சலனப்படுகிற வாழ்வின் கதியினை ந.சத்தியபாலனின் கவிதைகள் காண்பிக்கின்றன. இயல்பான வாழ்க்கையினால் வடிவமைக்கப்பட்ட சூழலை வேண்டுகிறதையும் குழம்பியிருக்கிற இயல்பினை கண்டு மௌனமாக துயருருவதையும் உணர முடிகிறது. ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சத்தியபாலனின் 'இப்படியாயிற்று நூற்றொராவது தடவையும்' கவிதை நூல் அண்மையில் வெளியாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத்தை அப்படியே பிரதிபலிக்கிற படைப்புக்கள் எழுகிறதென்பது அதன் இன்றைய வடிவமைப்பிலும் ஆளுகையிலும் சாத்தியமற்ற தொன்று என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியும். இப்பாடியாயிருக்கிறது என் வாழ்வின் கதி என்பதைப்போல சத்தியபாலன் கவிதைகள் வெளியாகியிருப்பது நம்பிக்கை தரக்கூடிய படைப்பின் சூழலை வெளிப்டுத்துகிறது.

Sathiyabalanவிமர்சனம் என்பது ஒரு வகையில் படைப்பு பறறிய இன்னொரு படைப்பு என்கிற மாதிரி அருந்தாகரன் கூறுகிறார். சத்தியபாலனின் கவிதைகளை உடைத்து வாசிப்பதன் ஊடாக அவரின் கவிதையின் வெளியை உணர வேண்டும் என்று நினைக்கிறேன். அவரது கவிதைகளின் சிறிய வடிவங்களும் இறுகிய சொற்களும் பின்னால் மறைந்திருக்கிற மௌனங்களும் விரித்து வாசிக்கபட வேண்டியிருக்கிறது.

சத்தியபாலனின் கவிதைகள் வெறும் தன்னுணர்வு சார்ந்த கவிதைகள் என்ற கருத்தை புறக்கணிப்பதுடன் அப்பால் எல்லாவற்றுக்குமான வெளியை இவை கொண்டிருக்கின்றன. இன்று கவனம் பெறாவிட்டாலும் பின்னரொரு காலத்துக்கான கவிதைகளாக கவனம் பெறும் என்று அவரது காலத்தை இன்றைக்கு தள்ளிவிட முடியாது. அவர் இன்றைக்குத்தான் இப்படியாயிற்று என்று எழுதுகிறார். இருப்பினும் சத்தியபாலன் ஏன்., இப்படி எழுதுகிறார். இவ்வாறான சொற்களை தெரிவு செய்திருக்கிறார். அவரது இடைவெளிகளும் மௌனங்களும் எதையுணர்த்துகின்றன. என்ற கேள்விகள் கவிதைகளை சுற்றியபடியிருக்கின்றன. அவர் பேசாத சென்றிருக்காத அவருக்குரிய சொற்களின் கதியை இப்படியாயிற்று நூற்றியொராவது தடவையும் கவிதைகளில் உணர முடிகிறது.

சத்தியபாலனின் கவிதைகள் பற்றி சி.ரமேஷ் மற்றும் அ.யேசுராசா ஆய்வுகளை முன் வைத்திருந்தார்கள். அவர்களின் கருத்துப்படி சத்தியபாலனின் கவிதைகள் இன்றைய கால அரசியலை முன் வைப்பதை விட தன்னுணர்வை முன்வைப்பதாக அமைந்திருந்தது. அரசியலை பேசுகிறதாக ஒரு இரு கவிதைகளை யேசுராசா வாசித்திருந்தார். எனது வாசிப்பின்படி சத்தியபாலன் தான் வாழுகிற சமூகத்தை அப்படியே பிரதிபலிப்பதாக படுகிறது. அவர் தனது வாழ்வின் ஒடுங்கியிருக்கிற பாங்கில் குருட்டுத்தனமான அரசியலை பின்னியிருக்கிறார்.

மனித குணங்கள் மாறுகிற சக மனிதர்களை வதைக்கிற வாழ்வின் தன்மை கொண்டது. அது பிரிவுகளாலும் இணைவுகளாலும் சக மனிதர்களை கொண்டு சென்றுகொண்டேயிருக்கிற உலகமாயுமிருக்கிறது. சத்தியபாலனின் கவிதைகள் மனிதர்களின் குணங்களின்., அவர்களின் அரசியலால் சூழ்ந்திருக்கிற வாழ்க்கையின் பின்னாலிருக்கிற வெளிகள் பற்றி அவாவிக்கொண்டிருக்கிறது.

போரும் அரசியலும் இயற்கையை சிதைத்துக்கொண்டிருக்கிறது. அரசியலால் சிதைந்திருக்கிற இயற்கையினை அதனால் சிதைந்திருக்கிற கவனங்களை எல்லாம் நிருமூலமாயிருக்கிற வாழ்வை ஆணி அறையப்பட்ட தலைகளை அதிகாரம் குத்திக் கொண்டிருக்கிற கனவை தன்னை சுற்றியிருக்கிற வாழ்வை அடக்கி பேசுகிறன்றன சத்தியபாலனின் கவிதைகள். இவை எல்லாவற்றையும் கண்டு அதற்கூடாக நுழைந்து வந்து எல்லாவற்றின் மீதான தனது சொற்களையும் எதன் மீதோ எறிந்து கொண்டிருக்கிறார்.

ஒரு வகையில் சொன்னால் தெருவில் சென்று திரும்ப முடியாத துயரத்தை அதனால் ஏற்படுகிற கோபத்தை இரவால் மூடியிருக்கிற விளக்கின் மீது பேசிக்கொண்டிருப்தைபோலான கவிதைகள். மிகவும் மெல்லிய மனிதனின் வெளியால் ஒடுங்கியிருக்கிற வீட்டுக்குள்ளிருந்து தன்பாட்டில் உதிர்த்தெறியப்பட்ட சொற்களின் கதியாக புத்தகம் உருவாகியிருக்கிறது.

தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It