திருப்பூர் தாய்த்தமிழ் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிறப்பான வெற்றியை ஈட்டி பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள்தாம் பள்ளியின் முதல் பத்தாம் வகுப்பு அணி. ஆறு மாணவர்கள்தாம். குறைந்த எண்ணிக்கையுடைய அணிதாம். எனினும் அறுவரும் முத்துக்களும் மாணிக்கங்களுமே ஆவர். இதை நான் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் சொல்லவில்லை. கலை விளையாட்டு பண்பாடு எனப் பன்முனைகளிலும் அவர்களின் வளர்ச்சியை மனதில் கொண்டே சொல்கிறேன். இதில் மூவர் ஆண்கள்; மூவர் பெண்கள். கீழே அவர்கள் மதிப்பெண்களை அவர்கள் பெற்றுள்ள தரவரிசையில் தந்துள்ளேன்.

1. இல.செ.சுவேதா:

    தமிழ்            98

    ஆங்கிலம்       91

.   கணக்கு          96

   அறிவியல்        95

   சமூக அறிவியல்  99

     மொத்தம்      479

2. அ.மு.அபிநயா:

    தமிழ்           95

   ஆங்கிலம்        85

   கணக்கு          97

   அறிவியல்       99

   சமூக அறிவியல் 98

     மொத்தம்      474

3. சா.த. சவுந்திர்ராசன்:

          தமிழ்         93

  ஆங்கிலம்             74

   கணக்கு              92

  அறிவியல்            96

சமூக அறிவியல்        99

  மொத்தம்            454

4. இனியன் முத்துசாமி:

            தமிழ்       90

         ஆங்கிலம்     85

         கணக்கு       87

    அறிவியல்         90

சமூக அறிவியல்       97

   மொத்தம்          449

5.உ.செ.கருப்புசாமி:

         தமிழ்        84

 ஆங்கிலம்           68

கணக்கு              56

அறிவியல்           93

சமூக அறிவியல்    98

மொத்தம்          399

3.மை.ப.ஹாசிரா பர்வீன்:

              தமிழ்     91

         ஆங்கிலம்     56

         கணக்கு       51

      அறிவியல்       88

  சமூக அறிவியல்    95

    மொத்தம்         381 

எல்லாப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் 490க்கு மேல் என்று மதிப்பெண்கள் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் குழந்தைகளின் மதிப்பெண்கள் பெரிதாகத் தோன்றாமல் போகலாம். ஆனால் இக்குழந்தைகளின் பின்புலத்தைப் புரிந்து கொண்டால்தான அவர்கள் புரிந்துள்ள சாதனை விளங்கும். மேலே உள்ள குழந்தைகளில் இனியனைத் தவிர மற்ற அய்வருமே உழைக்கும் வகுப்பாரின் குழந்தைகள். உயர்படிப்பறிவில்லாப் பெற்றோரின் குழந்தைகள். எழுத்து வாசனையே அறியாத பெற்றோர்களும் உள்ளனர். இக்குழந்தைகளே இக்குடும்பங்களில் பத்தாம் வகுப்பைத் தாண்டும் முதல் தலைமுறையினர் ஆவர்.

இக்குழந்தைகளின் பெற்றோர்களையும் அவர்கள் குடும்பச் சூழ்நிலைகளையும் நன்கு அறிந்தவன் நான். வீட்டிலே படிப்பதற்கேற்ற அமைதியான சூழலே அற்றவர்கள் இவர்கள். இவர்களுக்கு வழிகாட்ட பள்ளிக்கு வெளியே யாரும் இலர். உழைக்கும் மக்கள் குடும்பங்களில் உள்ள அம்மா அப்பா சண்டை தொடங்கி எல்லா வகையான சிக்கல்களும் இங்கே உண்டு. இவ்வெல்லாவற்றையும் தாண்டித்தான் இவர்கள் மேற்கண்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். எனவேதான் இவர்கள் மிகுந்த பாராட்டிற்குரியவர்கள் ஆகிறார்கள். அரசுப் பள்ளிக் குழந்தைகளும் பெரும்பாலானோர் இவர்களைப் போன்ற பின்புலத்தைக் கொண்டவர்களே. அவர்களும் இவ்வாண்டு அரும் பெரும் சாதனை புரிந்துள்ளனர். பாராட்டைப் பெறவேண்டியவர்கள் உண்மையாக இவர்களே, இவர்களை ஒத்தவர்களே!

இவ்விடத்தில் தாய்த்தமிழ்ப் பள்ளிகளைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்விக்கு நேர்ந்த பின்னடைவைக் கருத்தில் கொண்டே தாய்த்தமிழ்ப் பள்ளிகள் தோற்றம் பெற்றன. தாய்த்தமிழ்ப் பள்ளி என்ற கருத்தாக்கத்தை முன்மொழிந்து அதற்குச் செயல் வடிவம் தந்தவர் தோழர் தியாகு ஆவார். இன்று தமிழ்நாட்டில் முப்பதற்கும் மேற்பட்ட தாய்த்தமிழ்ப் பள்ளிகள் செயற்பட்டு வருகின்றன. ஒரு சில உயர்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. திருப்பூரில் மூன்று தொடக்கப் பள்ளிகளும்  உயர்நிலைப் பள்ளி ஒன்றும் ஆக நான்கு தாய்த்தமிழ்ப் பள்ளிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியை மீட்டெடுக்க இத்தாய்த்தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்றியாக வேண்டும். இவ்வாண்டு அரசுப் பள்ளிகளும் நல்ல தேர்ச்சியைக் காட்டி உள்ளன. ஆனால் ஆங்கிலவழிக் கல்வியை அரசு அங்கும் அறிமுகப்படுத்தி வருவது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. அங்கும் காலப்போக்கில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களாகப் போய்விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஆங்கிலவழியில் பயின்றால்தான் நல்ல மதிப் பெண்கள் சிறந்த எதிர்காலம் என்ற கருத்து இங்கே கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இக்கருத்தை உடைக்க தமிழ்வழிக் கல்விக் குழந்தைகள் நல்லமதிப்பெண்கள் பெறுவதும் எதிர்காலத்தில் அறிவியலாளர்களாகவும் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் நல்ல நிர்வாகிகளாகவும் உருவாகுவது கட்டாயம். நமக்கு ஒரு அப்துல் கலாமும் ஒரு மயில்சாமி அண்ணாதுரையும் போதவே போதாது. அவர்களைப் போன்று பலர் தமிழ்வழிக் கல்வி வழியாக உருவாக வேண்டும். இதற்குத் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் கை கொடுக்கும், கை கொடுக்க வேண்டும். அங்குக் கற்று வெளி வரும் மாணவர்களை நாம் வரவேற்போம்; வாழ்த்துவோம்; ஊக்குவிப்போம்.

கடைசியாக ஒன்று. மேலே குறிப்பிட்டுள்ள ஆறு மாணவர்களில் சவுந்திரராசனைத் தவிர மற்ற அய்வரும் ஆங்கிலத்தை மூன்றாம் வகுப்பிலிருந்துதான் கற்கத் தொடங்கியவர்கள். அவர்களுக்கு ஆங்கில எழுத்துகளே மூன்றாம் வகுப்பில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுக் கற்றுத் தரப்பட்டன. தாய்மொழியில் நல்ல அடித்தளம் அமைத்த பிறகு எந்த அயல்மொழியையும் எளிதில் கற்றுக் கொள்ளலாம் என்ற அறிவியல் அடிப்படையிலேயே எங்கள் கற்பித்தலை அமைத்தோம். அக்குழந்தைகள் ஆங்கிலத்தில் ஒன்றும் சோடை போகவில்லையே. நாம் தாய்மொழியைக் கற்றுக் கொள்வதின் தேவையை இப்படித்தான் மெய்ப்பிக்க வேண்டும். வெறும் பழங்கதைகள் பயன் தரா. இவ்வாறு பல முனைகளில் ஆங்கில மாயை மீது நாம் தாக்குதல் தொடுத்தாக வேண்டும். இதற்குத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளை விட்டால் வேறு வழி? எனவேதான் மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன், தாய்த்தமிழ்ப் பள்ளிகளைப் பேணிக் காப்போம்! அங்கே கற்கும் குழந்தைகளை வாழ்த்தி வரவேற்று ஊக்குவிப்போம்!

- வேலிறையன்

Pin It