கீற்றில் தேட...

இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழருக்கு நீதி வேண்டும்:

போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் அவகாசம் கொடுக்காமல் ஐநா பொதுச்சபையிடம் ஒப்படைக்க வேண்டும்;.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதக் கொள்கையில் ஓரே மாதிரியானவை. ஓன்று இனவாதத்தை ஆரம்பித்து வைக்க, மற்றது அதனை நிறைவேற்றி வைக்கும். இரண்டு கட்சிகளும் மாறி மாறி பதவிக்கு வருவதும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புக் கொள்கையை முன்னெடுப்பதும் வரலாறு கண்ட உண்மையாகும்.

நெருக்கடிகள் ஏற்படும் இடத்து அதனை சமாளிப்பதற்காக அவ்வப்போது இவ்விரு கட்சிகளும் தமிழ்த் தலைவர்களுடன் ஒப்பந்தம் செய்வதும் பின்பு நிலைமையை சமாளித்ததும் ஒப்புக்கொண்ட அவ்வொப்பந்தங்களுக்கு எதிராக செயற்படுவதும் கடந்த 90 ஆண்டுகளுக்குக் குறையாத நடைமுறையாகும்.

இவ்விருகட்சிகளும் செய்துவந்த தமிழின அழிப்பின் கூட்டுமொத்த உச்சமாக முள்ளிவாய்க்கால் படுகொலை அமைந்தது. இதற்கு முன் 1987ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது “ஆப்பரேஷன் லிபரேஷன்” என்றதன் பேரில் இலங்கை இராணுவம் பாரிய இனப்படுகொலையை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களை கொன்றுகுவித்த போது அன்று இந்தியாவின் தலையீட்டால் அந்த இனப்படுகொலை தொடரப்பட முடியாது நிறுத்தப்பட்டது. அப்படுகொலை திட்டத்தை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்றப்பட்டது. எனவே இனப்படுகொலை என்பது இருபெரும் சிங்களக் கட்சிகளினதும் கொள்கையாகும்.

தற்போது பிரச்சனை என்னவெனில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் மூலம் சிங்கள அரசு சர்வதேச நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதுடன் சிங்களத் தலைவர் களும், சிங்கள இராணுவத் தளபதிகளும் என அனைவரும் சர்வதேச நீதி விசாரணைக்கு உட்பட வேண்டிய சர்வதேச நடைமுறை பனிப் போரின் பின் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் இலங்கை அரசை இனப்படுகொலை களங்கத் திலிருந்தும், சிங்களத் தலைவர்களையும், இராணுவத் தளபதிகளையும் சர்வதேச விசாரணையிலிருந்தும் காப்பாற்றுவதற்காக இருபெரும் இனவாத சிங்களக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றன. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கப்போவதாக பாசாங்கு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பை முன்னெடுப்பதும், இலங்கை அரசை சர்வதேச அரங்கில் காப்பாற்றுவதுமே ரணில்- சிறிசேன-என்ற இருகட்சித் தலைவர்களினதும் கூட்டின் இரகசியமாகும்.

இந்நிலையில் “தமது நல்லாட்சி அரசாங்கமானது நீதியும், ஜனநாயகமும் கொண்டதென்றும் அது போர்க்குற்றத்திற்கு நீதியான தீர்வு காணும் என்றும் அதற்காக போர்க்குற்ற விசாரணையை மேலும் 18 மாதத்திற்கு பின்போடுமாறும், கூடவே தம் நல்லாட்சி அரசாங்கத்தால் உள்நாட்டு விசாரணையின் மூலம் நீதி காணமுடியும் என்றும், எனவே சர்வதேச விசாரணை அவசியமற்றது என்றும், ஐநா தீர்மானத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர இந்த அரசாங்கம் முயல்கிறது.

ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக ஈழத் தமிழ்த் தலைவர்களை ஏமாற்றுவதில் வெற்றிகண்ட சிங்களத் தலைவர்கள், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியத் தலைவர்களை ஏமாற்றுவதில் வெற்றி கண்டுவரும் சிங்களத் தலைவர்கள் தற்போது சர்வதேச நாடுகளை ஏமாற்றுவதில் தம் கைவண்ணத்தை காட்ட முற்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை அரசு விரும்புவது போல மேலும் போர்க்குற்ற விசாரணையை பின்போட அனுமதிக்கக் கூடாது என்பதுடன் ஐநா மனிதஉரிமைகள் ஆணையமானது இவ்விடயத்தை ஐநா பொதுச்சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுமே இன்றைய அவசியமாகும்.

ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தில் அங்கம் வகிக்கும் மொத்தம் 47 நாடுகளில் 37 நாடுகள் சர்வதேச கலப்பு விசாரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதற்கான எந்தவித தொடக்க நிலை நடவடிக்கைகள்கூட இதுவரை இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை.

eelam protest 6001987ஆம் ஆண்டு இந்திய அரசுடன் இலங்கை அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் போது வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றிய பிரச்சனை பிரதான இடம் வகித்தது. அப்போது வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்ட அரசியல் தீர்விற்கு தமிழ்த் தரப்பில் இருந்து எந்தொரு கட்சியோ அல்லது ஆயுதம் தாங்கிய அமைப்புகளோ சம்மதிக்க மறுத்தன. இந்நிலையில் வடக்கு-கிழக்கு இணைப்பை தற்காலிக இணைப்பாக இலங்கை அரசு முன்வைத்தது.

அவ்வாறு முன்வைத்து அதை நிரந்தர இணைப்பாக மாற்றுவதாக அன்றைய இந்திய பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் உறுதியும் அளித்து அவரை முதலில் நம்பவைத்தனர். இலங்கை விவகாரத்தில் அப்போது இந்தியா பலமாக இருந்த சூழலில் இவ்வாறு இணைப்பு என்று சட்டத்தில் புதியாத ஓர் ஓட்டை விட்டு ஏற்பாடும் செய்துவிட்டது வடக்கு-கிழக்கு இணைந்த ஆட்சிமுறையை பிரகடனம் செய்தனர். ஆனால் இந்தியா பலவீனம் அடைந்த நிலையில், இணைத்த முறையில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தவறு செய்துவிட்டார் என்றும், இணைப்பு சட்டபூர்வமற்றது என்று இணைப்பை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதன் மூலம் இணைப்பை இல்லாமல் செய்தார்கள். ஒரு பிராந்திய வல்லரசான இந்தியாவை எப்படி ஏமாற்றலாம் என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதன் மூலம் செய்யப்பட வேண்டுமே தவிர அரசாங்க இதழில் வெளியிடுவதன் மூலம் இணைப்பைச் செய்யக்கூடாது என்பதே அந்த இணைப்பை ரத்து செய்வதற்கான வாதமாய் அமைந்தது. அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என். சில்வா இணைப்பை ரத்து செய்தார்.

ஆனால் அந்த இணைப்பு பிரிக்கப்பட்ட பின்பு இதுவரை இந்தியா தலையிடுவதற்கான எந்தவித வாய்ப்பையும் அவர்கள் கொடுக்கவில்லை. இது இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு முரணானது.

இந்த தற்காலிக இணைப்பு விவகாரத்தில் இணைத்தமுறை தவறு என்று தொழில் நுட்பக்காரணம் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர சட்டம் தவறு என்று சொல்லப்படவில்லை. இதன்படி இப்போதைய ஜனாதிபதிகூட நாடாளுமன்றத்திற்கு வெறுமனே அறிவிப்பதன் மூலம் மட்டுமே முந்தைய ஜனாதிபதியால் தவறாக இணைக்கப்பட்ட இணைப்பை இவரால் ஒரு நொடியிற்கூட சரிசெய்திட முடியும். இந்த இணைப்பு விவகாரத்தில் தவறு ஆட்சியாளர்கள் பக்கமே தவிர தமிழர் பக்கம் கிடையாது. எப்படியோ ஒரு சிங்கள ஜனாதிபதி தவறு இழைத்ததாகக் கூறி அந்த தவறுக்காக பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள்தான். இதுவரை இந்தியாவால் கூட அதை சரிசெய்ய முடியாத நிலையே உள்ளது. இப்படி இந்தியாவை ஏமாற்றுவதில் அவர்கள் அடைந்த வெற்றி இதுமட்டுமல்ல அந்த பட்டியல் நீளும்.

மேலும் மேற்படி சர்வதேச கலப்பு நீதிவிசாரணை சம்பந்தமான தீர்மானத்தில் ஒரு சட்டத்திருத்தத்தை மங்கள சமரவீர ஐநா சபையில் முன்மொழிய இருப்பதாக ஜனவரி இறுதிவாரத்தில் கொழும்பில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கூறியுள்ளார். இதன்படி அவர் மேற்கொள்ளயிருக்கும் திருத்தப் பேரணை எதுவாக இருக்க முடியுமென்றால் தற்போது இலங்கையில் உள்நாட்டில் ஜனநாயகம் மீட்கப்படுகிறது. பழைய அரசாங்கத்தின் ஜனநாயக வீரோத செயல்கள் சரிசெய்யப்பட்டுவிட்டன. இந்நிலையில் நீதியான விசாரணையை நடத்த இன்றைய இலங்கை அரசால் முடியும். எனவே சர்வதேச கலப்பு விசாரணை என்பதற்குப் பதிலாக உள்நாட்டு பொறிமுறை கொண்ட விசாரணைதான் இலங்கையின் அமைதியைப் பேண வழிவகுக்கும் என்றும் சர்வதேச விசாரணை என்றால் சிங்களத் தீவிரவாதிகளை சமாளிக்க முடியாமல் போகும் அதுவே அரசியல் தீர்வை எட்டுவதற்கு தடையாக அமைந்துவிடும் எனவே சர்வதேச விசாரணையைத் தவிர்த்து உள்நாட்டுப் பொறிமுறை கொண்ட விசாரணை என்பதன் மூலமே இலங்கையில் நீதியையும், அமைதியையும், தமிழ் மக்களுக்கான தீர்வையும் காண முடியுமெனக் கூறி சர்வதேச கலப்பு விசாரணையை இல்லாமல் செய்து உள்நாட்டு விசாரணைக்கும 18 மாத கால அவகாசம் கோரவுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின் தமிழ் மக்கள் மத்தியில் முளைத்தெழுந்த திரு.எம்.எ.சுமந்திரன் என்பவர் ரணிலின் கையாளாக இருப்பவர். இவர் ஐதேக சார்பில் கொழும்பில் தேர்தலில் போட்டியிட முதலில் ஆலோசிக்கப்பட்டிருந்தவர். ஆனால் அவர் அவ்வாறு கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெறுவதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அவரை நுழைத்து அவரை தன் மூலம் எம்பி ஆக்குவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கையாள வசதியாக இருக்கும் என்ற சதிகார சிந்தனையின் அடிப்படையில் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எம்.பி. ஆக்கப்பட்டார்.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய நபராக செயற்படுவது இவர்தான். வயது முதிர்ந்த சம்பந்தனை இலகுவாக கையாள இவரால் முடிகிறது. இதற்குப் பின்னால் ரணில் விக்கரமசிங்கவின் பெருந்திட்டம் உள்ளது. தற்போது கொழும்பை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட சுமந்திரன் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியுள்ளவர். இவர் மேற்குலகின் செல்லப்பிள்ளையுங்கூட.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அநேகமான ஏனைய எம்பிக்களிடம் ஆங்கிலப் புலமையில்லை. ஆனால் அது சுமந்திரனிடம் உண்டு. ஆதலால் அவரால் ஏனைய எம்பிக்களை கட்சிக்குள் இலகுவாக பின்தள்ளமுடியும். அதையும் ஒரு முக்கிய பலமாக பயன்படுத்தி தள்ளாடும் வயதைக் கொண்டுள்ள சம்பந்தனை ஒரு காட்சிப் பொருளாக முன்னே நிறுத்தி சுமந்திரன் அனைத்துவகையான நாடகங்களையும் ஆடுகிறார். இவர் தமிழ் மக்களை அரைப்பணத்திற்கு எதிரியிடமும், அந்நியர்களிடமும் விற்பவராக காணப் படுகிறார்.

தற்போது தமிழ் மண்ணில் அமைதி நிலவுவதாக சொல்வது சுத்த அபத்தம். ஐந்து குடிமகனுக்கு ஒரு சிங்கள இராணுவ சிப்பாய் (5:1) என்ற விகிதத்தில் தமிழ் மண்ணில் சிங்கள இராணுவத்தின் பிரசன்னம் உள்ளது. இதைவிட உளவுத்துறையினரதும், பொலீசாரினதும் தொகை வேறு. இவ்வாறு படையினரின் இரும்புப்பிடிக்குள் தமிழ் மக்கள் நசிந்துகிடக்கின்றனர் என்பதே உண்மை. இதைத்தான் அவர்கள் அமைதி என்கிறார்கள்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியும், ரணில் விக்ரமசிங்கவும் இனவாதம் கொண்டவர்கள் அல்ல என்றும் எனவே இவர்களை நம்பினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் பொய்கூறி ஏமாற்றப்பார்க்கிறார்கள். அதாவது 1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் “பயங்கரவாத தடைச் சட்டத்தை” (PTA) ஜே.ஆர். பிறப்பித்து தமிழ் மண்ணை இராணுவ ஆட்சி பிரதேசமாக பிரகடனப்படுத்திய போது அவரது அமைச்சரவையில் இளம் வயதைக் கொண்ட அமைச்சராக இருந்தவர் ரணில்.

1979ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இராணுவ ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவே உள்ளது. இச்சட்டத்தின் படி எந்தொரு தமிழ் மகனும் இராணுவத்தினராலோ, போலீசாராலோ கொல்லப்பட்டால் அதற்கு மரண விசாரணை தேவையில்லை. கொல்லப்பட்டதற்கான காரணம் யாருக்கும் சொல்லவேண்டியதும் இல்லை. கொல்லப்பட்டவரின் உடலை உறவினரிடம் ஒப்படைக்காமல் படையினர் தாம் நினைத்தபடி என்னவும் செய்யலாம். அதற்கு மரணக்கிரிகைகளும் செய்யப்படுவதில்லை.

அத்துடன் எவரையும் காரணம் கூறாமல் கைது செய்யலாம். விசாரணையின்றி எவ்வளவு காலமும் சிறையில் அடைக்கலாம். சிறையில் உள்ளவர் உறவினருடனோ தொடர்பின்றி, வைத்திருக்கப்படும் இடம் சொல்லப்படாமல் “Incommunicado” நிலையில் அடைத்து வைத்திருக்கலாம். இச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் சித்ரவதை முகாமிற்குரிய பரிசோதனை எலிகளாக பயன்படுத்தப்பட்டனர். இந்த சட்டம் தற்போது இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் அமுலில் உள்ளது என்பது இந்த அரசாங்கத்தின் உண்மையான தோற்றத்தையும், தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவ ஆட்சியின் கீழ் உள்ளார்கள் என்பதையுமே உணர்த்துகிறது.

தற்போது இந்த அரசாங்கம் ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்திடம் 18 மாத கால அவகாசம் கோரயிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட முதலாவது செய்தியாகும். இது காலம் கடத்தி பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்துவிட்டு உரிய தருணத்தில் இனவாதிகள் குழப்புகிறார்கள் என்று ஒரு சிங்களத் தரப்பைக் கைகாட்டிவிட்டு எல்லாவற்றையும் முதலை முழுசாக விழுங்குவது போல் விழுங்கி கபளீகரம் செய்யப் போகிறார்கள்.

மார்ச் மாதம் கூடவுள்ள ஐநா மனிதஉரிமைகள் ஆணைத்தின் முன் கால அவகாசத்திற்கு வாய்ப்பு கொடுக்காதிருப்பதற்குரிய பணியை தமிழகமும், இந்திய அரசும்தான் முன்னின்று செய்ய வேண்டும். அதாவது ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சுமந்திரன் என்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கார தமிழ் நபரை உள்ளே அனுப்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஐதேகாவின் கிளையாக மாற்றுவதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. நயத்தாலும், பயத்தாலும் மேற்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பலரையும் இப்படி இலகுவாக ஐதேகாவின் கிளையாக மாற்ற முடிந்துவிட்டது. இது ஒரு பெருந்துயரம். இந்த நிலையில் ஈழத் தமிழரின் தொப்புள் கொடி உறவினரான தமிழக மக்களும், ஜனநாயத்தின் பேரில் இந்திய அரசும் தமிழருக்கான நீதி கோரி, சர்வதேச நீதிவிசாரணை கோரி குரலெழுப்பி செயற்படுத்த வேண்டும்.

ஐநா மனிதஉரிமைகள் ஆணையம் வழங்கிய ஓர் ஆண்டிற்குப்பின் இன்னொரு ஆண்டுகால அவகாசமும் முடிவடைந்துவிட்டது. இனி மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்ததைப் பற்றி முதலில் 2009ஆம் ஆண்டு கூறப்பட்டபோது, அங்கு இராணுவத்தால் ஒரு குடிமகன்கூட கொல்லப்படாத வகையில்“Zero Casualty” என்ற வரன்முறைக்கு ஏற்ப பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் வெற்றியில் முடிந்ததென அரசாங்கம் அறிவித்தது. சிங்கள ஊடகங்களும், அனைத்து சிங்கள கட்சிகளும், இராணுவமும், பௌத்த மத பீடங்களும், மற்றும் சிங்க்ள பௌத்த நிறுவனங்களும் கூறின.

ஆனால் தமிழ் மக்கள் விடாப்படியாக புலம்பெயர்ந்த நாடுகளில் இனப்படுகொலை பற்றி பலமாக குரலெழுப்பினர். இப்பின்னணியில் ஐநா பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் உண்மையைக் கண்டறிவதற்காக ஒரு நிபுணர் குழுவை நியமித்தார். அக்குழுவானது 40,000 பேருக்கு மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் உள்ளிட்ட தமிழ்க் குடிமக்கள் கொல்லப்பட்ட தகவலை முதல் முறையாக அறிவித்தது. இது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதேவேளை லண்டனில் இருந்து வெளியாகும் சுயாதீன தொலைக் காட்சியான சேனல்-4 தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றென களத்தில் நிகழ்ந்த படுகொலைகள் பற்றிய நேரடி ஆவணப்படங்களை ஆதாரபூர்வமாக வெளியிட்டது. இது பரந்துபட்ட உலக மக்கள் மத்தியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. இனப்படுகொலையின் கொடூரம் அப்பட்டமாகத் தெரியவந்தது.

UN report 450கனரக ஆயுதங்கள் கொண்டும், பீரங்கிக் குண்டுகள் கொண்டும், விமானக் குண்டுகள் வீசியும், குழந்தைகள், சிறுவர்கள். பெண்கள், முதியோர், கர்ப்பிணித்தாய்மார் என பெருந்தொகையான தமிழ் மக்கள் அவலமாக படுகொலை செய்யப்பட்ட காட்சிகளையும், இளைஞர்களும், யுவதிகளும் சீருடை தரித்த இலங்கை இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்படும் காட்சிகளையும், இராணுவத்தால் இளம் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படும் நேரடிக் காட்சிகளையும் சேனல்-4 ஆவணப் படங்கள் எடுத்துக் காட்டின. இவற்றில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது சிறுவன் பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் உயிருடன் இருக்கும் காட்சியையும், பின்பு அவர் ஒரு மீட்டர் தொலைவில் வைத்து துப்பாக்கியால் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருக்கும் காட்சியையும் வெளிக்கொணர்ந்தது.

இதே போல ஊடகவியலாளரும், நடிகையும், கலைஞருமான இசைப்பிரியா என்னும் இளம் பெண் சிங்கள இராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டு, அவர் உயிருடன் நிர்வாணம் ஆக்கப்பட்டு இராணுவத்தினரின் முன்னிலையில் தவிக்கும் காட்சியையும், இதன்பின்பு அவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் காட்சியையும் சேனல்-4 ஆவணப்படம் தெளிவாக காட்சிப்படுத்தியது. மேலும் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு நிர்வாணமாக படுகொலை செய்யப்பட்டிருக்கும் இளம் பெண்களின் மறைவிடங்களில் இராணுத்தினர் இரும்பு சப்பாத்து கால்களால் மிதிக்கும் காட்சிகளையும் சேனல்-4 ஆவணப்படத்தில் காணமுடிந்தது.

இதன் பின் உலகம் அதிகம் அதிர்ச்சியுற்றது. அவை பொய்யான ஆவணங்கள் என சிங்கள அரசு திரும்பத் திரும்பக் கூறியது. இதன் பின் இவ்வாவணப்படங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிய ஐநா சபை ஒரு தொழில்நுட்ப வல்லுனர் குழுவை நியமித்தது. அந்தக் குழு இந்த ஆவணப்படங்கள் அனைத்தும் போலியானவைகள் அல்ல, பொய்யானவைகள் அல்ல, உண்மையானவைகள் என அத்தாட்சிப்படுத்தியது.

அதேவேளை ஐநா சபையால் நியமிக்கப்பட்ட ஓர் உள்ளக ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி (UN Internal Review Report) 70,000 மேற்பட்ட குடிமக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டுள்ளனர் என கூறியது. இவை அனைத்தும் உலகில் 21ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பலமான ஆதாரங்கள் கொண்ட இனப்படுகொலை என்பதை நிருபிப்பதற்கு முற்றிலும் போதுமான ஆதாரங்களாகும். இதைக்கண்டு இலங்கை அரசு அஞ்சுகிறது.

இனப்படுகொலை நிரூபிக்கப்படும் போது தமிழ் மக்கள் பிரிந்து தனியரசு அமைப்பது ஐநாவின் விதியின்படியும், நடைமுறைகளின்படியும் சட்டபூர்வமானதாகி விடும். ஒருபுறம் இனப்படுகொலை அரசுக்குப் பொறுப்பான அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக இருந்த அவரது சகோதரன் கோத்தபாய ராஜபக்ஷ, இறுதிகட்ட யுத்தத்தின் இறுதி 4 நாட்களும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்றைய இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேக, மற்றும் தளபதிகள் அனைவரும் இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச விதிகளின் படி ஆயுட்கால சிறைத்தண்டனைக்கு உரியவர்களாவர். இவர் அனைவரையும் பாதுகாப்பதில், தண்டனையில் இருந்து தப்ப வைப்பதில் இந்த அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இனப்படுகொலை நிரூபிக்கப்படும் இடத்து நாடு பிரியும் என்ற அபாயத்தில் இருந்தும் சிங்கள அரசை இந்த நல்லாட்சி அரசாங்கம் காப்பாற்றி தமிழ் மக்களுக்கு முழுநீள அநீதியிழைத்து வருகிறது.

120 கோடி மக்கள் தொகையைக் கொண்ட 2வது பெரிய ஜனத்தொகையைக் கொண்ட நாடாகவும், உலகில் முதலாவது பெரிய ஜனநாயக நாடாகவும் உள்ள இந்தியாவில் இந்தோ-பாகிஸ்தான் யுத்தங்களில் வெற்றி பெற்றதன் பேரால் இதுவரை மூவருக்கு மட்டும் பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆனால் எந்தொரு அந்நியநாட்டுடனும் போரிடாத ஒரு சிறிய இலங்கைத் தீவின் இராணுவ தளபதிக்கு, அதுவும்; தமது சொந்த நாட்டின் குடிமக்களான தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தமைக்காக அவருக்கு பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிஞர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுதான் இந்த அரசாங்கத்தின் நீதி. அதாவது எந்த இராணுவத் தளபதி லட்சக்கணக்கில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தார் என்று தமிழ் மக்கள் சுட்டிக்காட்டினார்களோ அந்த இராணுவத் தளபதிக்கு இந்த அரசாங்கம் அதுவும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால் பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை பல்வேறு சமூக வலைத்தளங்களும், மனித உரிமையாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்படி ஆதாரபூர்வமாக பார்க்கும் போது இனப்படுகொலை நிகழ்ந்தமைக்கு நம்பகமான ஆதாரபூர்வமான ஆவணங்களும், இவற்றிற்கு அப்பால் உயிருள்ள சாட்சிகளும் ஒருபுறம் இருக்க, ஐநா சபையின் இரண்டு அறிக்கைகளும் குறைந்தது 70,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டிருக்க பெரும் இடப்பெயர்வு அவலமும், மனித பேரவலமும் நடந்துள்ளமையை ஆதாரபூர்மாக பல்வேறு தொண்டர் ஸ்தாபனங்களும் கூறியிருக்க, சேனல்-4 ஆவணமானது உண்மையானது என ஐநா நிபுணர்குழு அத்தாட்சிப்படுத்தியிருக்கும் பின்னணியில் இனப்படுகொலைக்கு எதிரான விசாரணை முற்றிலும் ஆதாரபூர்வமாக இருக்கிறது. இது இன்று உலகில் காணப்படக்கூடிய எந்தொரு இனப்படுகொலை அல்லது மனிதஅவலம் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று சொல்லத்தக்க குற்றச்சாட்டுகளுக்கும் இல்லாதளவு ஆதாரம் இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு உண்டு. எனவே இதனை விசாரணைக்கு உட்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்று சிங்கள அரசுக்குத் தெரியும்.

சிங்கள அரசானது தந்திரத்தாலும், நயத்தாலும், பயத்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைபோல ஆக்கி அதனை சர்வதேச அரங்கில் தமக்கான ஆதரவாக காட்சிப்படுத்தி நீதிக்கும், நியாயத்திற்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் எதிரான தமது அநியாயத்தை அரங்கேற்றிவருகின்றனர். இந்நிலையில் தமிழகமும், அண்டையில் உள்ள இந்தியாவும்தான் தமிழ் மக்களின் நீதிக்காக பாடுபட வேண்டும்.

இதன்படி 2 ஆண்டு அவகாசத்திற்கு மேல் இனி கால அவகாசம் வழங்கக்கூடாது. ஐநா விதியின் படி பார்க்கையில் இவ்வருட மார்ச் மாதத்திற்குள் எவ்வித விசாரணையும் இல்லையென்ற நிலையில் ஆணைக்குழு இதனை ஐநா பொதுச்சபையிடம் ஒப்படைக்கலாம். ஐநா பொதுச்சபையானது ஆணைக்குழுவின் ஒப்படைத்தலை ஒரு பரிந்துரையாகவே கருதுவது வழமை. அந்த வழமையின்படி ஐநா பொதுச்சபையானது ஐநா பாதுகாப்பு சபைக்கு நேரடியாக அனுப்பி அதற்காக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை ஐநா பாதுகாப்பு பொதுச்சபையிடம் ஒப்படைக்கும். அப்போது ஐநா பொதுச்சபையானது சர்வதேச நீதிமன்றத்தின் முன்னோ, அன்றி அதற்கு நிகரான ஒரு சர்வதேச விசாரணையின் பொருட்டு ஏற்பாடு செய்வதற்காகவோ தீர்மானிக்க முடியும்.

சிலவேளை பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒன்று ரத்து அதிகாரத்தை பிரயோகித்தால் மட்டுமே மேற்கொண்டு நடவடிக்கைகள் தடைப்படலாம். வெளிப்படையான ஆதாரங்கள் கொண்ட இந்த இனப்படுகொலைக்கு ஆதரவாக ஏதாவது ஒரு நாடு “வீட்டோ” என்பது சர்வதேச அரங்கில் அந்ந நாட்டின் நன்மதிப்பை பெரிதும் பாதிக்கும். எனவே இன்றைய சூழலில் இதனை “வீட்டோ” பண்ணுவது எந்தொரு வல்லரசுக்கும் இலகுவான காரியமும் அல்ல.

அதேவேளை அப்படி வீட்டோ பண்ணப் பட்டாலுங்கூட பிரச்சினை முடிந்துவிட்ட ஒரு விவகாரமாக அன்றி சர்வதேச அரங்கிலும், உள்நாட்டு அரங்கிலும் தொடர்ந்தும் தீர்வு காணப்படாத ஒரு விவகாரமாகவே காணப்படும். அது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வேறு நல்ல வாய்ப்புக்களை கொடுக்கக்கூடியதாய் இருக்கும்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டோர் கண்டுபிடிக்கப்படுவர், அதில் தொடர்புடையோர் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர். இராணும் விலக்கிக் கொள்ளப்படும், இராணுவம் பொதுமக்களிடம் அபகரித்த நிலங்கள் விடுவிக்கப்படும், வடக்கு-கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு காணப்படும், போர்க்குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதிகள் பெரிதும் நிறைவேற்றப்படவில்லை.

ஒரு தமிழ் அரசியல் கைதிகூட பொதுமன்னிப் பிற்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால் சரத் பொன்சேகவிற்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பதவிகள், பட்டங்கள் எல்லாம் திருப்பி கையளிக்கப்பட்டு மேலதிகமாக பீல்டு மார்ஷல் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரிடம் சரணடைந்து மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 21,000 பேரில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் ரணில் அறிவித்திருக்கிறாரே தவிர, அவர்கள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள், அவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் அதற்கு யார் பொறுப்பு என்ற எதனையும் அவர் கூறவில்லை.

வடக்கு-கிழக்கு இணைந்த சமஷ்டி முறை யிலான தீர்வுத் திட்டம் என்று கூறப் பட்ட விடயம் ஒருபோதும் நடை முறைப் படப் போவதில்லை. இதனை நடைமுறைப்படுத்து வதில்லை என்பதில் அனைத்து சிங்களக் கட்சிகளும் உறுதியான ஒரே கொள்கையைக் கொண்டுள்ளன.