காவிப் பிடியில் அதிகார மய்யங்கள்

தமிழ்நாட்டில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் தம்ம சூரிய நாராயண சாஸ்திரி என்ற பார்ப்பனரை பூனேயிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். துணைவேந்தர் தேர்வுக் குழு பட்டியலிலே இடம் பெறாத ஒருவர் முறைகேடாக ஆளுநரால் நியமிக் கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பிடிக்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.

  • மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் 20 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் 80 சதவீதம் ‘வாய் வீச்சு’களாகவே இருக்கிறது என்றும் ஆட்சியை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாக ‘பிரண்ட் லைன்’ ஏடு எழுதியிருக்கிறது. ‘தாராள மயம்’ என்ற கொள்கையில் காங்கிரஸ் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் வேறுபாடு இல்லை என்றாலும் பன்னாட்டுச் சுரண்டலுக்கு கதவு திறக்கும் இந்த கொள்கைகளில் இரு கட்சிகளுக்குள்ளும் வேறுபாடு இருப்பதாக கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. இதே மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றிய காங்கிரஸ் ஆட்சி,  அதற்குள்ளாகவே ‘மனித நேய’ முகத்தைக்காட்டும் வகையில், கிராமப்புற வேலை திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற வற்றைக் கொண்டு வந்தது மோடி ஆட்சி. ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களை மகிழ்விக்க நிலம் கையகப்படுத்தும் மசோதா, சரக்கு சேவை வரி மசோதா ஆகியவற்றைக் கொண்டு வர முயன்று தோல்வி அடைந்துள்ளது.
  • இந்திய கலாச்சார உறவுகளுக்கான மய்யத்தின் (ICCR) தலைவராக நியமிக்கப் பட்டிருப்பவர் லோகேஷ் சந்திரா. மோடியின் பக்தர். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடியை கடவுள் அவதாரம் என்று பேசியவர், காந்தியைவிட உயர்ந்தவர் என்று புகழாரம் சூட்டியவர். தனது ஆராய்ச்சி பட்டத்துக்கான ஆய்வை ஜனசங்கத் தலைவர்களான தீனதயாள் உபத்யாவுக்கும், விவேகானந்தருக்கும் காணிக்கையாக்கியவர்.

பூனேயில் உள்ள அரசு நிறுவனமான இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் கஜேந்திர சவுகான். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகாபாரத’ தொடரில் நடித்தவர் என்பதுதான் இவரது ‘தகுதி’. இந்த நியமனத்தை எதிர்த்து நிறுவனத்தின் மாணவர்கள் நீண்ட காலம் போராடினார்கள். ஆட்சி அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிறுவனத்துக்குள் இப்போது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஏராளமாக நுழைந்து விட்டார்கள்.

  • சிம்லாவில் உள்ள ‘இந்திய உயர்கல்வி ஆய்வு மய்யம்’ என்ற அரசு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் சந்திர கலாபாடியா என்ற ஆர்.எஸ்.எஸ். அம்மையார். இந்தப் பதவிக்கு தேர்வுக் குழு பரிந்துரைத்த பட்டியலில் இவரது பெயரே இடம் பெறவில்லை. மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால் நேரடியாக நியமிக்கப்பட்டவர். புகழ்பெற்ற ஆய்வாளர் கோபால கிருஷ்ண காந்தி போன்றவர்கள் வகித்த பதவி இது.
  • அய்.அய்.டி.யின் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பலரும் பார்ப்பனர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்தான். மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரடி தலையீட்டில் அனைத்து நியமனங்களும் நடந்தன. ரோப்பர், புவனேசுவர், பாட்னா, அய்அய்.டி. தலைவர் பதவிகளுக்கு தேர்வுக் குழு முறைப்படி 37 பேர் கொண்ட பெயர்ப் பட்டியலை அரசுக்கு அனுப்பியது. பட்டியலை குப்பைக் கூடையில் வீசி விட்டு, நேரடியாக ஆர்.எஸ்.எஸ். ஆதர வாளர்களை நியமித்தார் அமைச்சர் ஸ்மிருதி இரானி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அய்.அய்.டி. ஆளுகைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அணுசக்தி விஞ்ஞானி அனில் கடோட்கர் என்பவரும் புது டெல்லி அய்.அய்.டி. இயக்குனர் ரகுநாத் ஷெசோனிகர் என்பவரும் பதவி விலகினர்.
  • அய்.அய்.எம்.’ என்ற இந்திய நிர்வாக அமைப்பின் சுயேச்சையான அதிகாரங்களை அமைச்சர் ஸ்மிருதி இரானி பறித்து, பாடத் திட்டம், கட்டண நிர்ணயம் அனைத்தையும் தனது கட்டுப் பாட்டுகளின் கீழ் கொண்டு வந்து விட்டார்.
  • • கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் இயக்குநராக இருந்த பர்வின் சிங்லர் என்பவரை கடந்த அக்டோபர் மாதம் கட்டாயப்படுத்தி பதவி விலகச் செய்தனர். அதேபோல், ஆர்.எஸ்.எஸ். கட்டுப் பாடுகளுக்கு பணிய மறுத்த விசுவபாரதி பல்கலைக் கழக துணை வேந்தர் சுஷாந்தா தத்தா குப்தா என்பவரும் கட்டாயப்படுத்தி பதவி விலகல் கடிதத்தைப் பெற்று, வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
  • ‘டாட்டா அடிப்படை ஆராய்ச்சி மய்ய’ இயக்குநர் பதவியிலிருந்த விஞ்ஞானி சந்தீப் திரிவேதி என்பவரை இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திடாத முறையிலே பிரதமர் அலுவலகம் பதவி நீக்கம் செய்தது.
  • ‘தேசிய நூல் அறக்கட்டளை’ என்ற அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட் டிருப்பவர் பல்தேவ் சர்மா. இவர் ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான “பஞ்ச ஜன்யா” பத்திரிகையின் ஆசிரியர்.
  • ‘பிரச்சார் பாரதி’ என்ற தொலைக் காட்சி நிறுவனத்தின் தலைவர் ஏ.சூர்ய பிரகாஷ். இவர் ஆர்.எஸ். எஸ். சிந்தனை மன்றமாக செயல்படும் ‘விவேகானந்தா சர்வதேச நிறுவனம்’ என்ற அமைப்பில் செயல் பட்டவர்.
  • ‘சென்சார் போர்டு’ என்ற திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவர் நிகாலனி. தேர்தல் பிரச்சாரத்தில் மோடி புகழ் பாடும் ‘ஹர்ஹர் மோடி’ முழக்கங்களை உருவாக்கியது இவர்தான். பதவிக்கு வந்தவுடன் திரைப்படங்களில் பயன்படுத்தக்கூடாத ‘வார்த்தைகள்’ என்று ஒரு தடைப்பட்டியலையே மத கண்ணோட்டத்தில் தயாரித்தார்.
  • காசி இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிரீஷ் சந்திரா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தேர்வு செய்த குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி கிரிஷ் மால்வியா. இவர் இந்து மகாசபையை நிறுவிய பார்ப்பனர்  மதன் மோகன் மாளவியாவின்  பேரன். வாரணாசியில் போட்டி யிட்ட மோடியின் வேட்பாளர் மனு வில் மோடியை முன்மொழிந்தவர்.
  • குஜராத் படுகொலை மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ‘இந்துத்துவா’கும்பல் மீதான வழக்குகளை ஆட்சி திரும்பப் பெற்று வருகிறது.
  • அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். சில் சேர்ந்து பணியாற்றுவதில் தடையேதும் இல்லை என்று அரசு உத்தரவிட முடிவு செய்துள்ளது. மத்திய கல்வி நிறுவனங் களில் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடி ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு நிறுவனங்களை இந்து மயமாக்கியதன் ஒரு தொகுப்பு இது.

மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள்

மோடி ஆட்சியின் அனைத்து  செயல் பாடுகளையும் கண்காணித்து வழி நடத்து வதற்கு ஆர்.எஸ்.எஸ். தனித்தனியான குழுக்களை அமைத்துள்ளது.

சிக்சா ஸான்ஸ்கிருதி உதன் நியாஸ் (SSUN) கல்வி மற்றும் கலாச்சார முன்னேற்றத் திற்கான அறக்கட்டளை – ஆர்.எஸ்.எஸ். இன் கிளை அமைப்பு. இந்தியா வின் தற்போதைய கல்விக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் 2007ஆம் ஆண்டு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரான தயானந்த் பத்ரா என்பவரால் நிறுவப்பட்டது. பாடத் திட்டங்கள், கல்விக் கொள்கைகள் மற்றும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை காவி மயமாக்குவதே இதன் வேலை.

இதன் உறுப்பினர்கள் குழு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து புதிய கல்விக் கொள்கையில் இந்து தேசியத்தை புகுத்துவது தொடர்பான கருத்துகளை முன் வைத்தது. இவர்கள் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளையும் சுட்டிக் காட்டி யுள்ளார்களாம். அதனை புதிய பாடத் திட்டம் கொண்டு வரும்பொழுது அரசு கவனிக்கும் என்றும் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.

வென்டி தோனிகர் எழுதிய ‘The Hindus-An Alternative History’ என்ற புத்தகம் தடை செய்யப்படுவதற்கும், டெல்லி பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் இருந்து ஏ.கே. ராமானுஜம் எழுதிய “முன்னூறு இராமாயணம்” என்ற கட்டுரையை நீக்கியதற்கும் இந்த அமைப்பின் பிரச்சாரம் முக்கிய காரணம்.

இந்த அமைப்பின் கருத்துக்களை ஆளும் பாரதீய ஜனதா கட்சி செவிமடுத்து கேட் கின்றது. முன்பெல்லாம் நமது கோரிக்கைகள் நிறைவேற நீதிமன்றம் செல்ல வேண்டி யிருந்தது. ஆனால் இப்பொழுது அரசு செவி மடுக்கின்றது என்கின்றார் இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் அதுல் கோத்தாரி. முன்பிருந்த வாஜ்பாய் அரசைவிட இன்றைய அரசு ஆர்.எஸ்.எஸ். உடன் இணைந்து செயல்படுவதில் தடைகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை. ஆட்சி முறை மற்றும் கலாச்சாரத்தில் நேருவின் வழிமுறையை அகற்றிவிட்டு தனது தடத்தைப் பதிக்கவே மோடி முயன்று கொண்டிருக்கிறார் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவர்.

ஆர்.எஸ்.எஸ். தனது திட்டங்களை நிறைவேற்ற மோடி அரசை இயக்கிக் கொண் டிருக்கிறது. கல்வி, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் தொடர்பான விவகாரங்களில் முடிவுகளை எடுப்பதற்கு ஆறு குழுக்களை ஆர்.எஸ்.எஸ். நியமித்துள்ளது. அதன் உறுப்பினர்களாக பா.ஜ.க.வின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.இன் பொதுச் செயலாளரான தத்தத்ரேய ஹோசபலே மற்றும் கிருஷ்ணா கோபால் ஆகியோர் அரசாங்கமும் இந்துத்துவாதிகளும் இணைந்து நடத்தும் பாசறைகளை ஒருங்கிணைக்கின்றனர்.

இந்த ஒருங்கிணைப்பு சந்திப்பில் கூறப்படும் சில கருத்துக்கள் உடனடியாக அமைச்சர் களின் மூலமாக நிறைவேற்றப்படுகின்றன. நிபந்தனை களுக்கு ஒத்துப்போகும் சில கருத்துக்கள் உடனடியாக செயல்படுத்த முடியாது என்றாலும் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சாத்திய மில்லாத சில கருத்துகள் ஒதுக்கப்படுகின்றன.

பாரதிய சிக்சா மண்டல் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளை அமைப்பு. ஆரம்பப் பள்ளி முதல் உயர்நிலை கல்வி வரை உள்ள பாடத் திட்டங்களில் இந்திய அறிவு பாரம் பரியத்தோடு ஒத்துப் போகும் பல மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று முன்மொழிந் துள்ளது. எங்களுடைய சில அறிவுரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்கிறார் இதன் இணை ஒருங்கிணைப்பு செயலாளர் முகுல கணித்கர். “முனைவர் பட்டத்திற்கான வழிகாட்டி பயிற்சி பட்டறைகளை இதுவரை 26 பல்கலைக்கழகங்களில் நடத்தியுள்ளோம். நாக்பூரில் நடந்த மறுமலர்ச்சிக்கான ஆராய்ச்சி என்ற மாநாட்டில் 55 (பல்கலைக்கழக) துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதன் மூலம் இந்திய அறிவு முறைமை முன்னெடுத்து செல்லப்படும்” என்கிறார் கணித்கர்.

நீதிமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் மற்றும் தொழிற்துறை சார்ந்த கல்லூரிகளிலும் வட்டார மொழிகளோடு இந்தியையும் திணிப்பதே அடுத்தக்கட்ட பணி என்கிறார் கோத்தாரி. பாரதிய சுரக்ஷலீ மஞ்ச் என்ற அமைப்பு இதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லுமாம். தலித்களிலும் சிந்தனைவாதிகளை வளர்த் தெடுக்கிறது ஆர்.எஸ்.எஸ். இதில் பெயர் குறிப்பிடும்படி முக்கியமானவர்கள் மிலிந்த் காம்ப்ளே என்பவர் இவர். தலித் இந்தியர் வர்த்தகப் பிரிவு நிறுவனர். மற்றொருவர் நரேந்திர ஜாதவ் – இவர் மத்திய அமைச்சர்.

பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளிலும் வலதுசாரி சிந்தனைகளை பரவலாக்கு கின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ராவ் மாதவ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் மகனான சௌர்யா டோவலும் இணைந்து ‘இந்தியா நிறுவனம்’ என்ற ஒன்றை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு, வெளி நாட்டுக் கொள்கை தொடர்பான பிரச்சினை களில் வலதுசாரி சிந்தனைகளை திணிப்பதில் இவர்கள் சூத்திரதாரிகளாக உருவெடுக் கின்றனர்.

“பல்கலைக்கழக மாணவர்கள் வட்டத்தில் வலதுசாரி சிந்தனைவாதிகளை உருவாக்கு வதற்கு, ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு குழுமமும், பாரத் நித்தி என்ற அமைப்பும் ஈடுபடுகிறது. சங்கல்ப் என்ற நிறுவனத்தின் வழியாக 1986லிருந்து இன்று வரை ஆயிரம் மாணவர்களை அரசு ஆட்சிப் பணிகளுக்காக பயிற்சி அளித்து அனுப்பியுள்ளோம்” என்கிறார் கணித்கர்.

பண்பாட்டு துறைகளிலும் ஆலோசனை குழுக்களிலும் இன்று வலதுசாரி சிந்தனை கொண்டவர்களையே காண முடிகிறது. ஆர்.எஸ்.எஸ்சின் கருத்துகளோடு ஒத்துப் போகும் பார்வை உடையவர்களே வரலாற்று ஆய்வு மய்யம், இந்திராகாந்தி தேசிய கலை பண்பாட்டு மய்யம், பிரச்சார் பாரதி தேசிய நினைவு காப்பகம், மத்திய திரைப்பட தணிக்கைக் குழு போன்ற அரசு துறைகளில் பணியமர்த்தப்படுகின்றனர்.

தேசத்தின் பெயரால் இந்தியா காவி மயமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கான வேலை முழு மூச்சாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Pin It