பேலியோ உணவுமுறை என்றால் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ‘பேலியோலித்திக்’ காலத்தில் வாழ்ந்த குகை மனிதன் காலத்தைய உணவுமுறை என்று பொருள். அந்தக் குகை மனிதனின் காலத்து உணவு முற்றிலும் புலால் உணவாகவே இருந்தது. அந்த உணவு முறை மனிதர்களுக்கு எந்த வகை நோயையும், எந்த வகைக் குறைபாடுகளையும் ஏற்படுத்தவில்லை. அதன் பிறகு நம்மால் உருவாக்கப்பட்ட, அரிசி, கோதுமை, சிறுதானிய உணவுமுறைகள் மனித இனத்துக்கு மிகப்பெரும் நோய்களையும், பல குறைபாடுகளையும் உண்டாக்கியது.

 இந்தியப் பார்ப்பனர்களால், இந்தியாவில் கடந்தபல நூற்றாண்டுகளாகவே, உயர்ந்தவர்களின் உணவு முறை, உயர்ந்த உணவு முறை என்று சைவ உணவுமுறை உயர்த்திப்பிடிக்கப்படுகிறது. இந்து அமைப்புகள் முதலில் மாட்டிறைச்சிக்கு எதிரான கலவரங்களை உண்டாக்கின. இப்போது மோடி தலைமையிலான பி.ஜே.பி ஆட்சி வந்த பிறகு, மாட்டிறைச்சிக்கு மட்டுமல்ல அனைத்துவகையான இறைச்சி உணவுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. புலால் உணவு முறை மிகப்பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

 சமுதாயத்திலும், இந்து மதப் பண்பாடானது, புரட்டாசி மாதம் மற்றும், அனைத்து மாதங்களிலும் இந்து மதப் பண்டிகைகள் வரும் நாட்கள், ஒவ்வொரு வாரத்தின் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் என்று ஒரு ஆண்டின் சரிபாதி நாட்களை புலால் உணவுக்குத் தடை விதித்துள்ளது. வாரத்தில் ஞாயிறு என்ற ஒரு நாளை மட்டுமே இறைச்சி உணவுகளுக்கு ஒதுக்கியுள்ளது.

 40 வயதைக் கடந்துவிட்டாலேயே, உடலின் நன்மை கருதி சைவமுறைக்கு மாறவேண்டும் என்றநிலை எழுதாத சட்டமாகவே உள்ளது. எந்த நோய்க்கு மருத்துவம் பார்க்கச் சென்றாலும், அனைத்து வகையான மருத்துவர்களும் விதிக்கும் முதல் கட்டுப்பாடு என்னவென்றால், “அசைவத்தை நிறுத்துங்கள்” என்பது தான்.

 இந்நிலையில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களை அச்சுறுத்திவரும் நீரிழிவு, இரத்தஅழுத்தம், உடல்பருமன் போன்ற சிக்கல்களுக்கு மிகச்சரியான தீர்வு பேலியோலித்திக் கால மனிதர்களின் உணவுமுறைதான். அந்தப் பேலியோ உணவுமுறையைப் பின்பற்றினாலயே அனைத்து உடல் சிக்கல்களிலிருந்தும் விடுபடமுடியும் என்று நியாண்டர் செல்வன் போன்ற பலர் மருத்துவரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அறிந்து, உணர்ந்து அந்த உணவு முறையைப் பரப்பிவருகின்றனர்.

 பார்ப்பன உணவு முறையான சைவத்திற்கு எதிரானதும், பெரும்பான்மை மக்களின் குறைபாடுகளைத் தீர்க்கவல்லதுமான பேலியோ உணவுமுறையை - பார்ப்பனப் பண்பாட்டு எதிர்ப்பு என்ற நோக்கில் காட்டாறு ஏடு முன்னெடுக்கத் திட்டமிட்டது.

 நாம் முதலில் அந்த முறையைக் கடைபிடித்து, ஆய்வுசெய்து மக்களுக்கும் பரிந்துரைக்கலாம் என்ற நோக்கில் காட்டாறு குழு தோழர்கள் பலர் பேலியோ உணவுமுறையை, தங்களது உணவுமுறையாகப் பின்பற்றத்தொடங்கினர். வியக்கத்தக்க முறையில் பேலியே உணவு முறை நமது தோழர்களின் உடலில் நல்ல மாற்றங்களைக் கொடுத்தது. எனவே அனைத்துத் தோழர்களுக்கும், தோழர்களின் நண்பர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பேலியோ முறையைப் பரிந்துரைக்க, தோழர் பெரியாரின் பிறந்தநாளை திராவிடர் பேலியோ உணவு விழாவாகக் கொண்டாடியது.

 18.09.2016 அன்று காலை 11 மணியளவில் தோழர் மலரினியன் அவர்களின் வரவேற்புரையாற்றினார். தோழர் அரசூர் அ.ப.சிவா பேலியோ உணவுமுறை என்றால் என்ன என்பது பற்றி தெளிவான ஒரு விளக்கவுரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து ஏன் பேலியோ உணவுமுறை வேண்டும்? திராவிடர் பேலியோ என்றால் என்ன? என்பது பற்றி தோழர் தாமரைக்கண்ணன் கருத்துக்களைத் தெரிவித்தார்.

 அதைத்தொடர்ந்து, புதுடில்லி ஃபார்வர்டு ப்ரஸ் ஏடு இந்தி மொழியில் வெளியிட்டுள்ள பெரியார் எழுத்தும் பேச்சும் இந்தித் தொகுப்பு நூலின் முன்னுரையில், காட்டாறு குழுவின் பணிகளையும், பெரியாரின் கருத்துக்களுக்கு வடமாநிலங்களில் எழுந்த எதிர்ப்புகளையும், அவற்றைத் தகர்ப்பதற்காக நடந்த எதிர்வினைகளையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த இந்தி மொழி முன்னுரையின் தமிழாக்கத்தை காட்டாறு ஏட்டின் வெளியீட்டாளர் தோழர் பொள்ளாச்சி விசயராகவன் விளக்கமாக அனைவருக்கும் படித்துக்காட்டினார்.

 கோவை மாநகர மாட்டிறைச்சி வணிகர்சங்கத்தின் பொறுப்பாளரும், நிம்மதி ரெஸ்டாரண்டின் உரிமையாளருமான இஸ்மாயில், மாட்டிறைச்சியின் பயன்களையும், மாட்டிறைச்சியைச் சுற்றியுள்ள மத அரசியலையும் நடைமுறை நிகழ்வுகளைச் சான்றாக முன்வைத்து உரையாற்றினார்.

 இறுதியாக, பேலியோ உணவுமுறையின் அவசியம் பற்றியும், அதன் மருத்துவரீதியிலான பயன்களைப் பற்றியும், அந்த அறிவியல் தன்மைகளையும் பற்றி மிகத் தெளிவான விளக்கங்களை மருத்துவர் பெரியார்செல்வி வழங்கினார். தோழர்களின் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களை அளித்தார்.

 திருப்பூர் இராவணன், வேணி, அரசூர் அ.ப.சிவா, ஜீவாநகர் குமார், சண்முகம், பாலு, மணிகண்டன், பிரசாத், பல்லடம் விஜயன், வடிவேல், மணிகண்டன், நாராயணமூர்த்தி, இராஜீவ்காந்தி, கருப்புச்சாமி, வடுகபாளையம் விமல், வெங்கட்டாபுரம் பாரதி சேவூர் செந்தில்குமார், சேகர், இரமேஷ், இரவி, முதலிபாளையம் சூர்யா, உடுமலை மலரினியன், தாராபுரம் குமார், பழனி மௌ.அர.ஜவகர், செம்பட்டி இராஜா, திண்டுக்கல் பீட்டர்,ஆத்தூர் வின்சென்ட், கோபி அர்ஜுன், கூதாம்பி மூர்த்தி ஆகிய தோழர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மிகச்சரியாகச் செய்திருந்தனர். எனவே எந்தத் தனிநபரும் சிரமப்படாமல், எந்தத் தனிநபரும் முதன்மைப்படுத்தப்படாமல் விழா சிறப்பாக நடைபெற்றது.

 காட்டாறு குழுத் தோழர்களின் நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பேலியோ உணவுமுறை பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை விழா கொடுத்தது. விழாவுக்கு வந்திருந்த பல புதிய நண்பர்கள் வழக்கமான உணவு முறையிலிருந்து பேலியோ உணவுமுறைக்கு மாற விருப்பம் தெரிவித்துச் சென்றனர். தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் வேறு சில நகரங்களிலும் பேலியோ உணவுமுறை விளக்கக்கூட்டங்களை நடத்த வேண்டுமென்ற வேண்டுகோளையும் முன்வைத்துச் சென்றனர். 300 இருக்கைகள் கொண்ட அரங்கம் முற்றிலும் நிரம்பி, உட்கார இடமில்லாமல் வெளியிலும் பல தோழர்கள் நின்றாவாறே நிகழ்ச்சிகளைக் கவனித்தனர்.

 விழாவின் இறுதி நிகழ்வாக, பேலியோ முறை உணவாக மாட்டிறைச்சி வறுவல் 250 கிராம், கோழிஇறைச்சி வறுவல் 250 கிராம், இரண்டு முட்டை அனைத்தும் சேர்த்து ரூ 200 க்கு விநியோகிக்கப்பட்டன. 300 தோழர்கள் ஏற்கனவே ரூ 200 செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர். முன்பதிவு செய்யாமல் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து கட்டணம் செலுத்தியவர்களுக்கும் இறைச்சிகள் வழங்கப்பட்டன. அரிசி, கோதுமை உணவுகள், தேநீர், சிறுதானிய உணவுகள் போன்ற எவையும் இல்லாமல் முற்றிலும் இறைச்சிகள் மட்டுமே உணவாக வழங்கப்பட்டன.

Pin It