டாக்டர் லிசா ரேன்கினின் 'மைண்ட் ஓவர் மெடிசின்' நூலினை முன்வைத்து...
மருத்துவ அறிவியல் இன்று தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளை கண்டுபிடிப்பதற்கும், பழுதான உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து நீக்கி விட்டு, ஒரு கருவியைப் போல வேறொன்றை மாற்றிக் கொள்வதற்கும் மருத்துவத்தில் நவீனக் கருவிகள் வந்து விட்டன. ஆனால், இவ்வளவு கருவிகளுக்கும், தொழில்நுட்பத்திற்குப் பிறகும் ஒரு அடிப்படைக் கேள்வி நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. "மருந்து என்பது வெறும் வேதிப்பொருட்களின் கலவையா அல்லது மனித நம்பிக்கையின் வெளிப்பாடா?" நோயைக் குணப்படுத்துவது எது? மருந்துகளின் தாக்கமா? அல்லது நோயாளியின் மனமா?
இந்தத் அடிப்படைக் கேள்விக்கான விடையை, தனது சொந்த அனுபவங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மருத்துவ ஆய்வுகளிலிருந்தும் கண்டடைந்தவர் டாக்டர் லிசா ரேன்கின். ஒரு அலோபதி மருத்துவராகத் தன் பணியைத் தொடங்கி, பிறகு நவீன மருத்துவத்தின் இயந்திரத்தனமான அணுகுமுறையில் காணப்பட்ட வெற்றிடத்தை உணர்ந்து, அவர் மேற்கொண்ட பயணத்தின் விளைவே 'மைண்ட் ஓவர் மெடிசின்' (Mind Over Medicine) என்னும் நூல். டாக்டர் லிசா ரேன்கின் ஆரோக்கியத்தின் வேர்களை மனித மனதின் ஆழங்களில் தேடத் தொடங்குகிறார். நோயைக் குணப்படுத்துவதில் ஒரு நோயாளியின் மனநிலைக்கும், அவரது வாழ்வியலுக்கும் இருக்கும் முதன்மையான பங்கை அறிவியல் ஆதாரங்களுடன் நிறுவுவதே அவருடைய ஆய்வுகளின் நோக்கம்.
அலோபதியின் இயந்திரப் பார்வையும் அதன் போதாமைகளும்
நவீன மருத்துவக் கல்வி முறை, மனித உடலை ஒரு பருப்பொருளாகவும், சிக்கலான பாகங்களைக் கொண்ட ஒரு இயந்திரமாகவுமே அணுகுகிறது. ஒரு இயந்திரத்தில் ஏதேனும் ஒரு பாகம் பழுதானால், அதைச் சரிசெய்வது அல்லது புதிய பாகத்தைப் பொருத்துவது போல, நவீன மருத்துவம் உறுப்புகளைப் பார்க்கிறது. இதயத்தை ஒரு 'பம்ப்' ஆகவும், நுரையீரலை ஒரு 'காற்றுப் பை'யாகவும், மூளையை ஒரு 'கணினி'யாகவும் கருதி சிகிச்சை அளிக்கும் போக்கே இன்று மேலோங்கி நிற்கிறது. இந்த இயந்திரப் பார்வையில் 'உயிர்' என்பதும் 'மனம்' என்பதும் இரண்டாம் பட்சமாகத் தள்ளப்படுகின்றன.
ஒரு நோயாளியைப் புரிந்து கொள்ள அவரது உடற்கூறு அறிக்கைகளை விட (Medical Reports), அவரது அக வாழ்வியலே முதன்மையானது என்கிறார் லிசா ரேன்கின். ஒரே மாதிரியான உடல் பாதிப்பு கொண்ட இருவருக்கு, ஒரே தரத்திலான சிகிச்சை அளிக்கப்படும் போது, ஒருவருக்கு அது பலனளிப்பதும் மற்றொருவருக்கு அது தோல்வியடைவதும் ஏன்? இந்த இடத்தில்தான் நவீன மருத்துவத்தின் போதாமைகள் வெளிப்படுகின்றன. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
அலோபதி மருத்துவம் நோயின் 'அறிகுறிகளை' (Symptoms) மேலாண்மை செய்வதில் காட்டும் ஆர்வத்தை, நோயின் 'மூலக் காரணத்தை' (Root Cause) அறிவதில் காட்டுவதில்லை. ஒருவருக்குத் தலைவலி என்றால், அந்தத் தலைவலி எதனால் ஏற்பட்டது என்ற வாழ்வியல் பின்னணியை ஆராயாமல், வலியை மறக்கச் செய்யும் வேதிப்பொருளை வழங்குவதையே 'சிகிச்சை' என்கிறார்கள். ஆனால், அந்த நோயாளி அனுபவிக்கும் மன அழுத்தம், தனிமை, உறவுச் சிக்கல்கள் அல்லது வேலையில் இருக்கும் அதிருப்தி போன்றவை அவரது உடலில் ரசாயன மாற்றங்களை உண்டாக்குகின்றன என்பதை இயந்திரப் பார்வை கொண்ட மருத்துவம் வசதியாக மறந்து விடுகிறது.
கல்விப் புலமும் ஆய்வுத்துறையும் பரந்து விரிந்திருக்கும் இந்த நவீன காலத்தில் கூட, நாம் 'நோயாளி'யைக் கவனிக்காமல் 'நோயை’ (Disease) மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கிறோம். லிசா ரேன்கின் சுட்டிக்காட்டுவது போல, நவீன மருத்துவம் உடலைத் துண்டு துண்டாகப் பிரித்து ஆராய்கிறதே ஒழிய, உடல்-மனம்-உயிர் ஆகிய மூன்றும் இணைந்த ஒரு முழுமைத்துவத்தை (Wholeness) அங்கீகரிக்கத் தவறுகிறது. இந்த இயந்திரத்தனமான அணுகுமுறைதான், பல நோய்களுக்கும் தீர்வு காண முடியாமல் நவீன மருத்துவம் திணறுவதற்குக் காரணமாக இருக்கிறது.
பிளாசிபோ (Placebo) மற்றும் நோசிபோ (Nocebo): நம்பிக்கையின் இரு துருவங்கள்
நவீன மருத்துவ ஆய்வகங்களில் ஒரு மருந்தின் வீரியத்தைச் சோதிப்பதற்கான வெறும் கருவியாக மட்டுமே 'பிளாசிபோ' (Placebo) பார்க்கப்படுகிறது. ஆனால், டாக்டர் லிசா ரேன்கின் இதனை ஒரு கருவியாகப் பார்க்காமல், மனித மனதின் பேராற்றலை நிரூபிக்கும் ஒரு மாபெரும் சாட்சியாக முன்வைக்கிறார். பிளாசிபோ என்பது மருத்துவ குணமற்ற, வெறும் சர்க்கரை மாத்திரையோ, மாவுப் பொருளையோ அல்லது உப்பு நீர் ஊசியையோ நோயாளிக்கு சிகிச்சை போன்று கொடுப்பதைக் குறிக்கிறது. ஆனால், ’அது ஒரு மருந்து’ என்று நோயாளிக்குச் சொல்லப்படும் போது, அவரது மனம் அந்தத் தகவலை நம்பி, ஒரு 'கட்டளையாக' ஏற்றுக் கொள்கிறது.
பண்டைய தமிழ் மருத்துவ மரபில் "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு" என்று வள்ளுவர் சொன்னது, உடல் தன்னைத் தானே காத்துக் கொள்ளும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான். அதைத்தான் லிசா ரேன்கின் அறிவியல் பூர்வமாக விளக்குகிறார். ஒரு நோயாளி "இந்த மருந்து என்னைக் குணப்படுத்தும்" என்று ஆழமாக நம்பும் போது, அவரது மூளையில் உள்ள 'பிரிஃப்ரண்டல் கார்டெக்ஸ்' (Prefrontal Cortex) பகுதி தூண்டப்படுகிறது. இது உடலுக்குள் இருக்கும் இயற்கை மருந்தகத்தைத் திறந்து விடுகிறது. எண்டோர்பின்கள் (Endorphins), டோபமைன் (Dopamine) போன்ற ரசாயனங்களும், ஹார்மோன்களும் சுரந்து, வலியைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், சிதைந்த திசுக்களைச் சீரமைக்கும் பணியையும் தொடங்குகின்றன. இங்கே குணம் அளித்தது அந்தச் சர்க்கரை மாத்திரை அல்ல. அந்த மாத்திரையின் மீது நோயாளி கொண்ட 'நம்பிக்கை' உருவாக்கிய ரசாயன மாற்றங்களே ஆகும்.
இதற்கு நேர் எதிர் துருவத்தில் இருப்பது 'நோசிபோ' (Nocebo) விளைவு. இது நம்பிக்கையின் இருண்ட பக்கம். "இந்த நோய் தீராது", "இந்தச் சிகிச்சை எனக்கு ஒத்துக்கொள்ளாது" அல்லது "நான் விரைவில் இறந்துவிடுவேன்" என்ற எதிர்மறை சிந்தனைகள் ஒரு நோயாளியின் மனதில் வேரூன்றிவிட்டால், உலகின் மிகச்சிறந்த மருந்தைக் கொடுத்தாலும் உடல் அதனை ஏற்க மறுக்கிறது.
அலோபதி மருத்துவத்தில் மருத்துவர்கள் விழிப்புணர்வு என்ற பெயரில் பயன்படுத்தும் சில வார்த்தைகளே நோயாளிகளுக்கு 'நோசிபோ'வாக மாறிவிடுகின்றன. உதாரணமாக, ஒரு நோயைப் பற்றி விளக்கும் போது "இது குணமாவது கடினம்" என்றோ அல்லது "இதற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டும்" என்றோ சொல்லப்படும் போது, நோயாளியின் மனதில் பயம் எனும் நஞ்சு விதைக்கப்படுகிறது. பயம் நிலவும் சூழலில் உடல் 'தற்காப்பு நிலைக்கு' (Defense Mode) சென்றுவிடுகிறது. அப்போது சுரக்கும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை முழுமையாக முடக்கி விடுகின்றன. போதாக்குறைக்கு செயற்கையான ரசாயனக்களையும் கொடுத்து, உடல்நலத்தை, அதன் இயற்கைத் தன்மையை மேலும் சிக்கலாக்குகிறோம்.
ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, பிளாசிபோ ஆரோக்கியத்தின் வாசலாகவும், நோசிபோ நோயின் சிறையாகவும் அமைகின்றன. லிசா ரேன்கின் வலியுறுத்துவது போல, ஒரு மருத்துவர் வெறும் மருந்துகளை வழங்குபவராக மட்டும் இருக்கக் கூடாது. அவர் நோயாளியின் மனதில் இருக்கும் 'நோசிபோ' எனும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி, 'பிளாசிபோ' எனும் நேர்மறை நம்பிக்கையை விதைக்கும் ஒரு 'ஹீலராக' (Healer) இருக்க வேண்டும்.
லிசா ரேன்கின் மருத்துவத் துறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர 'நம்பிக்கை' எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறார். மனம் என்பது வெறும் எண்ணங்களின், சிந்தனைகளின் சங்கமம் மட்டும் அல்ல. அது உடலின் ஒவ்வொரு செல்லையும் ஆளக்கூடிய ஒரு தலைமைச் செயலகம் என்பதை இந்த இரு துருவ விளைவுகளும் நமக்கு உணர்த்துகின்றன. ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்திலிருந்து திணிக்கப்படுவது அல்ல. அது நமக்குள் இருக்கும் நம்பிக்கையிலிருந்து ஊற்றெடுக்க வேண்டிய ஒன்று.
பயமா? வளர்ச்சியா?
நமது உடல் என்பது வெறும் செல்களின் கூட்டமல்ல. அது ஒரு பிரபஞ்ச ஒழுங்கமைப்பைக் கொண்ட ஓர் அற்புதத் தொழிற்சாலை. உயிர்கள் அனைத்தும் இயற்கையிலிருந்து தோன்றுகின்றன என்பது அடிப்படைத் தத்துவம். இந்த உயிரின் இயக்கமானது, வெளிப்புறச் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் ஒரு நுட்பமான ஒத்திசைவைக் கொண்டுள்ளது. டாக்டர் லிசா ரேன்கின் இந்த இயக்கத்தை இரண்டு முக்கிய நிலைகளாகப் பிரிக்கிறார். ஒன்று 'தற்காப்பு நிலை' (Defense Mode), மற்றொன்று 'வளர்ச்சி அல்லது குணப்படுத்தும் நிலை' (Growth/Repair Mode).
ஒரு மனித உடல் ஒரே நேரத்தில் இந்த இரண்டு நிலைகளிலும் இயங்க முடியாது என்பதுதான் இயற்கை நமக்கு இடும் கட்டளை. லிசா ரேன்கின் உடலின் இந்த இரண்டு நிலைகளுக்கிடையிலான முரண்பாட்டை விளக்குகிறார்.
சண்டையிடுதலும், ஓடிவிடுதலும் (Fight & Flight)
நமது முன்னோர்கள் காடுகளில் வாழ்ந்தபோது, ஒரு கொடிய மிருகத்தைக் காணும்போது அவர்களுக்கு ஏற்பட்ட 'பயம்' உயிரைக் காக்க உதவியது. அந்தத் தருணத்தில் மூளை 'அவசர நிலை'யைப் பிரகடனம் செய்கிறது. இதையே நாம் 'சண்டையிடு அல்லது ஓடிவிடு' (Fight or Flight) என்கிறோம். அப்போது அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் ரத்தத்தில் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
இந்த நிலையில், உடல் தனது ஆற்றலை முழுமையாகத் தசைகளுக்கும் இதயத்திற்கும் அனுப்புகிறது. அப்போது செரிமான மண்டலம், இனப்பெருக்க மண்டலம் உள்ளிட்ட உடலின் மிக முக்கியமான மண்டலங்களும், உடலின் 'சுய-குணப்படுத்தும்' (Self-repair) பணிகளைச் செய்யும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவையும் தற்காலிகமாக முடக்கி வைக்கப்படுகின்றன. ஏனெனில், ஒரு மிருகத்திடம் இருந்து தப்பிக்கும் அந்த வினாடியில், உணவைச் செரிப்பதோ அல்லது நோய் எதிர்ப்புச் செல்களை உருவாக்குவதோ உடலின் முன்னுரிமை அல்ல. ஆனால், நவீன உலகில் நாம் புலிக்கும் சிங்கத்திற்கும் பயப்படுவதில்லை. மாறாக வேலைப்பளு, பொருளாதாரச் சிக்கல், சமூக அங்கீகாரம் மற்றும் எதிர்காலம் குறித்த தேவையற்ற மிகைப்படுத்தப்பட்ட கற்பனைப் பயங்களுக்குப் பயப்படுகிறோம். இதன் விளைவாக, நமது உடல் எப்போதும் ஒரு 'மிதமான அவசர நிலை'யிலேயே (Chronic Stress) இருக்கிறது. இதுவே உடலின் தற்காப்பு மண்டலத்தைச் சிதைத்து, புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை பல நாள்பட்ட வியாதிகளுக்கு நுழைவுச்சீட்டாக அமைந்து, வழிவகுக்கிறது.
வளர்ச்சியும், பழுது நீக்கலும் (Growth and Repair)
இதற்கு நேர் மாறானது வளர்ச்சி நிலை. இது மனம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், நேசிக்கப்படுவதாகவும் உணரும்போது மட்டுமே நிகழும் ஒரு அற்புதம். எப்போது ஒரு நோயாளியின் மனம் பயத்திலிருந்து விடுபட்டு, "நான் பாதுகாப்பாக இருக்கிறேன்" என்ற நிலைக்கு வருகிறாரோ, அப்போது அவரது நரம்பு மண்டலம் அமைதி நிலைக்கு மாறுகிறது.
இந்த அமைதியான நிலையில்தான் உடல் தனது உண்மையான 'மருத்துவப் பணியைத்' தொடங்குகிறது. சிதைந்த டி.என்.ஏ-க்களைச் (DNA) சரி செய்வது, நச்சுக்களை வெளியேற்றுவது, புதிய செல்களை உருவாக்குவது எனத் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் பேராற்றல் இந்த நிலையில்தான் உடலுக்குக் கிடைக்கிறது. அன்பு, கருணை, அமைதி மற்றும் ஒரு மருத்துவரின் ஆறுதலான வார்த்தைகள் ஆகியவை உடலை இந்தப் 'பகுதியை' நோக்கி நகர்த்துகின்றன.
லிசா ரேன்கின் முன்வைக்கும் தத்துவம் மிக எளிமையானது. நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், நமது உடலைத் தற்காப்பு நிலையிலிருந்து விடுவித்து, வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அலோபதி மருத்துவம் மாத்திரைகளால் உடலைத் தற்காப்பு நிலைக்குத் தள்ள முயல்கிறது. ஆனால், உண்மையான மருத்துவம் என்பது மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் உடலை வளர்ச்சி நிலைக்குத் தூண்டுவதாகும்.
கல்விப் புலத்தில் ஒரு மாணவனின் வளர்ச்சிக்கு எப்படி ஒரு பயமற்ற சூழல் தேவையோ, அதேபோல் ஒரு நோயாளி குணமடைய அவரது உடலுக்கு ஒரு 'பயமற்ற அகச் சூழல்' தேவை. "பயமே நோய்; நம்பிக்கையே மருந்து" என்கிற தார்மீக உண்மையை லிசா ரேன்கின் இந்தத் தலைப்பின் கீழ் மிக விரிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் நிறுவுகிறார். ஆரோக்கியம் என்பது வெறும் உடற்பயிற்சியிலோ, உணவிலோ மட்டும் இல்லை. அது நாம் தினசரி அனுபவிக்கும் உணர்வுகளிலும், அமைதியிலும் இருக்கிறது.
வாழ்வியல் மாற்றங்கள்
அலோபதி மருத்துவ கலாச்சாரம் என்பது நோயாளியின் கையில் ஒரு மருந்துச் சீட்டை (Prescription) திணிப்பதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது. அந்தச் சீட்டில் ரசாயனப் பெயர்களும், அவை உட்கொள்ளப்பட வேண்டிய கால அளவுகளும் மட்டுமே எழுதப்பட்டிருக்கும். ஆனால், டாக்டர் லிசா ரேன்கின் ஒரு புரட்சிகரமான கருத்தை முன்வைக்கிறார். "உண்மையான மருந்துச் சீட்டு என்பது ஒரு மருத்துவரால் எழுதப்படுவதல்ல. அது ஒரு நோயாளி தனது வாழ்வியலில் மேற்கொள்ளும் மாற்றங்களால் எழுதப்பட வேண்டியது" என்கிறார் அவர்.
மாத்திரைகளால் ஒரு நோயின் அறிகுறியைக் தற்காலிகமாக மறைக்க முடியுமே ஒழிய, வாழ்வியலில் ஏற்பட்ட விரிசல்களைச் சரி செய்ய முடியாது. லிசா ரேன்கின் முன்மொழியும் இந்த 'சுய மருத்துவம்' (Self-Prescription) என்பது உடலைத் தாண்டி, மனதின் ஆழமான தேவைகளை நிறைவு செய்யும் ஒரு வாழ்வியல் அறமாகும்.
டாக்டர் லிசா முன்வைக்கும் நல்வாழ்க்கைக்கான ஆறு குறிப்புகளைப் பார்க்கலாம்.
உடலின் குணப்படுத்தும் திறனை நம்புதல்
ஒரு சிறிய வெட்டுக்காயம் தானாகக் கூடுவதையும், உடைந்த எலும்பு தானாக இணைவதையும் நாம் காண்கிறோம். இந்த அற்புதம் மருந்து மாத்திரைகளால் நடப்பதில்லை. உடலுக்குள் இருக்கும் 'உயிராற்றல்' (Vital Force) குணமாக்கலைச் செய்கிறது. இந்த ஆற்றல் புற்றுநோய் முதல் தீராத வியாதிகள் வரை அனைத்தையும் சரிசெய்யும் வல்லமை கொண்டது என்பதை முதலில் அறிவுப்பூர்வமாக நம்ப வேண்டும். நம்பிக்கைதான் குணமடைதலின் முதல் விதை.
சரியான ஆதரவை தேடுதல்
ஒரு நோயாளிக்குத் தேவைப்படுவது மருந்துகள் அல்ல. மாறாக அதிகப்படியான அன்பு. உங்களை நிபந்தனையற்ற முறையில் நேசிக்கும் மனிதர்கள், உங்கள் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் மற்றும் உங்களை ஒரு இயந்திரமாகப் பார்க்காமல் மனிதனாகப் பார்க்கும் மருத்துவர்களின் சூழலில் நீங்கள் இருக்கும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு வலிமையடைகிறது. தனிமை என்பது ஒரு நோய் என்றால், 'அன்பு' என்பதே அதற்கான மருந்து.
உடல் உணர்த்தும் சமிக்ஞைகளைக் கவனித்தல்
வலியை ஒரு எதிரியாகப் பார்க்காமல், அது உடல் உங்களிடம் பேசும் ஒரு மொழி என்பதை உணர வேண்டும். ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போது வரும் தலைவலியோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபரைச் சந்திக்கும்போது ஏற்படும் உடல் நடுக்கமோ தற்செயலானவை அல்ல. அந்தத் தருணங்களில் உடல் உங்களுக்கு ஏதோ ஒரு செய்தியைச் சொல்ல முயல்கிறது. அந்தச் சமிக்ஞைகளைக் கவனித்து, அதற்கேற்ப வாழ்வியலை மாற்றுவதே உண்மையான சிகிச்சை.
நோய்க்கான வேர்களைக் கண்டறிதல்
ஒரு மரத்தின் இலைகள் காய்ந்து போனால், நாம் இலைகளுக்குச் சாயம் பூசுவதில்லை; வேர்களுக்குத் தண்ணீர் ஊற்றுகிறோம். அதேபோல், உங்கள் நோய்க்கான வேர் எங்கே இருக்கிறது என்று பாருங்கள். உங்களுக்குப் பிடிக்காத ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறீர்களா? அல்லது ஒரு நச்சுத்தன்மையான (Toxic) உறவில் சிக்கியிருக்கிறீர்களா? உங்கள் மனம் எங்கே காயப்படுகிறதோ, அங்கேதான் உடல் நோய் கொள்கிறது.
மனப்பூர்வமான மாற்றங்களைச் செய்தல்
உங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களை நீங்களே தீர்மானியுங்கள். ஒரு நீண்ட காலப் பயணம், இழந்த ஒரு கலை மீதான ஆர்வம், அல்லது ஒரு புதிய ஆக்கபூர்வமான செயல் - இவை அனைத்தும் ரத்தத்தில் உள்ள 'கார்டிசோல்' அளவைக் குறைத்து, மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கின்றன. மகிழ்ச்சியும், நிறைவுமே உலகின் மிகப்பெரிய மருந்து.
பயத்தைப் போக்கித் துணிவு கொள்ளுதல்
நோய் குறித்த அதிகப்படியான பயமும், மரண பயமுமே நோயை வளர்க்கும் உரங்கள். "எனக்கு என்ன ஆனாலும் நான் அதை எதிர்கொள்வேன்" என்ற துணிவு எப்போது வருகிறதோ, அப்போது உடல் தற்காப்பு நிலையிலிருந்து விடுபட்டு குணப்படுத்தும் நிலைக்குத் திரும்புகிறது.
ஒவ்வொரு நோயாளியும் தனது உடல் நலனுக்கான உண்மைகளைத் தனது வாழ்வியலுக்குள்ளேயே தேட வேண்டும். டாக்டர் லிசா ரேன்கின் வலியுறுத்துவது போல, மருந்துச் சீட்டுகளில் ரசாயனங்களை எழுதுவதை நிறுத்திவிட்டு, ஆரோக்கியமான வாழ்வியலை எழுதத் தொடங்கினால், மருத்துவமனைகள் ஓய்வெடுக்கும் இடங்களாக மாறுமே ஒழிய, உயிரைக் காவு வாங்கும் இடங்களாக இருக்காது.
வாழ்வியலே மருந்து. நம்பிக்கையே அதன் ஆற்றல். இந்தக் கோட்பாட்டினைப் புரிந்து கொள்வதுதான் அலோபதி மருத்துவத்தின் போதாமைகளை நீக்குவதற்கான ஒரே வழியாகும்.
அறமும் ஆரோக்கியமும்
மனித வாழ்வியலின் மிக உயரிய விழுமியமாக 'அறம்' போற்றப்படுகிறது. ஆனால், அந்த அறம் என்பது வெறும் சமூக ஒழுக்கம் சார்ந்த ஒன்றல்ல. அது மனித உடலின் செல்கள் வரை ஊடுருவி நிற்கும் ஓர் ஆரோக்கிய அறிவியல் என்பதை டாக்டர் லிசா ரேன்கின் தனது ஆய்வுகளின் மூலம் வழிமொழிகிறார். தமிழ் இலக்கிய மரபில், குறிப்பாகத் திருக்குறளில், "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்" என்று வள்ளுவர் குறிப்பிட்டது வெறும் தார்மீகப் போதனைக்காக மட்டுமல்ல. மனமாசு நீங்குவதே உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதை அவர் அன்றே வெளிப்படுத்தியிருக்கிறார்.
லிசா ரேன்கின் முன்வைக்கும் தத்துவம், நவீன மருத்துவத்திற்கும் வாழ்வியல் அறத்திற்கும் இடையே ஒரு பாலத்தை அமைக்கிறது. ஒரு மனிதன் அறமற்ற செயல்களில் ஈடுபடும் போதோ அல்லது வஞ்சம், பொறாமை, கோபம் போன்ற 'அக அழுக்குகளை' சுமக்கும் போதோ, அவனது உடல் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற 'அவசர கால' ஹார்மோன்களால் நிரப்பப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் தற்காப்பு மண்டலத்தை (Immune System) சிதைப்பதோடு, ஒவ்வொரு செல்லையும் சிதைக்கும் நஞ்சாக மாறுகிறது. நேர்மாறாக, ஒரு மனிதன் அன்பு, மன்னிப்பு மற்றும் நேர்மை போன்ற அறப் பண்புகளுடன் வாழும் போது, அவனது மூளை 'ஆக்ஸிடோசின்' (Oxytocin) மற்றும் 'டோபமைன்' போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த ரசாயனங்களே உடலின் உண்மையான அமிர்தங்களாகும்.
அறம் சார்ந்த வாழ்வு என்பது ஒரு மனிதனை 'வளர்ச்சி மற்றும் குணப்படுத்தும்' நிலைக்கு (Growth and Repair mode) இட்டுச் செல்கிறது. லிசா ரேன்கின் மனித உடல் எப்படி உணர்வுகளால் கட்டமைக்கப்படுகிறது என்று விளக்குகிறார். ஒருவருக்கு நாம் செய்யும் உதவி அல்லது காட்டும் அன்பு, பெறுபவரை விட வழங்குபவருக்கே அதிக ஆரோக்கியத்தைத் தருகிறது. ஏனெனில், அந்தத் தருணத்தில் நமது நரம்பு மண்டலம் அமைதியடைந்து, உடல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறது.
இன்றைய மருத்துவம் பெரும்பாலும் 'உடலை' ஒரு பருப்பொருளாக மட்டுமே பார்த்துச் சிகிச்சை அளிக்கிறது. ஆனால், அறம் என்பது உயிருக்கும் மனதுக்கும் அளிக்கப்படும் சிகிச்சை. அறம் கற்பிக்கப்பட்ட மனதிற்கு விரோதமான செயல்கள் மன அழுத்தத்தை உருவாக்கி, அது இறுதியில் புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற உடல் வியாதிகளாக உருவெடுக்கின்றன. எனவே, அறம் என்பது ஒரு ஆன்மீக போதனையல்ல. அது ஒவ்வொரு மனிதனும் தனது ஆரோக்கியத்திற்காகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு மருத்துவ முறையாகும்.
டாக்டர் லிசா ரேன்கின் வலியுறுத்துவது போல, ஒரு சிறந்த மருத்துவம் என்பது நோயாளியின் உடல் தொந்தரவுகளைக் குறைப்பதோடு நின்றுவிடக் கூடாது. அவரது மனதின் பரபரப்பை, நம்பிக்கையின்மையைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்தில் இருந்து மாத்திரைகளால் திணிக்கப்படுவது அல்ல. அது ஒரு மனிதனின் அறம் சார்ந்த மனநிலையிலிருந்து உட்புறமாக ஊற்றெடுக்க வேண்டிய ஒன்று.
ஆகச்சிறந்த மருத்துவம்
நவீன மருத்துவ உலகம் 'உடலை' மட்டும் ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், டாக்டர் லிசா ரேன்கின் மனதையும் ஆய்வின் மையப்புள்ளிக்குக் கொண்டு வந்துள்ளார். 'மைண்ட் ஓவர் மெடிசின்' என்பது வெறும் ஒரு மருத்துவ நூல் அல்ல. அது மனிதகுலத்தின் ஆரோக்கியம் குறித்த ஒரு தத்துவப் பிரகடனம்.
லிசா ரேன்கின் ஒரு சிகிச்சையின் வெற்றி என்பது சிகிச்சையின் ஆற்றலில் மட்டும் இல்லை, அது நோயாளியின் ஆழ்மனதில் ஏற்படுத்தும் நம்பிக்கையில்தான் இருக்கிறது என்று நிறுவுகிறார். ஒரு மருத்துவர் என்பவர் வெறும் சிகிச்சைகளைப் பரிந்துரைக்கும் இயந்திரமாக மட்டும் இருக்கக் கூடாது. அவர் நோயாளியின் அகத்தில் இருக்கும் அச்சத்தைப் போக்கி, அவருக்குள் உறங்கிக் கிடக்கும் 'சுய-குணப்படுத்தும்' பேராற்றலைத் தட்டி எழுப்பும் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
நமது செல்கள் ஒவ்வொன்றும் நமது சிந்தனைகளைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன என்கிற அறிவியல் உண்மை, நம்மைப் பெரும் பொறுப்புணர்வுக்கு ஆளாக்குகிறது. நாம் சிந்திக்கும் ஒவ்வொரு நேர்மறைச் சிந்தனையும் உடலுக்கு ஆற்றலாகவும், ஒவ்வொரு எதிர்மறைச் சிந்தனையும் உடலுக்கு நஞ்சாகவும் மாறுகிறது. எனவே, உண்மையான ஆரோக்கியம் என்பது உடற்பயிற்சிக் கூடங்களுக்கு அல்லது தியான மையங்களுக்குச் செல்வதில் மட்டும் இல்லை. அது நாம் தினசரி சந்திக்கும் மனிதர்களிடம் காட்டும் அன்பு, நாம் செய்யும் வேலை மீதான ஈடுபாடு, மற்றும் நமக்குள் நாம் பேணிக் காக்கும் மன அமைதி ஆகியவற்றில்தான் குடிகொண்டிருக்கிறது.
அறம் சார்ந்த வாழ்வும், அச்சமற்ற மனநிலையும் ஒரு மனிதனைத் தீராத நோய்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் என்பதை 'மைண்ட் ஓவர் மெடிசின்' நமக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. "மனம் சரியாக இருந்தால் மனிதம் தழைக்கும்; மனிதம் தழைத்தால் உடலும் பிழைக்கும்" என்கிற இந்தத் தத்துவார்த்த உண்மையே இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும். எல்லா மருத்துவமுறைகளின் ஒரு பகுதியாக இந்த உண்மையும் இணையும் போதுதான் முழுமை நலம் சாத்தியமாகும்.
ஆரோக்கியம் என்பது தேடிச் செல்ல வேண்டிய ஒரு பொருளல்ல. அது நமக்குள் ஏற்கனவே இருக்கும் ஒரு பேராற்றல். அந்தச் சக்தியை அன்பாலும் நம்பிக்கையாலும் தூண்டி விடுவதே நாம் நமக்கும், இந்த உலகுக்கும் செய்யும் ஆகச்சிறந்த மருத்துவமாகும்.
துணை நின்றவை:
Mind Over Medicine - Dr. Lissa Rankin
The Biology of Belief - Bruce Lipton
- அக்கு ஹீலர். அ.உமர் பாரூக், BNYS, M.Acu, M.Sc (Psy), Ph.D (Acu),