சில நாட்களுக்கு முன் நம்மை உலுக்கிய செய்தி. அயனாவரத்தைச் சேர்ந்த 12 வயதுக் குழந்தையை 10 மாதங்களாக 17 பேர் போதை மருந்து கொடுத்து வன்புணர்வு செய்த செய்தி. அடுத்து இதைவிடக் கொடுமையான ஒரு செய்தி வரும்போது அயனாவரத்தை மறந்துவிடுவோம்.

ஏனென்றால், சென்ற வருடம் 8 வயதுக் குழந்தையை இளைஞன் ஒருவன் வன்புணர்ந்து கொன்ற சம்பவத்தை அப்படித் தானே மறந்தோம். கொடூரமான வன்புணர்வுச் செய்திகள் வெளிவரும்போது மட்டும் நாம் கொந்தளித்துப் போய் நியாயம், நீதி பேசுவதும் - மற்ற நேரங்களில் அடுத்த சேதி வரட்டும் என இருப்பதும்தான் நம் வாடிக்கை.child abuse 520

வன்புணர்வுக் குற்றங்கள் செய்தி கேட்கும் போதெல்லாம் பயங்கரக் கோபத்துடன், குற்றவாளிகளைத் தூக்கில்போட வேண்டும், ஆண்குறியை வெட்ட வேண்டும் என உணர்ச்சி வசப்படுவது நம் வெகுநாள் பழக்கம். இப்படி குற்றங்கள் வெளிவரும் போதெல்லாம் ஒவ்வொரு குற்றவாளிகளையும் தூக்கில் போட்டுவிடுவோம். மற்ற நேரங்களில் பாலியல் குற்றங்கள் பற்றிய பேச்சுக்களை தூக்கியே போட்டுவிடுவோம். சிந்திப்பதற்குச் சோம்பேறித்தனபடும் சமூகம் இப்படித்தான் இருக்கும்.

பாலியல் குற்றங்களை எப்படித் தடுப்பது எனக் கேட்டால், ஒன்று தண்டனை பற்றியும், இல்லை பெண்ணுக்கான கட்டுப்பாடுகளைப் பற்றியும் பேசி - நமக்கு நாமே கோபத்தைத் தீர்த்துக்கொள்வோம். இப்படித்தான் சில நாட்களுக்கு முன், பெண்ணின் உடையைக் காரணம் காட்டி சமாதானம் செய்து கொண்டிருந்தோம்.

அடுத்து நாயையும், ஆட்டையும், மாட்டையும் வன்புணர இவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். ஆம் அவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுத்துவிடுவோம். இப்படியே தண்டனைகள் கொடுத்துக் கொண்டு இருக்கலாம். பெண்ணையும், ஆட்டையும், மாட்டையும், நாயையும் காப்பாற்றிவிடலாம்.

முதலில் நாம் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். இம்மாதிரியான குற்றங்கள் இப்போது அதிகம் நடக்கிறது எனச்சொல்வதைக் காட்டிலும், அதிகம் வெளிவர ஆரம்பித்துவிட்டது என்றே என்ன வேண்டும். எல்லாக் காலத்திலும், இது போன்ற பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டு தான் இருந்தன. ஏன், எருமையைத் துரத்தித் துரத்தி வன்புணர்ந்த ஆணின் கதையையும், நதிக்கரையில் பெண்களின் உடைகளைத் திருடிக்கொண்டு Blackmail செய்து பாலியல் கொடுமை செய்த ஆணின் கதையையும் காலம் காலமாக ரசித்துத் தானே கேட்டு வந்தோம்.

பாலியல் குற்றங்களையும், மற்ற குற்றங்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதால் தான் தண்டனைகள் அக்குற்றங்களைக் குறைத்துவிடும் என்கிற எண்ணம் நமக்கு வருகிறது. பாலியல் குற்றங்கள்.. பால் உணர்வு, இணையீர்ப்பு போன்றவை உடலியல் அறிவியல் காரணிகளை வைத்து அணுக வேண்டியவை. இவைகளை வெறும் பயத்தால் வென்றுவிட முடியும் என நினைப்பது அறியாமையின் வெளிப்பாடு தான்.

முதலில் நாம் Rape என்பதை ‘வன்புணர்வு’ எனக் கூறுவதே பச்சை அயோக்கியத்தனம். Rape என்பதற்கான சரியான சொல்லை நாம் இன்னும் அமைக்கவில்லை. அதாவது வன்புணர்வு என்பது புணர்வின் கீழ் வராது. ‘புணர்வு’ என்பது என்ன என்பதைப் பற்றிய அறிவு நம் மக்களுக்கு இல்லை. அது மட்டுமல்லாது. பாலியல் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் தான் நாம் இருக்கிறோம்.

வன்புணர்வுகளின் ஆரம்பப் புள்ளியாக நான் ... “பெண்ணின் காம உணர்வுகளை மதிக்காமையும் உணராமையும்” என்றே கூறுவேன். ‘புணர்வு’ என்பது ஏதோ ஆணுக்கு மாத்திரமே சம்பந்தப்பட்ட விசயம் என்றும், பிள்ளை பெற்றுக்கொள்ளும் முறை என்றும்தான் நமக்குத் தெரியும். அதைத் தாண்டி நாம் அறிய விரும்புவதில்லை. கலாச்சாரம், பண்பாடு, மத ஒழுக்கம் என அறிவைப் பெறாமல் அப்படியே எருமையை வன்புணர்ந்த காலத்திலேயே இருக்கிறோம்.

ஆண், பெண் இருவரின் உடல் உறுப்புகள், பருவ மாற்றங்கள், ஹார்மோன்கள், கலவி, ஆர்கசம் என அடிப்படைப் பாலியல் அறிவுகூட நாம் பெறாமல் இருக்கிறோம். பெண்ணுக்கும் காம உணர்வுகள், உரிமைகள் உண்டு என நாம் புரிந்துகொள்ளாமல் இருப்பதால் தான், அது ஆணுக்கு மட்டுமேயானது என நினைக்கிறோம்.

சமூகத்தின் பல ஆண்கள் பெண்களைப் பயன்படுத்திக்கொள்ளத்தான் நினைக்கிறார்கள். பெண்களைப் பயன்படுத்திக்கொண்டு இன்பம் அடைவதுதான் புணர்வு என நினைக்கிறார்கள். மாறாக கலவி என்பது அதுவல்ல. இருவரும் இன்பமாய் இணைந்து, இருவரும் இன்பத்தைப் பெறுவதே கலவியின் அடிப்படை. இது தான் கலவி. மாறாக ஒருவர் மட்டுமே இன்பத்தை அனுபவிக்கும் எவ்விதமான கலவியையும் Rape என்றே கூற வேண்டும். அதை காமத்தின் பட்டியலில் சேர்க்கவே முடியாது. இதைப் பற்றியெல்லாம் நாம் படிப்பதில்லை. சிந்திப்பதும் இல்லை.

ஆண் மட்டுமே இன்பம் அனுபவித்தால் போதும், என இருக்கிற சமூகத்தில் எத்தனை பேரை தூக்கில் ஏற்றினாலும் வன்புணர்வுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

செய்திகளில் வெளிவருபவை சிறிய அளவுகள் தான். அதை விடப் பன்மடங்கான சம்பவங்கள் நடக்கின்றன. ஏன், நம் சராசரி வாழ்விலும் வன்புணர்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கணவன்—மனைவி உறவிலும், காதலன்—காதலி உறவிலும் கூட. ஆண் மட்டுமே பெருவாரியான கூடலில் இன்பம் அடைந்து, பெண்ணின் இன்பத்தைப் பற்றிக் கவலையே படாமல் நடக்கும் அவர்களுக்குள்ளான நிகழ்வுகள் கூட வன்புணர்வுகள் தான்.

பெண்ணை வெறும் பயன்பாட்டு பொருளாக எண்ணாமல் பெண்ணுக்கான உணர்வுகளை அறிந்து வாழும் வாழ்வில்தான் வன்புணர்வுகள் குறையும். டென்மார்க், சுவிஸ், ஃபின்லான்ட் போன்ற நாட்டு மக்களுக்கு பாலியல் தெளிவு இருப்பதால் தான், வன்புணர்வுகளற்ற சமூகமாக வாழ்கிறார்கள்.

வன்புணர்வு என்ற சொல்லோ, வல்லுறவு என்ற சொல்லோ, பலாத்காரம் என்ற சொல்லோ, கற்பழிப்பு என்ற சொல்லோ.... இச்சொற்களே வன்புணர்வைத் தாங்கி தான் நிற்கின்றன..

இவைகள் அணைத்தும் ஆணின் பக்கமிருந்து அக்காரியத்தை விவரிக்கும் சொற்களாகவே இருக்கின்றன. மாறாய், பெண்ணின் உணர்வுகளை மதிக்கும்படி Rape என்பதற்குத் தமிழில் சொல் இல்லை. குறைந்த பட்சம் இதை “உடலியல் வன்கொடுமை” என்றே கூற வேண்டும்.

Rape is not at all Sex என்பதை Sex என்பது என்ன என்று அறிந்தவர்களால்தான் உணர முடியும். ஒருவர் மாத்திரமே சுகம் அனுபவிப்பதும், மற்றொருவர் வெறும் பயன்பாட்டுப் பொருளாக இருப்பதும் கலவியே அல்ல என்பதை உணர வேண்டும். இதைப் பற்றிய பேச்சுக்கள், விவாதங்கள், எழுத்துகள் அதிக அளவில் நடந்தால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

இல்லையேல், ஆடைகளைக் காட்டி Blackmail செய்து சுகத்தை அனுபவித்துக்கொண்ட ஆண்கள், மொபைல் வீடியோக்களைக் காட்டிச் சுகத்தை அனுபவிக்கும் அளவு தொழில்நுட்ப அறிவு பெற்றிருப்பவர்களே ஒழிய..... ஒரு பாடும் பாலியல் அறிவு பெறாமல்.... எருமையை, ஆட்டைக்கூட வன்கொடுமை செய்யும் மிருகங்களாகவே தான் இருப்பார்கள்.

Pin It