முந்திய இயலில் விவரித்தபடி தீண்டாதவர்கள் இந்து சமூகத்துக்கு வெளியே உள்ளனர். ஆயினும் ஒரு கேள்வி எழுகிறது: இந்துக்களிடமிருந்து அவர்கள் எவ்வளவு தூரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளனர்? அவர்களுக்கு இந்துக்கள் என்ற முறையில் இல்லாவிட்டாலும், மனிதர்கள் என்ற முறையிலேனும் இந்துக்கள் எவ்வளவு மரியாதை அல்லது பரிவு காட்டுகின்றனர்? இந்தக் கேள்விகளுக்கு விடை பெறாமல், தீண்டாதவர்களின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான சித்திரத்தைக் காணமுடியாது. கவனிக்க விரும்பும் எவரும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளை எளிதில் காணலாம். இதை எப்படிச் சொல்லுவது என்பதுதான் பிரச்சினையாகும். விளக்க உரையாகக் கூறுவதா, அல்லது உதாரணங்களை எடுத்துக்காட்டுவதா? பின்னே கூறிய முறையையே நான் பின்பற்ற விரும்புகிறேன். பல உதாரணங்களைக் கூறிப் படிப்பவர்களைக் களைப்படையச் செய்ய நான் விரும்பவில்லை. நிலைமையை மிகத் தெளிவாக விளக்கும் சில உதாரணங்களையே நான் குறிப்பிடுவேன்.
முதல் உதாரணம் சென்னை மாநிலத்திலிருந்து வருகிறது. திரு.வெங்கடசுப்பா ரெட்டியும் மற்றும் சிலரும் (இவர்கள் அனைவரும் இந்துக்கள்) 1909 – இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இடையூறு விளைவித்ததற்காக, 339 – ஆம் பிரிவின்படி, மாஜிஸ்ட்ரேட் விதித்த தண்டனையை எதிர்த்து இவர்கள் மேல் முறையீடு செய்தார்கள். இவர்கள் மீது குற்றம் சாட்டியவரும் அவரது குழுவினரும் கூட சாதி இந்துக்களே. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு(பார்க்க :11 கிரிமினல் லா ஜர்னல், ப. 363.) வழக்கின் விவரங்களை எடுத்துக் கூறி இந்துக்களின் முன் தீண்டாதவர்களின் நிலையை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
எனவே இந்தத் தீர்ப்பை மேற்கோளாகத் தருவது பொருத்தமாகும். தீர்ப்பு பின்வருமாறு:
“மேல் முறையீடு செய்தவர்கள் (வெங்கடசுப்பா ரெட்டியும் மற்றவர்களும்) சிலரைச் சட்ட விரோதமான முறையில் தடுத்து வைத்திருந்ததற்காகத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளனர். ஒரு கோவிலுக்கருகே பொதுத் தெருவில் சில பறையர்களை2 அவர்கள் நிற்கச் செய்தனர். வழக்கில் வாதியாக உள்ளவர், அந்தக் கோவிலிலிருந்து அந்தத் தெருவின் வழியே ஊர்வலம் ஒன்றை நடத்தாமல் தடுப்பது இதன் நோக்கம். பறையர்களின் பக்கமாகச் சென்றால் தமக்குத் தீட்டு ஏற்படும் என்ற அச்சத்தினால், வாதி அந்த ஊர்வலத்தை நடத்தவில்லை என்றும், வாதி தாம் செல்வதற்கு உரிமையுள்ள ஓரிடத்திற்குச் செல்லாமல் தடுக்கும் ஒரே நோக்கத்துடனேயே குற்றம் சாட்டப்பட்டவர் தெருவில் பறையர்களை நிற்கச் செய்தார் என்றும் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட விரோதமான முறையில் தடுத்து வைத்த குற்றத்தைச் செய்ததாக நாம் நினைக்கவில்லை: நமது கருத்தின்படி, இந்தச் செயல் 339 – ஆம் பிரிவின் பொருளின்படி தடை ஏற்படுத்திய செயல் என்று கொள்ளத்தக்கதல்ல. பறையர்கள் ஒரு தடை அல்ல; உண்மையில், வாதி, தமது ஊர்வலத்தை அவர்களைக் கடந்து நடத்திச் செல்வதைத் தடுக்கும்படியான எதுவும் இல்லை. அவர்கள் இருந்த இடத்தில் இருந்திட அவர்களுக்கு உரிமை உண்டு; அவர்கள் அங்கே இருந்ததனால் ஊர்வலத்துக்குத் தீட்டு ஏற்படும் என்பதைத் தவிர, வாதிக்கு உடல் தீங்கு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தையோ அல்லது வேறு எந்த அச்சத்தையோ ஏற்படுத்தும் நோக்கம் இருந்ததாகக் கூறப்படவில்லை. வாதி, தாம் விரும்பிய இடத்துக்குப் போகாமல் தடுத்தது பறையர்கள் அங்கு இருந்தது அல்ல; அவர்களின் அருகே செல்வதற்கு அவருக்கு இருந்த விருப்பமின்மைதான் அதைத்தடுத்தது;
’பறையர்கள்’: சென்னை மாநிலத்தில் உள்ள தீண்டாத சமுதாயத்தினர் திரு. குப்புசுவாமி அய்யர் கூறியதுபோல, அவருடைய சொந்த விருப்ப முடிவுதான் அவரைக் கோவிலிலிருந்து புறப்பட்டுச் செல்லாமல் தடுத்தது; தமது சொந்த சம்மதத்துடனேயே அவர் அங்கேயே இருந்துவிட்டார்; இது சுதந்திரமான சம்மதமாயிருப்பதைத் தடுப்பதற்கு, தீங்கு ஏற்படும் என்பதாகக் குற்றச் சட்டத்தின் பொருள் வரம்புக்கு உட்பட்ட அச்சம் எதுவும் இருக்கவில்லை. இவ்வாறு இன்றி, வேறு விதமாக இருந்தால் வாதியின் நிலையில் உள்ள ஒருவர், எந்த ஒரு பறையரும் தமது சொந்த வேலை காரணமாகப் பொதுத் தெருவில் சட்டபூர்வமாக இருக்கும்போது, தாம் அங்கே இருப்பதனால் தம்மருகே செல்லும்போது தீட்டு ஏற்படும் என்ற பயம் காரணமாக வாதி தடுக்கப்படுவார் என்று தெரிந்திருந்தும், அந்த இடத்தைவிட்டுப் போகும்படிச் சொல்லப்பட்டபோது அவ்வாறு செய்ய மறுத்தால், அவர் மீது தடை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டுக் கூறமுடியும்.
இத்தகைய நிகழ்ச்சியில் சட்ட விரோதமாகத் தடுத்துவைக்கும் செயல் எதுவும் இல்லை என்பது தெளிவு. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பறையர்களைத் தெருவில் நிற்கச் செய்திருந்தார் என்பதால் இதில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று நாம் கருதுகிறோம்.
எனவே, நாம் தண்டனையை ரத்து செய்து, அபராதம் செலுத்தப்பட்டிருந்தால் அதைத் திருப்பிக் கொடுக்க உத்தரவிடுகிறோம்.”
இந்த வழக்கு மிகவும் விளக்கந்தருவதாக உள்ளது வழக்கில் இரண்டு தரப்பினர் இருந்தனர். வெங்கடசுப்பா ரெட்டி ஒரு தரப்பின் தலைவர். இரு தரப்பினருமே சாதி இந்துக்கள். ஓர் ஊர்வலத்தை நடத்தும் உரிமை பற்றித் தாவா ஏற்பட்டுள்ளது. வெங்கடசுப்பா ரெட்டி தமக்கெதிரான தரப்பினர் ஊர்வலத்தை நடத்தாமல் தடுக்க விரும்பினார்; ஆனால் அதை எப்படிச் செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. இதற்குச் சரியான வழி, தீண்டாதவர்கள் சிலரைக் கொண்டு வந்து சாலையில் நிற்கச் செய்து, அங்கிருந்து நகராமலிருக்கும்படிக் கூறுவதே என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. இந்த யோசனை பலித்தது; எதிர்த் தரப்பினர் தீட்டு ஏற்படும் என்ற பயம் காரணமாக ஊர்வலத்தை நடத்தத் துணியவில்லை. பறையர்களைச் சாலையில் நிற்கச் செய்தது தடை ஏற்படுத்தும் செயல் அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் (பறையர்களை நிற்கச் செய்திருந்ததே தடை ஏற்படுத்துவதற்குப் போதுமானது என்று கூறி விசாரனை மாஜிஸ்ட்ரேட் தண்டனை விதித்திருந்தார்.)
தீர்ப்பளித்தது என்பது வேறு விஷயம். பறையர்கள் அங்கு இருந்தார்கள் என்பதே இந்துக்களை விரட்டிவிடப் போதுமானதாயிருந்தது என்ற உண்மை மறுக்கமுடியாமல் உள்ளது. இதற்கு என்ன அர்த்தம்? தீண்டாதவர்களிடம், இந்துக்களுக்கு, முற்றிலுமான அறுவெறுப்பு உள்ளது என்பதே இதன் பொருள்.
இரண்டாவது உதாரணமும் இதேபோல் மிகுந்த விளக்கமளிப்பதாகும். இது, கத்தியவாரைச் சேர்ந்த தீண்டாதவரான பள்ளி ஆசிரியர் ஒருவர் சம்பந்தப்பட்டது.
திரு. காந்தி வெளியிடும் ‘யங் இந்தியா’ பத்திரிகையின் 1929 டிசம்பர் 12-ஆம் தேதியிட்ட இதழில், பின்வரும் கடிதத்தில் இதன் விவரம் கூறப்பட்டுள்ளது. அந்த ஆசிரியர் அப்போது தான் பிரசவமாகியிருந்த தமது மனைவிக்கு மருத்துவ உதவி அளிக்க வருமாறு ஒரு இந்து டாக்டரை இணங்கச் செய்வதற்குத் தாம் பட்ட கஷ்டங்களையும், மருத்துவ உதவி கிடைக்காமல் மனைவியும் குழந்தையும் இறந்துபோனதையும் தமது கடிதத்தில் விவரித்திருக்கிறார். கடிதம் பின்வருமாறு கூறுகிறது:
”இந்த மாதம் 5 – ஆம் தேதி எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. 7 – ஆம் தேதி அவள் நோய் வாய்ப்பட்டு, பேதியாகிக் கொண்டிருந்தது அவளுடைய ஜீவசக்தி மங்கிக்கொண்டு வருவதாகத் தோன்றியது: நெஞ்சு வீங்கிப் போயிற்று. மூச்சுவிடுவதே கஷ்டமாகி நெஞ்சு எலும்புகளில் வலி ஏற்பட்டது. நான் டாக்டரை அழைக்கச் சென்றேன் – ஆனால் தாம் ஒரு ஹரிஜனின் வீட்டுக்கு வரமுடியாதென்று அவர் கூறிவிட்டார். குழந்தையைப் பரிசோதித்துப் பார்ககவும் அவர் தயாராயில்லை. பின்பு நான் சகர்சேத்திடமும் கராசியா தர்பாரிடமும் சென்று எனக்கு உதவி செய்யும் படி அவர்களைக் கேட்டுக்கொடேன். நகர்சேத் டாக்டருக்குக் கொடுக்க வேண்டிய இரண்டு ரூபாய் கட்டணத்திற்குத் தாம் பொறுப்பேற்பதாக உத்தரவாதமளித்தார். அதன் பிறகு, ஹரிஜனக் காலனிக்கு வெளியில்தான் அவர்களைப் பரிசோதிக்க முடியும் என்ற நிபந்தனையுடன் டாக்டர் வந்தார். நான் என் மனைவியையும் புதிதாகப் பிறந்த குழந்தையையும் ஹரிஜனக் காலனிக்கு வெளியே கொண்டு சென்றேன். பிறகு டாக்டர் தமது தர்மாமீட்டரை ஒரு முஸ்லிமிடம் கொடுக்க, அவர் அதை என்னிடம் தர, நான் என் மனைவியிடம் கொடுத்தேன். அதைப் பயன்படுத்திய பின், இதே முறையில் டாக்டரிடம் அது திருப்பிக் கொடுக்கப்பட்டது. அப்போது இரவு எட்டு மணி. விளக்கு வெளிச்சத்தில் டாக்டர் தர்மாமீட்டரைப் பார்த்துவிட்டு நோயாளிக்கு நிமோனியா ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். பின்பு டாக்டர் திரும்பிச் சென்று மருந்து அனுப்பினார். நான் கடைத்தெருவிலிருந்து கொஞ்சம் ஆளிவிதை வாங்கி வந்து நோயாளியின்மீது பயன்படுத்தினேன். டாக்டருக்கு நான் இரண்டு ரூபாய் கட்டணம் கொடுத்தேன் என்றாலும், அவர் பின்பு அவளைப் பார்க்க மறுத்துவிட்டார். இந்த நோய் ஆபத்தானது; கடவுள் தான் எங்களுக்கு உதவுவார்.
என் வாழ்க்கையின் விளக்கு அணைந்துவிட்டது. அவள் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு இறந்துவிட்டாள்.”
தீண்டாதவரான ஆசிரியரின் பெயர் கொடுக்கப்படவில்லை. டாக்டரின் பெயரும் தெரிவிக்கப்படவில்லை. தம் மீது பழிவாங்கப்படும் என்று அஞ்சி அவர் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த உண்மைகள் மறுக்கமுடியாதவை. விளக்கம் எதுவும் தேவையில்லை. டாக்டர் கல்வி கற்றவராக இருந்தும்கூட, நோய்வாய்ப்பட்டு மிக ஆபத்தான நிலையிலிருந்த ஒரு பெண்ணிடம் தர்மாமீட்டரைத் தாமே பயன்படுத்தவோ, அவளுக்குச் சிகிச்சை அளிக்கவோ முடியாதென்று மறுத்துவிட்டார். அவர் சிகிச்சை அளிக்க மறுத்ததன் விளைவாக அந்தப் பெண் இறந்துவிட்டாள். தமது தொழிலுக்குரிய நடத்தைக் கோட்பாடுகளை ஒதுக்கித் தள்ளியதில் அந்த டாக்டருக்கு மனச்சாட்சியின் உறுத்தல் இல்லாமல் போய்விட்டது. ஒரு இந்து, தீண்டாதவர் ஒருவரைத் தொடுவதைவிட மனிதத்தன்மை அற்றவராக இருந்துவரவே விரும்புகிறார்.
மூன்றாவது உதாரணம் 1932 ஆமஸ்ட் 23 – ஆம் தேதியிட்ட ‘பிரகாஷ்’ பத்திரிகையிலிருந்து தரப்படுகிறது:
“ஜபர்வால் வட்டம், ஜக்வால் கிராமத்தில் ஒரு கன்றுக்குட்டி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. டோம்1 சாதியைச் சேர்ந்த ராம் மகாஷயா அருகில் நின்றிருந்தார். அவர் உடனே கிணற்றில் குதித்துக் கன்றுக் குட்டியைத் தமது கைகளில் தூக்கிக் கொண்டார்.
மூன்று, நான்கு பேர் உதவிக்கு வந்தபின் கன்றுக்குட்டி பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் கிராமத்தின் இந்துக்கள் தங்கள் கிணறு தீட்டுப்பட்டுவிட்டது என்று கூப்பாடு போட்டு, அந்த அப்பாவி மனிதரைப் பழிவாங்கினார்கள். அதிர்ஷ்டவசமாக ஒரு பாரிஸ்டர் அங்கு வந்திருந்தார். அவர் சாதுராமைத் துன்புறுத்திக் கொண்டிருந்த ஆட்களைக் கண்டித்துப் பேசி, அவர்களை (1. ‘டோம்’ சாதி உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள தீண்டாத சமுதாயம். )நிதானத்துக்குக் கொண்டு வந்தார். இவ்வாறாக, அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது. இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்று சொல்லமுடியாது.”
எது முக்கியமானது: தீண்டாதவர் கன்றுக்குட்டியைக் காப்பாற்றி கிணற்றைத் தீட்டுப்படுத்துவதா, அல்லது கண்றுக்குட்டியைச் சாகவிட்டு கிணறு தீண்டாதவரால் தீட்டுப்படாமல் காப்பாற்றுவதா? இந்துக்களின் பார்வையில், தீண்டாதவர் கன்றுக்குட்டியைக் காப்பாற்றுவதற்காகக்கூட கிணற்றைத் தீட்டுப்படுத்துவதை விடக், கன்றுக்குட்டி இறப்பதே மேலாகும்.
இதே போன்ற மற்றொரு உதாரணம் ‘பம்பாய் சமாசார்’ 1939 டிசம்பர் 19-ஆம் தேதி இதழில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
“கோழிக்கோட்டைச் சேர்ந்த காலடி கிராமத்தில், ஒரு இளம் பெண்ணின் குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது. அந்தப் பெண் தன் குழந்தையைக் காப்பாற்றும்படி அலறிக்கொண்டிருந்தாள்; ஆனால் அங்கே இருந்தவர்கள் யாரும் கிணற்றில் இறங்கத் துணியவில்லை. அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு அயல் மனிதர் கிணற்றில் குதித்துக் குழந்தையைக் காப்பாற்றினார். பின்பு, அங்கிருந்தவர்கள், அவர் யார் என்று கேட்டபோது, தாம் ஒரு தீண்டாதவர் என்று அவர் தெரிவித்தார். அதைக் கேட்டவர்கள் குழந்தையைக் காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி சொல்வதற்குப் பதில் அவர் கிணற்றைத் தீட்டுப்படுத்திவிட்டார் என்று அவரைத் திட்டி அடித்தார்கள்.”
ஒரு இந்துவுக்குத் தீண்டாடவர் எவ்வளவு அசுத்தமானவர், தொடர்புக்குத் தகுதியற்றவர் என்பதைப் பின்வரும் சம்பவத்திலிருந்து காணலாம். லக்னோவிலிருந்து வெளியாகும் ‘ஆதி இந்து’ பத்திரிகையின் 1937 ஜுலை இதழில் இந்தச் சம்பவம் பற்றி வெளியான செய்தி வருமாறு:
”மெட்ராஸ் ஹோல்ம்ஸ் கம்பெனியில் வேலை பார்த்த ஒருவர் சமீபத்தில் காலமானார். அவர், தாம் உயர் சாதியைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டவர். மயானத்தில் அவருடைய சிதைக்குத் தீ மூட்டப்பட்டபோது அவரது நண்பர்களும் உறவினர்களும் அதன் மேல் அரிசி போட்டார்கள். நண்பர்களில் ஒருவர் தீண்டாதவர்: சென்னை மாநிலத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர். அவரும் மற்றவர்களுடன் சேர்ந்து அரிசி போட்டார். அதைப் பார்த்த உள்ளூர் உயர்சாதி இந்துக்கள் அவர் சிதையைத் தீட்டுப்படுத்தி விட்டார் என்று அவரைக் கண்டித்தார்கள். இதைத் தொடர்ந்து சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிப்போய் இரண்டு பேர் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டார்கள். இவர்களில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவுடனேயே இறந்துவிட்டார். மற்றவரின் நிலை அபாயமாயிருப்பதாகக் கூறப்படுகிறாது.”
இதைவிட மிக விளக்கமான மற்றொரு சம்பவம் உள்ளது. 1938 மார்ச் 6 – ஆம் தேதி பங்கிகளின் கூட்டம் ஒன்று பம்பாய், தாதரில் உள்ள கசர்வாடியில் (கம்பளி ஆலையின் பின்புறம்) திரு. இந்துலால் யாக்னிக் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கி சிறுவன் ஒருவன் தனது அனுபவங்களைப் பின்வருமாறு வர்ணித்தான்:
“நான், வெர்னாகுலர் இறுதித் தேர்வில் 1933 – இல் தேர்ச்சி பெற்றேன். நான் நான்காம் வகுப்புவரை ஆங்கிலம் படித்தேன். பம்பாய் நகரசபையின் பள்ளிக்கூடங்கள் கமிட்டிக்கு ஆசிரியர் வேலைக்கு நான் மனுச் செய்தேன். ஆனால் வேலை காலி இல்லாததால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. பின்பு நான் அகமதாபாத் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் அதிகாரிக்கு தலாட்டி (பிராமப் பட்வாரி) வேலைக்கு மனுச்செய்தேன். எனக்கு வேலை கிடைத்தது. 1936 பிப்ரவரி 19 – ஆம் தேதி நான் கேதாமாவட்டம் போர்சாட் வட்டத்தின் மாம்லத்தார் அலுவலகத்தில் தலாட்டியாக நியமிக்கப்பட்டேன்.
என்னுடைய குடும்பம் பூர்விகமாக குஜராத்தைச் சேர்ந்தது என்றாலும், நான் இதற்குமுன் குஜராத்துக்குச் சென்றதில்லை. அதேபோல, அரசு அலுவலகத்தில் தீண்டாமை பின்பற்றப்படும் என்பதும் எனக்குத் தெரியாது. மேலும் என்னுடைய விண்ணப்பத்தில் நான் ஒரு ஹரிஜன் என்பதைக் குறிப்பிட்டிருந்ததால் என்னுடைய சக அலுவலர்கள் நான் யார் என்பதை அறிந்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். எனவே, தலாட்டி வேலையில் சேருவதற்கு நான் சென்றபோது மாம்லத்தார் அலுவலகத்தின் எழுத்தர் காட்டிய மனப்பான்மை எனக்கு வியப்பளித்தது.
அந்த எழுத்தர் மிக இளக்காரத்துடன் “நீ யார்?” என்று கேட்டார். “ஐயா, நான் ஒரு ஹரிஜன்,” என்று நான் பதில் கூறினேன். அதற்கு அவர் “விலகிப் போ, தூரமாக நில். எனக்கு இவ்வளவு அருகில் வருவதற்கு உனக்கு எவ்வளவு துணிச்சல்! நீ அலுவலகத்தில் இல்லாமல் வெளியில் இருந்திருந்தால் உனக்கு ஆறு உதை கொடுத்திருப்பேன். இங்கே வேலை செய்ய வருவதற்கு என்ன துணிச்சல்!” என்று சொன்னார். அதன்பின் அவர் என்னுடைய சான்றிதழையும் நியமன உத்தரவையும் தரையில் போடச் சொன்னார். பின்பு அவர் அவற்றை எடுத்துக் கொண்டார். போர்சாடில் மாம்லத்தார் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது குடிக்கத் தண்ணீர் பெறுவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அலுவலகத் தாழ்வாரத்தில் தண்ணீர் கேன்கள் வைகக்ப்பட்டிருந்தன. அவை தண்ணீர்க்காரர் ஒருவரின் பொறுப்பில் இருந்தன. அலுவலகத்தில் உள்ள எழுத்தர்களுக்குத் தேவைப்படும்போது தண்ணீர் ஊற்றுவது அவருடைய வேலை. தண்ணீர்க்காரர் இல்லாதபோது அவர்களே போய் கேன்களிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கலாம். ஆனால், நான் அவ்வாறு செய்யமுடியாது. நான் தொட்டால் தண்ணீர் தீட்டாகிவிடும் என்பதால் நான் கேன்களைத் தொடமுடியாது. எனவே நான் தண்ணீர்க்காரரின் தயவையே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. என்னுடைய உபயோகத்துக்காகத் துருப்பிடிந்த சிறிய பானை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. என்னைத் தவிர வேறு யாரும் அதைத் தொடவோ சுத்தம் செய்யவோ மாட்டார்கள். அந்தப் பானையில்தான் தண்ணீர்க்காரர் எனக்கெனத் தண்ணீர் ஊற்றுவார். ஆனால், தண்ணீர்க்காரர் இருந்தால் தான் எனக்குத் தண்ணிர் கிடைக்கும். எனக்குத் தண்ணீர் வழங்குவது அவருக்குப் பிடிக்கவில்லை. நான் தண்ணீர் கேட்க வருவதைப் பார்த்தால் அவர் அங்கிருந்து சென்றுவிடுவார். அப்போது எனக்குத் தண்ணீர் கிடைக்காது. இவ்வாறு பல நாட்கள் நான் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருக்க வேண்டியிருந்தது.
நான் வசிப்பதற்கு இடம் கிடைப்பதும் இதேபோலக் கடினமாயிருந்தது. போர்சாடில் நான் ஒரு அன்னியன். எந்தவொரு சாதி இந்துவும் எனக்கு வீடு வாடகைக்குக் கொடுக்க முன்வரவில்லை. போர்சாடில் உள்ள தீண்டாதவர்களும், நான் தங்குவதற்கு இடம் கொடுக்கத் தயாராயில்லை. இந்துக்களின் கோபத்துக்கு அவர்கள் அஞ்சினார்கள். நான் என்னுடைய நிலைக்கு மேலாக, ஒரு எழுத்தராக வாழ முயலுவது இந்துக்களுக்குப் பிடிக்காததே இதற்குக் காரணம். உணவு விஷயம் இதைவிடக் கடினமாயிருந்தது. நான் உணவைப் பெறக்கூடிய ஆளோ, இடமோ கிடையாது. காலையிலும் மாலையிலும் நான் ‘பாஜா’க்கள் வாங்கிச் சென்று, கிராமத்துக்கு வெளியே ஏதேனும் தனிமையான இடத்தில் வைத்து அவற்றை உண்டுவிட்டு, இரவில் மாம்லத்தார் அலுவலகத் தாழ்வாரத்தில் தரையில் படுத்து உறங்குவேன். இவ்வாறு நான்கு நாட்கள் சென்றன. என்னால் இவற்றையெல்லாம் தாங்கமுடியவில்லை. பின்பு, நான் என்னுடைய பூர்விக கிராமமான ஜேன்ட்ராலுக்குச் சென்று வசித்தேன். போர்சாடிலிருந்து அது ஆறு மைல் தூரத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் நான் பதினொரு மைல் நடக்கவேண்டியிருந்தது. ஒன்றரை மாதம் இவ்வாறு செய்து வந்தேன்.
அதன்பின் மாம்லத்தார் என்னை ஒரு தலாட்டியிடம் வேலைகற்பதற்கு அனுப்பிவைத்தார். அந்தத் தலாட்டி ஜேன்ட்ரால், காப்புர், சைஜ்புர் ஆகிய மூன்று கிராமங்களுக்குப் பொறுப்பானவர். ஜேண்ட்ரால் அவருடைய தலைமை நிலையம். ஜேண்ட்ராலில் அந்தத் தலாட்டியுடன் நான் இரண்டு மாதங்கள் இருந்தேன். அவர் எனக்கு எதுவும் கற்றுக் கொடுக்கவில்லை. நான் ஒரு நாள்கூட கிராம அலுவலகத்திற்குள் செல்லவில்லை. கிராமத் தலைமை அதிகாரி என்மீது மிகவும் பகைமை காட்டினார். ஒரு முறை அவர் சொன்னார்: ‘அடே, பயலே, உன் அப்பன், உன் அண்ணன் எல்லோரும் இந்தக் கிராம அலுவலகத்தைப் பெருக்குகின்ற துப்புரவுத் தொழிலாளர்கள்: நீ இந்த அலுவலகத்தில் எங்களுடன் சமமாக உட்கார நினைக்கிறாயா? ஜாக்கிரதை! இந்த வேலையை விட்டுவிடுவது உனக்கு நல்லது.’ ஒரு நாள் அந்தத் தலாட்டி சைஜ்புரின் மக்கள்தொகை அட்டவணை தயாரிப்பதற்காக என்னை அந்தக் கிராமத்திற்கு வரச் சொன்னார். நான் அங்கே சென்றபோது கிராமத் தலைமை அதிகாரியும் தலாட்டியும் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
நான் அலுவலகத்தின் கதவருகே சென்று நின்று அவர்களுக்கு வணக்கம் கூறினேன். ஆனால் அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. நான் சுமார் 15 நிமிட நேரம் வெளியிலேயே நின்று கொண்டிருந்தேன். நான் ஏற்கெனவே வாழ்க்கையில் சலித்துப் போயிருந்தேன். இவ்வாறு கவனிக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டதைக் கண்டு, மனத்தில் கோபம் பொங்கியது. அங்கே கிடந்த ஒரு நாற்காலியில் நான் உட்கார்ந்து கொண்டேன். நாற்காலியில் நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துத் தலைமை அதிகாரியும் தலாட்டியும் என்னிடம் ஒன்றும் பேசாமல் அமைதியாக வெளியே சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின் அங்கே ஆட்கள் வரத்தொடங்கினார்கள்; விரைவிலேயே என்னைச் சுற்றிலும் ஒரு பெரிய கும்பல் கூடிவிட்டது. கிராம அலுவலகத்தின் நூலகர் அந்தக் கும்பலுக்குத் தலைவராக நின்றார். படித்த மனிதர் ஒருவர் இந்தக் கூட்டத்தை ஏன் கூட்டிவரவேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. அந்த நாற்காலி அவருடையது என்று, பின்பு எனக்குத் தெரியவந்தது. அவர் என்மீது கடுமையாக வசைமொழிகளைப் பொழிந்தார்.
ரவானியாவை (கிராமப் பணியாளரை)ப் பார்த்து ‘இந்த பங்கி நாயை நாற்காலியில் உட்கார யார் அனுமதித்தது?’ என்று கேட்டார். ரவானியா என்னைக் கீழே தள்ளிவிட்டு நாற்காலியை எடுத்துக் கொண்டார். நான் தரைமேல் உட்கார்ந்தேன். அதைத் தொடர்ந்து கூட்டத்தினர் கிராம அலுவலகத்திற்குள் நுழைந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் மிகவும் கோபமாயிருந்தனர். சிலர் என்னைத் திட்டினார்கள். சிலர் என்னை ‘தர்யா’ வால் (வாள் போன்ற கூர்மையான ஆயுதத்தால்) துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விடுவதாகப்பயமுறுத்தினார்கள். நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, என்மேல் இரக்கம் காட்ட வேண்டிக் கொண்டேன். இதற்கெல்லாம் கூட்டத்தினரிடம் எந்தப் பலனும் ஏற்படவில்லை. என்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எனக்கு ஏற்பட்டுள்ள நிலைமை பற்றியும், கூட்டத்தினரால் நான் கொல்லப்பட்டால் என் உடலை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் மாம்லத்தாருக்கு ஒரு கடிதம் எழுதுவதே இந்த யோசனை. இந்தக் கடிதத்தின் மூலம் மாம்லத்தாருக்குக் கூட்டத்தினருக் கெதிராக நான் அறிக்கை கொடுக்கிறேன் என்பதை அவர்கள் உணர்ந்தால் அவர்கள் தங்கள் செயலை நிறுத்துவார்கள் என்பது என் மனத்தில் இருந்த நம்பிக்கை. ரவானியாவிடம் எனக்கு ஒரு காகிதம் கொடுக்கும்படிக் கேட்டேன். அவர் கொடுத்தார். என்னுடைய ஊற்றுப் பேனாவால் அதன்மீது எல்லோரும் படிக்கும்படியாகக் கொட்டை எழுத்துக்களில் பின்வருமாறு எழுதினேன்:
“மாம்லத்தார், போர்சாட் வட்டம், அவர்களுக்கு:
ஐயா,
பர்மர் காளிதாஸ் சிவராமின் பணிவான வணக்கங்கள். இன்று மரணத்தின் கை என்மேல் விழுந்து கொண்டிருக்கிறது என்பதைத் தங்களுக்குப் பணிவுடன் தெரிவிக்கிறேன். நான் என் பெற்றோரின் சொல்லைக் கேட்டிருந்தால் இப்படி ஆகியிராது. தயை செய்து என்னுடைய மரணச் செய்தியை என் பெற்றோருக்குத் தெரிவியுங்கள்.”
நூலகர் நான் எழுதியதைப் படித்துவிட்டு அதைக் கிழித்துப் போடும்படி என்னிடம் சொன்னார். நான் அப்படியே செய்தேன் அவர்கள் என்மீது எண்ணற்ற வசைச் சொற்களைப் பொழிந்தார்கள். ‘உன்னை நாங்கள் தலாட்டி என்று அழைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாயா? நீ ஒரு பங்கி. நீ இந்த அலுவலகத்தில் வந்து இந்த நாற்காலியில் உட்கார நினைக்கிறாயா?,’ நான் அவர்களை என்மேல் இரக்கம் காட்டும்படி வேண்டினேன். இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன் என்று உறுதி கூறினேன். வேலையை விட்டுவிடுவதாகவும் உறுதியளித்தேன். ஏழு மணிவரை என்னை அங்கேயே இருக்கவைத்துப் பின்புதான் கூட்டத்தினர் சென்றனர். அதுவரை தலாட்டியும் தலைமை அதிகாரியும் முக்கியாவும் வரவில்லை. பின்பு நான் பதினைந்து நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பம்பாயில் உள்ள என் பெற்றோரிடம் திரும்பிச் சென்றேன்.”
தீண்டாதவர்கள் பற்றி இந்துக்கள் கொண்டுள்ள சமூக மனப்பான்மையில் மற்றொரு முக்கிய அம்சம் கவனிக்கத்தக்கது. பின்வரும் உதாரணங்கள் இந்த மனப்பான்மையைத் தெளிவாகக் காட்டும். 1943 செப்டம்பர் 8 – ஆம் தேதி ‘அல்பஜால்’ பத்திரிகையில் வெளியான செய்தி:
“ஒரு கிராமத்தின் இந்துக்கள் ஒரு தீண்டாதார் குடும்பத்தைத் தாக்கியதாக நாசிக்கிலிருந்து செப்டம்பர் 1 – ஆம் தேதி செய்தி வந்தது. அவர்கள் வயதான ஒரு பெண்ணின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு, அவளை ஒரு மரக்கட்டைக் குவியலின்மேல் உட்காரவைத்து அதற்குத் தீ வைத்தார்கள். அந்தக் கிராமத்தில் காலரா வந்ததற்கு அவள்தான் காரணம் என்று அவர்கள் நினைத்ததே இதற்குக் காரணம்.”
“கைரா ஆப் இந்தியா” 1946 ஆகச்ட் 29 – ஆம் தேதி: குடியிருப்பு சாதி இந்துக்களால் தாக்கப்பட்டது. ஹரிஜனங்கள் சந்தேகித்து இந்தத் தாக்குதலை நடத்தினார்கள்.
சுமார் 200 பேர் தடிகளை எந்தி வந்து ஹரிஜனக் குடியிருப்பைத் தாக்கி, வயதான ஒரு பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அவளுடைய பாதங்களைத் தீயிட்டுப் பொசுக்கினார்கள். மற்றொரு பெண்ணும் அவர்களால் அடிக்கப்பட்டாள்.
ஹரிஜனங்கள் பயந்து போய் அந்தக் கிராமத்திலிருந்து வெளியேறிச் சென்றார்கள். மாவட்ட ஹரிஜன சேவாசங்கத்தின் செயலாளர் திரு.சோட்டாபாய் பட்டேலுக்கு இந்த நிகழ்ச்சிகள் பற்றி விவரம் தெரிவிக்கப்பட்டது. அவர் ஹரிஜனங்களைக் கிராமத்திற்குத் திரும்பக் கூட்டிக் கொண்டு வந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டுமென்று அதிகாரிகளுக்கு மனுச் செய்திருக்கிறார்.
மற்றொரு கிராமத்திலிருந்தும் இதேபோன்ற சம்பவம் பற்றிச் செய்தி வந்துள்ளது. அங்கு ஹரிஜனங்கள் கடுமையாக அடிக்கப்பட்டார்கள்.
விஷயம் அத்துடன் முடிந்து போகவில்லை. மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இதில் மொத்த இந்துக்களும் தீண்டாதோர்மீது தாக்குதல் நடத்துவதில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.
இது பற்றி 1946 செப்டம்பர் 22-ஆம் தேதி “பாரத் ஜோதி” யில் வெளியான செய்தி கீழே தரப்படுகிறது:
“கைரா மாவட்டம் போர்சாட் வட்டத்தின் ஒரு கிராமத்தில் கிராமவாசிகள் கூட்டம் ஒன்று ஹரிஜனங்களை அரிவாள்களும் கம்புகளும் கொண்டு தாக்கியதில் ஒரு பெண் உட்பட ஐந்து ஹரிஜனங்கள் கடுமையாகக் காயமடைந்தனர் என்று போர்சாட் வட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளருக்குச் செய்தி கிடைத்துள்ளது. கிராமத்தில் ஏழு எருமைகள் இறந்து போனதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்தது. ஹரிஜனங்களின் மந்திரவாத வேலையால்தன் எருமைகள் இறந்தன என்று இந்துக்கள் நினைத்தார்கள்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.. காவல் துறையினர் அந்தக் கிராமத்துக்கு விரைந்தனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரிஜனங்கள் அதிகாரிகளிடம் ஏதேனும் புகார் செய்தால் அவர்களை உயிருடன் எரித்துவிடப்போவதாகக் கிராமவாசிகள் மிரட்டிவருவதாகத் தெரிகிறது.
இத்தகைய நிகழ்ச்சிகள் கைரா மாவட்டத்தில் அடிக்கடி நடக்கின்றன. ஹரிஜனங்கள் இவ்வாறு துன்புறுத்தப்படுவதைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கைரா மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டிருக்கிறார்.”
இந்த உதாரணங்களெல்லாம் சொல்லுகின்ற கதை எளிமையானது, தெளிவானது. இதைப்பற்றிக் கருத்துரை எதுவும் கூறத் தேவையில்லை. சராசரியான இந்துவின் கருத்தில் தீண்டாதவர் மனித உறவுகளுக்குக் கூடத் தகுதியில்லாதவர். அவர் தீமையின் இருப்பிடம். அவர் மனிதரே அல்ல. அவரைவிட்டு விலகியேயிருக்க வேண்டும்.
(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 5)