tgte_ponguthamizh

இவ்வாரம் இரண்டு 'பொங்குதமிழ்' மக்கள் எழுச்சி நிகழ்வுகள் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்றன. முதலாவது பொங்குதமிழ் பேரணி திங்கட்கிழமை, 19.01.2011 அன்று ஜெனிவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை தலைமைப் பணிமனை நோக்கி இடம்பெறுகிறது.இப் பேரணியில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களோடு ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் இணைந்து கொள்கின்றனர்.

இரண்டாவது பொங்குதமிழ் - விடுதலையின் உயிர் மூச்சுப் பேரணியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை, 23.09.2011 அன்று நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் அவையின் தலைமைச் செயலகத்தின் முன்னால் இடம் பெறுகிறது. இப் பேரணியில் அமெரிக்கா வாழ் தமிழ் மக்களோடு கனடாவில் இருந்தும் தமிழ் மக்கள் இணைந்து கொள்கின்றனர்.

காலத்தின் தேவையறிந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப் பேரணிகளில் தமிழ் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நமது உரிமைக்குரலை உரத்து வெளிப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துப் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களையும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறது.

ஜெனிவாவில் பொங்குதமிழ் பேரணி நடாத்தப்படும் காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு தமது அமர்வுகளை நடாத்தும் காலகட்டம்.

இம் அமர்வுகளில் ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாகவும் சிறிலங்கா அரசு புரிந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அனைத்துலக சமூகத்தின் கவனம் சிறிலங்கா நோக்கி குவியும் ஒரு சூழல் உள்ளது.

ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ளாதமையால் அனைத்துலக விசாரணை தொடர்பான கோரிக்கை வலுவடைந்து செல்லும் நிலையும் தற்போது எழுந்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை வலுப்படுத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர், அமைச்சரவைச் செயலர் முருகையா சுகிந்தன் மற்றும் நா.த.அரசின் மதியுரைஞர் குழுவில் பங்காற்றிய பேராசிரியர் கரன் பார்கர் அம்மையார் உட்பட, தமிழ் அமைப்புக்களும் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடர் அமர்வில் தொடக்க நாள் முதல் பங்கெடுத்து வருகின்றனர்.

இத்தகையதொரு சூழலில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அமர்வுகளில் சிறிலங்கா மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலும், சிறிலங்கா அரசால் தம்மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்ப முடியாதுள்ள தாயக மக்களின் சார்பாக நமது குரல்களை உரத்து ஒலிக்கும் வகையிலும், பொங்குதமிழ் பேரணியில் நாம் பெரும் எண்ணிக்கையில் கூடுவதன் மூலம் ஜெனிவா மாநகரெங்கும் நம் தமிழர் தலைகளால் நிரம்பியது என்ற வரலாற்றைப் படைப்பது நம் முன்னே உள்ள மாபெரும் கடமையாகும்.

நியூயோர்க்கின் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னே நடைபெறும் பொங்குதமிழ் பேரணியும் காலமுக்கியத்துவம் நிறைந்ததே.

நம் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையினைத் தலைமை தாங்கி நடாத்திய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஐபக்ச ஐக்கிய நாடுகள் சபை அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்ற வருகை தருகிற காரணத்தையொட்டி,
அவரின் வருகைக்கு எதிர்ப்புக் காட்டுவதுடன் சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையினை அனைத்துலகக் கவனத்துக்குக் கொண்டுவரும் வகையில் இப் பொங்குதமிழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மகிந்த ராஐபக்ச ஐக்கிய நாடுகள் சபைக்கு வருகை தரும் வேளையில் ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கையினை முன்னிறுத்தி சிறிலங்கா அரசுக்கு எதிரான பரப்புரைகளை ஐக்கிய நாடுகள் சபைக்குள்ளும் முன்னெடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம்.

இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் மகிந்த ராஐபக்சவினை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என அமெரிக்க அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும், இனப்படுகொலையினை மேற்கொண்ட ஒரு அரச தலைவர் ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்ற அனுமதிக்கக்கூடாது எனும் நிலைப்பாட்டை முன்வைத்து சிறிலங்கா அரச தலைவர் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்கான அனுமதி மறுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அவைத் தலைவரிடம் முன்வைக்கவுள்ளது.

சிறிலங்கா அரசு போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சமூகத்தினை திருப்திப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க மறுத்து வரும் சூழலில் நாம் முன்வைத்து வரும் இக் கோரிக்கைகள் மெல்ல மெல்ல வலுப்பெறக் கூடியவை. இவற்றை வலுப்பெற வைக்கக்கூடிய நிலை நமது செயற்பாடுகளுக்காக வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை.

இச் சூழலில், எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் நடைபெறும் பொங்குதமிழ் விடுதலையின் உயிர்மூச்சு பேரணியில் பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் கலந்து கொண்டு நமது உரிமைக்குரலை வலுவாக வெளிப்படுத்துவது காலம் நமக்கிடுகின்ற கட்டளையாக அமைகின்றது.
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தினை வீச்சுடன் முன்னோக்கி நகர்த்தும் வகையில் நாம் அனைவரும் பொங்கும் தமிழராய் பொங்கி எழுந்து இப் பேரணிகளில் பங்கெடுத்திடுவோம்!

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Pin It