கவிதைகளின் வழியே அன்பனான விவெ -வுக்கு இது முதல் கவிதை நூல். பார்த்து பார்த்து மூச்சிரைக்க செய்த உழைப்பு. பறக்க பறக்க வானம் தேடி கொண்ட சிரிப்பு. ஒவ்வொரு பக்கத்திலும் உணர்கிறோம்.

விவெ -வின் கவிதைகளில் நின்று நிதானமாக சிரிக்கும் சிறு பிள்ளையின் தத்துவம் இருக்கும். சின்ன கால்களில் நிரம்ப சிரிக்கும் கொலுசொலிகள் இருக்கும். சட்டென இரவின் கரங்கள் அசைக்கும் பேராசை தூதுகள் இருக்கும். பஞ்சமில்லா பேரின்ப முத்தங்கள் இருக்கும். பெருங்காற்றின் போதைகளுக்கும் இடம் இருக்கும். கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம் கவிதைகள் செய்து கண்கள் சிரிக்கும் விவெ -வின் பலதரப்பட்ட சிந்தனைகளின் கூடாரமாக இந்த நூல் இருக்கிறது. போக வேண்டிய தூரங்கள் நிறைய இருப்பினும் முதல் படிகளில் கொள்ளும் படிப்பினை முக்கியம். பக்கத்துக்கு பக்கம் அது நிறைந்திருக்கிறது. உலவியவன் கூறுகிறேன். நீங்களும் தைரியமாக உலவலாம்.

இந்த தொகுப்பில் இருக்கும் பல கவிதைகள் பல பிரபலப் பத்திரிகையில் வந்த கவிதைகள். தரம் அங்கேயே நிர்ணயம் ஆகி விட்டன. தடம் தான் இங்கே நூலில் புடம் போடப்பட்டிருக்கிறது. சட்டென ஒரு சோம்பல் முறிப்பது போல சினுக்கென்று வந்து அமர்ந்து விடும் விவெ -வின் கவிதைகள்... மெய் மறக்க செய்கிறதோ என்னவோ... மெய் திறக்க செய்யும்.vive book"குழந்தை
நடை பழகியதும்
அணிந்து பார்க்கிறது
அம்மாவின் கால்களை"

இந்த நூலில் ஆக சிறந்த கவிதை இது.

நான்கு வரியில் மானுட தோரணையை வடித்து விட்ட விவெ -வை வாழ்த்தாமல் எப்படி இருக்க. ஒரு குழந்தைக்கு எல்லாமுமாக இருப்பது அம்மா தானே. நடக்க தொடங்கியதும் அவள் கால்களைத் தானே முதலில் அணிந்து பார்க்கிறது. நுட்பம் வாய்ந்த மானுட சங்கிலியை மிக மெல்லிய எழுத்துக்களால் மேடை ஏற்றி விட்ட கவிஞனுக்கு வாழ்த்துகள் குவியட்டும். கால்களை அணிந்து பார்க்கும் என்ற உவமைக்கே கவிதை மாலை சூட்டலாம். எல்லார் வீட்டிலும் இயல்பாக நடக்கும் ஒரு காட்சியை இந்த கவிஞன் இசையாக மாற்றி விட்டான். குழந்தையின் கொலுசொலி கேட்கிறது தானே.

விவெ -வுக்கு குழந்தைகளின் மீது ஆழ்ந்த அவதானிப்பு இருக்கிறது. "வெற்றி" பிறந்த பிறகு வந்த வெற்றிட நிரம்புதலாக இருக்கலாம். குழந்தைகளை அரவணைக்கும் கவிஞனுக்கு காலத்துக்கும் கவிதை பஞ்சம் இல்லை. அப்படி... நிறைய குழந்தைகள் கவிதைகள் இந்த மைதானத்தில் குவிந்து விளையாடுகின்றன.

இன்னும் ஓர் உதாரணம் இங்கே சிறு குழந்தையின் சித்திரத்தை கூட்டுகிறது.

"மகன் அள்ளிக் கொண்டு வந்த மழையில் புறப்பட தயாரயிருக்கிறது எங்கள் குடும்ப கப்பல்..."

"நிஜம் கத்தும்" என்ற ஒரு சிறு கவிதையில்... தீட்டென்று சொல்லும் பிற்போக்குக்கும்... கடவுள் என்று சொல்லும் தற்போக்குக்கும்... சாட்டையடி தந்திருக்கிறான். பல்லி வால் பாடம் இது.
இயற்கையோடு கொண்ட இணைப்பை அவ்வப்போது நூலுக்கு இனிப்பாக்கி இருக்கிறான். இனிப்பை உண்ட இசையாக நூல் முழுக்க அசைந்தாடுதல் இயல்பாகவே வந்து விடுகிறது.

"மரங்கள் எல்லாம்
ஜன்னலான பிறகும்
ஞாபகக் கிளையில்
வந்தமர்கிறது
சிட்டுக் குருவி...!"

ஞாபக கிளை எப்படி இருக்கும் என்று இந்த வரியில் உணர்ந்த போது சில நொடி சிட்டுக்குருவி தான் நானும். சித்திரத்து மரக்கிளை தான் விவெ- வும் என்று நம்பினேன். ஒரு கவிதையின் வழியே இன்னொரு கவிதைக்கு இழுத்து செல்லும் ஒரு வழிப்போக்கு நிதானம் இந்த நூலில் எங்கும் நிரம்பிக் கிடக்கிறது.

நாய் பூனை காக்கா குருவி என்று நம்மோடு இருக்கும் சின்னஞ்சிறு உயிர்களை கவிதைக்குள் புகுத்தி விடும் விவெ... மழை துளிகளில் மானுடம் துளிர்க்க செய்யும் ஆசை கொண்ட கவிஞன்.

"நிலவினை நம்பி இரவுகள் இல்லை
ஆனால் கவிஞர்கள்
இருக்கிறார்கள்"

என்று ஒரு கவிதை.

பழுப்பு நிறத்தில் பளிச் என பவுடர் பூசி சிரித்தது போல இருந்தது. நிலவை நம்பியா இரவு இருக்கிறது. ஆனால் கவிஞர்கள் இருக்கிறார்கள். சரி தானே. இப்படி தினம் தினம் காணும் இயல்பான சித்திரங்களில் எல்லாம் தனது வண்ணங்களை பூசி விடும் சாமர்த்தியம் தான் இங்கே சாமந்தி பூக்கள் தேடும் ஒன்பது நிற வானவில்லாக ஆகி இருக்கிறது.

கார்த்திக் பாட்டு அமர் பாட்டான கவிதை ஒரு கால கவிதை. அது... இளையராஜா என்ற ராகத்தில் விளைந்த யாக கவிதை.

"பூனை மழை இது
ஜன்னல் உருட்டுகிறது
எங்கள் வீட்டில்..!"

இப்படி ஒரு கவிதை தொடங்குகிறது. எளிமையில் நின்று மலையை உருட்டும் யுக்தி தானாக வந்ததா... தெரியவில்லை. தேனாக இனிக்கிறது.

இன்றைய கால கேஜெட்டுகளின் வழியே நவீன கவிதைகளை ராக்கெட்டில் ஏற்றும் வித்தை அறிந்திருக்கிறான். அறிவியலை கவிதைக்குள் நிரப்ப தெரியும் வல்லமையின் வழியே... மொழியும் அறிவியலும் கை கோர்ப்பதை கவனிக்கின்றோம். நவீன கால புழங்கு உணவுகளையும் கவிதைகள் செய்து பசி ஆற்றி விடும் பக்குவம் காலத்தோடு ஒன்றி போ என்பதை சொல்லாமல் சொல்கிறது.

"அவளின் பூனை நடையை காதலித்ததுக்கு பதில்
இந்த பூனையையே காதலித்திருக்கலாமென்று"

என்று முடியும் கவிதையில் இருக்கும் பகடி காதலின் துயர மயக்கம் என்று ஒரு காதலனின் கவித்துவ துக்கத்தை பூனையின்பால் ஏற்றி சொல்லும் மகத்துவம் ஆதலினால் காதலிக்கலாம் என்று கூட யோசிக்க வைக்கிறது.

அவள் தெருவை சுற்றி திரிய வேண்டுமாம்... வானிலையை தெரிந்து கொள்ள. இந்த கொழுப்பு தான் கவிஞனின் மூலதனம். இந்த உள்நோக்கிய நகைப்பு தான் காதலின் வேதம்.

"இன்னொரு இரவு வரும் வரை இரவில் கனவு வரும் வரை கனவில் நீ வரும் வரை கனவாய் நான் வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் வேறென்ன செய்ய... காதலின் கருணை அப்படி…"
எப்படி. நான் சொன்னேனல்லவா. காதலின் கருணைக்கு வாக்கப்பட்ட கவிஞனின் தாராளம் தான் இந்த கவிதை. காதலித்த மானுடனுக்கு நேர்ந்த நியமத்தை கவிதையாக்கி நம் கன்னம் கிள்ளி விளையாடும் நூலில் இன்னுமொரு அடையாளம் இது.

"இனியும் தாமதம் எதற்கு..?
நீண்டு கிடக்கும் இந்த நிர்வாண இரவில்
நம் சண்டையின் சாளரங்களை நம்மைக் கொண்டே
போர்த்திக் கொள்ளலாம் வா...
சற்று நேரத்தில் விடிந்து விடும்..!"

ஒரு கவிதையின் கடைசி பத்தி இது. பற்றிக் கொண்ட காதல் நெருப்பின் மடைமாற்றம் உணர்கிறீர்கள் தானே. உணர்ந்தவன் கூறுகிறேன். உற்சவம் உள்ளத்தில்.

காதலும் காதலின் நிமித்தமுமான கவிதைகள் இதயம் நெய்து கொண்டே போகின்றன. இனிக்க இனிக்க படியுங்கள் என்று வியப்பு தந்தும் போகின்றன. கணவன் மனைவிக்குள் நடக்கும் காதலின் விளையாட்டுகள் மிக அழகாக கவிதையில் வந்திருக்கிறது. முதல் தொகுப்பே முத்த தொகுப்பென்று சொல்லலாம். காதலின் ஆதி மகத்துவத்தை சொல்வது போலவே... குழந்தைகளின் பேரன்பை கொஞ்சுவதை போலவே... நவீன மொழி மாற்றத்தை பல கவிதைகள் எடுத்தியம்புகின்றன. பேச்சு வாக்கில் நடைபெறும் நிகழ்வுகளை எல்லாம் கவிதைக்குள் நிரப்பும் சம்பவங்கள் இருக்கின்றன.

சரி.. பாராட்டு மட்டும் தான் அணிந்துரையா என்றால்... சுட்டிக்காட்டுதலும் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் சில முதிர்வான முடிவுகளை சில கவிதைகள் கொண்டிருந்தால் இன்னமும் சிலாகிக்கப் பட்டிருக்கும். பரவாயில்லை. முதல் தொகுப்பிலேயே முக்கால் கிணறு தாண்டி விட்ட கவிஞன் பயப்படத் தேவையில்லை. இன்னும் சில படிகள் தான். முழு கிணறும் தாண்டி விட முயற்சியோடு பயிற்சியும் சேரட்டும். மற்றபடி... போகிற பாதை மெல்ல மெல்ல பழகிய மனம் விலக்கி போய் சேருமிடம் பொது சமூகமாக இருக்கட்டும்.

"கொஞ்சம்
வாட்சப்பிலும்
பேஸ்புக்கிலும்
இன்ஸ்டாகிராமிலும்
வெப் சீரிஸிலும்
குறுக்கு நெடுக்காக உலாவும்
2GB டேட்டாவுக்கு வாக்குப்பட்ட
என் 4G வாழ்வை
என்னவென்று ட்வீட் போட...!"

இது தான் இந்த நூலின் விதை. விருட்சத்துக்கு மறுப்பு இல்லை.

வாழ்த்துகிறேன்.

(நூலினைப் பெற - 99440 56357)

- கவிஜி

Pin It