கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பாக தமிழக மக்கள் கல்வி உரிமைக் கருத்தரங்கு திருப்பூர் ஹார்வி குமாரசாமி அரங்கில் நடைபெற்றது. முற்பகல் அமர்வுக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு. மூர்த்தி தலைமை வகித்தார். இவ்வமர்வின் தொடக்கவுரையாக மூத்த கல்விச் சிந்தனையாளர் ச.சீ.இராசகோபாலன் அவர்களின் காணொளிக் காட்சி உரை இடம்பெற்றது.   பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, மொழி உரிமை பரப்பியக்கத்தின் செயலாளர் ஆழி செந்தில்நாதன், சீனாவின் ஜேஜியாங் பல்கலைக் கழக முதுநிலை அறிவியல் ஆராய்ச்சியாளர் விஜய் அசோகன் ஆகியோர் உரையாற்றினர். இரண்டாம் அமர்வு  பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி தாளாளர் மருத்துவர் சு.முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் புலவர் செந்தலை ந.கெளதமன், குடியாத்தம் அரசுக் கலைக் கல்லூரி முன்னாள் முதல் ப.சிவக்குமார், பழங்குடி இருளர் அமைப்பின் தலைவர் பிரபா கல்விமணி ஆகியோர் கருத்துரை ஆற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி அவர்கள் நிறைவுரை ஆற்றினார். தமிழ்நாட்டிற்கே அனைத்துக் கல்விச் சட்ட அதிகாரங்கள், அனைவருக்கும் அரசின் பொறுப்பில் தரமான கட்டணமில்லாக் கல்வி, அனைத்துக் கல்வியும் அன்னைத் தமிழில் ஆகிய முழங்கங்களை வழியுறுத்தி இக்கருத்தரங்கு நடைபெற்றது.

vasanthi devi thiruppur

 நிறைவேற்றப்பட்ட   தீர்மானங்கள் 

 • கல்வி விற்பனைப் பண்டமன்று. கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை. ஒரு மக்களாட்சி அரசாங்கம் பின்பற்றவேண்டிய அனைத்துலகக் கல்வி நெறியும் இதுவே. எனவே, மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் பாகுபாடில்லாமல், அவரவர் தாய்மொழியில், அரசின் பொறுப்பில், கட்டணமில்லாமல் தரமான கல்வி வழங்குவதை நாட்டின் கல்விக் கொள்கையாக இந்திய ஒன்றிய அரசும் தமிழக அரசும் அறிவிக்கவேண்டும்.
 • இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது கல்வி மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. 1976 ஆம் ஆண்டில் நெருக்கடி நிலைக் காலத்தில் கல்வி பொதுப்பட்டியலில் இணைக்கப்பட்டது.  நீட் எனும் தேசிய  மருத்துவத் தகுதி – நுழைவுத் தேர்வு இன்றைக்குத் தமிழகத்தின் எரியும் சிக்கலாக இருக்கிறது. மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது மாபெரும் இழுப்பாகும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மீட்டெடுக்கப் போராடுவதே இச்சிக்கலுக்கான முழுமையான தீர்வாக அமையும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டெடுப்பதன் மூலமே அனிதாவின் உயிர் ஈகத்திற்கு  நாம் மதிப்பளிக்க முடியும்.  இந்தியக் கூட்டாட்சி முறைக்கும் மொழிவழி தேசிய இனங்களின் இறையாண்மைக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் கல்வி மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு விடுவிக்கப்படவேண்டும். கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மீட்டெடுக்க நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்கள் இயக்கங்களும் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்பதை இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது
 • மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற நிதி ஆயோக் பரிந்துரையை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது. அரசு மற்றும் தனியார் கூட்டு என்ற பெயரில் கல்வியை தனியார் வணிகப்பொருளாக்கும் முயற்சிகளைக் கைவிடவேண்டும்.. இராணுவ நிதி ஒதுக்கீட்டைவிடக் கூடுதலாகக்  கல்விக்கான அரசின் முதலீட்டை அதிகரிக்கவேண்டும். கல்வி வரியை முறையாக கல்வி மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தவேண்டும்.
 • புதிய தேசியக்கல்விக்கொள்கை (2016) வரைவுக்கான உள்ளீடுகள் கல்வி உள்நாட்டு, அயல்நாட்டு வணிகர்களின் இலாப நோக்கிலான சந்தைக்கானதாக மாற்றப்படவேண்டும் என்பதையே உள்நோக்கமாகக் கொண்டுள்ளது. குழந்தைகளின் அடிப்படை உரிமையான கல்வியை மழலையர் கல்விமுதல் உயர்கல்வி வரை விற்பனைப் பண்டமாக்குவதை நாட்டின் சட்டமாக்கும் புதிய  கல்விக் கொள்கையைக் கைவிடவேண்டும். கல்வியை வர்த்தகமாக்கும் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறவேண்டும்.
 • 1964-66 இல் அமைக்கப்பட்ட கோத்தாரிக் கல்விக்குழு மற்றும் தேசியக் கல்விக் கொள்கை 1986 ஆகியவற்றின் பரிந்துரைகளான தாய்மொழிவழிக் கல்வி, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் கல்வி, பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி அமைப்புமுறையில் அரசின் பொறுப்பிலும் செலவிலும் கல்வி ஆகிய குறிக்கோள்களை உடைய கல்விக் கொள்கை உருவாக்கப்படவேண்டும். இதை வடிவமைக்கும் வகையில் அனைத்து மாநிலங்களின் கல்வியாளர்களையும் கொண்ட புதிய கல்விக் கொள்கை வரைவுக்கான குழு அமைக்கப்படவேண்டும் என்பதை இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. பல்வேறு குடிமக்கள் அமைப்புகளும் இக்கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
 • கல்வி அடிப்படை உரிமை என்பதை அறிவிக்கும் சட்டம் 2009 ஆண்டில் நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டம் கல்வியைக் குழந்தைகளின் அடிப்படை உரிமை என்று ஏட்டளவில் மட்டும் கூறியுள்ளது. 4 வயது முதல் 18 வயது வரையுள்ள பள்ளிவயதுக் குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கட்டாயக்கல்வியை அருகமைப்பள்ளிகள் மூலம் அரசின் செலவிலும் பொறுப்பிலும் வழங்குவதே ஒரு மக்களாட்சி அரசின் கடமையாக இருக்கவேண்டும். ஆனால், 6 வயதுமுதல் 14 வயது வரை உள்ள 25 விழுக்காடு அருகமைப்பகுதிக் குழந்தைகளுக்கு மட்டும் தனியார்பள்ளிகள் இலவசக்கல்வி வழங்கவேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் குழந்தைகள் அனைவருக்கும் இலவசக்கல்வி என்பது மறுக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தனியார் பள்ளிகளையும் பொதுப்பள்ளிகளாக அறிவித்து அருகமைப் பகுதியில் வசிக்கும் 4 வயது முதல்  18 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை கிடைக்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டம் 2009 திருத்தப்படவேண்டும் என்பதை இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. கட்டாயத் தேர்ச்சி எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் இருக்கவேண்டும்.
 • கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் அட்டவணையில் கூறப்பட்டுள்ள பள்ளிகளுக்கான நடைமுறைத் தரங்களையும் விதிகளையும் பின்பற்றாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்.  இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி நிறுத்தப்படவேண்டும். அங்கீகாரம் பெறாமல் தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கக் கூடாது. கல்வி உரிமைச் சட்டத்தின் நடைமுறை தரங்கள் மற்றும் விதிகளின்படி அரசுப்பள்ளிகள் நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும். அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகள் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்.
 • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, நலத்துறை ஆகிய அனைத்து அரசுப் பள்ளிகளிலும் குறைந்தது வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் நியமிக்கவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1998 ஆம் ஆண்டுவரை பின்பற்றப்பட்டு வந்த  20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம் என்ற விதியை மீண்டும் பின்பற்றவேண்டும். தொடக்கப் பள்ளிகள் முதற்கொண்டு ஆங்கிலப்பாட ஆசிரியர், உடற்கல்வி, ஓவியம், கணினி, தொழிற்கல்வி ஆகிய கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான ஆசிரியர்கள் நியமிக்கவேண்டும். தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளில்  ஆங்கில மொழிப்பாடத் திறன் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவேண்டும். ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிற்குள் வசிக்கவேண்டும், அரசுப்பள்ளிகளில் மட்டும் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கவேண்டும் என்ற பணி விதிமுறைகளை உருவாக்கவேண்டும்.
 • பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவு மானியத்தை அதிகரித்துத் தரமான சத்துணவு வழங்கவேண்டும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை உடனே தொடங்கவேண்டும்.
 • அரசுப்பள்ளிகளில் படிப்பவர்களுக்கும், தமிழ்வழியில் படிப்பவர்களுக்கும் உயர்கல்விச் சேர்க்கையிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்கவேண்டும்.
 • தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளுக்குத் தனியாக ஆசிரியர்கள் கடந்த நான்கு கல்வி ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. தமிழ்வழி, ஆங்கிலவழி என இருவழி வகுப்புகளையும் இணைத்து ஒரே ஆசிரியர் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் கற்றல் அடைவு அடியோடு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல அரசுப்பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் ஆங்கிலவழி வகுப்புகள் மட்டும் நடத்தும் நிலையும் உருவாகியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு வரும் கல்வி ஆண்டில் அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளில் புதிய மாணவர் சேர்க்கையைக் கைவிடவேண்டும்.
 • அரசுப்பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை தனியார் பள்ளிகளில் +1 வகுப்பில் சேர்க்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும்.
 • தனியார் பள்ளிகளின் குழந்தைகள் சேர்க்கைப் பகுதிக்கான எல்லை வரையறை இல்லாததால் மிக அதிகத் தொலைவில் இருந்து குழந்தைகள் பள்ளி வாகனங்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.  இதனால், தனியார் பள்ளி வாகன விபத்துகள், சூழல் கேடு, எரிபொருள் செலவு, கல்விச் செலவு, போக்குவரத்து நெருக்கடி, குழந்தைகளுக்கு ஓய்வின்மை, உடற்சோர்வு போன்ற பல இடர்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய கேடுகளைத் தடுக்க தனியார் பள்ளிகளின் குழந்தைகள் சேர்க்கைப் பகுதிக்கான குடியிருப்பு எல்லைகளை வரையறுக்கவேண்டும். அருகமைப் பகுதிச் சேர்க்கை முறையை  நடைமுறையாக்கவேண்டும்.
 • தமிழ்வழிக் கல்விக்கு புத்துயிரூட்டும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நிர்ணயிக்கப்படும் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே வழங்கவேண்டும். தாய்த்தமிழ்ப் பள்ளிகளை அரசு நிதி உதவிப் பள்ளிகளாக தமிழக அரசு ஏற்கவேண்டும்.
 • தமிழகப் பள்ளிக் கல்விதுறையின் முதன்மைச் செயலாளராக திரு த. உதயச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்ட போது இருந்த அதிகார நிலையிலேயே தொடரவேண்டும். புதிய, தற்காலிக முதன்மைக் கல்விதுறைச் செயலாளர் நியமனத்தை ரத்து செய்யவேண்டும்.
 • பண்டைய சமய மூடநம்பிக்கைகளை ஒழித்து, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் மக்களாட்சி நெறிகளைக் குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்கும் வகையில் தமிழ்நாட்டின் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படவேண்டும்.
 • ஒன்றிய  அரசாங்க ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காக ஒன்றிய அரசின் பொறுப்பில் உருவாக்கப்பட்டுள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டு அரசின் கல்வித்துறையின் பொறுப்பில் இயங்கும் அரசுப்பள்ளிகள் இன்று ஏழைக் குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளிகளாக மாறி வருகின்றன. பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிட நலப்பள்ளிகள், பள்ளிகள் என்ற தகுதியை இழந்து மிக மோசமான நிலையில் உள்ளன. குழந்தைகள் எண்ணிக்கைக் குறைவினால் பல அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளன. ஏழைகள் இல்லையென்றால் அரசுப்பள்ளிகளே இருக்காது என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளைப் பெருகவைத்து அரசுப்பள்ளிகளை மூடவைப்பதே இன்றைய ஆட்சியாளர்களின் நோக்கமாக உள்ளது. இதைத் தடுக்கவேண்டியது அனைத்துக் குடிமக்கள் இயக்கங்களின் கடமையாகும். எனவே, கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் அரசுஊதியம் பெறுவோர் அனைவரின் குழந்தைகளும், மக்கள்பிரதிநிதிகளாக இருப்போரின் குழந்தைகளும் அரசுப்பள்ளிகளில் மட்டுமே சேர்க்கப்படவேண்டும் என்ற சட்டத்தை ஒவ்வொரு மாநில அரசுகளும் இயற்றவேண்டும்.  தமிழ்நாடு அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இச்சட்டத்தை முதன்முதலாக நிறைவேற்றவேண்டும் என்பதை இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
 • அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும மழலையர் கல்வி வகுப்புகள்  தொடங்கவேண்டும். இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கையை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டுள்ள அங்கன்வாடி மையங்களை அருகிலுள்ள அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளித் தலைமை ஆசிரியரின் கண்காணிப்பிலும் பொறுப்பிலும் செயல்படும்படி மாற்றி அமைக்கலாம்.
 • ஆங்கில மொழி அறிவு வருங்காலத் தலைமுறைக்கு அவசியமானது. ஆனால் தொடக்கக் கல்வி நிலையில் இருந்தே ஆங்கில வழியில் (ENGLISH MEDIUM) பாடம் சொல்லிக்கொடுப்பதால் ஆங்கில மொழி அறிவை வளர்க்க முடியாது.  கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல் போன்ற பாடங்களை ஆங்கில வழியில் படிப்பதால் பாடங்களை புரியாமலேயே குருட்டு மனப்பாடம் செய்வது தான் நடக்கும். ஆங்கிலவழிப் பள்ளிகளில் இது தான் நடந்துகொண்டிருக்கிறது. எனவே ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதைக் கைவிட்டு தாய்மொழி வழியில் கற்பிப்பதை தொடக்கப்பள்ளி நிலையிலாவது கட்டாயமாக்கவேண்டும். அதோடு, ஆங்கில மொழியைச் சிறப்பாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும்  கற்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு தினந்தோறும் வானொலி வகுப்புகள் மூலம் ஆங்கில மொழியைக் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை அம்மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட முயற்சிகளை தமிழக அரசும் மேற்கொள்ளவேண்டும். அனைத்து அரசுத் தொடக்கப்பள்ளிகளிலும் நடுநிலைப்பள்ளிகளிலும் கட்டாயமாக ஆங்கில மொழிப்பாட ஆசிரியர் நியமிக்கவேண்டும்.
 • அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற அனைத்து உயர்கல்விச் சேர்க்கையிலும்  முன்னுரிமை வழங்கவேண்டும்.
 • தற்போது சாலை விபத்துகள் நடப்பதில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளதை தேசியக் குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தனியார் பள்ளி வாகனங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தற்போது தமிழ்நாட்டில் 25 ஆயிரம் தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பள்ளி வாகன விபத்தினால் சராசரியாக மாதம் ஒரு குழந்தை உயிரிழக்கும் நிலை உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளின்  பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அருகமைப் பள்ளிச் சேர்க்கை முறையைக் கட்டாயமாக்குவதே இதற்குத் தீர்வாக இருக்கும்.
 • மழலையர் வகுப்புக் குழந்தைகளையும் முதல் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் உள்ள பள்ளியிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளை 3 கிலோ மீட்டர் எல்லைக்குள் உள்ள பள்ளியிலும் மட்டுமே சேர்க்கவேண்டும் என்ற விதியை உருவாக்கி நடைமுறைப்படுத்தவேண்டும்.

9 மற்றும் 10 ஆம்வகுப்புகளில்படிக்கும்குழந்தைகளை 5 கிலோ மீட்டர் எல்லைக்குள் இருந்தும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை 8 கிலோ மீட்டர் எல்லைக்குள் இருந்தும் மட்டுமே தனியார் பள்ளிகள் வாகனங்கள் மூலம் அழைத்து வரவேண்டும் என்ற விதிமுறையை வகுக்கவேண்டும் .தனியார் பள்ளிகள் வாகனங்கள் இயக்குவதை முழுவதுமாக தவிர்க்கும் வகையில் அரசுப் போக்குவரத்துத்துறை மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கென்று தனிப்பேருந்துகளையும் சிற்றுந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 • அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலமுறை ஊதியத்தில் முழுநேர துப்புரவுப் பணியாளர்கள்  நியமிக்க வேண்டும்.

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு

Pin It