அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை ஒட்டி மகாராஷ்டிர அரசு அவருடைய உரைகளையும் எழுத்துகளையும் வெளியிட ஆரம்பித்தது. அதையொட்டி மத்திய அரசு தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். 37 தொகுதிகளாக வந்திருக்கின்றன. மாநில மொழிகள் பலவற்றிலும் வெளியாகி இருக்கின்றன. இந்தத் தொகுதிகளின் வரவிற்குப் பிறகு, அம்பேத்கரிய இயக்கங்கள் அந்தத் தொகுதிகளை முன்வைத்து பரந்த அளவில் களப்பணிகளைச் செய்தன. ஏற்கனவே களப்பணியில் இருந்தவைகள் தங்கள் வேகத்தைக் கூட்டியன. மக்களைத் திரட்டுதல், அம்பேத்கரின் கருத்துக்களைப் போதித்தல், அம்பேத்கரைச் சார்ந்து அரசியலை முன்னெடுத்தல், சமூக முன்னேற்றம் சார்ந்த பண்பாடுகளைக் கொண்டாடுவது, அம்பேத்கர் தத்துவத்தோடு உள்ளூர் புரிதலையும் இணைத்து மக்களைச் சந்திப்பது என்பதாக வேலைகளை வரையறுத்துக் கொண்டு செயல்பட்டன.

gautham ambedkar book 1990களுக்குப் பிறகான பட்டியல் சாதி மக்களின் அனைத்து அனுகூலங்களையும் நிதானமாக யோசித்துப் பார்த்தோமானால் அம்பேத்கரின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் வீரியத்தைப் பார்க்க முடியும். அரசியல் உரிமை பெறுவதற்கும் அரசியல் களத்தில் கவனம் பெறும் மக்கள் சக்தியாக பட்டியல் சாதியினர் திகழ்வதற்கும் அம்பேத்கரின் நூல் தொகுதிகள் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன. அதே காலத்தில் மற்றொரு புறம் அம்பேத்கரியத்தைப் பரப்புவதில் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து செயல்படுவதும் அதிகரித்தது. அதை முரண்பாடுகளால் நேர்ந்த பிரிவினை என்பதை விட வேலைகளைச் சுதந்திரமாகச் செய்வதற்கு ஏற்படுத்திக்கொண்ட வசதி எனப் புரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். பிரிந்து வேலை செய்த ஒவ்வொரு குழுவோ, அல்லது தனி மனிதர்களோ தம்மால் என்ன செய்ய முடியுமோ அதற்கும் மேலாகச் செயலாற்றினர். இன்றும் தொடர்கின்றனர். அனைவரது பணிகளையும் ஒருங்கே நோக்கும் போது ஏற்ற இறக்கங்கள் இருக்கும் தான். அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. மாறாக, அவர்களின் செயல்பாட்டுப் பலன்களையும் அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அது முக்கியமானது. அந்தவகையில் கவனத்தில் கொள்ளவேண்டியவர் கௌதம் அம்பேட்கர். அம்பேத்கரின் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வந்ததன் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது அவரது அம்பேட்கரிசம் அறிக்கை பரப்புதலும் எதிர்ப்புகளும் நூல். 2023 ஜூனில் வெளியாகி இருக்கிறது. அம்பேத்கருடைய நூல் தொகுதிகள் அனைத்தையும் ஒருவரால் முழுமையாக உள்வாங்கி படித்து விட முடியாது. எல்லாருமே அப்படித் தான் வாசிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால் அம்பேத்கரை வாசிக்க விரும்புகிறவர்களுக்கும் அவரது அரசியல் பயணத்தின் தெளிவைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கும் கெளதம் அம்பேட்கரின் இந்த நூல் உதவியாக இருக்கும்.

1980களில் கிராமங்களில் கிறித்தவ ஊழியக்காரர்கள் வீடுவீடாக வருவார்கள். துண்டுச் சீட்டுக் கொடுப்பார்கள். அதில் பெரிய எழுத்துகளில் பைபிளில் இருந்து எதேனும் ஒரேயொரு வசனம் இடம் பெற்றிருக்கும். ‘இயேசுவின் வருகை சமீபமாய் இருக்கிறது’, ‘இயேசு நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்’, ‘இயேசுவே மெய்யான தெய்வம்’ என்பன அவற்றுள் சில. எழுத்துக் கூட்டி வாசிக்கிறவர்கள் மத்தியில் கூட அந்த வாசகம் ஆழமாகப் பரவியது. பால் சிட்டை, ரேசன் கார்டுகளில் எல்லாம் அவற்றைப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள். எல்லாக் கோயிலுக்கும் சென்று இயல்பாக வாழ்ந்த அவர்களில் பலரிடம் ஊழியக்காரர்கள் வழங்கிய சீட்டுகள் ஒரு விவாதமாக மாறாவிட்டாலும் நம்பிக்கையாக மாறியது. நமக்கான தெய்வம் எது என்பது குறித்த ஒரு சிந்தனையைக் கிளறியதுடன் சமயம், வழிபாடு குறித்து பெரிதும் யோசிக்க ஆரம்பித்தார்கள். நாடு விடுதலை அடைந்ததற்குப் பிறகு மக்கள் குறிப்பாக, பட்டியல் சாதியினரின் மதத்தை அரசியலாகப் பார்க்கும் பார்வை கூர்மையடைந்திருந்ததும் இந்தக் காலகட்டத்தில் தான். மீனாட்சிபுரம் மதமாற்றமும் இக்காலத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பல நூறு பக்கங்களைக் கொண்ட பைபிளை வீடுவீடாக வழங்கி இருந்தால் ஊழியக்காரர்கள் நினைத்திருந்த இலக்கு சாத்தியமாகியிருக்காது. அவர்களது அன்றைய நோக்கம் கிறித்துவத்தை விட இயேசுவை அறிமுகப்படுத்துவதாகத் தான் இருந்தது. அதற்காக அவர்களுக்கு ஒரு சில வார்த்தைகளே போதுமானவையாக இருந்தன. அதுபோல அம்பேத்கரியத்தைப் பரப்புவதற்கு அவரது அனைத்து எழுத்துகளையும் துணையாகக் கொள்வதை விட, தேவைப்படும் பகுதிகளைத் தெரிவுசெய்து அதை மக்களிடம் கொண்டுசெல்வது சரியாக இருக்கும். அனைத்துத் தரப்பினரும் அம்பேத்கரைத் தொடக்கநிலையில் அறிந்துகொள்வதற்குக் கெளதம் அம்பேத்கரின் நூல் பயனுள்ளதாக இருக்கும்.

அம்பேத்கரின் நூலில் உள்ளவைகள் தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கும் இந்நூலில் ஆசிரியர் பேசும் இடங்கள் மிகக் குறைவு. அம்பேத்கரின் கருத்துக்களைத் தொகுத்து அவற்றை ஒப்பிடுவது, ஒப்பீட்டின் வழி கிடைக்கும் கருத்துக்கள் சரியானவை தானா என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்புவது, அக்கேள்விகளுக்கு அந்த இடத்தில் பதில் சொல்லவிட்டாலும் நூலில் ஏதாவதொரு இடத்தில் பதில் தர மறவாதிருப்பது என்பன நூலில் நல்ல அம்சங்கள்.

பக்க எண் 68 இல் ‘இந்துக்களால் தீண்டப்படாதோர் நடத்தப்படுவதை வைத்து இந்து மதத்தை விட்டு விலகும் முடிவை பாபாசாகேப் எடுக்கவில்லை. சமத்துவமின்மையைத் துல்லியமான மூலக் கொள்கையாக இந்துமதம் கொண்டுள்ளதால் அதில் இருந்து விலகும் முடிவை பாபாசாகேப் எடுத்துள்ளார்’ எனக் குறிப்பிடுகிறார் கெளதம் அம்பேட்கர். காரணத்தை விட்டுவிட்டு மூலத்தைத் தொடுதல் என்பது அம்பேத்கரின் தனித்துவமான அணுகுமுறை. அவரது நூலில் பல இடங்களில் அதைப் பார்க்க முடியும். காரணத்தைத் தொடுதல் உடனடிப் பலனைத் தரலாம். அது நிரந்தரத் தீர்வுக்கு வழியாக அமையாது. ஆனால் மூலத்தைத் தொடுதல் என்பது உடனடி பலனைத் தராமல் போகலாம். நிரந்தரத் தீர்வைத் தரும். உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு உடனடி பலனை விட நிரந்தரத் தீர்வு முக்கியம் என்பது தான் அம்பேத்கரின் நிலைப்பாடாக இருந்தது. அதைச் சரியான விதத்தில் நூலாசிரியர் தொட்டுக்காட்டியிருக்கிறார்.

‘அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால் அகவரம்பு, புறவரம்பு, புறத்தடை ஆகியவற்றின் சூழ்நிலைகளைப் பொறுத்து நிவாரணம், முன்னேற்றம் ஆகியவற்றைப் பெறலாம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி சாதிகளை ஒழிக்கப் போகிறோம், சமூகத்தை மாற்றப் போகிறோம் என்ற பட்டியல் சாதித் தலைமைக்கட்சியினரின் பரப்புரையால் பட்டியல் சாதி வெகுஜன மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறாமால் வைக்கப்பட்டு பட்டியல் சாதி தலைமைக் கட்சியினரின் அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர்’ (பக்க எண். 104) என்கிற ஆசிரியரின் விமர்சனத்தில் உண்மை உண்டு. ஆனால் தேர்தல் அரசியலில் இருக்கும் கட்சிகள் இவ்விமர்சனத்தைக் கைக்கொள்வதால் ஏற்படும் இழப்புகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். ‘கறார் தன்மை’ எந்த அரசியலுக்கும் பொருந்தாது.

பெளத்த ஏற்பைப் பற்றிச் சொல்லும் போது ‘அது அனைவருக்குமானதல்ல. சுயமரியாதையுடனும் சமத்துவத்துடனும் வாழவிரும்புகிறவர்கள் தான் இந்தப் பிரச்சினை பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று அம்பேத்கர் கூறியதாகச் சொல்லும் நூலாசிரியர் பெளத்த ஏற்பச் செய்யாதவர்கள் ஒருபோதும் சுயமரியாதை உடையவர்களாக இருக்க முடியாது என்பதைக் குறிப்பாக வெளிப்படுத்துகிறார். இப்படி நூலில் குறிப்பாகச் சுட்டும் இடங்கள் நூலாசிரியரின் அரசியல் நிலைப்பாட்டைப் புலப்படுத்துவனவாக இருக்கின்றன.

அம்பேத்கரைத் தெரிந்து கொள்வதற்கு, அம்பேத்கரியத்தை உள்வாங்கி செயல்படுத்துவதற்கு, போதுமான விஷயங்களைத் தனித்தும் தெளிவாகவும் சுருக்கமாகவும் கொடுக்கக்கூடிய ஒரு முயற்சியாக இந்த நூலைக் கருதலாம். அம்பேத்கர் எந்த அரசியலை முன் வைத்தாரோ அந்த அரசியலை மையமிட்ட ஒரு விவாதத்தில் பங்கெடுப்பதற்கும் அந்த அரசியலைத் தொடர்வதற்கும் இந்த நூலில் உள்ள கருத்துக்கள் போதுமானவை. நூலின் மொழிநடையில் ஆசிரியர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சமகால நடையிலும் பொதுநடையிலும் இந்நூல் எழுதப்பட்டிருக்குமானால் அடர்த்தி இன்னும் அதிகமாகியிருக்கும். சில செய்திகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கெளதம் அம்பேட்கர் இந்த நூலுக்காக மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார். அம்பேத்கரின் பல நூல்களில் பல இடங்களில் சிதறிக் கிடக்கும் ஒரு பொருண்மை குறித்தவைகளைத் தொகுத்துத் தருதல் என்பது அவ்வளவு எளிதான வேலையல்ல. அதைத் திறத்தோடு செய்திருக்கும் நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.

இக்கட்டுரையில் அம்பேட்கர், அம்பேத்கர் என்று இருவித சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முன்னது நூலாசிரியர் பயன்படுத்தியது. பின்னது இக்கட்டுரையாளர் பயன்படுத்தியது.

நூல் வெளியீடு : அம்பேட்கர் தம்மா பதிப்பகம், சென்னை – 106

பக்கங்கள் : 180

விலை : ரூ 300/-

நுலைப் பெற : 7871123464

ஞா.குருசாமி

Pin It