையில் இருக்கும் பகுதியில் படிந்துள்ள அழுக்குகளை நீக்க இது உதவும். நாம் பயன்படுத்தும் பல் தூரிகைகள் பற்களுக்கு இடையே புகுந்திருக்கும் நுண்ணிய பொருட்களை நீக்கப் போதுமான திறனுடையது இல்லை. நுண்ணிய இழைபோல இருக்கும் இந்த நுண் துலக்கும் கருவிகளுக்குச் சிறிய இடைவெளிகளுக்குள்ளும் புகுந்து அங்கிருக்கும் அழுக்குகளை நீக்க முடியும். இரண்டு கைகளிலும் ஒவ்வொருவிரலிலும் இந்தக் கருவியைச் சுற்றிக் கொண்ட பிறகு இரண்டு பற்களுக்கு இடையில் இதை இறக்கிவிட்டு மேலும் கீழும் அசைத்து நகர்த்திப் பற்களுக்கு இடையில் உள்ள சிறிய பகுதிகளை நம்மால் சுத்தம் செய்ய முடியும். காலை இரவில் இதைப் பயன்படுத்துவது பல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
இன்று சந்தையில் பல ரகங்களில் பல்துலக்கும் தூரிகைகள் விற்பனைக்கு மென்மையானது, நடுத்தரமானது, கடின தன்மையுடையது (soft, medium, hard) என்ற மூன்றுவிதமாக இவை உள்ளன. சாதாரணமாக இவற்றில் நடுத்தரமான தூரிகையைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால் பற்களில் தேய்மானம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மென்மையான தூரிகையைப் பயன்படுத்தலாம். தூரிகையின் தலைப்பகுதி அதாவது வாய்க்குள் செல்லும் பாகம் பல அளவுகளிலும் உள்ளது. சிறிய வாய் உள்ளவர்கள் பெரிய தலையுள்ள தூரிகையை வாங்கி உபயோகித்தால், அது வாய்க்குள்ளே எல்லாப் பாகங்களிலும் சென்று சுத்தம் செய்வதற்குக் கடினமாக இருக்கும். இதனால் சரியான முறையில் பல் துலக்கமுடியாது. தூரிகையைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் தலைஅடிப்பகுதி பற்கள் மற்றும் வாயுடைய எல்லாப் பகுதிகளையும் எளிதாகச் சென்று அடைகிறதா என்று பரிசோதித்துப் பார்த்தபிறகே வாங்கவேண்டும். மூன்று நான்கு தூரிகைகளை வாங்கிப் பயன்படுத்திய பிறகே ஒவ்வொருவரும் பொருத்தமான தூரிகையைத் தேர்ந்தெடுக்க முடியும். தூரிகையின் கைப்பிடி அழகழகான வடிவங்கள், அளவுகளில் வருகிறது. இவை கவர்ச்சிகரமான நிறங்களிலும் இருக்கின்றன. ஆனால் இதுபோன்ற வெளிப்புற பகட்டுகளில் கவனம் செலுத்தாமல் ஒவ்வொருவரும் அவரவர்களுடைய கைப்பிடியில் வசதியாக அடங்கும் தூரிகையைத் தேர்ந்தெடுப்பதுதான் நல்லது.
ஆர்த்தரைட்டிஸ் போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்கள் கைப்பிடியில் இருந்து நழுவி விழாத பிடியுள்ள தூரிகையை வாங்க வேண்டும். தீவிர மறதி நோய் மற்றும் நரம்பியல் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் அடுத்தவரின் உதவி இல்லாமல் பல் துலக்க மின்சாரப் பல் துலக்கும் தூரிகைகள் (electric tooth brushes) இன்று கிடைக்கின்றன. இவற்றில் பலவற்றில் நேரம் உணர்த்தும் சாதனமும் (timer), உணரி கருவியும் (sensor) பொருத்தப்பட்டுள்ளன. பல் துலக்க ஆரம்பித்து இரண்டு மூன்று நிமிடங்களான பின் அந்த விவரத்தை நேரம் உணர்த்தும் சாதனம் தெரிவிக்கிறது. அதுபோலத் தேவைக்கதிகமாகத் தண்ணீரைப் பயன்படுத்தினால் உணரி அதைத் தெரிவிக்கிறது. அப்போது தூரிகை நகர்வுகள் (movement) நிறுத்தப்படுகிறது. ஒரு தூரிகையை எத்தனை காலத்துக்கு உபயோகிக்கலாம் என்பது ஒவ்வொருவரிலும் வேறுபட்டது. சாதாரணமாக மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு தூரிகையை மாற்றி விடுவது மிக நல்லது.
வாய்ப் புற்றுநோய் பற்றிப் பேசாமல் வாய் சுத்தம் பற்றிப் பேசுவது பொருளற்றது. இது இந்தியாவில் ஆண்களிடம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெண்களில் இது மூன்றாவது இடத்தில் உள்ளது. வாயில் புற்று ஏற்பட முக்கியக் காரணம் வெற்றிலை பாக்கு, மது அருந்துவது, புகை பிடித்தல் போன்றவை. புகையிலையுடன் சேர்ந்து வெற்றிலையையும் சேர்த்துப் போடும் பாக்கும் இந்தப் பட்டியலில் ஒன்றாக உள்ளது. பாக்கு போடுவதால் வாயில் உருவாகும் ஒரு நோய்தான் சப் மியூகஸ் ஃபைப்ரோசிஸ். இது சில நாட்கள் கழித்துப் புற்றுநோயாக மாறலாம். இன்று பல சுவைகளில் உள்ள பான் மசாலாக்கள் கிடைக்கின்றன. இது பல நேரங்களிலும் கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. இதில் இருக்கும் பாக்கு, சுண்ணாம்பு போன்றவை புகையிலையுடன் சேர்ந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வாய்ப் புற்று வராமல் தடுக்க வெற்றிலை, மது, புகை பிடிப்பதைக் கைவிட வேண்டும். இதை நிறுத்த முடியாதவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புற்றுநோயின் ஆரம்பத்தைக் கண்டுபிடிக்க, அதை உடனடியாகச் சிகிச்சை அளித்துச் சரிப்படுத்த மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும்.
வாய் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது. தினம்தோறும் சரியாக இரண்டுவேளை பல் துலக்குதல், நுண் துலக்கிகளைப் பயன்படுத்துதல் மூலம் வாய் நலத்தைப் பாதுகாக்கலாம். ஆண்டிற்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்