ambedkar conference 600

“மிகுந்த இடர்ப்பாடுகளுக்கு நடுவில் என் மக்களை இன்றிருக்கும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளேன். அவர்களது பயணத்தில் குறுக்கிடும் இன்னல்கள், தடைகள் அனைத்தையும் எதிர்த்து அவர்கள் முன்னேறிச் செல்லட்டும். மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய முறையில் என் மக்கள் வாழ வேண்டுமானால் அவர்கள் எப்போதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். என் தளபதிகளோ என் மக்களை முன்னுக்குக் கொண்டுவர முயல வேண்டும். முடியாவிட்டால் அப்படியே விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ளட்டும். எந்நிலையிலும் அவர்கள் என் மக்களைப் பின்னுக்கு இழுக்க வேண்டாம்.”

அண்ணல் அம்பேத்கர் இறப்பதற்கு முன் கண்களில் நீர் தளும்பத் தனிச் செயலாளர் நானக் சந்த் வழியாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விட்டுச் சென்ற இறுதிச் செய்தியில் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

அண்ணல் அம்பேத்கரை அரமைப்புச் சட்டச் சிற்பியாக மட்டும் குறுக்கிக் காட்ட முயல்கிறது இந்திய ஆளும் வர்க்கச் சிந்தனை. மாறாக அவரை முழுமையாக அறிந்து புரிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டிய தேவை முழு விடுதலைக்காகப் போராடும் ஒடுக்குண்ட மக்களுக்கு உள்ளது.

இந்துச் சமூகத்தின் வர்ண சாதிக் கட்டமைப்பைத் தோலுரித்துக் காட்டிய சிந்தனைச் செம்மல். தாழ்த்தப்பட்ட மக்களைத் தட்டியெழுப்பி, அறிவூட்டி உணர்வூட்டி அணிதிரட்ட வழிகாட்டிய சமூகநீதிப் போராளி, வாழ்நாள் எல்லாம் தன் மக்களின் விடுதலைக்காகவே சிந்தித்தும் பேசியும் எழுதிக் குவித்தும் போராடியும் ஓயாதுழைத்தவர். அம்பேத்கர் எனும் மாமலையைச் சட்டப் போர்வைக்குள் மூடிவைக்கும் முயற்சி வீண்.

அம்பேத்கரை முடிந்துபோன வரலாறாக மண்ணில் புதைத்து விட முடியாது. அவர் நிகழ்காலத்துக்கு உரியவர், வருங்காலத்துக்கும் உயிர்த் துடிப்போடு தேவைப்படுகிறவர். ஏனென்றால் அவரின் செவிகளை நிறைத்த அந்த மக்களின் அழுகுரல் இன்றளவும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

எழுத்தாளர் அருந்ததி ராய் அண்மையில் ‘இந்திய இழிவு’ கட்டுரையில் எடுத்துக்காட்டியிருப்பது போல், இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்துக்கும் ஒரு தலித்துக்கு எதிராக தலித் அல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நான்கு தீண்டப்படாத பெண்கள் தீண்டப்படுவோரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொலை செய்யப்படுகிறார்கள். இது தேசியக் குற்றப்பதிவுத் துறை தந்துள்ள கணக்கு.

இந்திய அளவில் மட்டுமின்றி தமிழகத்திலும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடரவே செய்கின்றன. கீழவெண்மணி முதல் தருமபுரி வரை தமிழ்நிலத்தில் எத்தனைக் குருதிப் புள்ளிகள்! சட்டம், நீதிமன்றம், அரசு, அதிகாரவர்க்கம், காவல்துறை, அரசியல் கட்சிகள் எல்லாமே சாதியாதிக்க வெறிக்குப் பணிந்து போகும் அவலம்!

வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, ஆளுக்கொரு வாக்கு, வாக்குக்கு ஒரு மதிப்பு என்ற அடிப்படையில் அரசியல் சமத்துவம் அடைந்துள்ளோம் என்ற அம்பேத்கரின் நம்பிக்கை மெய்ந்நடப்பில் ஈடேறவில்லை. சனநாயகம் என்பது இங்கே பணநாயகமாக மட்டுமின்றி சாதிநாயகமாகவும் கோலோச்சுவதை அறுபத்தைந்து ஆண்டுக் கால இந்தியக் குடியரசின் பட்டறிவு காட்டியுள்ளது என்பதே மெய். இதை மாற்றியமைக்க நாம் அம்பேத்கரிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.

இந்தியா என்பது பிரித்தானியர் தமது சுரண்டலுக்காகவும் அரசியல் ஆதிக்கத்துக்காகவும் ஏற்படுத்திய ஓர் அரசக் கட்டமைப்புதானே தவிர, சமூக அறிவியல் நோக்கில் ஒரு தேசம் அன்று. இந்தக் கட்டமைப்பு உழைக்கும் மக்களையும் பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் மட்டுமல்ல, தேசிய இனங்களையும் ஒடுக்கி நசுக்கி வருகிறது. ஒடுக்குண்ட தேசங்கள் விடுதலை பெறுவது மட்டுமே அந்தந்தத் தேசத்திலும் சனநாயகம் மலரச் செய்திடுமா? விடுதலை பெற்ற தமிழ்த் தேசத்தின் சனநாயகம் சாதிநாயகமாக

இருக்காது என்பதை உறுதி செய்வது எப்படி? இந்த வினாவிற்கு விடை தேடவும் அம்பேத்கரை நாட வேண்டியுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு அரசியல் அதிகாரம் தேவை என்றார் அம்பேத்கர். சனநாயக அமைப்பில் அவர்களின் அரசியல் உரிமையை நிலைநாட்ட அவர் முன்மொழிந்த திட்டம்தான் இரட்டை வாக்குரிமையும் தனி வாக்காளர் தொகுதியும். இந்தத் திட்டத்தை காந்தியார் திட்டமிட்டுக் கருச் சிதைத்ததே புனே ஒப்பந்தத்தின் கதை. அந்தக் கதையைத் தெரிந்து கொள்வதோடு அம்பேத்கர் திட்டத்தின் இன்றைய பொருத்தப்பாடு பற்றியும் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ்த் தேசிய சனநாயகத்துக்கு அம்பேத்கரின் திட்டம் எந்த அளவுக்குப் பயன்பாடுடையது? என்ற கேள்விக்கும் விடை காண வேண்டும்.

இத்திசையில் ஒரு முயற்சிதான் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டுத் தஞ்சையில் வருகிற ஏப்ரல் 20ஆம் நாள் நடத்தும் சிறப்புக் கருத்தரங்கம்.

‘காந்தியின் தீண்டாமை’ நூலாசிரியர் மருத்துவர் செயராமன் அண்ணல் அம்பேத்கரும் இரட்டை வாக்குரிமையும் என்ற தலைப்பிலும், தமிழ்த் தேசம், ஆசிரியர் தோழர் தியாகு தமிழ்த் தேசிய சனநாயகமும் இரட்டை வாக்குரிமையும் என்ற தலைப்பிலும் கருத்துரையாற்ற உள்ளனர்.

சிறப்புக் கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற உங்களால் இயன்ற வகையெல்லாம் ஒத்துழைக்கவும் உதவவும் வேண்டுகிறோம்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தஞ்சை மாவட்டம்.

தொடர்புக்கு: தோழர் பாரி, தலைமைக் குழு உறுப்பினர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம். தொடர்பு எண்: 9715417170.

Pin It