கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சமீபகாலமாக மாணாவர்களின் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. நான்கு +1 மாணவிகளின் கூட்டுத் தற்கொலை, இரண்டு எட்டாம் வகுப்பு மாணவிகளின் தற்கொலை முயற்சி அதில் ஒரு மாணவி மரணம். மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை, அதே மருத்துவக் கல்லூரி மாணவர் அடுத்த வாரத்திலேயே தற்கொலை. இவை எல்லாம் தற்போதைய நிகழ்வுகள்.நாம் மறந்தவை ஏராளம்.

இது மட்டுமல்ல வகுப்பறையில் ஆசிரியை யைக் கொல்ல முயற்சி, சக மாணவனைக் கொல்ல முயற்சி போன்ற நிகழ்வுகளையும் சேர்த்தே நாம் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். ஆம் தற்கொலை, அதற்கான முயற்சி, கொலைக்கான முயற்சி அனைத்தையுமே சேர்த்துப் பார்க்க வேண்டும்.

மாணாக்கனின் மரணங்கள் பள்ளி மற்றும் கல்வி நிலையங்கள் சார்ந்திருப்பதால் முதலில் பள்ளிகளில் உள்ள காரணங்கள் என்னவாயிருக்கும் என்பதை யோசித்துப்பார்ப்போம். ஒரு விசயத்தை அனைவரும் பார்த்திருப்போம். பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் குழந்தைகளின் விருப்ப மின்மையும் பள்ளி விட்டதும் குதுகலிக்கும் மகிழ்ச்சி யையும்தான். பள்ளி என்பது புதிய விசயங்கள் கற்றுக் கொடுக்குமிடம் அப்படிப்பட்ட இடத்திற்குச் செல்ல குழந்தைகள் ஏன் விரும்புவ தில்லை? அந்த விருப்பமின்மை, அதன் மகிழ்ச்சியைக் களவாடும் இடம் மரணக் கூடாரங்களாகிப் போவதன் காரணம்.?

students 600 copyமரணங்களுக்குக் காரணமான பார்ப்பனக் கல்விமுறை

முதலில் கல்வி என்பது அறிவுக்காக என்ற நிலை 100 சதவீதம் தற்போது இல்லை என்பதே உண்மை. கல்வி கற்று அதிக மதிப்பெண் வாங்கி உயர்கல்வி கற்று பெரிய அல்லது பாதுகாப்பான பணி ஒன்றில் சேர வேண்டும். இதுதான் இன்றைய பெற்றோருடைய இலட்சியம். இப்போதுதான் கல்வி சரக்காகிப்போகிறது. கல்விக்கூடம் கல்விச் சரக்கு விற்கும் நிலையமாகிப் போகிறது. மனப்பாடம் என்கிற பார்ப்பனக் கல்வி முறை (குரு குல) தலை தூக்குகிறது. இதற்கான முதல் பலிகள் விளை யாட்டும்  பொழுது போக்குகளும்தான்.

விளையாட்டுகளில் தோற்று பின் வென்று, தோற்று; வெற்றி தோல்வி என்பது சகஜம் என்கிற மனப்பக்குவம் அடையும் நிலை இப்போது இல்லை. இதன் காரணமாகவே தோல்விக்கு அடுத்து மரணம்தான் என்கிற எண்ணம் உருவாகிறது.

அதிகாலை முதல் இரவு வரை படிப்புதான். இன்னும் சொல்லப்போனால் தனிப்பயிற்சிக்குச் (Tuition) செல்லாத மாணவன் கல்வியிலிருந்து வெளித்தள்ளப்படுவான் என்கிற மன நிலைதான் ஏறக் குறைய எல்லோருக்கும் ( உண்மை அதற்கு நேர் மாறானது. புரிந்து படிப்பவர்களே மேலும் மேலும் கற்கின்றனர்).

இதன் காரணமாக ஏற்படும் மனஉளைச்சல் மன அழுத்தமாகிப்போகிறது. இடைவேளை நேரங்களும் படிப்புக்காகக் குறைக்கப்பட்டு அந்த நேரங்களில் இருந்தக் களிப்புகளும், மன இளைப் பாறுதலும் களவாடப்படுகின்றன. இவற்றின் காரணமாக நட்பு என்பது குறைந்து போவதும் ஒரு ஆபத்தே! இவ்வாறு உடற்பயிற்சி அல்லது விளை யாட்டு போன்ற ஆற்றல் விரையச் செயல்பாடுகள் (Energy Waste Activity) எதுவும் இல்லாததால் ஏற்படும் அடுத்த சிக்கல் சற்று அளவு கடந்த பாலுணர்ச்சி.

ஏற்கனவே பாலியல் கல்வியற்ற சமூகத் திலிருந்து வரும் குழந்தைகள் மனக் குழப்பத்துக்கு உள்ளாகி கல்வி கற்பதில் கவனம் குறைகின்றனர். மேலும் தான் இச்சமூகத்துக்கு லாயக்கில்லாதவன் என்கிற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறான்(ள்). இயல்பாக ஏற்படும் உணர்ச்சிகள், பாலின ஈர்ப்பு இவை குற்றங்களாகப் பார்க்கப் படுவதும் மனக் குழப்பத்திற்கு வழிவகுக்கிறது.

தமிழ் வழி கற்கும் மாணவர்க்குச் சுமையே ஆங்கிலம்தான். அதற்கடுத்துதான் கணிதம். (சாதாரண நகரங்களில் உள்ள பல ஆங்கில வழிக்கல்வி கற்கும் மாணவர்களுக்கும் ஆங்கிலமும் தமிழும் சிக்கலே! ). கற்பவர்களில் பின்தங்கியவர் களுக்கும், மீதிறனுக்கும் ஒரே பாடத்திட்டம், தேர்ச்சிக்காக ஆசிரியர்களுக்கு அதிகப் பணிச்சுமை இவையும் மாணவரைப் பாதிக்கும் காரணிகளே!

கற்கும் மாணவனின் திறனறிந்து அவன் திறன் சார்ந்த கல்விக்கு மதிப்பெண் வழங்கும் முறை இருப்பின் பல திறன் உள்ள மாணவர்கள் சமூகத்துக்கும் கிடைப்பார்கள். இப்படி தன்னம் பிக்கை இழப்பும் ஏற்படாது. அதாவது எல்லோருக்கு மான கல்வியாய் இருத்தல் வேண்டும். தற்போதுள்ள தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியைக் கற்பிக்கும் முறையிலும் கொண்டு வர வேண்டும். புத்தகச் சுமையைக் குறைத்து மொபைல் ஆப், இணையவழிக் கல்வி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தற்போதைய குழந்தைகள் இவற்றில் திறம்பட செயல்படுவது கண்கூடு.

அடுத்து,நான்கு +1 பெண் குழந்தைகளும், இரண்டு எட்டாம் வகுப்பு பெண் குழந்தைகளின் தற்கொலை மற்றும் முயற்சியின் காரணங்களாகச் சொல்லப்படுபவை ஆசிரியர்கள் பெற்றோரைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னதால்தான். ஆசிரியர் பெற்றோரைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டவுடன் குழந்தைகள் இம்முடிவெடுப்பதன் காரணம்?

பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு, இணைப்பு இல்லாமையே முதற் காரணம். இதற்குக் காரணம் இன்றைய நெருக்கடி யான காலகட்டம்தான். பிள்ளைகளின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் பள்ளிகள் எப்படி முக்கியமோ, அதே போல் சமூகமும் முக்கியம். குழந்தைகளுக்குச் சமூகம் என்பது பெரும்பாலும் அவர்களது பெற்றோரே! ஆனால் பெற்றோர் நிலை??

மரணங்களுக்குக் காரணமாகும் பார்ப்பனியக் குடும்பச்சூழல்

குடும்பச் சூழலும் குழந்தைகளின் வாழ்வுக்கு, தன்னம்பிக்கைக்கு, மனச்சிக்கலுக்கு முக்கிய காரணி.

ஒப்பீடு: மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டுக் குற்ற உணர்வை உண்டாக்குதல்,

திட்டுதல்: படிப்பில் கவனம் இல்லாத குாந்தை களின் காரணத்தை அறிந்து கொள்ளாமலேயே திட்டுவது.

காது கொடுக்காமை:  அம்மா, அப்பாவிடம் சுதந்திரமாக எதுவும் கலந்துரைடல் இல்லாமல் இருப்பது.

கெளரவம்: குழந்தைகளின் மதிப்பெண், படிப்பு போன்றவையே தன் குடும்பக் கெளரவம் என்று இருப்பது.

தனிமைப்படுத்துதல்: பிள்ளைகளை அருகில் வைத்து படிக்க வைக்காமல் விடுதியில் தங்கவைத்துக்  படிக்க வைத்தல்.

ஒற்றுமையின்மை:  குழந்தைகளைப்பற்றி முடிவு அல்லது குழந்தைகளின் விருப்பம் ஆகியவற்றில் கணவன் மனைவிக்குள் இருக்கும் ஈகோவைக் காண்பிப்பது.

Ego: ஒரு பிள்ளையை பெற்று விட்டோம் நாம் அனுபவிக்காமல் சிரமப்பட்டதுபோல் நம் குழந்தை சிரமப்படக் கூடாது என்று கேட்ட தெல்லாம் வாங்கிக் கொடுத்து முரட்டு பிடிவாத முள்ள ஈகோ பிடித்த பிள்ளைகளாக்கிவிடுதல்,

துணிவின்மை: பள்ளி விட்டால் வீடு, வீடு விட்டால் பள்ளி என்றே வளர்த்து முக்கியமாகப் பெண் குழந்தைகளை மனதளவில் கோழைகளாக வளர்த்தல்,

அழகுணர்ச்சி: வீடுகளில் அழகு அலங்காரம் என்றே வளர்த்து பெண் குழந்தைகளின் பெரும்பாலான நேரம் தங்களது அழகு பற்றியே கவலை கொள்ளும் பண்பை வளர்த்தல்,

போதைப்பழக்கம்: குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதால் அக்குடும்பத்துக் குழந்தைகளின் இரவை ரணமாக்குவது ( இது பெரும்பாலும் தற்போது கிராமங்களில் உள்ள பார்ப்பனரல்லாதோர் குடும்பங்களில் மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்து உள்ளது ).

பாலியல் புரிதல்:  பெற்றோருக்கே பாலியல் புரிதல் இல்லாத காரணத்தால் ஏற்படும் சிக்கல்கள்.

நேர விரயம்:  குழந்தைகளோடு கிடைக்கும் ஓரிரு நாள் விடுமுறையையும் கோவில், குளம், தர்கா என்றழைத்துச் சென்று தங்கள் பிள்ளைகளோடு மனம் விட்டு பேசுவதைக் கெடுத்தல்.

இது போன்ற சூழலில் வாழும் குழந்தைகள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள சிக்கலை எந்தத்துணிவுடன் பெற்றோருடன் பகிரும்? தாம் கேவலப்படுத்தப் படுவோம் என்பதால் இந்தச் சமூகத்தை எதிர்க் கொள்ள பயந்து இம்முடிவை எடுக்கின்றனர்.ஆனால் ஊடகங்களோ, பெற்றோரோ இன்றையக் கல்விச் சூழல் தம் வாழ்க்கைச் சூழல் போன்றவற்றைக் கணக்கிலெடுக்காமல் ஆசிரியர்களின் மீது பாய்வது எப்படிச் சரியாகும்?

இப்படிப்பட்ட சூழலில் ஆசிரியர்களில் பலர் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணிக் கண்டிப்பதா அல்லது எதாவது சிக்கலாகிவிடும் என்பதால் அமைதியாகிவிடுவதா என மனசாட்சியோடு மோதிக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை!

பள்ளிச்சூழல் ஆசிரியர்களையும் மாணாக்கர்களையும் இணக்கமாக்கும் சூழலாய் இருத்தல் வேண்டும். மனம்விட்டுப் பேச பெற்றோரும் பக்குவ மடைய வேண்டும்! இல்லா விட்டால் அமெரிக்காவில் நடை பெறுவது போன்ற பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு போல் நம் நாட்டிலும் நடக்கும் நாள் வெகுத் தொலைவில் இல்லை!!