lenin 450உலகெங்கும் பல தலைவர்களுக்கு சிலைகளும், பல சம்பவங்கள் நடந்ததற்கு அடையாளமாய் நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளன. ஆக சிலைகளும் நினைவிடங்களும் நினைவை போற்றுவதற்கும், நினைவுபடுத்திக் கொள்வதற்கும், அடுத்த தலைமுறைக்கு அதை சொல்வதற்கும் ஏற்படுத்தப்படுவதே. இதே போன்று புரட்சியாளர்களுக்கும் சிலைகள் வைக்கப்பட் டுள்ளன. அவை வழிபடுவதற்காக வைக்கப்பட்டது அல்ல. அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவதற்காக வைக்கப்படுவதாகும்.

கி.பி. 5ஆம் நூற்றாண்டில் குஷாணர்கள் மற்றும் ஹூணர்களால் மத்திய ஆப்கானிஸ்தானின் ஹசாரஜாத் பகுதியில் உள்ள பாமியான் பள்ளத்தாக்கில் உலகிலேயே உயரமான நிற்கும் இரு புத்தர் சிலையை அவர்கள் அமைத்திருந்தார்கள். முதல் சிலை 55 மீட்டர் உயரமும் இரண்டாம் சிலை 37 மீட்டரும் கொண்டதாகும். கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிகழும் வரை இப்பகுதி ஒரு புத்த சமயத் தலமாக விளங்கியது. இப்பகுதி முழுவதும் மலைச் சரிவுகளில் குடையப்பட்ட குகைகளில் புத்த துறவிகள் வாழ்ந்து வந்தனர்.

கிபி 11 நூற்றாண்டில் கஜினி முகமது மேற்கு இந்தியாவை படையெடுத்து கொள்ளையடித்தான். ஆனால் இந்த சிலையை அவன் கண்டு கொள்ளவில்லை ஆனால் நாதிர்ஷா பீரங்கிகளால் தாக்கியதால் சிலை சேதமடைந்தது. அதன்பிறகு நீண்ட நாட்களுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. மீண்டும் 2001இல் இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு எதிராக புத்தர் சிலை இருப்பதாகக் கூறி தாலீபான்களின் தலைவர் முல்லா முகம்மது ஓமார் இச்சிலையை உடைக்க உத்தர விட்டார்.

மார்ச் மாதம் அச்சிலை தாலீபான்களால் தகர்க்கப்பட்டது. புத்தமதம் இந்தியா முழுவதும் கோலோச்சியிருந்த போது அதிக அளவில் புத்த மடாலயங்கள் கட்டப்பட்டிருந்தன புத்தர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. பவுத்தம் வீழ்ச்சியடையத் தொடங்கிய பிறகு புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டன. புத்தப் பிக்குகள் கொல்லப்பட்டனர்.

காரணம் படையெடுத்து வந்தவர்கள் அவர்கள் மதம் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் கலாச்சாரத்தையே எல்லோரும் பின்பற்ற வேண்டும். அவர்கள் மொழியையே எல்லோரும் பேச வேண்டும் என்று நினைத்தார்கள்.

அப்பொழுது தான் அவர்கள் ஆட்சி செய்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அதற்கு தடையாக அதுவரை இருந்த மதம், மொழி, கலாச்சாரத்தை அழிப்பதில் கவனம் செலுத்தினர். உலகெங்கும் அப்படித்தான் நடந்திருக்கின்றன.

மற்றொரு முக்கிய உதாரணமும் சொல்ல வேண்டியிருக்கிறது. கிபி 16ம் நூற்றாண்டில் பாபரால் கட்டப்பட்ட மசூதியை கரசேவகர்கள் என்று தங்களைக் சொல்லிக் கொள்கிறவர்கள் அதற்கு முன்னால் அங்கு ராமர் கோயில் இருந்தது என்று எந்தவித சான்றுமில்லாமல் வேண்டுமென்றே திட்டமிட்டு டிசம்பர் 6, 1992 ல் நள்ளிரவில் மசூதியை இடித்து அதன் மூலம் கலவரத்தை உண்டாக்கினர். இந்தக் கலவரத்தில் கிட்டத்தட்ட 2000 மனித உயிர்களை மதத்தின் பேரால் பலிவாங்கிய கொடூர சம்பவத்தை சங் பரிவார்கள் நிகழ்த்தியதை யாரும் மறக்க முடியாது.

இந்துத்துவவாதிகள் தொடர்ச் சியாக கிறிஸ்து சிலையை உடைப்பது, மசூதியை உடைக்க வேண்டும், இந்தியா இந்துக்களின் நாடு என்று பேசுவது எல்லாமே இந்துத்துவா கலாச் சாரத்தைப் புகுத்த வேண்டும், வர்ணாஸ்ரமத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதால்தான். ஆனால் வேடிக்கை என்னவென்றால் இன்று இந்தியாவில் இஸ்லாமியராகவும் கிறிஸ்துவர்களாகவும் பௌத்தர் களாகவும் இருப்பவர்கள் இந்து மதத்தின் வர்ணாஸ்ரம தத்துவத்தால் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதால்தான் மாற்று மதத்திற்கு மாற வேண்டிய தேவையே எழுந்தது. ஆக கரசேவர்களும் இந்துமத காவலர்களும் ஏன் அவர்கள் மதம் மாறினார்கள் என்று புத்திக்கொண்டு சிந்தித்தால் முதலில் சீர்திருத்த வேண்டியது இந்து மதமே என்று புலப்படும்.

லெனின் சிலை திரிபுராவில் உடைக்கப் பட்டதற்கு சில அறிவாளிகள் லெனினுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள் அப்படியானால் மின்சாரத்தைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம், நாளையிலிருந்து மின்சாரம் பயன்படுத்தாமல் இருப்பார்களா? இன்று நம் கையில் உலகையே கொண்டு வந்த செல்போன் உட்பட அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளும் அயல்நாட்டவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

லெனின் சிலையையும் அப்படித்தான் அவ்வளவு அவசரமாக உடைத்துள்ளனர் ஏனெனில் சங்பரிவாரங்களின் தத்துவத்திற்கு நேரெதிரானதே மார்க்சியத் தத்துவம். இன்னார்க்கு இது தான் என்பது மனுதர்மம், அனைவருக்கும் அனைத்தும் என்பது மார்க்ஸியம். லெனின் சிலை தகர்ப்பிலிருந்து இந்தப் பிரச்சினைக் தொடங்கப்பட்டிருப்பதால் லெனின் செய்த சிலவற்றை இங்கே சொல்வது சரியாக இருக்கும். கார்ல் மார்க்ஸ் சித்தாந் தத்தை 1917 நவம்பர் 7 புரட்சி (போல்ஷ்விக்) மூலம் ஆட்சியைக் கைப்பற்றி குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் தான் லெனின். அதுவரை உழைக்கும் மக்களின் உதிரத்தைக் குடித்து கொள்ளையடித்து சேர்க்கப்பட்ட அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற ஏழை கூலி விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள் அனைத்தும் நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளர்களிடமே விடப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

முதல் உலகப் போரால் பாதிக்கப்பட்டு அச்சத்தில் இருந்த மக்களுக்கு லெனினின் இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியைத் தந்தது. ஜாரினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிறு சிறு அண்டை நாடுகள் அனைத்திற்கும் விடுதலை வழங்கப்பட்டது. ரஷியா முழு சுதந்திர நாடாக சோஷியலிச நாடாக அறிவிக்கப்பட்டது. அங்கே ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்துதான்  உலகெங்கும் பல்வேறு நாடுகளில் சோசலிச ஆட்சியைப் புரட்சி மூலமும் போர் மூலமும் போராட்டத்தின் வாயிலாகவும் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, மாவோ, ஹோசிமின் போன்ற தலைவர்கள் கொண்டு வந்தார்கள். மேலும் உலகெங்கும் கம்யூனிஸ்ட் இயக்கமும் அதனுடைய தோழர்களும் பொதுவுடைமைத் தத்துவத்தை பிரச்சாரம் செய்கிறார்கள். பொதுவுடைமை கொள்கையாளர் ஆட்சி உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. அந்த ஆட்சிகளில் எல்லாம் ஒப்பீட்டளவில் முதலாளித்துவ நாடுகளை விட பாட்டாளிகள் வர்க்கம் முன்னேற்றத்தையே கண்டுள்ளன. ஆக லெனின் என்பவர் இந்த உலகை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்ற மாபெரும் புரட்சிக்காரர். பாசிச சக்திகள் லெனின் சிலையை வேண்டுமானாலும் சேதப்படுத்தலாம் ஆனால் சித்தாந்தத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. அதே நேரத்தில் இந்த விஷயத்தை அலட்சியமாகவும் கடந்து செல்லக் கூடாது.

லெனின் சிலையை புல்டோசர் கொண்டு தகர்க்க மதவாத சக்திகள் துணிந்திருக்கின்றன என்றால் எந்த அளவுக்கு அவர்களுக்கு பலம் அதிகரித்திருக்கிறது என்பதையும் நாம்  கவனத்தில் கொள்ள வேண்டும். இதே போல் ஒட்டு மொத்த இந்தியாவில் மதவாத சக்திகள் ஆட்சியில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் இஸ்லாமியர்கள் நிலை என்னவாகும்? கிறிஸ்துவர்கள் நிலை என்னவாகும்? மற்ற சிறுபான்மை மக்கள், மாற்றுக் கருத்து உடைய வர்கள், பகுத்தறிவுவாதிகள் நிலை குறித்து நினைத்தாலே நம்மை குலை நடுங்கச் செய்கிறது.

இந்தியாவெங்கும் நாள்தோறும் புரட்சி யாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைகள் இடை நிலைச்  சாதியவாதிகளால் சேதப்படுத்தப்படுகின்றனவே. சாதி அடுக்கைப் பாதுகாப்பதில் பார்ப்பனர்களை விட இவர்கள் தீவிரமாக இருக்கிறார்களே, தான் அடிமையாய் இருப்பதை சூத்திரனாய்  இருப்பதை சவுகரியமாக மறந்துவிட்டு தனக்கு கீழே ஒரு சாதி இருப்பதை வைத்து தாங்கள் மேல்சாதிக் காரர்கள் என்று அற்பத்தனமான பெருமை அல்லவா கொள்கிறார்கள். இங்கு தானே பார்ப்பனர்களின் தந்திரமும் நம்மவர்களின் முட்டாள்தனமும் அடங்கியிருக்கிறது. எங்கே தான் மட்டும் மேலே இருந்து கொண்டு மற்ற எல்லோரையும் கீழே வைத்தால் அவர்கள்  என்றாவது ஒரு நாள் தங்களுக்கு எதிராக திரும்பி விடுவார்கள் என்று சாதி அடுக்கில், தான் மேலே இருந்து கொண்டு தனக்குக் கீழே சத்திரியனையும் அவனுக்குக் கீழே வைசியனையும் அவனுக்குக் கீழே சூத்திரனையும் அல்லவா வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் கீழே பஞ்சமர்களை அவர்ணத்தார் என்றல்லவா வைத்திருக்கிறார்கள்.

இதை தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் படி நிலை சாதிமுறை (ழுசயனநன ஐநேளூரயடவைல) என்றும் அதனால் தான் இந்த சாதி அடுக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் சொன்னார். அவர்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும்  ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து தங்களுக்கான உரிமைகளை கேட்பதை தாங்கி கொள்ளாதவர்களும், தங்களுக்கு இணையாக தாழ்த்தப்பட்டவர்கள் வருவதை சகித்துக் கொள்ள முடியாதவர்களும் தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் - கிடைக்காவிட்டால் வாய்ப்பை உருவாக்கி அவ்வப்போது அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்தியும் சேரியைக் கொளுத்தியும் சூறையாடி யும் தங்கள் மேல்சாதி அமைப்பைக் காத்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்.

சாதியவாதிகளும் இந்துத்துவவாதிகளும் அம்பேத்கரை தலித் சாதியினருக்கான தலைவராகக் கட்டமைக்கிறார்கள். அது உண்மையல்ல. பிற்படுத்தப்பட்டோரும் பின்பற்ற வேண்டிய தலைவர் பாபாசாகேப் அம்பேத்கர். அவர் 1951இல் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை விட்டு விலகியதற்கு இரண்டாவது காரணமாக அரசியல் சட்டத்தின் 340ஆவது பிரிவின் படி பிற்படுத்தப்பட்டவர்களை கண்டறிவதற்கான ஆணையம் அமைத்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியிருந்தேன் ஏன் அதை நிறைவேற்றவில்லை என்றும் மற்றொரு காரணம் பெண்களுக்கு சொத்தில் பங்குரிமை மற்றும் திருமணம் மற்றும் விவாகரத்து உரிமை ஆகியவை தொடர்பாக 1950களில் தான் கொண்டு வந்த இந்து சட்டவரைவை ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேட்டுத்தான் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பலன் அடைபவர்கள் யார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இதனடிப்படையில் பார்க்கும் போது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் பெண் களுக்கான தலைவர் அம்பேத்கர். ஆக அப்படிப்பட்ட மனிதரின் சிலையை உடைக்கப்படும் போது தலித் அமைப்புகள் மட்டுமல்ல; ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களும் கிளர்ந்து எழுந்திருக்க வேண்டும்.

அதேபோல தந்தை பெரியாரையும் இடைநிலைச் சாதிகளின் தலைவர் என்று பொய்ப் பிரசாரம் இந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு செய்யப்படுகிறது. அவர் பெயரைக் குறிப்பிடும் போதுகூட ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தொடர்ச்சியாக ஊடகங்களிலும் சமூகவலைத் தளங்களிலும் இந்துத்துவா மேடைகளிலும் குறிப்பிடு கிறார்கள் ஆனால் வேடிக்கை என்னவென்றால் பெரியாரை சாதிப் பெயரைச் சொல்லிக் குறிப்பிடு பவர்கள் கூட தங்கள் சாதிப் பெயரைத் தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ள முடியாது என்பதுதான். ஒவ்வொரு முறை பெரியார் சிலை சேதப்படுத்தப்படும்போதும் பெரியார் இயக்கங்களை விட அதிகப்படியாக  எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையாளர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் பெரியார் இந்து மதத்தை எதிர்த்தாரே தவிர இந்துக்களாகிய வெகுமக்களை ஒருபோதும் எதிர்க்கவோ, வெறுக்கவோ இல்லை. அவர்களின் தன்மானத்துக்கும் உரிமைக்கும் போராடிய தலைவர் என்பதை உணர்ந்தே வைத்திருக்கிறார்கள்.

இன்று இந்துத்துவ சக்திகள் நாங்கள் இந்து மக்களுக்குப் பாதுகாவலர்கள் இந்து மதத்திற்குப் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு மீண்டும் வர்ணாசிரமத்தை கொண்டு வரத் துடிக்கிறார்கள். இந்துக்களே ஒன்றுபடுவோம் வாருங்கள் என்று சொல்பவர்கள் ஏன் ஒரு சாரர் மட்டும் பூணூல் போட்டிருக்கிறார்கள், என்று கேட்பதில்லை ஏன் ஒருசாரார் மட்டும் கோவில்களில் அர்ச்சகராக இருக்கிறார்கள் என்று கேட்பதில்லை. நீயும் இந்து நானும் இந்து, வா, சாதி மாறி பெண் கொடுத்துப் பெண் எடுத்துக் கொள்வோம் என்று சொல்வதில்லை விழுப்புரம் சேஷசமுத்திரத்தில் தாழ்த்தப்பட்டத் தோழர்கள்  தேர் கொளுத்தப்பட்ட போது ஏன் என் இந்து சகோதரர்கள் தேர் கொளுத்தப்பட்டது என்று எவரும் கேட்கவில்லை இதையெல்லாம் கேள்வி எழுப்பாமல் இந்துக்களாய் ஒன்றுபடு வோம் என்று சொல்வது பார்ப்பனியத்தைக் கட்டிக் காப்பதே அன்றி வேறில்லை.

Pin It