முற்போக்குச் சிந்தனையும், வரலாற்று ஆர்வமும், ஆழங்கால்பட்ட இலக்கியப்புலமையும், பரந்து விரிந்த நூல் பயிற்சியும் மிக்க நண்பர் கணியன்பாலன் அவர்கள் சங்க நூற்களை மையப்படுத்தி உருவாக்கிய மிகச்சிறந்த “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்னும் நூல் 2016ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்நூலின் இறுதிப் பகுதியில் அவர் பதிவு செய்த மந்திரம் போன்ற ஒரு தொடர் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” என்பது. சுருக்கமாக அத்தொடருக்கு விளக்கமும் அங்கு இருந்தது. பழந்தமிழ் நாட்டிற்கு உரித்தான அச்சிந்தனை மரபு குறித்து அகச்சான்றும், புறச்சான்றும் காட்டி மிகவும் விரிவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது இந்த அரிய முயற்சி. இது இலக்கியத்தில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வு. பழமை துலக்கும் அரியதோர் புதுமைப் படைப்பு.

 “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” என்ற நூல் தலைப்பே அதிநுட்பமான, மிகவும் ஆழமான பொருளை உட்கொண்டுள்ளது. திருக்குறள் பற்றிக்கூறும்போது கடுகையும் அணுவையும் துலைத்து அதனுள் ஏழ்கடலைப் புகுத்தி எழுதிய குறள்களை உடைய நூல் என்பார்கள். அதனைப் போன்று இந்த நூல் தலைப்பும் அதிநுட்பமான, மிகவும் ஆழமான பண்டைய தமிழ்ச் சிந்தனை குறித்ததாகும். கி.மு. 1000க்கு முன்பிருந்தே சிறு நகர்மைய அரசுகள் தோன்றி மக்கள் குடவோலை மூலம் தங்கள் ஆட்சிப்பிரதிநிதிகளைத் தெரிவு செய்துகொண்டு சனநாயக உரிமையுடன் வாழ்ந்தார்கள். வளம் பெற்றிருந்த அவர்கள் அறிவியல் தொழில்நுட்பம், பொருள் உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல் இசை நாட்டியம் ஆகிய இவைகளை வளர்த்தனர். நாளடைவில் இவைகளின் வளர்ச்சி உச்ச நிலையை அடைந்தது.

kaniyan balan book 2மணிக்கற்கள், மலைபடுபொருட்கள் மூலம் உலகத் தொடர்பினால் கடலோடி வணிகம் ஏற்பட்டது. செல்வம் கொழித்தது. நகர்மைய அரசுகள் வணிக நகர்மைய அரசுகளாக ஆனது. பல சிந்தனையாளர்கள் தோன்றினார்கள். அவர்களிடத்தில் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் தோன்றின. தொல்கபிலர், கணாதர், கோதமனார், பக்குடுக்கை நன்கணியார், நரிவெரூத்தலையார், பூரண காயபர்(நல்வெள்ளையார்) போன்ற பெருமக்கள் பலரிடத்தும் இந்த பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் உருவாகின. இந்தியத் துணைக்கண்டத்தில் வேறு எங்கும் இல்லாத

சாங்கியம் (எண்ணியம்), வைசேடிகம் (சிறப்பியம்), உலகாயதம் (பூதவாதம்), நியாயவாதம் (அளவையியல்), உத்தேசவாதம் (சிதைவுக் கோட்பாடு), தற்செயல் கோட்பாடு ஆகிய சிந்தனைப்பள்ளிகளை இச்சிந்தனையாளர்கள் தோற்றுவித்தனர், அல்லது தோன்றுவதற்குத் துணை நின்றனர்.

 கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தனிமனித உரிமை, தனி மனித சிந்தனை முதலியனவற்றைத் தடுக்கும் வண்ணம் பேரரசுகள் உருவாகத் துவங்கின.

 ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேன்”

 “மன்னன் உயர்த்தே மலர்தலை உலகம்”

என்ற போக்கு உருவானது. வைதீகத் தாக்கம் ஏற்பட்டது. சமணர், பௌத்தர் ஆதிக்கம் பெற்றனர். அயலரான களப்பிரர் கால்கொண்டனர். செல்வம் வாரித்தந்த உரோமானிய வணிகம் நின்றது. பொருள்முதல்வாத மெய்யியல் மங்கியது. வடநாட்டினரும் வந்து கற்ற அம்மெய்யியல் மங்கி மறைந்தாலும், இலைமறை காய்போல் இலக்கியங்களில் இன்றும் நின்று நிலவுகிறது. குடத்துள் இட்ட விளக்கு போல் உள்ள அவற்றைக் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி பரப்பும் நல் முயற்சியே இந்நூல்.

 பொருள்முதல்வாத மெய்யியல் வழி நின்ற புலவர் பெரு மக்களின் சங்க இலக்கியப் பாக்களை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.

தொல்கபிலர் (நற்: 114, 276, 328, 399; குறுந்: 14)

நரிவெரூத்தலையார் (புறம்: 5, 195); கோதமனார் (புறம்: 366)

பக்குடுக்கை நன்கணியார் (புறம்: 194)

பாடல் இடம்பெறாத கணாதன் என்பவரும் இம்மெய்யியல் அறிஞர் ஆவர். அவர் பெயரை கணி + ஆதன் என பிரிக்கலாம். இவருக்கு உலூகர் என்ற பெயரும் உண்டு. உலூகம் என்றால் ஆந்தை. தொல்காப்பியர் ஆதன் + தந்தை என்ற இரு சொற்கள் சேர்ந்து ஆந்தை என மாறும் என இலக்கணம் கூறுகிறார். சங்க காலத்தில் ஓதல் ஆந்தையார், பிசிர் ஆந்தையார் போன்ற பெயருடைய சிலர் இருந்துள்ளனர். கொங்கு வேளாளர் குலங்களில் ஒரு குலம் ஆந்தை குலம்.

 வடமொழியாளர்கள் சாங்கியம், வைசேடிகம் போன்ற பொருள் முதல்வாத மெய்யியலில் ஆன்மீகக் கருத்துக்களை புகுத்தியதுடன் பல தமிழ் நூல்களை வட மொழியில் மொழி பெயர்த்து தமிழ் நூல்களை அழித்தனர் அல்லது, மொழி பெயர்த்த நூல்தான் தமிழ் நூலுக்கு மூல நூல் என்றனர். சரக சம்கிதை என்ற மருத்துவ நூல், பரத நாட்டிய சாத்திரம் என்ற நாட்டிய நூல் ஆகியன அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் ஆகும். சேக்கிழாரின் பெரிய புராணத்தை ‘அகத்திய சிவ பக்த விலாசம்’ ‘உபமன்யு பக்த விலாசம்’ என்ற இரு நூல்களாகவும், திருவிளையாடல் புராணத்தை ‘காலாசிய மகாத்மியம்’ என்ற பெயரிலும் மொழி பெயர்த்தனர். ஆனால் அம்மொழி பெயர்ப்பு நூல்களில் மூல நூல்களைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. இவை நூலாசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேபோல் மயமதம் மானசாரம் முதலிய தமிழ் கோயில் கலை நூல்கள் வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் மூல நூல் இல்லாது போயுள்ளது. அந்நூல் கூறும் அமைப்பில் வட நாட்டில் கோயில்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தர்களை தமிழக விஞ்ஞானிகள் என்று கூறுவர். சித்தர்களின் நூல்கள் ஆழமாகப் படித்து ஆராயப்படாமல் இருப்பது மட்டுமல்ல பல நூல்கள் இன்னும் பதிப்பிக்கப்படாமல் உள்ளன. இக்குறை நீக்கப்பட வேண்டும் என்று கருதும் நூலாசிரியர், “தமிழ்ச் சித்தர்களின் பலநூல்கள் தென்னிந்தியாவின் மடாலயங்களிலும், ஆவண நூலகங்களிலும் காணப்படுகின்றன. இவற்றைத் தகுந்த முறையில் பதிப்பித்து ஆய்வுசெய்தால் இந்திய விஞ்ஞானத்தின் வரலாற்றை மீட்டெடுப்பதற்கான தரவுகள் நமக்குக் கிடைக்கும்” என்ற சட்டோபாத்தியாயா அவர்களின் கூற்றை எடுத்தாண்டுள்ளார். சிலர் சித்தர்களில் போகர், புலிப்பாணி ஆகியோர் சீன நாட்டவர் என்பர். கணியன் பாலன் அவர்கட்கு அக்கருத்தில் உடன்பாடு இல்லை. ஆகவே,

“போகர், புலிப்பாணி ஆகிய இருவரும் சீனர்கள் எனக் கருதப் படுகின்றனர். அவர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. அவர்கள் தங்கள் நூல்களை எல்லாம் தமிழில்தான் எழுதியுள்ளனர். இவர்களைக் குறித்த குறிப்புகள் எதுவும் சீனத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. பௌத்த மதம் சார்ந்த பல சீனப் பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். அவர்களின் பெயர்கள் சீனப் பெயர்களாகத்தான் உள்ளன. அவர்கள் தங்கள் கருத்துக்களை, பயணத் தரவுகளைச் சீன மொழியில்தான் எழுதியுள்ளனர். சீனத்தில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆதலால் போகர், புலிப்பாணி ஆகிய இருவரும் சீனர்கள் அல்ல, அவர்கள் தமிழர்கள்தான்” என ஆசிரியர் கூறுகிறார்.

 மேலும், “சங்ககால இறுதியில் கருத்துமுதல்வாதம் தோன்றியிருப்பினும் அதற்கு அடித்தளமாக விளங்கிய பொருள்முதல்வாத மெய்யியலை அறிய சங்க இலக்கியங்கள் மட்டும் போதாது. அக்காலத் தொல்லியல் கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் போன்ற பல்வேறு துறையின் ஆய்வுகள் மூலமே அதனைக்கண்டறிய இயலும்” என்கிறார் நூலாசிரியர்.

 தமிழுக்கு முழுமையாகக் கிடைத்த தொன்மையான தமிழ்நூல் தொல்காப்பியம். மொழிக்கு மட்டுமல்ல அகம்-புறம் என வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்த நூல். இது உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனிச் சிறப்பாகும். ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம் குறித்த செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மாணவர் அல்லாதோறும் தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் தொல்காப்பிய அமைப்புமுறையும் பிறவும் நன்கு விளக்கப்பட்டுள்ளது. ஐம்பூதம், ஆறறிவு உயிர்ப்பகுப்பு, மெய்ப்பாடு, உத்திகள், காலம், வெளி போன்ற மெய்யியல் தொடர்பான செய்திகள் விளக்கம் பெற்றுள்ளன.

பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று கூறப்பட்டுள்ளது. சிலர் இந்திரனால் செய்யப்பட்ட ‘இந்திர நூல்’ கற்றவர் என்றும், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கணம் கற்றவர் என்றும் கூறுவர். ஆனால் இந்நூலில் உலகாயதம், சிறப்பியம், நியாயவாதம், ஓகம், எண்ணியம் ஆகிய ஐந்தையும் உடைய ஐந்திரம் கற்றவர் என சான்றுடன் விளக்கப் பட்டுள்ளது. “தொல்காப்பியம், மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும் என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று” என டாக்டர் கபில் சுவெலபில் அவர்கள் கூறுவதை நூலாசிரியர் குறிப்பிடுவது சிறப்புக்குரியது.

அதிகமான அகழாய்வு, கல்வெட்டு, ஓலைச்சுவடி போன்றவற்றின் ஆய்வுகள் மூலம் மட்டுமே தமிழகத்தின் முழுமையான வரலாற்றை அறிய இயலும் என்கிறார் ஆசிரியர். “முழுமையான அதிக அளவிலான அகழாய்வுகள் மூலம் மட்டுமே தமிழகத்தின் முழுமையான வரலாற்றை வெளிக்கொண்டுவர இயலும். தமிழகத்தில் கிடைத்த பல ஆயிரம் கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும் இன்னும் படியெடுத்துப் படிக்கப்படவில்லை. ஆகவே அதிக அளவிலான அகழாய்வுகள் செய்யப்படவும் தமிழகக் கல்வெட்டுகளையும், ஓலைச்சுவடிகளையும் படியெடுத்துப் படிக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில மத்திய அரசுகள் எடுக்கவேண்டும்” என்று வற்புறுத்துகிறார் நூலாசிரியர். கீழடி அகழாய்வில் நகர நாகரிகம் வெளிப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்கிறார் பாரதியார். பழந்தமிழ் நாட்டில் கல்வி நாடு முழுவதும் உயர்நிலையில் பரவியிருந்தது. கிராமங்களில் சாதாரண மக்களும் கல்வி கற்றிருந்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் எல்லாச் சமூகத்தவரும் புலவராக வீற்றிருந்தனர். அகழாய்வில் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. மிகுதியான கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைப்பதும், அவை தமிழில் இருப்பதும் கல்வியின் சிறப்பை தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் எனலாம். கல்வி கற்றவன் சான்றோன் என மதிக்கப்பட்டான். இவைபோன்ற பழந்தமிழகக் கல்வி குறித்தப் பல விடயங்கள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.

மெய்யியல் தொடர்பான தமிழக இந்திய கருத்துரைகள் பலவும் ஏற்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன. தமிழ்-வடமொழி-ஆங்கில நூல் கருத்துக்கள் பலவும் பரவலாக இடம்பெற்றுள்ளன. இவற்றின் மூலம் ஆசிரியர் கணியன்பாலன் அவர்களின் நூல் தேடல் ஆழமும் அகலமும் உடையது என அறிகிறோம். நவீன அறிவியல் சிந்தனை மரபுகள் பலவும் பழந்தமிழ்ச் சிந்தனை மரபில் இடம்பெற்றுள்ளன என்பதை ஆசிரியர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். ‘முது முதல்வன்’ என்று புறநானூறு பாராட்டும் தொல்கபிலன் கி.மு. எட்டாம் நூற்றாண்டினர். ஆதிகபிலன் என்றும், கபிலமுனி என்றும் பாராட்டப்பட்ட தொல்கபிலனின் சாங்கியம் எனும் எண்ணியம் மிகத் தொன்மையானது. இந்திய அறிஞர்கள் பாராட்டும் கபிலரை ‘தமிழ் அறிவு மரபின் தந்தை’ என்று நூலாசிரியர் பாராட்டுகிறார்.

இந்நூலில், ஆகமம் என்பது தமிழ் நூல்களின் தொகுப்பு; ‘ஈ’ யும் மனிதனும் ஒரு பொது உயிரினத்தில் இருந்துதான் உருவாகியுள்ளார்கள்; கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே பூமியின் சுற்றளவு ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான பிழையுடன் கணக்கிடப்பட்டது; நான்கு வகுப்பில் வேளாளர்கள் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்தவர்கள்; உயர் வகுப்பினரான அந்தணர் வேறு, கீழ் வகுப்பினரான பார்ப்பனர் வேறு; தமிழரான தொல்கபிலரின் எண்ணியச் சிந்தனைகள் இந்திய அளவில் பெரும்புகழ் பெற்றிருந்தது; நகரஅரசுகள் பொருள்முதல்வாதச் சிந்தனைகள் உருவாகக் காரணமாக இருந்தன; கிரேக்க நாகரிகம் உச்சத்தில் இருந்த போது அதன் குடும்பப் பெண்கள் உரிமையற்றவர்களாக நடத்தப்பட்டனர் போன்ற பல அரிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.

 பழமை துலக்கும் புதுமைப் படைப்பாக இச்சிறந்த நூலைப் படைத்த நண்பர் கணியன்பாலன் அவர்களை மனதாரப் பாராட்டி மகிழ்கிறேன். இத்துரையில் இந்நூல் முதல் நூல் மட்டுமல்ல முதன்மையான நூலுமாகும்.

- புலவர் செ.இராசு, முன்னாள் தொல்லியல், கல்வெட்டியல் துறைத் தலைவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்

Pin It