மலையாளத்தில் பி.எப். மாத்யூஸ் எழுதிஇ, டி.சி. புக்ஸ 2015 ல் முதல் பதிப்பாக வெளியிட்ட இந்த நாவல் -எனது மொழியாக்கத்தில் 2022 ல் காலகட்டம் பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. இந்த நாவலை மலையாளத்தில் வாசிக்கும்போது அதிகளவில் என்னை ஈர்த்தது. காரணம், இந்த நாவல் பேசும் கதை, கதைக்களம், கதை மாந்தர்கள், கதை சொல்ல பயன்படுத்திய மாந்திரிக எதார்த்தவாத தன்மை, கத்தோலிக்க பின்புலம், கத்தோலிக்க மரபு கட்டமைத்து வைத்துள்ள சாத்தான் – புனிதன் என்கிற எதிரிணை மரபு என அனைத்தும் இந்த நாவலை இந்திய நாவல் வரலாற்றின் க்ளாசிக் நாவல் வரிசையில் வைக்கிறது

“இந்தச் சூழலில்; எனக்கு ஒரு சந்தேகத்தை கேட்க வேண்டும். எதனால் எல்லா மதத்தவர்களும் துஷ்ட்ட சக்திகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துப்; பேசுகிறார்கள்? இவ்வாறு அவற்றைப் பற்றிப் பேசுவதன் மூலமே மனிதர்களின் தலையில் துஷ்ட்ட ஆத்மாக்கள் வளர்ந்து வருவதோடு, அவர்களைப்; பயப்படுத்துவதும்;, பின்னர் மனிதர்கள் துஷ்ட்டத் தனங்களைச் செய்யும் நிலைக்கு மாறுவதும் நடைபெறுகிறது. என்னைப் பொறுத்தவரை இதுதான் உண்மை. மனதில் வைத்து நான் வளர்த்து வந்த சிந்தனைகளே பின்னர் துஷ்ட்டத்தனமான சம்பவங்களாக நிகழ்ந்துள்ளது. பாதர் நினைக்கலாம் ஊர்ப்புறத்தில் வாழ்கிற ஒரு உண்மை கிறித்தவளான இவள் ஓடினால் எங்குவரை ஓடுவாள் என்று. இல்லை பாதர் பத்து கட்டளைகளையும் ஒரு தயக்கமும் இல்லாமல் என்னால் மீற முடியும் என்பதை வெளிப்படையாகவே கூறட்டுமா? கொலை செய்தல் கூடாது என்னும் கடுமையான கட்டளையை ஒரு புல்லைப் போல கருதி சர்வ சாதாரணமாக மீற முடியும் என்பது மட்டுமல்ல, ஒரு குற்றவுணர்வும் இல்லாமல் எல்லாருடனும் இணைந்து வாழவும் என்னால் முடியும். மனிதனின் நடவடிக்கைகளைப் பாவம், புண்ணியங்கள்; என்று சொல்லி, பாவங்களுக்கு எதிராக இடைவிடாமல் பேசியதால்தான் இவ்வாறு நடைபெற்றது என்று எனக்குத் தோன்றுகின்றது. கடவுளுக்கும் அது தெரியுமாக இருந்திருக்கலாம். அதனால்தானே அவர், பரதீசியில் விலக்கப்பட்ட கனியைப் படைத்ததும், ஆதி தாய் தந்தையர்கள் அதனைப் பறித்துத் தின்றதும். அக்காலத்தைய மன உளவியல் இன்றுபோன்று அதிகம் வளராததால் கடவுள்கூட மனித மனத்தைப் பற்றி அதிகமொன்றும் படித்திருக்க மாட்டார் என்று சிலவேளைகளில் நான் விளையாட்டாக நினைப்பதுண்டு. சர்வ ஞானங்களின் நிறை குடமான கடவுளுக்கு இப்படி அபத்தம் ஏற்படலாமோ என்றும் நான் சிந்தித்துப் போவதுண்டு. களங்கமில்லாத கார்ம்மலி என்னவெல்லாம் பேசுகிறாள் என்று நினைப்பீர்;கள் அப்படித்தானே பாதர், கார்ம்மலி களங்கமில்லாத்தவள் ஒன்றுமில்லை. களங்கமின்மை என்பது முட்டாள்களுக்கு மட்டும் உரிய ஒன்றாகும். நான் அவ்வளவு முட்டாளொன்றுமில்லை” என்று கார்ம்மலி பாதருக்கு எழுதும் கடிதமாக இடம்பெறும் இப்பகுதி இருட்டில் ஒரு புண்ணியாளன் நாவலில் இடம்பெறும் பகுதி (ப.131).

வாழ்க்கை எதனால், எதற்காக, எப்படி, ஏன் பின்னப்பட்டது என்னும் கேள்விகளை நாம் அடுக்கிக் கொண்டே சென்றோமானால் கார்ம்மலியைப் போன்று கேள்விகளை நாம் யாரோ ஒருவரிடம் கேட்டுக் கொண்டுதான் இருப்போம். மலையாள இலக்கிய வெளி என்பது எப்போதும் புதுமைக்கும் சிறப்பான முயற்சிகளுக்கும் பெயர் போனது. தற்கால மலையாள இலக்கிய உலகில் உலகத்தரத்திற்கு இணையான பல நாவல்கள் வந்த வண்ணமிருக்கின்றன. அந்த வகையில் இருட்டில் ஒரு புண்ணியாளன் என்னும் நாவலையும் நாம் அடக்கலாம்.

சம கால வாழ்வியலை, அது கட்டமைத்திருக்கும் வாழ்க்கை முறைகளை இந்நாவல் கேள்விக்குட்படுத்துகிறது. கதைப் போக்கில் அது கேள்வியாக இல்லாமல் அல்லது சம கால வாழ்வியலைக் விமர்சனப் பாங்கோடு அலசாமல், தன் வாழ்வு சார்ந்த அனைத்து நடைமுறைகளுக்கும் காரணம் இந்த வாழ்வில் மதம், கடவுள் சார்ந்து கட்டமைக்கப்பட்ட பிம்பங்களே என்பதை ஒரு கதாபாத்திரம் வாயிலாக கேள்வியாக நம்முன் வைப்பது இந்நாவல் உத்தியில் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வுத்தி நாவல் அறிவுரை கூறும் தொனியில் அமைந்துள்ளது என்று புத்திசாலி விமர்சகர்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்குப் பதில் கூறும் வண்ணம் அமைந்துள்ளது. பாண்ட்யாலக்கல் அச்சம்பி, அன்னம்குட்டி தாத்தி, கார்ம்மலி, சேவியர், இம்மானுவேல், மருத்துவர் அள்வாரிஸ் என ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் அவற்றின் செயல்பாடுகளும் சமூகம் கட்டமைத்த உளவியல் தன்மையுடன் படைக்கப்படடிருப்பது கார்ம்மலியின் கூற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம் அதுதான் உண்மையும்கூட. மாந்திரீக தன்மையுடைகளைக் கொண்ட நாவலாக அமைந்துள்ளது வாசக மனங்களை அச்சத்திற்குள் ஆட்படுத்துவதோடு புண்ணியாளன் யார் என்ற கேள்வியையும் எழுப்பிக் கொண்டே நாவல் பயணிக்கிறது.

தனக்குப் பார்த்த கணவன் இறக்க வேண்டும் என்று கார்ம்மலி கடவுளிடம் வேண்டுவதும், தனது தந்தை இறக்க வேண்டும் என்று அருட்தந்தையர்க்கான பயிற்சியில் இருக்கும் சேவியர் வேண்டுவதும் அவர்களிருவரும் ஒன்று சேர்வதும் என அனைத்து நிகழ்வுகளும் இந்த உலகம் மனித வாழ்வில் வசனங்களாகக் கலந்து விட்ட பல்வேறு கதைகளின் உட்சரடுகளின் வழியாகவே இயங்குவதையும் அப்படி ஒரு கற்பிதம் மனித மனங்களில் விதைத்து வளர்க்கப்பட்டுள்ளதையும் நாம் இந்நாவல் வழி உணர முடியும். இம்மானுவேல் மீது அன்னக்குட்டி தாத்தி கொள்ளும் வெறுப்பும், பயமும், அதே வெறுப்பு தன் மகன் மீது கார்மலிக்கு வருவது என்பதும் மனித மனங்களில் விதைக்கப்பட்ட பாவம், புண்ணியம், கடவுள், சாத்தான் என்கிற இரு எதிரிணைகளின் விளைவே எனலாம்.

நடக்கும் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம், சாத்தான் என்றும் நன்மைகளுக்குக் காரணம் கடவுள் என்றும் நாம் வசனங்களால் நம்ப வைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் இந்நாவல் தெளிவாகப் பேசுகின்றது. வசனங்களுக்கு அல்லது வார்த்தைகளுக்கு அவ்வளவு வல்லமை உண்டா எனக் கேட்டால் இருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம். இந்த உலகில் அனைத்தும் வசனங்களாலேயே நம் மனதுக்குள் விதைக்கப்படுகின்றன.

இறந்துபோன தன் மகனைச் சேவியர் கல்லறையிலிருந்து தோண்டி எடுத்து ஊர் ஊராக அவனுக்கு உயிர் கொடுக்க அலைவதும், அவனை கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட புண்ணியாளன் என நம்புவதும் என அனைத்துமே வசனங்களால் சேவியரின் மனதில் திணிக்கப்பட்டவைகளே. கடவுள்களுக்குச் சாத்தான்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் இருப்பதாலேயே கடவுள்களும் இருக்கிறார்கள் என்பதை நாவல் போகிற போக்கில் மிக ஆழமாகப் பேசிப் போகிறது.

புண்ணியம் செய்தவன் அழுகிச் சாவதும், துர் ஆத்மாவின் உடல் அழுகாமல் இருப்பதற்கும் காரணம் என்ன என்று கார்ம்மலி கேட்கும் கேள்விக்கான பதிலை எந்த மதங்களும் சரியாகச் சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் சாத்தான் சாத்தான் என்று சத்தங்கள் மட்டும் போட்டுக் கொண்டு இருக்கின்றன.

கதை சொல்லும் உத்தி என்பது அழகாகப் பின்னப்பட்டுள்ள ஒரு நாவலாக இந்நாவலைக் கருதலாம். காரணம், அன்னக்குட்டி தாத்தி கதை சொல்வதாக ஆரம்பித்து, கார்ம்மலி, பத்திரிகையாளன், சாத்தானின் வடிவமாகக் காட்டப்பட்டுள்ள அள்வாரிஸ், எழுத்தாளன் என ஒவ்வொருவரும் நாவலின் உண்மை தன்மையை அதாவது உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க கதையைக் கூறுவதாக அமைத்துள்ளது நாவலை ஒரு புலனாய்வு நாவலாக நகர்த்தியுள்ளது. அன்னக்குட்டி தாத்தியின் ஆத்மா தான் இறந்ததைக்கூட அறியாமல் இருப்பதும் தன்னுடைய மகனான சேவியரின் நடவடிக்கைகளை விமர்சிப்பதும், அவனை எச்சரிப்பதும், மருமகளான கார்ம்மலிக்குத் துணையாக தன்னுடைய வீட்டிற்கு வருவதும் என அப்பாத்திரம் தொன் மரபின் எச்சமாகவும், பழங்கதைகளின் தொடர்ச்சியாகவும் படைக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறும் சேவியர் ‘என் மகனை இருட்டின் புண்ணியாளன்’ என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவது கடவுள் இருப்புக்கு எதிராக மனித மனம் தன் நம்பிக்கையால் கட்டியெழுப்பிய புனிதங்களை, புனிதங்களின் எதிர்வுகளையே ஞாபகப்படுத்துகிறது. ஆக மொத்தத்தில் மனித மனங்களில் வசனங்களால் விதைக்கப்பட்ட கருத்துகளே அவர்களை இயங்க வைக்கிறது என்பதை இந்நாவல் அழகாகவும் ஆழமாகவும் பேசுகிறது.

- இராஜேஷ் பெ.செ.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.