நமது சமூகத்தைப் பற்றிய மதிப்பீடுகளில் பல மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், பெரும்பான்மையான குழுக்கள், கட்சி களிடையே சனநாயகப் புரட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே, புரட்சிகர முகாம் என்று நாம் பார்க்கும் பொழுது அது சனநாயக சக்திகளை உள்ளடக்கியதாக மாறுகிறது.

பெரும்பான்மையாக இந்தக் குழுக்கள், கட்சிகள் பாட்டாளிவர்க்க தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள்; விவசாயிகள், குட்டிமுதலாளிய சக்திகளால் நடத்தப்படுகிறது.

இருப்பினும், இவர்கள் மூன்று வகையான அரசியல் தன்மையைக் கொண்ட பிரிவினராக உள்ளனர்.

முதலாவதாக,

மார்க்சிய & லெனினிய & மாவோசிந்தனை (அ) மாவோவியத்தை ஏற்றுக்கொண்ட புரட்சிகர பிரிவினர்.

இரண்டாவதாக,

பொதுவாக மார்க்சியம், சமூகமயம் (சோசலிசம்) கொள்கைகளை ஏற்றுக் கொண்ட பரந்த இடதுசாரி பிரிவினர்.

மூன்றாவதாக,

சனநாயக சமூக மாற்றத்தைக் கோரும் பரந்த சனநாயக சக்திகள் என்று மூன்று பிரிவாக உள்ளனர். எனவே, இந்த மூன்று தன்மைக்கேற்ப மூன்று விதமான அய்க்கிய முன்னணி சமூகத் தேவையாக உள்ளது.

முதலாவது வகையினர் (புரட்சிகர முன்னணி) புரட்சிகர கருவாக செயல்படுவர். இவர்களது நோக்கம் அய்க்கியபட்ட கட்சியை கட்டுவதை நோக்கியதாக இருக்கவேண்டும். அதற்கான அரசியல் கருத்து போராட்ட தயாரிப்பு முக்கியமாக இருக்க வேண்டும்.

மேலும், இதர அய்க்கிய முன்னணிகளுக்கு தலைமை சக்தியாக செயற்பட வேண்டும்.

இரண்டாவது வகையினர் (பரந்த இடதுசாரி முன்னணி) மார்க்சியம், சமூகமயத்தை (சோசலிசம்) திட்டமாகவே கொண்டிருப்பர். இவர்களே ஜனநாயக முன்னணியின் உறுதிமிக்க தூண்களாக இருக்க வேண்டும். மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட கட்சிகள், தொழிற் சங்கங்கள் பங்கு பெறும்.

மூன்றாவது வகையினர் (பரந்த சனநாயக முன்னணி) சனநாயக சமூக மாற்றத்தை முன்வைப்பவர்கள் இதில் பங்குபெறுவர். பொது தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் மற்றும் தலித், பெண்கள், மதச்சிறுபான்மையோர், மீனவர்கள், பழங்குடிகள், வணிகர்கள்,  தொழில் முனைவோர் போன்றோர்களின் அமைப்புகள் பங்குபெறும். (தன்னார்வக் குழுக்கள், சாதிச்சங்கங்கள், இந்துத்துவா அமைப்புகள் சேர்க்கப்படக் கூடாது) இம் முன்னணியே செயற்பாட்டுக்களமாக இருக்கும்.

இம்மூன்று முன்னணிகள் இல்லாமல் சமூகத்தில் குறிப்பிட்ட துறைகளை ஒட்டி, குறிப்பிட்ட சிக்கலுக்காக, குறிப்பிட்ட திட்டத்தை ஒட்டி அய்க்கிய முன்னணிகள் கட்டப்படுகின்றன. ஆனால் உண்மையில் இவைகள் இம்மூன்று முன்னணிகளுக்கு உட்பட்டே இருக்கும்.

இம்முன்னணிகள் அமைப்பு வடிவத்தில் சனநாயக மத்தியத்துவ அடிப்படையில் செயற்படக் கூடாது. பொதுக் கருத்தில் மாறுபடும் பொழுது, தனது சொந்த நிலைப்பாட்டை செயற்படுத்தும் சுதந்திரம் இருக்க வேண்டும். இல்லை என்றால் அய்க்கிய முன்னணி வடிவம் சமூகத்தை பிரதிபலிக்காது.

மேலும் அரசியல் பரிமாற்றங்கள் (அ) மோதல்கள், செயற்பாடுகள் செயற்போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளை முன்னணி க்குள் உருவாக்கும். அவைகளை செயற்பட அனுமதிக்க வேண்டும். இறுதியில் அவை ஒரே அமைப்பாக  இணையலாம் (அ) இணையாமல் கூட போகலாம்.

இவையல்லாமல் கட்டப்படும் அய்க்கிய முன்னணிகளின் திட்டத்தில் குழப்பங்கள் ஏற்படும் (அ) சேர்க்கப்படும் சக்திகளில் குழப்பம் ஏற்படும்.

எடுத்துக் காட்டாக, சி.பி.எம். மேற் கொள்ளும் இடது ஜனநாயக முன்னணி குழப்பம் வாய்ந்தது. எப்படியெனில், இடது ஜனநாயக முன்னணி என்று கட்டினாலும் இடதுசாரிகளின் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரமுடியாது. சனநாயக சக்திகளின் திட்டத்தை தான் நடைமுறைப் படுத்த முடியும். இல்லை என்றால் முன்னணி நீடிக்காது. அதனால் இடது முன்னணி என்பது வேறு. இடது ஜனநாயக முன்னணி என்பது சாராம்சத்தில் பரந்த சனநாயக முன்னணியே ஆகும்.

தமிழக, இந்திய, உலகச் சூழல்களில், இம்மூன்று முன்னணியின் தேவைகளே அடிப்படையாக விளங்குகின்றன.

எனவே, புரட்சிகர பிரிவினரே! இடதுசாரி சக்திகளே! சனநாயக சக்திகளே! முன்னணிகளுக்கான முயற்சிகளை முழு வேகத்துடன் முன்னெடுப்போம்!

Pin It