கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா? என்ற கேள்விக்கு ஒவ்வொரு தீண்டத்தக்க இந்துவும், அவன் பார்ப்பனனாக இருந்தாலும் சரி, பார்ப்பனனல்லாதவனாக இருந்தாலும் சரி ‘இல்லை, ஒருபோதும் உண்டதில்லை’ என்றே பதில் அளிப்பான். ஓர் அர்த்தத்தில் இது உண்மைதான். நீண்ட நெடுங்காலமாகவே எந்த இந்துவும் மாட்டிறைச்சி உண்டதில்லை. தனது பதில்மூலம் இந்தக் கருத்தைத்தான் தீண்டத்தக்க இந்து சொல்ல விரும்பினால் அதில் சர்ச்சைக்கு இடமேதுமில்லை. ஆனால் இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லை என்பது மட்டுமல்ல, எப்போதும் பசுவை புனிதமானதாகப் போற்றி வந்திருக்கின்றனர், பசு வதையை எக்காலத்திலும் எதிர்த்து வந்திருக்கின்றனர் என்று கற்றறிந்த பார்ப்பனர்கள் கூறும் கருத்தை ஏற்பது சாத்தியமல்ல.

   ambedkar in bombay  இந்துக்கள் ஒருபோதும் மாட்டிறைச்சி தின்றதில்லை, பசு கொல்லப்படுவதை எப்போதும் எதிர்த்து வந்திருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் என்ன?

     இது சம்பந்தமாக ரிக் வேதத்தில் இரு தொடர் வரிசைகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. இத்தொடர்களில் ஒன்றில் பசு அகினியா என்று வருணிக்கப்படுகிறது. அவை ரிக்வேதம் 1.164, 1.27; V.1.6; V.82.8; VII 69.71; X 87. அகினியா என்பதற்கு ‘கொல்லப்படக் கூடாத ஒன்று’ என்று பொருள். இதை வைத்து பசு கொல்லப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும், மத விஷயங்களில் வேதங்களின் முடிவே இறுதியானது என்பதால் ஆரியர்கள் பசுக்களைக் கொன்றிருக்க முடியாது என்றும் மாட்டிறைச்சியை உண்டிருக்க முடியாது என்றும் வாதிக்கப்படுகிறது. மற்றோர் குறிப்புகளின் தொடரில் பசு புனிதமானதாக வருணிக்கப்படுகிறது. அவை ரிக் வேதம் VI 28.1.8, VIII, 101.15. இந்த சுலோகங்களில் பசு ருத்ரர்களின் தாய் என்றும், வசுக்களின் மகள் என்றும், ஆதித்யர்களின் சகோதரி என்றும், அமிழ்தத்தின் பிறப்பிடம் என்றும் ஏற்றிப் போற்றிப் புகழப்படுகிறது. ரிக்வேதம் VIII 101-16 என்னும் மற்றொரு குறிப்பில் பசுவானது தேவி (பெண் தெய்வம்) எனப் பூஜிக்கப்படுகிறது.

     இது சம்பந்தமாக பார்ப்பனங்களிலும் சூத்திரங்களிலும் சில குறிப்புகள் காணப்படுகின்றன.

     விலங்குகளைப் பலியிடுதல், மாட்டிறைச்சி உண்ணுதல் சம்பந்தப்பட்ட இரண்டு சுலோகங்கள் சதபத பார்ப்பனத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று III 1.2.21; அது பின்வருமாறு கூறுகிறது:

“அவர் (அத்வார்யு) பின்னர் அவரைக் கூடத்தில் பிரவேசிக்க அனுமதிக்கிறார். பசு அல்லது காளையின் இறைச்சியை அவர் சாப்பிடவேண்டாம். ஏனென்றால் பசுவும் காளையும்தான் இங்கு உலகிலுள்ள யாவற்றையும் தாங்குகின்றன. தெய்வங்கள் இவ்வாறு அருள்மொழி பகர்ந்தன; உண்மையிலேயே பசுவும் காளையும்தான் இங்கு எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றன; வாருங்கள், இதர விலங்கு வகைகளுக்குள்ள சக்தி முழுவதையும் பசுவுக்கும் காளை மாட்டுக்கும் வழங்குவோம்; இதன் காரணமாக அவை மிக அதிகமாக தீனி எடுத்துக்கொள்கின்றன. எனவே, பசு அல்லது காளை மாட்டின் இறைச்சியை உண்பவர்கள் சகலவற்றையுமே உண்பவர்களாகிறார்கள். ஆகையால் அவர் பசு அல்லது காளை மாட்டு இறைச்சியைச் சாப்பிடவேண்டாம்.”

     மற்றொரு சுலோகம் சதபத பார்ப்பனத்தில் 1, 5, 17, 29 இல் இடம் பெற்றுள்ளது. விலங்குகள் பலியிடப்படுவதை அது கண்டிக்கிறது; அறநெறி அடிப்படையில் அது இவ்வாறு செய்கிறது.

     இதே போன்றதொரு கருத்து ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தில் 1, 5, 17, 29 இல் எடுத்துரைக்கப்படுகிறது. பசு இறைச்சி சாப்பிடுவதற்கு ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் பொதுத்தடை விதிக்கிறது.

     இதுதான் இந்துக்கள் ஒருபோதும் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்ற வாதத்துக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் சான்று. இந்த சான்றிலிருந்து என்ன முடிவுக்கு வரமுடியும்?

     ரிக்வேத சான்றைப் பொறுத்தவரையில் அதன் முடிவு சுலோகங்களைத் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவாக, அவற்றிற்குத் தவறாக அர்த்தம் கொண்டதன் விளைவாகப் பெறப்பட்ட முடிவாகவே உள்ளது. ரிக் வேதத்தில் பசுவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் அகினியா எனும் பெயரடைச் சொல் பால்தரும் பசு என்பதைக் குறிக்குமே அன்றி, பசு கொல்வதற்குரிய பிராணி அல்ல என்பதைக் குறிக்காது. ரிக் வேதத்தில் பசு போற்றிப் பூஜிக்கப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் இவ்வாறு பசுவுக்கு மதிப்பும் மரியாதையும் தருவது இந்தோ-ஆரியர்கள் போன்ற ஒரு விவசாய சமூகத்தினரிடமிருந்து முற்றிலும் எதிர்பார்க்கக் கூடியதே; இதில் வியப்பேதும் இல்லை. எனினும் அதேசமயம் பசு இவ்வாறு ஒருபுறம் வணங்கப்பட்டாலும் இன்னொருபுறம் உணவுக்காக அதைக் கொல்வதற்கு ஆரியர்கள் தயங்கவில்லை என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். அதிலும் பசு புனிதமானது என்பதாலேயே அது கொல்லப்பட்டது என்பதில் ஐயமில்லை. இதுபற்றி திரு.கானே கூறுவதாவது:

“வேத காலத்தில் பசு புனிதமானதாகவே கருதப்பட்டு வந்தது. பசுவின் இந்தப் புனிதத்தன்மை காரணமாகவே அதன் இறைச்சியைச் சாப்பிட வேண்டும் என்று வாஜசனேயி சம்ஹிதையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.” (தர்ம சாஸ்திர விசார் (மராத்தி) பக். 180.)

     ரிக்வேதகால ஆரியர்கள் உணவுக்காக பசுக்களைக் கொன்றார்கள் என்பதையும், அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உண்டார்கள் என்பதையும் ரிக்வேதத்திலிருந்தே தெள்ளத்தெளிவாகக் காண்கிறோம். ரிக் வேதத்தில் (X.86.14) இந்திரன் கூறுகிறான்: “அவர்கள் மொத்தம் பதினைந்து பசுக்களையும் இருபது காளை மாடுகளையும் சமையல் செய்தார்கள்.” அக்கினிக்காக குதிரைகளும், எருதுகளும், காளை மாடுகளும், கன்று ஈனாப்பசுக்களும் ஆட்டுக் கடாக்களும் பலியிடப்பட்டன என்று ரிக்வேதம் (X 91.14) கூறுகிறது. வாள் கொண்டோ அல்லது கோடரி கொண்டோ பசு கொல்லப்பட்டதாக ரிக் வேதத்திலிருந்து (X 72.6) தெரிகிறது.

     சதபத பார்ப்பனத்தின் சான்றுரையைப் பொறுத்தவரையில் அது முடிவானது என்று கூறமுடியுமா? அவ்வாறு கூறமுடியாது என்பது தெளிவு. ஏனென்றால் இதற்கு மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கும் பல சுலோகங்கள் ஏனைய பார்ப்பனங்களில் காணப்படுகின்றன.

     இதற்கு ஒரே ஒரு உதாரணம் மட்டுமே இங்கு கூறுவோம். தைத்ரீய பார்ப்பனத்தில் வகுத்துரைக்கப்பட்டிருக்கும், காமியாஷ்திஸ்களில், காளைமாடுகளும் பசுக்களும் பலியிடப்படவேண்டும் என்று கூறப்பட்டிருப்பது மட்டுமின்றி, எந்தெந்த தெய்வங்களுக்கு எவ்வகையான காளைகளும் பசுக்களும் பலியிடப்படவேண்டும் என்பதும்கூட விவரிக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக விஷ்ணுவுக்கு குள்ளமான காளைகளையும், விரித்ரனை அழித்த இந்திரனுக்கு கீழ்நோக்கிய கொம்பும் நெற்றியில் வெண்புள்ளியும் கொண்ட எருதும், புஷனுக்கு கருப்புப்பசுவும், ருத்ரனுக்கு செந்நிறப்பசுவும் பலியிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. தைத்ரீய பார்ப்பனம் பஞ்சாச்சரதிய – சேவை எனும் மற்றொரு வகையான உயிர்ப்பலியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. திமிலில்லாத குட்டையான ஐந்து வயது நிரம்பிய பதினேழு எருதுகளையும், அதே எண்ணிகையில் மூன்று வயது நிரம்பிய கன்று ஈனாத இளம் பசுக்களையும் பலியிடுவது இதில் மிக முக்கியமான அம்சமாகும்.

ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்கு மாறாக, பின்கண்ட விஷயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும்:

முதலாவதாக, அதே சூத்திரத்தில் மாறுபட்டதொரு கருத்து காணப்படுகிறது. 14.15.29 இல் அந்த சூத்திரம் பின்வருமாறு கூறுகிறது:

“பசுவும் காளையும் புனிதமானவை, ஆகையால் அவற்றின் இறைச்சியை உண்ண வேண்டும்”

     இரண்டாவதாக, கிரகிய சூத்திரங்களில் கூறப்பட்டிருக்கும் மதுபார்கத்தைப் பற்றி இங்கு குறிப்பிடுவது முக்கியம். முக்கியமான விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பது ஆரியர்களிடையே ஓர் அடிப்படையான ஆசாரமாகவும், நிலைபெற்றுவிட்ட ஒரு வழக்கமாகவும், வினைமுறையாகவுமே ஆகிவிட்டது. இந்த விருந்தினர் உபசரிப்பில் மதுபார்கம் பற்றிய விரிவான வருணனைகள் பல்வேறு கிரகிய சூத்திரங்களில் காணலாம். மதுபார்கம் வழங்கி உபசரிப்பதற்கு மிகவும் தகுதி படைத்தவர்கள் பின்கண்ட ஆறுபேர்கள் என்று பெரும்பாலான கிரகிய சூத்திரங்கள் கூறுகின்றன. அந்த ஆறுபேர் வருமாறு: 1. வினை முறை சடங்குகளைச் செய்ய அழைக்கப்படும் ரித்விஜன் அல்லது பார்ப்பனன் 2. ஆச்சாரியன் அதாவது ஆசிரியர் 3. மணமகன் 4. மன்னன் 5. குருகுலத்தில் இப்போதுதான் தனது படிப்பை முடித்த ஸ்னதகன் அதாவது மாணவன், 6.விருந்தோம்புநருக்கு மிகவும் வேண்டியவர். சில கிரகிய சூத்திரங்கள் அதிதியை இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றன. ரித்விஜன், மன்னன், ஆச்சாரியன் தவிர ஏனையோருக்கு ஆண்டுக்கு ஒருமுறைதான் மதுபார்கம் வழங்கப்பட வேண்டும். அனால் அதேசமயம் ரித்விஜன், மன்னன், ஆச்சாரியன் ஆகியோருக்கு அவர்கள் வருகை தரும்போதெல்லாம் மதுபார்கம் அளித்துக் கௌரவிக்க வேண்டும்.

     இந்த மதுபார்கம் எதைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது? மதுபார்கம் பல்வேறு பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தேனும் தயிரும் அல்லது நெய்யும் தயிரும் கலந்து தயாரிக்கலாம் என்று அஸ்.கிர. மற்றும் அப.கிர (13-10) சூத்திரங்கள் கூறுகின்றன. பர்.கிர. 13 போன்று வேறுசில சூத்திரங்கள் தயிர், தேன், வெண்ணெய் கொண்டு இதனைத் தயாரிக்க வேண்டும் என்று நிர்ணயித்துக் கூறுகின்றன. மேலே கூறிய மூன்று பொருள்களைக் கொண்டோ அல்லது அத்துடன் வறுத்த யவாதானியம் மற்றும் பார்லியைச் சேர்த்தோ மதுபார்கம் தயாரிக்கலாம் என்று சில சூத்திரங்கள் தெரிவிக்கும் கருத்தை அப.கிர. (13.11 – 12) குறிப்பிடுகிறது. தயிர், தேன், நெய், தண்ணீர், அரைத்த தானியம் ஆகிய ஐந்தில் ஏதேனும் மூன்றைக் கொண்டு மதுபார்கம் தயாரிக்கலாம் என்று ஹிர்.கிர. 12.10.12 யோசனை கூறுகிறது. கௌஷியா சூத்திரம் (92) ஒன்பது வகையான கலவைகளைப் பற்றிப் பிரஸ்தாபிக்கிறது. அவை வருமாறு பிரமா (தேன், தயிர்) அய்ந்தரா (பாயசம்), சௌம்யா (தயிர், நெய்), பௌஸ்னா (நெய், மந்தா), சரஸ்வதா (பால், நெய்), மௌசலா (மது மற்றும் சௌத்ரமனை, ராஜசூய யாகங்களில் மட்டும்தான் இவை பயன்படுத்தப்படும்), பரிவ்ரஜகா (நல்லெண்ணெய், எள் பிண்ணாக்கு), மதுபார்கம் இறைச்சி சேர்க்காமல் தயாரிக்கப்படக்கூடாது என்று வேதங்கள் கூறுவதாக மாதவ கிரகிய சூத்திரம் (1.9.22) பகர்கிறது; பசு இல்லையென்றால் ஆட்டிறைச்சியோ பாயசமோ தரலாம் என்று அது பரிந்துரைக்கிறது; வேறு எந்த இறைச்சியை வேண்டுமானாலும் தரலாம் என்று ஹிர்.கிர. 1.13.14 கூறுகிறது. பசு இல்லாதபோது வெள்ளாடு அல்லது செம்மறியாட்டு மாமிசத்தையோ அல்லது மான் போன்ற வனவிலங்குகளின் இறைச்சியையோ தரலாம், ஏனென்றால் இறைச்சி இல்லாமல் எந்த மதுபார்க்கத்தையும் தயாரிக்க முடியாது என்கிறது போத.கிர. (1.2.51 – 54); இறைச்சி எதையும் தர முடியவில்லை என்றால் அரைத்த தானியத்தை சமைத்துக் கொடுக்கலாம்.

     ஆக, மதுபார்கத்தில் இறைச்சி அதிலும் குறிப்பாக பசு இறைச்சி இடம்பெறுவது இன்றியமையாதது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

     விருந்தினர் உபசரிப்புக்காகப் பசுக்களைக் கொள்வது என்பது இத்தகைய விருந்தினரை ‘கோ-கினா’ என்று கூறுமளவுக்குப் பெரிதும் அதிகரித்தது; பசுவைக் கொள்பவர் என்று என்று இந்த பதத்திற்குப் பொருள். பசுக்கொலையைத் தவிர்ப்பதற்காக அஷ்வலாயன கிரகிய சூத்திரம் ஒரு யோசனை தெரிவித்துள்ளது; அதாவது, விருந்தினர் வரும்போது அவருக்குப் பசு இறைச்சி வழங்கி உபசரிக்கும் ஆசாரத்திலிருந்து தப்பும் பொருட்டு பசுவை வெளியே துரத்தி விட வேண்டும் என்று அந்த சூத்திரம் கூறுகிறது. (1.24.25)

     மூன்றாவதாக, பசுவதை கூடாது என்ற ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தின் கருத்தை மறுதலிக்கும் வகையில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் வினைமுறைகளை அஷ்வலாயன கிரகிய சூத்திரம் பின்வருமாறு வருணிக்கிறது: (கானேயின் தொகுதி II, பாகம் I, பக்கம் 545.)

  • அதன் பின்னர் அவன் பின்கண்ட நிவேதனப் பொருள்களை பிணத்தின் மீது வைக்க வேண்டும்.
  • வலது கையில் குஹூ எனும் கரண்டி.
  • இடது கையில் உபபிரித் எனும் மற்றொரு கரண்டி.
  • அவனது வலதுபுறத்தில் சிபியா எனப்படும் மரத்தாலான உயிர்ப்பலி வாள். இடதுபுறத்தில் அக்னிஹோத்ரவானி (அதாவது அக்னிஹோத்ர படையல்களைப் பரிமாறுவதற்குப் பயன்படுத்தப்படும் அகப்பைகள்)
  • அவனது மார்பில் துருவா எனப்படும் படையல் செய்யும் பெரிய அகப்பை.
  • அவனது நாசியின் இருபக்கங்களிலும் சிறுபடையல்கள் அகப்பைகளான ஸ்ருவாக்கள்.
  • அல்லது ஒரே ஒரு ஸ்ருவா மட்டும் இருந்தால் இரு துண்டுகளாக உடைத்து வைக்க வேண்டும்.
  • அவனது இரு காதுகளிலும் இரண்டு பிரசித்ரஹரனாக்கள் (பார்ப்பனனுக்குரிய நிவேதன உணவில் ஒரு பகுதி கொண்ட கலங்கள்) வைக்கப்பட வேண்டும்.
  • அல்லது ஒரே ஒரு பிரசித்ரஹரனா மட்டும் இருந்தால் அதனை இரண்டு துண்டாக உடைத்து வைக்க வேண்டும்.
  • அவனது வயிற்றின் மீது பத்ரி எனப்படும் கலத்தை வைக்கவேண்டும்.
  • நிவேதன உணவில் ஒரு பகுதியை கிண்ணத்தில் நிரப்பி வைக்க வேண்டும்.
  • அவனது மறைவிடங்களில் சாமி எனும் கோல்,
  • அவனது தொடைகளில் தீமூட்டுவதற்கான இரண்டு சிறுகட்டைகள்.
  • அவனுடைய கால்களில் உரலும் உலக்கையும்
  • அவனுடைய பாதங்களில் இரண்டு கூடைகள்.
  • அல்லது ஒரே ஒரு கூடை மட்டும் இருந்தால் அதனை இரண்டாக உடைத்து வைக்க வேண்டும்.
  • உட்புரையுள்ள சாதனங்களில் வெண்ணெய்த் துளிதுளியாக நிரப்பி வைக்க வேண்டும்.
  • இறந்து போனவனின் புதல்வன் எந்திரக் கல்லின் மேற்பகுதியையும் கீழ்ப் பகுதியையும் தானே தூக்க வேண்டும்.
  • சாதனங்கள் இரும்பு, தாமிரம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்; மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • அவன் பசுவின் இரைப்பையோடு குடலையும் சேர்த்து வெளியே எடுத்து இறந்தவனின் தலையையும் வாயையும் அவற்றைக் கொண்டு மூடவேண்டும். அப்போது ‘பசுக்களிடமிருந்து தோன்றும் அக்னியிடமிருந்து உன்னைக் காக்கும் கவசமாக இது விளங்கட்டும்’ (ரிக்வேதம் X. 16.7) என்று கூற வேண்டும்.
  • பசுவின் சிறுநீரகங்களை எடுத்து, சர்மனன் வேட்டை நாய்கள் போன்ற புதல்வர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வாயாக என்று கூறியவாறு (ரிக் வேதம் X. 14.10) பிணத்தின் வலது கையில் வலது சிறுநீரகத்தையும் இடது கையில் இடது சிறுநீரகத்தையும் வைக்க வேண்டும்.
  • பசுவின் இருதயத்தை இறந்தவனின் இருதயத்தின் மீது வைக்கவேண்டும்.
  • இரண்டு கைப்பிடியளவு மாவு அல்லது அரிசியைப் பயன்படுத்தலாம் என்று சில ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
  • சிறுநீரகங்கள் இல்லையென்றால்தான் இவ்வாறு செய்ய வேண்டும் என்று சில ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
  • இவ்வாறு முழுப்பசுவையும் (அதன் பல்வேறு உறுப்புகளையும் இறந்தவனின் அதேபோன்ற உறுப்புகள் மீது வைத்து) விநியோகித்தபிறகு, பசுவின் தோலை பிணத்தின் மீது போர்த்த வேண்டும்; பின்னர் பிரனீதநீரை எடுத்துச் செல்லும்போது, ‘அக்னி’ இந்தக் கிண்ணத்தைக் கவிழ்த்து விடாதே’ என்று கூறவேண்டும். (ரிக்வேதம் X. 16.8)
  • இடதுகாலை முழந்தாளிட்டு, தட்சிண நெருப்பில் நைவேத்தியத்தை ஆகுதி செய்யவேண்டும்; அவ்வாறு செய்யும்போது பின்வருமாறு ஓதவேண்டும்: ‘அக்னி ஸ்வாஹா. காமா ஸ்வாஹா, உலகம் ஸ்வாஹா, அனுமாதி’ ஸ்வாஹா!
  • இறந்தவனது நெஞ்சில் ஐந்தாவது திருப்படையல் செய்ய வேண்டும்; அப்போது பின்கண்டபடி செபிக்கவேண்டும்; ‘இதிலிருந்துதான் நீ பிறந்தாய்’ இப்போது அவன் உன்னிலிருந்து பிறக்கட்டும். வானுலகங்கள் ஸ்வாஹா!

அஷ்வலாயன கிரகிய சூத்திரத்தில் காணப்படும் மேற்கண்ட பகுதிகளிலிருந்து என்ன தெரிகிறது? ஒருவர் இறந்தால் அவனது உடல் புதைக்கப்படுவதற்கு முன்னர் பசுபோன்ற பிராணி கொல்லப்படுவதும், அதன் உறுப்புகள் இறந்தவனின் சம்பந்தப்பட்ட உறுப்புகள் மீது வைத்து திருப்படையல் செய்வதும் இந்தோ-ஆரியர்களிடையே ஓர் ஆசாரமாகக் கைக்கொள்ளப்பட்டு வந்தது என்பதையே இது காட்டுகிறது.

இவ்வாறு பசுவதை பற்றியும் மாட்டிறைச்சி உண்பதைப் பற்றியும் பார்ப்பனங்களிலும் சூத்திரங்களிலும் வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. இவற்றில் எதை உண்மை என்று ஏற்றுக் கொள்வது? பசுவதையையும் மாட்டிறைச்சி உண்பதையும் இந்துக்கள் எதிர்த்தார்கள் என்று சதபத பார்ப்பனமும் ஆபஸ்தம்ப தர்ம சூத்திரமும் கூறியிருப்பதை அளவுக்கு மீறி பசுக்களைக் கொல்ல வேண்டாம் என்ற வெறும் அறிவுரைகளாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, பசுவதையைத் தடை செய்யவேண்டும் என்று அவை கோருவதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. இதுதான் சரியான கருத்தாக இருக்கமுடியும். பசுவதையும் மாட்டிறைச்சி உண்பதும் சர்வசாதாரண பழக்கமாகிவிட்டது என்பதையே இந்த அறிவுரைகள் உண்மையில் புலப்படுத்துகின்றன. இவ்விதம் எத்தனை எத்தனையோ நல்லுரைகள் கூறப்பட்டபோதிலும் பசுவதையும், மாட்டிறைச்சி உண்பதும் தொடர்ந்து நீடிக்கவே செய்தன. இந்த உபதேசங்கள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே பயனற்றுப் போயின. ஆரியர்களின் மாபெரும் ரிஷியான யாக்ஞவல்கியரின் போக்கிலிருந்து இதனைத் தெரிந்துகொள்ளலாம். மேலே சதபத பார்ப்பனத்தில் கூறப்பட்டிருக்கும் வாசகம் உண்மையில் யாக்ஞவல்கியருக்கு செய்யப்பட்ட ஒரு நற்போதனையாகவே தோன்றுகிறது. இதற்கு யாக்ஞயல்கியர் அளித்த பதில் என்ன? இந்தப் போதனையை செவிமடுத்துக் கேட்ட பிறகு யாக்ஞவல்கியர் பின்கண்டவாறு பதிலளித்தார்:

“என்னைப் பொறுத்தவரையில் மாட்டிறைச்சி மிக மென்மையாக இருந்தால்தான் சாப்பிடுவேன்.”

ஒரு காலத்தில் இந்துக்கள் பசுக்களைக் கொன்றார்கள் என்பதும், அவற்றின் இறைச்சியை உண்டார்கள் என்பதும் பௌத்த சூத்திரர்களில் யக்ஞங்களைப் பற்றிக்கூறும் வருணனைகளிலிருந்து மிகத் தெள்ளத்தெளிவாக நிருபணமாகிறது; இந்த சூத்திரங்கள் எல்லாம் வேதங்கள், பார்ப்பனங்கள் காலத்துக்கு மிகவும் பிற்பட்ட காலத்தவையாகும். அந்நாட்களில் பசுக்கொலை மிகப் பயங்கரமான பரிமாணத்தை எய்திருந்தது. மதத்தின் பெயரால் பார்ப்பனர்கள் எத்தனைஎத்தனை ஆயிரம் பசுக்களைக் கொன்று குவித்தார்கள் என்பதற்குக் கணக்கே இல்லை! இந்தக் கொலை எந்த அளவுக்கு நடைபெற்றிருக்கிறது என்பதை பௌத்த இலக்கியங்களில் காணப்படும் திகிலூட்டும் விவரங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக குகதாந்த சூத்திரத்தை எடுத்துக்கொள்வோம். குததாந்தா என்ற பார்ப்பனனுக்கு மிருகங்கள் பலியிடப்படும் கோரக் கொடுமையை இந்த சூத்திரத்தில் புத்தர் உள்ளம் உருக எடுத்துரைக்கிறார். பின்னர் அவர் பார்ப்பனர்கள் கொலைபழியோடு நடத்தும் யாகங்களைப் பரிகாசம் செய்யும்வகையில் வேறோடு வேள்வியைப் பற்றி இங்கு விவரிக்கிறார்.

“மேலும் ஓ பார்ப்பனரே, அந்த வேள்வியில் எந்த எருதும் பலியிடப்படவில்லை; வெள்ளாடுகளோ, கோழிகளோ, கொழுத்த பன்றிகளோ அல்லது வேறு எந்த உயிர்ப்பிராணிகளோ கொல்லப்படவில்லை. கம்பங்களாகப் பயன்படுத்தப்படுவதற்கு எந்த மரங்களும் வெட்டப்படவில்லை; வேள்வி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் தூவுவதற்காக தர்ப்பைப் புல் எதுவும் வெட்டப்படவில்லை. அங்கு பணிக்கமர்த்தப்பட்டிருக்கும் அடிமைகளும், தொழிலாளர்களும், தூதர்களும் பிரம்பு கொண்டு அடித்து வேலை வாங்கப்படவில்லை; அவர்களும் முகத்தில் கண்ணீர் வழிந்தோட அழுதுகொண்டே வேலை செய்யவில்லை.”

புத்தர் தன்னைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவந்தமைக்காக குகதாந்தா அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பார்ப்பனர்கள் நடத்தும் வேள்விகளில் விலங்குகள் எவ்வளவு குரூரமாகவும் பெரும் எண்ணிக்கையிலும் பலியிடப்படுகின்றன என்பதை விவரித்த பிறகு பின்கண்டவாறு கூறுகிறார்:

“வணங்குதற்குரிய புத்தரையும் அவரது கோட்பாட்டையும் கட்டளைகளையும் எனது வழிகாட்டியாக ஏற்கிறேன். அவர் என்னை தமது சீடராக ஏற்றுக்கொண்டால் என்னுடைய வாழ்நாள் முழுதும் அவரை என் ஆசானாகப் பின்பற்றுவேன். ஓ, கௌதமரே, நான் 700 காளைகளையும், 700 விதையடிக்கப்பட்ட எருதுகளையும், 700 இளம்பசுக்களையும், 700 வெள்ளாடுகளையும், 700 செம்மறியாடுகளையும் விடுவிப்பேன். அவற்றுக்கு உயிர்ப்பிச்சை அளிப்பேன். அவை பசும்புல்லை மேயட்டும்; சுத்தமான நீரைப்பருகட்டும். அங்கு அலைபாயும் குளிர்ந்த மந்தமாருதத்தை அனுபவித்து இன்புறட்டும்.”

     கோசலை மன்னன் பசனதி நடத்திய ஓர் யக்ஞத்தைப் பற்றிய வருணனை சம்யுத நிகயதில் (III-1-9) காணப்படுகிறது. ஐநூறு காளைகளையும், ஐநூறு கன்றுக்குட்டிகளையும், ஏராளமான, கன்றுஈனாத இளம்பசுக்களையும், வெள்ளாடுகளையும், செம்மறியாடுகளையும் அந்த மன்னன் பலிகொடுத்ததாகக் கூறப்படுகிறது.

     இந்துக்கள் – பார்ப்பனர்களும் சரி, பார்ப்பனரல்லாதவர்களும் சரி – ஒரு காலத்தில் மாமிசம் அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாக இருந்து வந்தனர் என்பது இவை யாவற்றிலுமிருந்தும் தெள்ளத்தெளிவாகத் தெரியவருகிறது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 11)