ஆரியம் விரித்த பொய்யில்

                ஆழ்ந்திட்ட தமிழர் தம்மை

கூரிய ஈட்டி கொண்டு

                குடைந்தவர் பெரியார்; அந்த

நேரிய தலைவ ருக்கு

                நீவாய்த்தாய் கைவாள் போலே!

ஊரெலாம் உனது பாட்டை

                உருப்போட லானார் மக்கள்

குயில்போலக் கூவும் பாட்டும்

                கொட்டுமுர சார்க்கும் பாட்டும்

வயல்வெளி நடவுப் பாட்டும்

                வான்நிலா அழகுப் பாட்டும்

மயில்நிகர் பெண்கள் பாட்டும்

                மழலைக்குப் பாப்பா பாட்டும்

வெயிலில்காய் மக்கள் பாட்டும்

                வெடிப்புறத் தந்த வன்நீ!

பாய்ச்சும்கூர் வேலைப் போலே

                பகைவர்மேல் பாய்ந்தாய்; கன்னல்

காய்ச்சுநேர் சுவைத் தமிழ்மேல்

                கடல்போலும் ஆசை வைத்தாய்

மூச்செலாம் தமிழே; என்றன்

                முழுவாழ்வும் தமிழே என்றாய்

வீச்சரிவாள் போலும் தாக்கம்

                விளைப்பன உனது பாக்கள்

உழைப்பாளர் மேன்மை சொன்ன

                ஒருபுலவ! தம் குடும்பத்

தழைப்பாளர் பெருகிப் போனார்

                தமிழ்நாட்டில்; தத்தம் சாதிப்

பிழைப்பாளர், மதத்தைச் சொல்லிப்

                பிளப்பாளர் மிகுந்தார்; தீமை

இழைப்பாளர் தம்மை வீழ்த்த

                எடுப்போம்உன் கொலைவாள் தன்னை!

Pin It