தோழர்களே!

தமிழக முற்போக்கு அரசியல் களத்தில் ஒரு புதிய போராளியாக களமாட புதிய முன்னோடி இதழ் உங்கள் முன் நிற்கிறது.

புதிய முன்னோடி தமிழ் தேசிய மார்க்சிய அரசியல் இதழாக மக்கள் முன் வருகிறது.

இந்திய ஆளும்வர்க்கத்தின் கருத்தியலான நவீன பிராமனியத்தை அதன் உள்ளடக்க கூறுகளான இந்தி, இந்து, இந்தியா என்பதை கடுமையாக எதிர்க்க புதிய முன்னோடி உறுதி பூணுகிறது.

நவீன பிராமனீயத்தை பலப்படுத்தும் போக்காக இந்துத்துவா பயங்கரவாதம் மைய ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளதை மிகவும் அதிர்ச்சியுடனும் அதே சமயத்தில் எச்சரிக்கை யுடனும் புதிய முன்னோடி அணுகுகிறது. இந்த சாதகமற்ற சூழல் மிகுந்த கவலை அளிக்கிறது.

இந்துத்துவா பயங்கரவாதத்தையும், அரசு பயங்கரவாதத்தையும், இவைகளுக்கு காரணமான உலகமயம், தாராளமயம், தனியார்மய பொருளாதர கொள்கைகளையும் புதிய முன்னோடி உறுதியுடன் எதிர்த்து நிற்கும்.

தமிழகத்தில் வளர்ந்து வரும் சாதிபயங்கரவாதத்தை வேரோடு கிள்ளி எறிய புதிய முன்னோடி உறுதி ஏற்கிறது.

மறுபக்கம் ஆளும்வர்க்கத்தை வீழ்த்த வேண்டிய புரட்சிகர முகாம் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது ஆழ்ந்த வேதனைகளை தருகிறது.

திரிபுவாத கட்சிகளான சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற கட்சிகள் நாடாளுமன்ற வாத சகதியில் மூழ்கி உள்ளன. இதனால் மக்களிடம் அம்பலப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் கடும் பின்னடைவுக்குள்ளாகி உள்ளன.

மாற்று சக்தியாக உருவெடுத்த மாவோயிஸ்டுகள் மக்கள் திரள் வழிக்கு மாறாக ஆயுத சீர்த்திருத்தவாதத்திலும் கெரில்லாயிசத்திலும் மூழ்கி உள்ளனர்.

தமிழகத்தில் அரசியல் சக்திகளை நாங்கள்தான் திரட்டுகிறோம் என்று கூறிக் கொண்டிருந்த “புதிய ஜனநாயகம்” இதழ் சார்ந்த அமைப்புகள் முப்பதாண்டுகள் வேலைக்குப் பிறகு முட்டுசந்தில் முட்டிக்கொண்டு நிற்கின்றன. தற்போது “மக்கள் அதிகாரத்தை கட்டமைப்போம்” என்று இடது வாய்ச்சவடால் அடிக்கின்றன.

சமூக மாற்றங்களைப் பற்றி, மக்கள் விடுதலையைப் பற்றி, எந்தவித அடிப்படை அறிவுமற்ற பலவித மா-லெ குழுக்கள், தமிழ்த்தேசிய அமைப்புகள் செக்குமாடு வேலை முறைகளில் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தத்தில் தமிழக, இந்திய சமூக மாற்றங்களைப் பற்றி, புரட்சி பற்றி அடிப்படையான, குறிப்பான சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது. தீர்வின் அடிப்படையில் சரியான கண்ணிகளை பற்றிப் பிடிக்க வேண்டி உள்ளது. இவைகளைப் பற்றி எந்தவித பிரக்ஞையும் இல்லாமல் தீவிர அரசியலற்று பல ஆண்டுகளாக இவ்வமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எனவே, சமூக மாற்றத்திற்கான, புரட்சி குறித்த அடிப்படையான, குறிப்பான சிக்கல்கள் மீது கருத்தியல், அரசியல் சார்ந்த கடும் போராட்டங்களை உறுதியாக புதிய முன்னோடி நடத்தும். புரிதலின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்தும். பாய்ச்சல் மாற்றங்களை இலக்காக கொள்ளும்.

தமிழ் தேசிய விடுதலை என்று ஏமாற்றுகிற இனவாத சக்திகளை அதாவது, ஆதிக்க சாதிகளுக்கான, ஆதிக்கசக்திகளுக்கான, ஆளும்வர்க்க தமிழ்த்தேசியத்தை (அ) வெள்ளாளிய தமிழ்த் தேசியத்தை முன்வைக்கும் இனவாத சக்திகளை அம்பலப்படுத்தி, உழைக்கும் மக்களுக்கான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தமிழ்த்தேசிய விடுதலையை புதிய முன்னோடி முன்கொண்டு செல்லும்.

தலித்திய, பெண்ணிய, விளிம்புநிலைவாதம் போன்ற ஒற்றைக் கூறை மட்டும் முன் நிறுத்தும் “ஒற்றைக் கண் மந்திரவாதிகளை” அம்பலப்படுத்தும். சமூகத்தில் நிலவும் பன்முகத் தன்மைகளையும் அவற்றிற்கிடையிலான இயங்கியல் உறவுகளையும் புதிய முன்னோடி நிலைநிறுத்தும்.

பின்நவீனத்துவ, பின்காலனிய கருத்தாக்கங்களை உறுதியாக எதிர்கொள்ளும். மேலும் இதர முக்கிய முதலாளிய கருத்தாக்கங்களான தாராளவாதம், அராஜகவாதம், சந்தர்ப்பவாத கருத்தாக்கங்களை புதிய முன்னோடி முறியடிக்கும்.

ஒட்டுமொத்தத்தில் புரட்சிகர, சனநாயக அரசியலை முன்கொண்டு செல்லும் மார்க்சிய போராளியாக புதிய முன்னோடி செயல்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

                                தோழமையுடன்

                                ஆசிரியர்

Pin It