பொருளாதார வளர்ச்சி:
சங்ககாலத்திற்குப் பிறகு இராசராசன் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்ச் சமூகம் ஒரு வளர்ச்சி பெற்ற சமூகமாக இருந்தது எனலாம். இவனது காலத்தில் ‘ஆயக்கட்டு’ என்ற கிராம அவை உருவாக்கப்பட்டு அதன் மூலம் 5000 ஏரிகளுக்கு மேல் வெட்டப்பட்டன. அவற்றில் பல மிகப்பெரிய ஏரிகள். இவனது காலத்தில் நாட்டிலுள்ள நிலங்கள் அனைத்தும் துல்லியமாக அளக்கப்பட்டு, நிலத்தின் விளைச்சலுக்கு ஏற்ப வரிவிதிக்கப்பட்டது. இவனது காலத்தில் வேளாண்மை மேம்பாட்டுக்காக சாகாமூவா கால்நடைத்திட்டமும், விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச வட்டியிலான கடனுதவித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. இவனது ஆட்சியில் வரிவிகிதம் நிலையானதாக இருந்தது. இவனது ஆட்சிக்கு முன் மேய்ச்சல் நிலமாக இருந்த தஞ்சைப்பகுதி, இவனது முயற்சியின் பின் விளைவாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஆகியது. இவனது ஆட்சியில் வளநாடுகள் என்பன இடைப்பட்ட நிர்வாகப் பகுதியாக உருவாகின. சோழ மண்டலத்தில் பல சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அங்கு தொழில் செய்வோருக்கு வரி விலக்கும் ஊக்கமும் கொடுத்து இவன் தொழிலை வளர்த்ததை கல்வெட்டுகள் கூறுகின்றன. இவை போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் அவனது காலத்தில் இருந்து, அடுத்த 150 ஆண்டுகளுக்கு சோழ மண்டலத்தில் பஞ்சம் என்பதே இருக்கவில்லை (84-94).
நிர்வாக முறையிலும், இராணுவத்திலும், கடற்படையிலும் நாணய உற்பத்தியிலும் பல புதிய முறைகளை, பல புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்திய காலமாக இக்காலம் இருந்தது. பிற்காலச் சோழர் ஆட்சிக்கால தங்க நாணயங்கள் 10,000க்கு மேலும், வெள்ளி நாணயங்கள் ஒரு இலட்சத்துக்கு மேலும் செம்பு நாணயங்கள் அளவற்றும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் கிடைக்கும் நாணயங்களில் 70% நாணயங்கள் பிற்காலச் சோழர் கால நாணயங்கள், அதில் 99% நாணயங்கள் இராசராசன் என்ற ஒரே அரசனின் பெயரில் வெளியிடப்பட்டவை. அனைத்து உலோகங்களிலும் நாணயங்களை வெளியிட்ட முதல் தமிழ் அரசன் இவன். இவனது தங்கமுலாம் பூசப்பட்ட நாணயங்கள் 1000 ஆண்டுகள் கழித்தும் எந்தவித பாதிப்பும் இல்லாமலிருக்கின்றன. இவனது கால முலாம் பூசும் தொழில்நுட்பம் என்பது 15ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தின் தொழில்நுட்பத்தை விட வளர்ச்சி பெற்றதாக இருந்துள்ளது. நவீன நீர்ப்பாசனம், கப்பல் கட்டுதல், நெசவு, நெல்வகைகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு துறைகளில் உலக அளவில் குறிப்பிடத்தக்க சாதனைகளை இராசராசன் செய்துள்ளான் (94-102).
கோவில்களில் தமிழ்:
தமிழ்நாட்டில் தேவாரம் பாடிய மூவரும் மறைந்த ஒரு நூற்றாண்டுக்குள் மொத்த தேவாரமும் காணமல் போனது. தமிழ் ஓலைச்சுவடிகளை வைத்திருப்பது பீடை என்று சொல்லப்பட்டு அவை ஆடிப்பெருக்கில் ஆற்றில் விடப்பட்டன. இராசராசன் ஓரிரு சைவத் திருமுறைப் பாடல்களைக் கேட்டதால் அதன் பாட்டில் மயங்கி அவை குறித்து விசாரித்து தில்லை தீட்சிதர்கள் அவைகளை மறைத்து வைத்திருக்கும் உண்மையை அறிகிறான். அதன்பின் தனது அதிகாரத்தையும் அறிவையும் கொண்டு அதனை மீட்டு நம்பியாண்டவர் நம்பி என்பவரைக் கொண்டு அவற்றைத் தொகுக்கிறான். அதன் பெரும்பகுதி அழிந்துபோய் ஒரு சிறு பகுதியே மீட்கப்பட்டது. பின் அனைத்துக் கோவில்களிலும் ஓதுவார்கள் எனப்படும் பிடாரர்களை நியமித்து தேவாரம் பாட வைத்தான். தஞ்சை பெரிய கோவிலில் இதற்காக 50 பிடாரர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்குமுன்வரை 6 நூற்றாண்டுகளுக்கும் மேலாக சமற்கிருதம் தான் இருந்து வந்தது. ஆகவே மரபு காரணமாக சமற்கிருதம் பாட மூவர் மட்டும் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தமிழ் பிடாரர்களைவிட குறைந்த சம்பளமே தரப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலின் தலைமை பூசாரியாக பவனபிடாரன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஒரு தமிழ் பிடாரர், தமிழர். தஞ்சை பெரிய கோவிலில் தமிழில்தான் அர்ச்சனை செய்யப்பட்டது. தமிழில்தான் குடமுழுக்கு செய்யப்பட்டது (103-113).
தஞ்சையில் இராசராசன் வெட்டிய 64 கல்வெட்டுகளில் முதல் கல்வெட்டில் மட்டும் இரு வரிகள் சமற்கிருதத்தில் மரபு காரணமாக வெட்டப்பட்டன. மீதியுள்ள இராசராசனின் 63 கல்வெட்டுகளில் இருந்த 2000க்கு மேற்பட்ட வரிகள் தமிழில்தான் வெட்டப்பட்டன. அதுபோன்றே பெரும்பாலான நாணயங்களில் தமிழ் எழுத்து தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பேரரசிள் வேறமொழிப்பகுதிகளும் இருந்ததால் நாகரி, கிரந்த எழுத்துகளும் சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டன. தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 1.5 இலட்சம் தமிழ் எழுத்துகள் உள்ளன. உலகிலேயே அதிகத் தமிழ் கல்வெட்டுகள் உள்ள இடம் இதுதான். (113-121, 185).
பெண்களின் நிலை:
இராசராசன் ஆட்சிக் காலத்தில் பெண்கள் உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களை அதிகாரிச்சி எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. .பெண் அரசிகள் அரசாணைகளை வெளியிட்டுள்ளனர். பெண்களுக்கு அன்று சொத்துடமை இருந்தது. கி.பி. 985-1070 வரையான ஆண்டுகளில் கும்பகோணத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற சொத்துப் பரிமாற்றங்களில் 48% பெண்களால் செய்யப்பட்டவை என இவை குறித்து ஆய்வு செய்த இலெசிலி.சி.ஓர் (Leslie.C.Orr) என்ற பெண் ஆய்வாளர் தெரிவிக்கிறார். அதுபோன்றே கோவில்களுக்குத் தானம் வழங்கியவர்களில் 11% பேர் பார்ப்பனப் பெண்கள். அன்று அரசிகள் முதல் சாதாரணப் பெண்கள் வரை அனைத்து வகைப் பெண்களும் சொத்து வைத்திருந்தனர். அவற்றை வாங்கினர்; விற்றனர் (122, 123).
சோழர்காலத் தேவரடியார்கள் ஆடற்பெண்டிர்கள். பிற்காலத் தேவதாசிகளுக்கு மாறுபட்டவர்கள். அவர்கள் ஒருபோதும் பாலியலுக்கான நபர்களாகப் பார்க்கப்படவில்லை. அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சொத்து வைத்திருந்தனர். மதிப்போடும் கண்ணியத்தோடும் நடத்தப்பட்டனர். சிலர் அரசிகளுக்கு இணையாக வாழ்ந்தனர். இந்தத் தளிச்சேரிப் பெண்கள் எழுத்தறிவு பெற்றவர்கள். கல்வியில் சிறந்தவர்கள். இலெசிலி.சி.ஓர் என்ற ஆய்வாளர் சோழர்காலக் கோவில் பெண்கள் என்ற தலைப்பில் செய்த ஆய்வில் அவர்கள் பாலியல் நபர்களாக இருக்கவில்லை என்கிறார். அவர்கள் இறைத் தொண்டர்களாகவே இருந்தனர். சோழர் காலத்துக்குப் பின்பு தான் கோவில் பெண்கள் தேவதாசிகளாக ஆகினர் (176-184).
பார்ப்பனர்களின் நிலை:
பல்லவர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு இருந்த பல சலுகைகள், இராசராசன் காலத்தில் நீக்கப்பட்டன. போர்களில் பார்ப்பனர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். காந்தளூர்ச்சாலையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான நம்பூதிரி பார்ப்பனர்கள் கொல்லப்பட்டனர். அதுபோன்றே சாளுக்கிய மன்னனுடன் நடந்த போரில் மனுதர்மத்திற்கு எதிராக இராசராசன் பார்ப்பனர்களைக் கொன்றார் என கர்நாடகாவில் கோட்டுரில் இருந்த ஒரு கல்வெட்டு குற்றம் சாட்டுகிறது. இராசராசன் ஆட்சியில் கோயில் சொத்தைக் களவாடிய பார்ப்பனர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. குற்றங்களுக்கு, மற்றவர்களுக்கு வழங்கிய அதே தண்டனைகள் தான் அவர்களுக்கும் வழங்கப்பட்டன. சலுகைகள் எதுவும் தரப்படவில்லை. ஆதித்த கரிகாலனின் கொலையில் தொடர்புடைய பார்ப்பனர்களின் சொத்துக்களும், அவர்களின் பலநூறு உறவினர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அனைவரும் உடுத்திய துணியோடு நாடுகடத்தப்பட்டனர்.
.சோழர்காலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களின் நிலம், சொத்து, வீடு, உரிமை ஆகியன பறிக்கப்பட்டன என சோழர்காலக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. பார்ப்பனர் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு பார்ப்பனர்கள் தண்டனை பெற்ற காலம் பிற்காலச் சோழர்காலம் எனலாம். இராசராசன் காலத்தில் இது உச்சத்தில் இருந்தது. இராசராசன் பார்ப்பனர்கள் மேல் வெறுப்பு கொண்டிருக்கவில்லை. ஆனால் அனைவருக்கும் சமநீதியை வழங்கினான். யாராலும் தண்டிக்கப்பட மாட்டோம் என்ற எண்ணத்தில் அதிகக் குற்றங்களைச் செய்து வந்ததால் அவர்கள் அதிக அளவில் தண்டிக்கப்பட்டனர். தனது கல்வெட்டுகள் பட்டயங்களில் பார்ப்பனர்களின் புராணக் கற்பனைகளைக் கைவிட்ட முத;ல் பேரரசன் இராசராசன். அவன் தனது உண்மையான வெற்றிகள், பட்டங்கள் ஆகியவற்றை வரிசைப்படி பொறிக்கும் ‘மெய்க்கீர்த்தி’ என்ற புதிய முறையைக் கொண்டு வந்தவன் (122-132).
சோழர்காலப் பிரம்மதேயங்கள்:
முனைவர் மே.து. இராசுகுமார் தனது ‘சோழர்கால நிலவுடமைப்பின்புலத்தில் கோயில் பொருளியல்’ என்ற நூலில், ‘சோழர்காலக் கல்வெட்டுகளில் கிடைத்த 1300 ஊர்ப்பெயர்களை வைத்துப்பார்க்கும்பொழுது, 250 ஊர்களே பார்ப்பன ஊர்களாக உள்ளன. இது 19.25% மட்டுமே’ என்கிறார். ஆகவே பார்ப்பன ஊர்கள் போக மீதி உள்ள 80% ஊர்கள் வேளாண் ஊர்கள். இந்த 20% பார்ப்பன ஊர்களில் கோவிலுக்கான தான நிலங்களும் சேர்ந்துள்ளன. அந்தத் தான நிலங்கள் பலதரப்பு மக்களுக்கும் சொந்தமானவை. சான்றாக தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு, அங்கு பணியாற்றும் 258 பேருக்கு கோவில் நிலங்கள் வழங்கப்பட்டன எனக் கூறுகிறது. அவர்கள் அனைவரும் பார்ப்பனர் அல்லாதவர்கள். ஒவ்வொருவருக்கும் பணிக்கேற்ப 1.5 முதல் 2 காணி வரை நிலங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலங்களை பராமரிக்கும் பொறுப்பு 118 ஊர்களைச்சேர்ந்த வேளாண் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
காணிக்கொடை என்பது நிலங்களை வழங்குவது அல்ல. அது நில வருவாயை மட்டுமே வழங்குவதாகும். சோழர்காலத்தில் நிலக்கொடை வழங்கப்பட்ட போது அந்த நிலத்தில் இருப்பவர்கள் அகற்றப்படுவதில்லை. அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை கோயிலுக்கு அல்லது தானம் பெற்றவர்களுக்கு வழங்க வேண்டும். குடிநீக்கி வழங்கும் நிலங்களில் இருந்துதான் குடிகள் நீக்கப்படுவர். இது விவசாயம் அல்லாத கட்டுமானப் பணிகளுக்காக வழங்கப்பட்டவை. இவை மிக அரிதாகவே வழங்கப்படும். சோழர்காலத்தில் 20% ஊர்கள் பார்ப்பன ஊர்கள் எனில் அதில் 5% நிலங்களின் வருமானம் மட்டுமே பார்ப்பனர்களுக்குச் சென்றிருக்கும். மீதி கோயிலுக்கும் கோயில் பணியாளர்களுக்கும் கிடைத்திருக்கும்.
சோழர் காலத்தில் பிரம்மதேயங்கள் என்பன குடியேற்ற மேம்பாட்டுத் திட்டங்களாகவே இருந்தன. தரிசு நிலங்களும் காடுகளும்தான் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. அந்நிலம் செழிப்பாக மாறிய பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். பிரம்மதேய நிலங்களுக்கு முதல் 8 ஆண்டு முழு வரிவிலக்கு உண்டு. 9ஆம் ஆண்டில் பாதி வரி. 10ஆம் ஆண்டிலிருந்து முழு வரிகட்ட வேண்டும் என இராசேந்திரன் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. களப்பிரர், பல்லவர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்கள் என்பன முழு உரிமை கொண்டதாக அவர்களுக்கு வழங்கப்பட்டன. அந்நிலத்தில் அரசு அதிகாரிகள் நுழைய அதிகாரம் இல்லை. அது அவர்களது சொந்த நிலமாக ஆகிப்போனது.
ஆனால் களப்பிரர் பல்லவர் காலத்தில் பிரம்மதேயங்களுக்கு வழங்கப்பட்ட நில உரிமையைச் சோழர்கள் நீக்கினர். மே.து. இராசுகுமார், ‘பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட பிரம்மதேய நிலத்தை அரசு அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருவாயைத் தணிக்கை செய்தனர். முறையாகக் கணக்கு ஒப்படைக்காத பார்ப்பனர் நிலங்களுக்கு தண்டத்தொகை வசூலிக்கப்பட்டன என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன’ எனக் கூறுகிறார். ஆனால் அதிகாரிகளுக்கும் படைத் தலைவர்களுக்கும் தரப்பட்ட நிலங்கள் மேற்பார்வை செய்யப்படவில்லை. இது சோழர்கள் பார்ப்பனர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது. சோழர்களுக்குப் பின் வந்த விசயநகர நாயக்கர் ஆட்சியில் மீண்டும் அவர்களுக்கு நில உரிமை முழுமையாக வழங்கப்பட்டது என்பதை கல்வெட்டுகள் கூறுகின்றன. பல புதிய வளமான ஊர்களும் பிரம்மதேயங்களாக முழு நில உரிமையோடு வரிநீக்கி அவர்களுக்கு வழங்கப்பட்டன.
சுந்தர சோழர் பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயங்களை வழங்கியுள்ளார். இராசேந்திரன் சில கட்டுப்பாடுகளுடன் பார்ப்பனர்களுக்கு நிலதானங்களை வழங்கியுள்ளான். ஆனால் இராசராச சோழன் ஒரு துண்டு நிலத்தைக் கூட பிரம்மதேயமாக பார்ப்பனர்களுக்கு வழங்கவில்லை. சோழர் கால வரலாற்று ஆவணங்களின் படி அப்போதிருந்த பிரம்ம தேயங்களின் எண்ணிக்கை 250. இதில் பல பல்லவர் காலத்தவை. சில பிற சோழ அரசர்களால் தரப்பட்டவை. இராசராசனால் எதுவும் தரப்படவில்லை என்பதே கல்வெட்டுகளும் பட்டயங்களும் தரும் செய்தி. அதுபோன்றே இராசராசன் காலத்தில் மிக முக்கிய பதவிகளில் செல்வாக்கோடு இருந்த பத்து அதிகாரிகளில் ஒரே ஒருவர் தான் பார்ப்பனர் மற்றவர்கள் அனைவரும் பார்ப்பனர் அல்லாதவர்கள் என தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் தனது பிற்காலச்சோழர் சரித்திரம் என்ற நூலில் கூறியுள்ளார். ஆகவே வரலாற்று ஆதாரங்களின்படி தமிழக அரசர்களில், பார்ப்பனர்களின் செல்வாக்கை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தியவன் இராசராசன் (133-149).
சோழர்கால ஊர்ச்சபை ஒன்று சில காரணங்களால் கோயில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை எதிர்த்துப் பார்ப்பனர் ஒருவர் தீக்குளிப்பு செய்தார் என்பதை வெ.சீவகுமார் என்ற மார்க்சிய எழுத்தாளர் பதிவு செய்துள்ளார். அதுபோலவே சோழர் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கு நில உரிமை வழங்கப்படவில்லை, வருவாய் பங்கு மட்டுமே அளிக்கப்பட்டது. மேலும் பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்ட பிரம்மதேய நிலங்களிலிருந்து கரையோலை முறை மூலம் அவர்கள் அடிக்கடி வெளியேற்றப்பட்டனர். பல்லவர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு என அளிக்கப்பட்ட சலுகைகள் சோழர் காலத்தில் பறிக்கப்பட்டன. இவைபோன்ற உண்மைகளை மார்க்சியவாதியான மே.து. இராசுகுமார் தனது நூலில் ஆய்வுத்தரவுகளோடு பதிவு செய்துள்ளார். ஆனால் இவை போன்றவற்றை மறைத்து, போதிய தரவுகளோ, ஆய்வுகளோ இன்றி பொதுவுடமைவாதியான தா. வானமாமலை, சோழர்கள் குறித்துப் பல தவறான கருத்துகளைக் கூறியுள்ளார். அவரது தவறான கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொண்டு சோழர்கள் குறித்தத் தவறான கருத்துகளைப் பலர் தொடர்ந்து கூறி வருகின்றனர் (215-221).
இராசராசன் காலத்தில் சாதிகள்: இராசராசனுடைய தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளில் இரு ஊர்களில் தீண்டாச்சேரி இருந்ததாக வருகிறது. அதே ஊரில் பறைச்சேரியும் இருந்ததாக வருகிறது. ஆகவே தீண்டாச்சேரியில் வாழ்ந்தவர்கள் பறையர்கள் அல்ல. இந்த தீண்டாச்சேரி என்பது தொடாதவர்கள் சேரி எனப் பொருள்படும். அது தொற்று நோய்களுக்கான மருத்துவப்பகுதி. அதில் உள்ளவர்கள் பிறரைத் தீண்டினால் நோய் பரவலாம் என்பதால் அவர்கள் தீண்டாச்சேரியில் தனியாக வாழ்ந்தனர். வண்ணார், நாவிதர் ஆகிய இரு பிரிவு மக்களும்தான் அன்று மருத்துவர்களாக இருந்தனர். சிரங்கு அம்மை, தொழுநோய் போன்ற தொற்று நோயிக்கான மருத்துவர்கள் தனியாகவும், பிற தொற்றா நோய்களுக்கான மருத்துவர்கள் தனியாகவும் இருந்தனர். அதனால் தான் வண்ணார் சாதிப் பட்டியலில் தீண்டுவார், தீண்டார் ஆகிய இரு பிரிவுகள் இன்றும் உள்ளன. ஆகவே தீண்டாச்சேரி என்பது தொற்றுநோய் மருத்துவத்துக்கான சேரி ஆகும். ‘தஞ்சை நகரின் மாபெரும் தெருக்களில் ஒன்றான சூரசிகாமணிப் பெருந்தெருவில் ‘வள்ளுவர்கள், குயவர்கள், வண்ணத்தார், ஈரங்கொல்லிகள், நாவிதர்கள்’ போன்றோர் வாழ்ந்தார்கள் என ‘தஞ்சாவூர்’ என்ற நூலில் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறுகிறார். பார்ப்பனர்களுக்கான செயங்கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்தில் வசித்த ஊர்ப்பறையன் ஒருவன் கோவிலுக்கு பால் எருமையை தானமாக வழங்கியதாக மூன்றாம் இராசராச சோழன் காலக்கல்வெட்டு ஒன்று கூறுகிறது. கி.பி. 1225இல் வசித்த சீனப் புவியியலாளர் சௌ சு குவா (Chau-Ju-Kua) தஞ்சை நகர அமைப்பு குறித்து விரிவாகக் கூறியுள்ளார். அதில் சாதிக்கான எந்தக் கூறும் சொல்லப்படவில்லை. மேலும் தஞ்சை நகரின் முக்கியப் பெருந்தெருவில் வசித்தவர்கள் இன்றைய கண்ணோட்டத்தில் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள். அதுபோன்றே பார்ப்பனர்களின் சதுர்வேதி மங்கலத்தில் பறையன் ஒருவன் வசித்துள்ளார். ஆகவே சோழர்காலத்தில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் என்ற நிலைதான் இருந்து வந்துள்ளது. ஆகவே அன்று சாதிவேறுபாடு இருக்கவில்லை.
கி.பி. 1293ஆம் ஆண்டு கல்வெட்டின்படி வெள்ளாட்டி பூசகரான பறையர் ஆளுடை நாச்சி என்பவர் சோழமாதேவி நல்லூர் குலசேகரசுவாமி கோவில் மண்டபத்துக்கு திருநிலைக்காலும் படியிரண்டும் செய்து தந்துள்ளார். இந்தப் பறையர் பூசகர், அதாவது பூசை செய்பவர். அதுபோன்றே பாண்டிய நாட்டில் உள்ள ஒரு கல்வெட்டு பொய்யாத்தமிழ்நம்பி என்ற பெயர் கொண்ட பறையர் ஒருவர் பூசாரியாக இருந்ததைக் குறிப்பிடுகிறது. இவைபோக அரசாங்க அதிகாரிகளாக, அரசனின் பாதுகாவலர்களாக பறையர் மக்கள் இருந்ததற்கான நிறையச்சான்றுகள் உள்ளன. மணிக்கிரீவன் என்ற பெயரிலுள்ள சிலைகள் இன்றும் ‘காவல்பறையன்’ என அழைக்கப்படுகின்றன. ஆகவே சோழர் பாண்டியர் காலத்தில் பறையர்கள் காவலர்களாக, விவசாயிகளாக, மீன் பிடிப்பவர்களாக எனப் பல தொழில்களைச் செய்பவர்களாக இருந்துள்ளனர்.
சடாவர்மன் சுந்தரபாண்டியனின் 4ஆம் ஆண்டுக்காலக் கல்வெட்டில் படிப்பறிவு இல்லாத சிவபிராமணர்கள் கையெழுத்திடாமல் தற்குறி இட்டுள்ளனர். அதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர், கானாட்டுப்பறையன், என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 4ஆம் ஆட்சியாண்டில் விரையாச்சிலை என்ற ஊரில் நடந்த நீர்நிலை விற்பனைப் பத்திரம் ஒன்றில் பெரியநாட்டுப்பறையன், கானாட்டுப்பறையன், ஐநூற்றுப்பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப்பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இவை போன்ற கல்வெட்டுகளை ஆய்வு செய்த அறிஞர் ஆர்.திருமலை, பெரும்பாலான மறவர்களும், குறுநில மன்னர்களும், மன்னர்களின் வழித்தோன்றல்களும், பார்ப்பனர்களும் கல்வியறிவு இல்லாதிருந்த நிலையில் பறையர்களும், கைவினைஞர்களும் (கல்வியறிவு பெற்றவர்களாக) கையெழுத்திட்டுள்ளனர் என 2005 ஆம் ஆண்டு புதுவிசை என்ற இதழுக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். தென் இந்தியக் குடிகளும் குலங்களும் என்ற நூலில் கிளைட்டன் என்பவர் பார்ப்பனப்பெண் ஒருவர் பறையரின் கோவிலுக்குச் சென்று தன் பிள்ளையை குணப்படுத்த வேண்டியதாகவும், அங்கு பறையர் மந்திரங்கள் சொல்லியதாகவும் குறிப்பிடுகிறார். திருத்துறைப்பூண்டி வடகாடு கோவிலூரிலுள்ள மந்திரபுரீசுவரர் ஆலயத்துக்கு பள்ளர், பறையர், வண்ணார் ஆகியோர் நிலக்கொடை அளித்த செய்தியை அக்கோவிலின் 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. ஆகவே கீழ்ச்சாதிகள் எனப்பட்ட இவர்கள் கோவிலுக்கு நிலத்தைத் தானமாக அளிக்கும் அளவு அவர்களது பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்துள்ளது என்பதை இக்கல்வெட்டு கூறுகிறது (194-210).
இச்செய்திகள் பிற்காலச் சோழர் பாண்டியர் காலத்தில் இன்றைய காலப் படிநிலைச் சாதிகள், அன்று இருக்கவில்லை என்பதை உறுதி செய்கின்றன.
சான்று நூல்: இராஜராஜ சோழன், இரா. மன்னர் மன்னன், பயிற்று பதிப்பகம், 2021 பக்: 80-248.
- கணியன் பாலன்