மாறாமல் நிலையாக இருக்கும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் புதிய மாத்திரையின் கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனை என்று நிபுணர்கள் வர்ணிக்கின்றனர். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது கடினமாக உள்ளவர்களிடம் பாக்ஸ்ராஸ்டாட் (Baxdrostat) என்ற இந்த புதிய மாத்திரை பரிசோதனைகளின்போது பரவசமூட்டும் முடிவுகளைத் தந்துள்ளது. இப்போது பயன்பாட்டில் இருக்கும் மாத்திரைகளுக்குக் கட்டுப்படாத உயர் இரத்த அழுத்தத்தை இந்த புதிய மாத்திரை கட்டுப்படுத்துகிறது. இது அறிவியலிற்குக் கிடைத்த வெற்றி என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உலகளவில் 1.3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதி பேரின் உயர் இரத்த அழுத்தம் நடைமுறை சிகிச்சை முறைகளால் குறைக்க முடியாத அளவில் உள்ளது. இதனால் இவர்கள் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய்கள் மற்றும் மரண ஆபத்தை அதிகமாக எதிர்கொள்கின்றனர்.
பல மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் ஆபத்தான அளவில் இருப்பவர்களின் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இந்த புதிய மாத்திரை உதவுகிறது என்று சோதனை முடிவுகள் கூறுகின்றன. உலகளவில், 214 க்ளினிக்குகளில் இருந்து 796 நோயாளிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
இந்த புதிய மாத்திரையை எடுத்துக்கொண்ட 12 வாரங்களுக்குப் பிறகு அவர்களின் இரத்த அழுத்தம் 9-10 மில்லி மீட்டர் மெர்க்குரி எம் எம் ஹெச்ஜி (mmHg (millimetres of mercury) என்ற அளவில் குறைந்தது. மில்லி மீட்டர் மெர்க்குரி என்பது இரத்த அழுத்தத்தை அளவிடப் பயன்படும் அலகு. மருந்தற்ற குளிகைகளை விட இந்த மாத்திரை இதயக் கோளாறுகளைக் குறைக்கிறது என்று கண்டறியப்பட்டது.
புதிய மாத்திரையை தினம் ஒரு முறை 1 மில்லிகிராம் என்ற அளவில் எடுத்துக் கொண்டவர்களில் பத்தில் நான்கு பேரின் இரத்த அழுத்தம் 39.4% என்ற அளவிலும் 2 மில்லிகிராம் அளவு மாத்திரை பயன்படுத்தியவர்களின் இரத்த அழுத்தம் 40% என்ற அளவிலும் குறைந்து ஆரோக்கியமான இரத்த அழுத்த நிலையை அடைந்தது. மருந்தற்ற குளிகையை பயன்படுத்திய பத்தில் இருவரில் சிலருக்கு இரத்த அழுத்தம் 18.7% என்ற அளவில் குறைந்தது.
இந்த கண்டுபிடிப்பு ஐரோப்பிய இதய நல சங்க காங்கிரஸின் (European Society of Cardiology congress) மாட்ரிட் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதய நலம் குறித்து உலகில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப் பெரிய மாநாடு இது. ஆஸ்ட்ரசெனகர் (AstraZeneca) நிறுவனத்தின் பங்களிப்புடன் நடைபெற்ற ஆய்விற்கான பரிசோதனைகள் பற்றிய கட்டுரை நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் (New England Journal of Medicine) வெளியிடப்பட்டுள்ளது.
“ஒரு மருந்து இரத்த அழுத்தத்தை இந்த அளவிற்கு குறைப்பதை முன்பு ஒருபோதும் நான் கண்டதில்லை. இதயம் சுருங்கும்போது ஏற்படும் இரத்த அழுத்தம் (systolic blood pressure) சுமார் 10 மில்லிகிராம் மெர்க்குரி என்ற அளவை அடைவது பரவசமூட்டுவதாக உள்ளது. மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் சிறுநீரக நோய்களை கணிசமான அளவில் இந்த மாத்திரை குறைக்கிறது. கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மிகக் கடினமாக உள்ள இரத்த அழுத்தத்தைக் குறைக்க இது உதவும்” என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (UCL) மருத்துவப் பிரிவின் தலைவரும் ஆய்வின் முதன்மை விஞ்ஞானியுமான பேராசிரியர் ப்ரயன் வில்லியம்ஸ் (Prof Bryan Williams) கூறுகிறார்.
இந்த கண்டுபிடிப்பு உலகளவில் அரை மில்லியன் பேருக்கு உதவும் என்று கருதப்படுகிறது. பல பத்தாண்டு ஆய்வுகளுக்குப் பிறகு இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது.
ஆல்டாஸ்டெரோன் (aldosterone) என்ற ஹார்மோன் இரத்த அழுத்தத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இது சிறுநீரகத்தில் உப்பு மற்றும் நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிலரின் உடலில் இந்த ஹார்மோன் அளவிற்கதிகமாக சுரக்கிறது. இதனால் இவர்களின் உடலில் உப்பும் நீரும் அதிக அளவில் சேர்கிறது. இந்த ஒழுங்கற்ற தன்மை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்துவதை கடினமாக்குகிறது.
இந்த ஹார்மோனின் ஒழுஞ்கற்ற தன்மையை சமாளிப்பதே இதுவரை பல ஆண்டு ஆய்வுகளின் முக்கிய இலக்காக இருந்தது. இந்த ஹார்மோன் சுரப்பதை பாக்ஸ்ராஸ்டாட் தடை செய்கிறது. இந்த ஹார்மோன் பொதுவாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இப்போது இந்த புதிய மாத்திரை ஹார்மோன் சுரப்பதை சரியான வழியில் தடுக்கிறது. வரலாற்று ரீதியாக மேற்கித்திய நாடுகளில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.
ஆனால் உணவு முறை மாற்றத்தால் கிழக்கு மற்றும் குறைவான வருமானம் உள்ள நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை மேற்கித்திய நாடுகளை விட மிக அதிகமாக உள்ளது. இவர்களில் 226 மில்லியன் பேர் சீனாவிலும் 199 மில்லியன் பேர் இந்தியாவிலும் வாழ்கின்றனர். “உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் இந்த மாத்திரை ஒரு மதிப்புமிக்க கூடுதல் சிகிச்சைமுறையாக இருக்கும். இந்த ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்த பல ஆண்டுகளாக பல மருந்துகள் முயற்சி செய்யப்பட்டன. ஆனால் பலனில்லை. அவை நோயாளிகளிடம் தீய பக்கவிளைவுகளை ஏற்படுத்தின. புதிய மாத்திரை நேரடியாக வேலை செய்கிறது. வித்தியாசமாக செயல்படுகிறது. இப்பரிசோதனைகள் உலகில் பல நாடுகளில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இந்த கண்டுபிடிப்பு பலதரப்பட்ட நோயாளிகளுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இதய நோயியலாளரும் இதய நல மருத்துவப் பிரிவின் பேராசிரியருமான பால் லீஸன் (Prof Paul Leeson) கூறுகிறார்.
ஆண்டிற்கு இரு முறை வழங்கப்படும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் புதிய ஊசி மருந்து இதயம் நலம் பெற உதவுகிறது என்று மாட்ரிட் மாநாட்டில் இம்மாநாட்டில் வெளியிடப்பட்ட மற்றுமொரு புதிய கண்டுபிடிப்பு.
மற்ற சிகிச்சைகளை விட விரைவாக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நோவரட்டிஸ் (Novartis) என்ற நிறுவனம் தயாரித்த லெக்வியோ (Leqvio) என்ற இந்த புதிய மருந்து உதவுகிறது. இந்த மருந்து இன்கிளிசிரன் (Inclisiran) என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த கொடுக்கப்படும் ஸ்டாட்டின்களால் (statins)உண்டாகும் திசுக்களில் ஏற்படும் அதிக வலி இதன் மூலம் குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் புதிய மாத்திரை மருத்துவ உலகில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்