(Boycott Kitchen, Boycott Cooking)

காட்டாறு இதழின் சார்பாக Boycott Kitchen, Boycott Cooking என்ற முழக்கம் கடந்த மார்ச் மாதம் முதல் பல வழிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதை மக்கள் எப்படித்தான் பார்க்கிறார்கள் என்று அறிய, சிலருடன் கலந்துரையாடினேன். மாமியார்கள், அம்மாக்கள், பிள்ளைகள், என மூன்று தலைமுறையிடமும் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பெரும்பாலானோர் கூறிய கருத்துகளில் உள்ள ஒற்றுமையின் சுருக்கமான வடிவம்தான் இது.

“கலச்சாரம், பாரம்பரியத்தை நிறுத்தக் கூடாது. தாய்மாமன் உறவு என்றறென்றும் வேண்டும். குழந்தைக்குக் காதுகுத்தி அழகு பார்க்க வேண்டும். உறவுகளில் நெருக்கம் உண்டாகவும், பணம், பொருள் சேர்ப்பதற்கு இவ்விழா வேண்டும். இவ்விழா தொழிலாக ஆக்கவேண்டாம் என்றால். அவரவர் விருப்பம்போல் எளிமை யாகவோ, பெரிய விழாவாகவோ வைத்துக்கொள்ளலாமே தவிர, நிறத்த முடியாது.” என்றனர் சிலர்.

“ஆணுக்கும்தானே காதுகுத்துகிறார்கள்? இங்கு இருந்துதான் அலங்காரம் தொடருது என்றால் ஆணுக்கும் தானே அலங்காரம் தொடரவேண்டும். ஆண்கள் அலங்காரம் பண்ணிக் கொள்வது இல்லையே.?

“காது குத்துவதில் அறிவியல் இருப்பதாகவும், அந்த அறிவியலின்படி அனைவரும் காது குத்த வேண்டும் என்பதற்காக குலதெய்வக்கோவிலில் மொட்டையடித்துக் காதுகுத்த வேண்டும் என்று சொல்லி வைத்தது நடைமுறையாகிவிட்டது” என்று கூறகிறார்கள்.

அகரவரிசைபடி:

“அய்யய்யோ! என் மகள் டியூசன் படிக்கும் இடத்தில் சில பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து ஓரே ஒரு பையன் மட்டும் படிக்கிறான். அதனாலயே நான் அவளை நிறுத்திடலாமுன்னு யோசிக்கிறேன். இப்போ காலம் கெட்டுக்கிடக்கு பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. நம்ம காலச்சாரம், பண்பாட்டுக்கு இதெல்லாம் ஒத்துவராது. அப்புறம் ஆண்களுக்கு மூளையில் ஏதோ ஒரு திரவம் சுரக்குதாம். அது பெண்களை கவரத்தூண்டுதாம். அதனால பயமா யிருக்கு, சிறு வயதில் மட்டும் சாத்தியமாகலாம் வயது வந்த பின்பு கூடவே கூடாது.” என்ற பதட்டம்தான் மேலோங்கி உள்ளது.

இன்னும் சிலர் கண்டிப்பாக வரவேற்க்க வேண்டியதுதான் என்றும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக அமர்ந்தால் சகஜமாக பழக. சமத்துவம் தோன்ற வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

பூப்புனித நீராட்டு விழா:

“இதெப்படி பெண்களை இழிவு படுத்தும்? சின்னப்பிள்ளையா இருந்தவ, பெரிய மனுசியானது. சந்தோசமான விசயம்தான? அத விழாவாக் கொண்டாட வேண்டாமா? ஒரு பெண் திருமணத்துக்குத் தாயாராகி விட்டாள் என்று மாமன்முறை உள்ளவர்களுக்கும், மற்றவர்களுக்கும் அறிவிக்கும் அறிவிப்பாக இது தொடங்கப்பட்டது என்று சொல்வார்கள். இது பெண் முதல்முறை தீட்டாவது. இதை இப்படிச் செய்துதான் தீட்டுக் கழிக்க வேண்டும்.  அப்புறும் விழாவாக நடத்தினால் மொய்ப்பணம், பொருட்கள் சேரும். எது எப்படி யிருந்தாலும் நமது பாரம்பரியம், கலாச்சாரம் இது தான். இது எப்படிப் பெண்னை இழிவு படுத்தும்?” என்கின்றனர் பெண்களைப்பெற்ற அம்மாக்கள்.

சில கல்லூரிப் பெண்களோ, “எங்களுக்கு ரீசன் எல்லாம் தெரியாது. பூப்பர்ட்டி ஃபங்சனில் நாங்க தான் (நான்) ஹீரோயின். அது எனக்கான ஃபங்ஷன்.  அது என்னை முன்னிலைப்படுத்துகிறது. எனக்குச் சந்தோசமாக இருக்கிறது.” என்றளவில் மட்டும் பார்க்கிறார்கள்.

சிலர், “இந்தக்காலத்தில் இதை பப்பளி சிட்டியாக்க வேண்டிய அவசியமில்லை, அசிங்கமாக உள்ளது” என்றும் கூறினர்.

நகை - அலங்காரம்:

“ஏம்மா,  பெண்களுக்குன்னு  தனிப்பட்ட சந்தோசம்னா இது ஒன்றுதான், பொதுவா வெளியில் போகும்போது பூ வச்சு, பொட்டுவச்சு, நகையெல்லாம் மாட்டி, பட்டுபுடவை கட்டி, மங்களகரமா போனாதான் புகுந்த வீட்டில் சந்தோசமா இருக்கிறதா அர்த்தம் கணவன் நல்லா பார்த்துக்கிறதா அர்த்தம் அப்படியிருக்கிறதுதான் ஒரு குடும்பப்பொண்ணுக்கு அழகு, இலட்சுமிகரமா இருக்கும்.”

“நம்ம கலாச்சாரத்தில பொம்பளன்னா இப்படித்தான் இருக்கனும்னு இருக்கு. அதை மாத்தக் கூடாது. இதெல்லாம் இல்லாம இருந்தா, பார்க்கிறவர்களுக்கு இந்தக் குடும்பம் ரொம்ப வறுமையில் இருக்கு என்று கேவலமாகப் பார்ப் பாங்க.”

“ஒரு பெண் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள விரும்புவது அவளுடன் பிறந்த குணம் அவளுடைய அந்தச் சுதந்திரமான ஆசை, கலாச்சாரத்தின் ஒரு அம்சம்” என்று சத்துகுருவே (ஜக்கிவாசுதேவ்) சொல்லியிருக்கிறார்.

“ஆனா இப்பவெல்லாம் நிறைய மாறிட்டாங்க.. இந்த மாதிரி அலங்காரத்திற்க்கு பதில், வேற மாதிரி தன்னை மார்டனா மேக்கப் பண்ணிக்கிறாங்க.” என்று அம்மாக்கள் கூற…..

இளம்வயதுப் பெண்களோ, தன்னை அழகு படுத்துவது தனக்குப் பிடித்திருக்கிறது. மேலும் இது தங்களை மெருகூட்டுவதாகவும், “அலங்காரம் இல்லாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா? இதில் எவ்வளவு ஸ்டைல் இருக்கு தெரியுமா? ஓவ்வொரு ஃபங்ஷனுக்கும் தனித்தனியாக ட்ரஸ் கோட் இருக்கு” என்று மிக ஏக்கத்துடன் கூறகிறார்கள்.

இருபால் கல்லூரி விடுதி:

பலர் முகச்சுழிப்புடன், “இது சரிப்படாது. கல்லூரி, விடுதி இரண்டிலும் ஆண், பெண் சேர்ந்து இருப்பது இன்றைய சுழலில் சரிவராது. இது ஃபாரின் கிடையாது. நம்மநாடு கலச்சாரம்-பண்பாடு உள்ள நாடு, அது மட்டுமில்லை. பாலியல் பிரச்சனை அதிகமாக நடக்குது பொம்பிளப் பிள்ளைக்குப் பாதுகாப்பு வேணும். கல்லூரி வரைக்கும் கூட சேர்ந்து படிக்கலாம், விடுதி வேண்டாம்.” என்கிறார்கள்..

சிலர், “தொடக்கக்கல்வியில் இருந்தே ஆண்-பெண் சகஜமாகப் படித்து வளர்ந்தால், இன்று கல்லூரியில் விடுதி சரி. தொடக்கக் கல்வியில் இருந்து பிரித்துவிட்டு, ஆண்-பெண் சகஜமாகப் பழக விடாமல் வளர்த்த சமூகத்தில், கல்லூரி விடுதியில் சேர்த்துவிட்டால் தவறுகள் நடக்கத்தான் செய்யும்.”

“அவரவர் செல்ஃப் கண்ட்ரோலா இருந்தால் பிரச்சனையில்லை” என்று சிறியவர்களும் பெற்றோர்களும் சொல்கிறார்கள்.

சில கல்லூரி மாணவிகள் “அய் ஜாலி” என்று மகிழ்ச்சியாக கூறகிறார்கள்.

இருசக்கரவாகனம்

பெரும்பாலும் “பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதாலும், அறுவைச் சிகிச்சைசெய்து கொள்வதாலும், பெண்களுக்குக் குறுக்கு எலும்பு சிறுத்துயிருப்பதாலும், பலம் குறைந்த பெண்கள் பெரியவண்டி ஓட்டுவது கஷ்டம். புடவை கட்டும் பெண்கள் எப்படி பெரிய வண்டி ஓட்டுவார்கள்? சின்ன வண்டிதான் பேலன்ஷ் பண்ண வசதியாக இருக்கும். இல்லையென்றால் ஆண்களையே எதிர்பார்க்குபடி ஆகிவிடும்.”

சிலர் “அவரவர் பலத்தையும், விருப்பத்தையும் பொருத்தது. தடைசெய் என்று சொல்லக்கூடாது. பெண்கள் அழகை விரும்புபவர்கள் என்பதால்தான் அவர்களுக்கென வடிவமைத்து விற்பனையைப் பெருக்கிக்கொள்கிறார்கள்.”

சிலர், “அப்படிப் பெண்களுக்கான வண்டியே நிறுத்தியாச்சுனா, வேற வழியில்லாமல் பெண்கள் பெரிய வண்டி ஓட்டக் கத்துக்குவாங்க, ஆடை களையும் மாத்திப்பாங்க. வருங்காலங்களில் சாத்தியமாகலாம்” என்றனர்.

தனித்து வாழும் பெண்

பெரும்பாலனோர், “திருமணத்திற்குப் பெண்ணின் சம்மதம், சுயவருமானம் அவசியம் தேவை. இன்றைய காலத்தில், கணவன் - மனைவி இருவரும் சம்பாதித்தால்தான் சிரமம் இல்லாமல் காலம் தள்ள முடியும். ஆனால் அவர்களுக்குப் பாதுகாப்புக்கு விடுதி கொடுத்தால், நிறையப் பெண்கள் விடுதிக்கு வந்து விடுவார்கள். குடும்பங்கற செட் அப்பே சீரழிந்து போகும். அவங்களே தனியாப் போகணு முனு முடிவெடுத்த பிறகு அவங்க எக்கேடு கெட்டா நமக்கென்ன? அரசாங்கம் எதுக்குத் தனியா விடுதி எல்லாம் நடத்தனும்?” என்று ஆதங்கப்படுகிறார்கள்.

“அது தனிநபர் விருப்பம். ஒவ்வொருத்தருக்கும் தனி மனித ஒழுக்கம் இருந்தால்தான் இந்த மாதிரி பெண்களுக்குப் பாதுகாப்பு” என்கின்றனர் சிலர்.  

பலர், “வரவேற்கக் கூடியவை. விடுதி அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

கருத்தடை

பெரும்பாலானோர்,  கோபத்துடன் “திருமணத்திற்கு முன்பே கருத்தடைசெய்யறது தப்பு. ஒன்னு ரெண்டு குழந்தையோடு நிறுத்துங்கள் என்று கூறலாமே தவிர, முன்பே கருத்தடை செய்யக் கூடாது. குழந்தை வேணாம்ன்னா எதுக்கு கல்யாணம்? யாருக்காக வேலைக்குப் போகணும், சம்பாதிக்கணும்? இது இல்லாம வாழ்க்கை எதுக்கு? தேவையில்லையே... வாழ்வதற்குத் தனக்கு ஒரு பிடிமானம் வேணும். இல்லையென்றால், தன் தலை முறையோடு முடிந்துவிடும். அடுத்த சந்ததி யிருக்காது. பின் மக்களே இருக்க மாட்டார்கள். குறிக்கோல் இல்லாத பயணம் எதற்கு?” என்கின்றனர்.

இளைஞர்கள்: “தன் ஜீனில் குழந்தை வேண்டும். அடுத்த குழந்தை தன் குழந்தை ஆகாது, இரண்டு குழந்தை யாவது அவசியம் வேணும், அப்பொழுதுதான் ஒன்றுக்கொன்று துணையாகயிருக்கும்.” என்று ஆண்களை விட பெண்களே அதிகம் விரும்பு கின்றனர்.

சிலர், “ஓன்று, இரண்டுக்கு மேல் குழந்தை பெறுபவர்களையும், ஆண் வாரிசு வேண்டும் என்று குழந்தைகளை அடுக்கிக்கொண்டே போகிறவர் களையும், அதற்காகத் துன்புறுத்துபவர்களையும் கண்டிப்பாகக் கடுமையாகத் தண்டிக்கச் சட்டம் வரவேண்டும்” என கூறகின்றனர்.

தனிக்குடித்தனம்

பலர், படித்த உடனே பெரியவர்களை யார் பார்ப்பது? என்றும் திருமணத்திற்கு முன்பே உறுதி செய்வது தவறு. திருமணத்திற்குப் பின் எண்ணம் மாறலாம். அவரவர் சூழல் பொருத்ததுத்தானே தவிர முன்பே முடிவு செய்ய முடியாது.

சில மாமியார்கள்: “கூட்டுத்குடித்தனம் இருந்தால்தான் நல்லது-கெட்டது எடுத்துச்சொல்லி ஆதரவாகப் பார்த்துக் கொள்ள முடியும்.. எப்படிக் குடும்பம் பண்ணனும் என்று கத்துக்கொள்வார்கள், பிள்ளை களும் தாத்தா பாட்டி அரவணைப்பில் அறிவான பிள்ளையாக வளரும். இவர்களை தனிக்குடித்தனம் வைத்தால் பார்க்க ஆளில்லாமல் தவிப்பார்கள்” என்று கூறுகிறார்கள்.

இளையவர்களோ: “பெரியவர்களின் ஆதிக்கத்தின்படி அவர்கள் விரும்பிய படிதான் வாழ்றமாதிரி ஆயிடும். தான் விரும்பிய ஆடை, சாப்பாடுகூடச் சாப்பிட முடியாது. தான் விரும்பிய வெளி இடங்களுக்குப் போகமுடியாது.

இன்று என் அக்காகாக்கள் வாழ்க்கையைப் பார்த்தா கூட்டுக்குடித்தனம் வேண்டாம் என்று தோணுது , தனியாக இருந்தால்தான் சுயமாக சிந்திக்க, தன்னம்பிக்கை வளர பிரச்சனைகளைச் சாமாளிக்க, சிக்கனமாக, சேமிப்புடன் தான் விரும்பியபடியே சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழலாம்.. பிரச்சனை வந்தபின் தனிக்குடித்தனம் செல்வதற்கு பிரச்சனையே வராமல், யாரையும் காயப்படுத்தும் நிலைக்குத் தள்ளாமல் திருமணத்திற்க்கு முன்பே உறுதி செய்வது நல்லதுதான்.இதை நாங்கள் வரவேற்கிறோம்” என்கின்றனர்.

அனைவருமே சிரித்துக் கொண்டே சூப்பர் என்று வரவேற்றனர்.

சமையல் 

மருமகள்கள்: “கண்டிப்பாகச் சரிபங்கு எடுத்துக்ணும், இல்லை யென்றால் கண்டிப்பாகக் கடும் தண்டனை வழங்க வேண்டும். உடல் சரியில்லாத நிலையில் கூட, தானே தவழ்ந்து வந்து வேலை செய்ய வேண்டி யிருக்கு. பிள்ளைகளையும் நானேதான் பார்க்கணும் . உதவி செஞ்சாதான் என்ன; என்று கேட்டால், நீ மட்டும் தான் அதிசயமா வேலை செய்ரியா எல்லாப் பொம்பளைங்களும்தான் வேலை பார்க்கிறாங்க”... என்று என் கணவனும், “அந்த காலத்தில நானெல்லாம் அம்மியில் அரைச்சு ஆட்டுக்கல்லுல மாவாட்டி, 10 மாட்டுக்கு சானியள்ளி, நெல்லுகுத்தி, வெறகு அடுப்புல சமைச்சு, காட்டுவேலையும் பாத்து என் பிள்ளைகளை வளர்த்தேன். இன்னைக்கு அப்படியா வீட்டில் அத்தனைக்கும் மிசின் வாங்கி போட்டாச்சு. ஆம்பள சம்பாதிச்சுக்கொடுக்குறான், வீட்டில் சும்மாயிருக்கிற உனக்கு வலிக்குதா? என்று என் மாமியாரும் சொல்லிகிட்டு இருக்கிறப்ப, ஹவுஸ் ஒய்ஃப் ஆக இருந்துட்டு சரிபங்கு எடுத்துக்கச் சொன்னால், கணவனும் மாமியாரும் வெளக்க மாத்தைத்தான் கையில் எடுப்பார்கள். என்ன பண்றது? விதி.” முதல்ல இவங்கள புடுச்சு ஜெயிலில்  போடணும்.” என்று  குமுறுகிறார்கள்.

சிலர், “சரி பங்கு கூட எடுக்கவேண்டாம், சின்ன சின்ன உதவியாக இருந்தால் கூடப் போதும். உடல்நிலை சரியில்லாத பொழுது மட்டும் பார்த்தால்கூடப் போதும். மறுப்பது வருத்தம் அளிக்கிறது.”.

சிலர் “தண்டனையெல்லாம் தேவையில்லை. சில வீடுகளில் இருவரும் வேலைக்குப் போகிறார்கள் வேலையையும் பகிர்ந்துக்கொள்கிறார்கள்.” என்று கூறுகிறார்கள்.

மக்களின் கருத்துக்களுக்கு நமது விளக்கங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.

Pin It