rathinavel pandiyan 350அண்மையில் முடிவெய்திய உச்சநீதிமன்ற நீதிபதி இரத்தினவேல் பாண்டியன், திராவிட இயக்க அடையாளத்தில் உயர்ந்து, சமூகநீதிக்கான வரலாற்றுச் சிறப்பு கொண்ட தீர்ப்புகளை வழங்கியவர்.

சமூகநீதி வரலாற்றில் எத்தனையோ நீதிபதிகளின் பங்களிப்பு இருந்திருக்கிறது ஆனால் இரண்டு தமிழ் நீதிபதிகளுடைய பங்களிப்பை அத்தனை எளிதில் தவிர்த்துவிட இயலாது.

நீதிக்கட்சி காலம் தொட்டு நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டு அரசாணையை  (கம்யூனல் ஜீ.ஓ ) எதிர்த்து செண்பகம் துரைராஜன் மற்றும் சீனிவாசன் என்ற இருவர் தனித்தனியே தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது ( இந்த வழக்கில் தான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அல்லாடி கிருஷ்ணசாமி, சீனிவாசனுக்கு ஆதரவாக ஆஜரானார், நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்த பெரியார் பெரும் கிளர்ச்சி நடத்தி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டதிருத்தத்தை மேற்கொள்ள வைத்தார்) செண்பகம் துரைராஜன் வழக்கில் ஐந்து நீதிபதிகளை கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இடஒதுக்கீட்டு அரசாணை செல்லாது என்று தீர்ப்பளித்தது..

அந்த தீர்ப்பில் ஐந்தில் நான்கு நீதிபதிகள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்பை வழங்க, ஒரே ஒரு நீதிபதி மட்டும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சுதந்திரமான தீர்ப்பு (டிசன்டிவ் ஜட்ஜ்மென்ட்) வழங்கினார், பின்னாளில் “ஓம் பிரகாஷ் - பஞ்சாப் மாநிலம்” என்ற இடஒதுக்கீடு தொடர்பான  வழக்கில் அந்த ஒற்றை நீதிபதியின் தீர்ப்பை மேற்கோள் காட்டி இடஒதுக்கீடு செல்லும் என்று பஞ்சாப் உயர்நீதிமன்றம் அறிவித்தது. அந்த வரலாற்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி சிதம்பரத்தை சார்ந்த முதலாவது தமிழ் நீதியரசர் “என்.சோமசுந்தரம்”. அதற்கு பின் இந்த வரலாற்றின் வைரக்கல்லாய் ஜொலித்தவர் நீதியரசர் “ரத்னவேல் பாண்டியன்”, திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஊறியவர், திமுகவின் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட செயலாளராக இருந்தவர், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆறாண்டு காலம் பதவி வகித்தவர், வைகோ போன்ற எண்ணற்றோருக்கு சீனியர் இப்படி நிறைய இருந்தாலும் அதையெல்லாம் தாண்டியும் அவரை பேச வேண்டி இருக்கிறது.

தேசாய் காலத்தில் அமைக்கப்பட்டு, இந்திரா, ராஜீவ் காலத்தில் தூங்கிக்கிடந்த மண்டல் கமிசனை ஆகஸ்ட் 7 1990ல் அமல்படுத்துகிறார் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், என்னென்னவோ காரணம் சொல்லி நவம்பர் 7, 1990ல் அவரது ஆட்சி கவிழ்க்கப்படுகிறது, இடைப்பட்ட மூன்று மாதத்தில் இந்தியாவே பற்றி எரிகிறது, கோஸ்வாமி தீவைத்துக் கொள்கிறார், வடஇந்தியா முழுவதும் உச்சகட்ட போராட்டங்கள் வெடிக்கிறது, ஊடகங்கள் தொடங்கி அரசு அதிகார அமைப்பு வரை அத்தனையும் சமூகநீதிக்கும் வி.பி.சிங்குக் கும் எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன, மண்டல் கமிசன் அமல்படுத்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அப்படி உச்சபட்ச கொதிநிலை இருந்த சமயத்தில் மண்டல் பரிந்துரை அமலாக்கம் தொடர்பாக

13/8/1990 - 25/9/1990 ஆகிய தேதிகளில் வெளியடப்பட்ட இரண்டு அரசாணைகள் குறித்து 9நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளிக்கிறது. 9ல் ஆறு பேர் பிற்படுத்தப்பட்டோருக்கான வரையறையை சாதி ரீதியாக ஏற்றுக்கொண்டும், 3 பேர் பிற்படுத்தப்பட்டோருக்கான வரையறையை சாதிரீதியாக அமைக்க கூடதென மறுத்தும் தீர்ப்பளிக்கின்றனர். சாதி ரீதியில் தான் வரையறை செய்ய வேண்டும் என்று சொன்னவர் தான் ரத்னவேல் பாண்டியன்..  இந்தியாவெங்கும் இந்து வெறியில் திளைத்த சூழலில் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு, “determination of ‘socially and educationally backward class’ beyond the caste label would amount to turning a blind eye to the existing stark reality in Hindu society” என்று கர்ஜனை புரிந்த பெருமை திராவிட நீதியரசர் ரத்னவேல் பாண்டியனையே சாரும்.

இந்திய அரசியல் வரலாற்றில் மாநில சுயாட்சிக்கான பயணத்தில் மிகமுக்கியமான தீர்ப்புகளில் ஒன்று 1994ல் உச்சநீதிமன்றம் அளித்த,  எஸ்.ஆர்.பொம்மமை - ஒன்றிய அரசு என்ற அரசியல் சாசணப்பிரிவு 356 தொடர்பான வழக்கின் தீர்ப்பு. மாநில அரசுகளை நினைத்தவுடன் கலைத்துவிடும் ஒன்றிய அரசின் ஏதேச்சிகார போக்கிற்கு முடிவுரை எழுதிய வரலாற்று  தீர்ப்பை வழங்கியவருள் ரத்னவேல் பாண்டியனும் ஒருவர், இன்று மாநில அரசுகளை கலைக்க ஒன்றிய அரசு நினைத்தால் கண் முன் அந்த தீர்ப்பு வந்து நிற்கும், எத்தனையோ மாநில அரசுகளை கலைக்க முற்பட்டு இந்த தீர்ப்பின் விளைவாய் ஒன்றிய அரசு தோற்றுப்போன கதைகள் உண்டு, என்ன ஜாலம் காட்டி கலைத்தாலும் குறைந்தபட்சம் உச்சநீதி மன்றத்தின் கேள்விக்குளுக்கு பதிலளிக்க வேண்டும் என்கிற சூழலை உருவாக்கிய இந்த தீர்ப்பை வழங்கியவரும் ரத்வேல் பாண்டியன் தான்.

தென்னக மாவட்டங்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்த சாதி ரீதியிலான மோதல்களுக்கு வளர்ச்சியின் மூலம் முற்றுப் புள்ளி வைக்க முற்படுகிறார் கலைஞர் விளைவு, தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தேவையான ஆலோசனைகளை ஆய்வு செய்து வழங்க உயர்நிலை ஆய்வுக்குழு அமைக்கப்படுகிறது, அந்த குழுவிற்கு தலைமை தாங்கியவர் ரத்னவேல் பாண்டியன், இன்றைக்கு சொல்லி விட முடியும் அளவுக்கு பெரும் வளர்ச்சி அடைந்து விடவில்லை என்றாலும் அடைந்திருக்கிற வளர்ச்சிக்கு பின்னால் இந்த மனிதனின் ஆலோசனைகள் தான் உள்ளன என்பதை அத்தனை எளிதில் யாரும் மறுத்துவிட இயலாது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஐந்தாவது ஊதியக்குழுவின் தலைவர், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் என்று வகித்த பொறுப்புகள் அத்தனையிலும் கொண்ட கொள்கைக்காக பாடுபட்டவர், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தலைவராக இருந்தபோது அந்த ஆணையத்திற்கு அரசியல் சாசண அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்க முயற்சிகள் எடுத்தவர் என இன்னும் பல செய்திகளை சொல்லலாம்.

Pin It