“ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனிதன், குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டு மாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக்குடும்பமும் நந்நிலையடைய வேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும்; ஒவ் வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங் களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவேவிடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்க மன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.” - குடி அரசு - தலையங்கம் - 02.05.1925

குடி அரசு ஏட்டில் அதன் முதல் நாளில் வெளியான தலையங்கம் இது. சமுதாய விடுதலைக்கான பணியைக் குடும்பங்களில் இருந்து தொடங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து - அதற்கான அடிப்படைகளை உருவாக்கும் பணியைக் காட்டாறு மேற்கொள்கிறது.

ஜாதிபலம், கல்விபலம், பணபலம், செல்வாக்கு, மேல்மட்டத் தொடர்புகள், அமைப்புகளின் பின்புலம், சமுதாய அந்தஸ்து, பெரும் எண்ணிக்கையுள்ள தோழர்களின் பலம் என எதுவுமே இல்லாத - மிக எளிய, மிகக்குறைந்த தோழர்கள் இனைந்து ஒரு இதழை இரண்டு ஆண்டுகள் நடத்தி இருப்பது - இது போன்ற இதழ்களின் சமுதாயத் தேவையை உணர்த்தியிருக்கிறது.

காட்டாறு ஏட்டுடன் தங்களைப் பிணைத்துக் கொண்ட அனைத்துத் தோழர்களின் ஆற்றல் பங்களிப்பு மற்றும் கூட்டுச் செயல்பாட்டின் விளைவையும் வெளிப்படுத்தி உள்ளது.

காட்டாறு ஏட்டிற்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஆண்டுக்கட்டணம் செலுத்திய தோழர்கள், விளம்பரங்கள் கொடுத்து ஊக்குவிக்கும் வணிகர்கள், ஆதரவாளர்கள் இதழ் தொடர்ந்து வரவேண்டுமென நினைக்கும் ஆர்வலர்கள் மற்றும் எல்லா வகையிலும் உதவி புரிகிற பெரியாரியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் காட்டாறுகுழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

“எதையும், யாரையும், சார்ந்து நிற்காமல், எந்தக்கட்டுக் குள்ளும் சிக்கமால், எமக்குத் தெரிந்த அளவில் பெரியாரைத் தற்காலச்சூழலோடு பொருத்திக் காட்டுவது” என்ற காட்டற்றின் பாய்ச்சல் தொடர, முயற்சி செய்வோம்.

- பொள்ளாச்சி சி.விஜயராகவன், உரிமையாளர் - பதிப்பாளர்

Pin It