கட்டாய நன்கொடை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் சன்டிவியிலும் கலைஞர் டிவியிலும் மாறி மாறி பேட்டியளித்துக் கொண்டிருப்பதை காணலாம். பள்ளிக் கல்விக்கு விடிய விடிய வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான ரூபாயும் உயர்கல்விக்கு பல லட்சக்கணக்கான ரூபாயும் வட்டிக்கு வாங்கி, கொடுத்த பணத்திற்கு ரசீதுகூட இல்லாமல் கொட்டி அழுதுவிட்டு பிள்ளைகளை சேர்த்துவிட்டு வந்த பெற்றோர்கள் இந்த பேட்டியைப் பார்க்கும்போது அவர்கள் மனதில் எழும் ஆத்திர வார்த்தைகளை அச்சில் ஏற்றமுடியாது.
தனியார் கல்வி நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி ஊழல் மற்றும் முறைகேடு நடைபெறுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய அரசு இயந்திரம், பிள்ளைகள் படித்தால் போதும் என்று நினைக்கின்ற அப்பாவி பெற்றோர்கள் புகார் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. பெரும்பாலான சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது தான். இவர்கள் இலவசக் கல்விக்காகவும், சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்காகவும், தனியார் பள்ளி, கல்லூரிகளை கட்டுப்படுத்துவதுபற்றியும், அங்கு நடைபெறும் ஊழல்களைப் பற்றியும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எப்படி குரலெழுப்புவார்கள்?
அரசு, டாஸ்மாக் வியாபார வளர்ச்சியில் காட்டும் அக்கறையை கல்வி வளர்ச்சியில் காட்டுவதில்லை. 1990க்குப் பிறகு தமிழகத்தில் ஒரு அரசு பள்ளியோ ஒரு அரசு கல்லூரியோ புதிதாக உருவாக்கப்படவில்லை. ஆனால், தனியார் கல்லூரிகளும் பள்ளிகளும் ஊருக்கு ஊர், தெருவிற்கு தெரு முளைத்த வண்ணம் உள்ளன. விதிகளை மீறி கட்டப்பட்டு, 96 பிஞ்சுக் குழந்தைகள் தீக்கிரையான கும்பகோணம் பள்ளி இப்படி முளைத்ததுதான். குற்றவாளி யாரென்றும் காரணம் என்னவென்றும் உலகத்திற்கே தெரிந்தபிறகும் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இன்னும் காரணம் புரியாமல், குற்றவாளி தண்டிக்கப்படாமல் வழக்கு நடந்துகொண்டே இருக்கின்றது. இன்னும் எவ்வளவு காலத்திற்குதான் நடத்துவார்கள் என்று பார்ப்போம்.
இந்தியாவில் உள்ள 124 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 29 நிகர்நிலைப் பல்கலைக் கழகம் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் 60 அரசு கல்லூரிகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால்,120க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் உள்ளன. இவர்கள் எல்லாம் தங்களது சொந்தப்பணத்தைக் செலவுசெய்து பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டி, இந்தச் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் எப்படியாவது கல்வி அறிவு ஊட்டி அழகு பார்க்கவேண்டும் என்ற ஆசையிலா செய்கின்றனர்? கல்வி நிறுவனங்கள் நடத்து வதை விட குப்பை பொறுக்கும் வியாபாரம் அதிக லாபம் கொடுக்கும் சூழ்நிலை வந்தால் நாளையே வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு குப்பை பொறுக்கத் தயாராகிவிடுகின்ற குப்பைப் பொறுக்கிகள்தான் இந்த தனியார்கள். இப்படிப்பட்ட கல்விச் சாலைகளில் மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களது உரிமைக்காக போராடினால் அரசும், காவல்துறையும்,நிர்வாகமும், நீதித்துறையும், தனியார் முதலைகளுக்கு அரணாக நின்று செயல்படும்.
திமுக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியிலும், வெங்கடாசலத்திற்கு சொந்தமான ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியிலும் சீட்டுகளை 20 லட்சம் 40 லட்சம் என கூவிக்கூவி விற்றதை தொலைக்காட்சியில் ஆதாரத்தோடு காட்டி விளக்கியபிறகும் அந்த இரு கல்லூரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன விளக்கம்தான் கேட்கிறார்கள் என்பது நமக்குப் புரியவில்லை. மனித உரிமை மீறல், மாணவர்கள் உயிரிழப்பு என சுயநிதி கல்லூரிகளின் கோரமுகம் சமீப காலத்தில் தென்படத் துவங்கியுள்ளன.
அனைத்தையும் தின்று தீர்த்துவிட்ட உலகமயம் கல்வியில் தனது கோரப்பற்களை பதியவைத்த 19 ஆண்டுகளில் அரசு கல்வி மீதான தனது கட்டுப்பாட்டை தளர்த்தி விட்டது. அரசுப் பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, தரமான கல்வியை கொடுக்கவேண்டிய அரசு அதைச் செய்யாமல் அரசுக் கல்லூரி என்றாலே அது எதற்கும் உதவாத கல்லூரி என்ற மாயையை பெற்றோருக்கு ஏற்படுத்தி, பயமுறுத்தி வைத்துள்ளது. பள்ளிக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை குறைத்து மதிப்பிட வைத்துள்ளது. போதுமான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்காமல், அரசே முன்நின்று பெற்றோருக்கு அதிருப்தியை செயற்கையாக ஏற்படுத்தி, அவர்களை தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நோக்கி ஓடவைத்து, தனியார் முதலாளிகளின் லாபத்தை அதிகப்படுத்த முழு உதவி புரிகிறது.
மற்ற உலக நாடுகளிலெல்லாம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதமளவிற்கு கல்விக்கென நிதி ஒதுக்குகிறது. நம்மைவிட பின்தங்கிய நாடுகளில் கூட நம்மைவிட கூடுதலான அளவிற்கு கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குகிறது. ஆனால், இந்தியாவில் வெறும் இரண்டு சதத்திற்கும் குறைவாக கல்விக்கென நிதி ஒதுக்குகிறது. ற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில் படிக்கின்ற அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்ற எந்தவித உத்தரவாதமுமில்லாமல் பல லட்சங்களை அள்ளிக் கொடுத்து படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதியாவது மத்திய மாநில அரசுகள் கல்வி குறித்து தனது கொள்கை நிலைபாடுகளை மாற்றிக்கொள்ளட்டும்.
ஆரம்பப்பள்ளியில் சேரும் மாணவ மாணவியர்களில் வெறும் 6 சதம் பேர்தான் உயர்கல்வியை பெறுகின்றனர். பொறியியற் கல்லூரிகளில் பயின்று வெளிவரும் மாணவர் களில் வெறும் 7 சதத்தினருக்கே படித்ததற்கேற்ற தகுதியான வேலை கிடைக்கிறது. ஆண்டுதோறும் அரசு, தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் ஆரம்ப கல்விக்கூட கிடைக்காமல் கொத்தடிமைகளாக வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களும், பீச்சில் சுண்டல் விற்கும் சிறுவனும், தெருக்கோடியில் வயிற்றுக்காக கயிற்றிலேறி வித்தைக்காட்டும் சிறுவனும் நம் கண்ணை விட்டு அகல மறுக்கிறார்கள்!
- இரா.சரவணன்(
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கல்வி வியாபாரிகள் குப்பையும் பொறுக்குவார்கள்...
- விவரங்கள்
- இரா.சரவணன்
- பிரிவு: கட்டுரைகள்